ராமாயணத்தில் வரும் ஆறு பிரமாணங்கள்!

Picture: Rama is banished for 14 years.

ராமாயண வழிகாட்டி

அத்தியாயம் – 7  by  ச.நாகராஜன்

 

ஒன்றை அறியும் விஷயத்தில் ஆறு பிரமாணங்கள்!

 

வால்மீகி மஹரிஷி இயற்றிய ராமாயணத்தில் நுணுக்கமான விஷயங்கள் ஏராளம் உண்டு. உலகியல் வாழ்க்கையில் தர்ம அர்த்த காமத்தை நன்கு அடைந்து மோக்ஷத்தையும் அடையும் உபாயத்தை ராமாயணம் தருகிறது.

 

ஒன்றை அறியும் விஷயத்தில் ஆறு பிரமாணங்கள் உண்டு என்று கபந்தன் ராமரிடம் கூறும் இடம் சுவாரசியமானது; வாழ்க்கையில் வெற்றி பெற உதவுவது.

 

ராம ஷட்யுக்தயோ லோகே யாமி: சர்வம் விம்ருஷ்யதேI

 

ராம! லோகே – ஸ்ரீராம! உலகில்

ஷட்யுக்தய:  – ஒன்றை அறியும் விஷயத்தில் ஆறு பிரமாணங்கள் உண்டு

யாமி: – அவைகளால்

சர்வம் – எல்லாமும்

விம்ருஷ்யதே – அறியப்படுகிறது.

   (ஆரண்ய காண்டம், 72வது ஸர்க்கம்,12ஆம் ஸ்லோகம்

 

கபந்தன் ஸ்ரீ ராமரிடம் கூறும் முக்கிய சொற்கள் இவை.

ஒன்றை அறியும் விஷயத்தில் ஆறு பிரமாணங்கள் எவை எவை?

 

  1. பிரத்யக்ஷம் – நாமே நேரில் காண்பது
  2. அனுமானம் – தெரிந்த விஷயங்களைக் கொண்டு இதர தீர்மானங்களை அல்லது முடிவை அடைதல்
  3. உபமானம் – ஒன்றை உபமானமாகக் கொண்டு அதன் மூலம் தெளிதல்
  4. சப்தம் – வேதம் முதலிய சப்தங்களைக் கொண்டு அறிதல்
  5. அனுபலப்தி – காணாமையால் இல்லை என்று அறிதல்
  6. அர்த்தாபத்தி – பார்த்தவைகள், கேட்டவைகளைக் கொண்டு மற்றவைகளை ஊகித்தல்

 

இவற்றைக் குறிப்பிட்ட கபந்தன், “நீங்கள் தேவியைப் பிரிந்து கஷ்ட தசையில் இருக்கிறீர்கள். சுக்ரீவனை அடையுங்கள். அவன் உங்களுக்கு உதவி புரிவான்” என்று உரைக்கிறான்.

சுக்ரீவனுடன் நட்பைக் கொள்ளுங்கள் என்று கபந்தன் உரைப்பதால், ஷட்யுக்தய: என்ற வார்த்தைக்கு ஆறு யுக்திகள் என்று பொருள் கொண்டு அந்த ஆறு உக்திகளை வியாக்கியானகாரர்கள் சொல்வதும் உண்டு.

 

ஆறு உக்திகளாவன:-

 

1)   ஸந்தி – நட்பைக் கொள்வது

2)   விக்ரஹம் – பகையைக் கொள்வது

3)   யானம் – எதிரியின் மீது படையெடுத்துச் செல்வது

4)   ஆஸனம் – எதிரியை எதிர்பார்த்துக் காத்திருத்தல்

5)   துவைதீபாவம் – பிரித்து வைத்தல்

6)   ஸமாஸ்ரயம் – பணிந்து போதல்

 

இந்த ஆறு யுக்திகளையும் ஒவ்வொரு விஷயத்திலும் நன்கு ஆய்ந்து முடிவு எடுக்க வேண்டும் என்று கபந்தன் கூறுவதாகப் பொருள் கொண்டு வியாக்கியானம் செய்பவர்கள் பலர்.

கபந்தனின் வரலாறு ஆரண்ய காண்ட்த்தில் 71வது ஸர்க்கமாக அமைகிறது. அற்புதமான அந்த வரலாற்றில் பல உண்மைகளை நாம் அறிய முடியும்.

 

வெற்றி பெற நாம் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகளை விளக்குவதால் ராமாயணம் ஒரு வாழ்க்கை நூல் என்ற பெயரைப் பெறுகிறது.