அதிசயிக்க வைக்கும் கர்ம பலன் ரகசியம்!

கர்மம் பற்றிய குறுந்தொடர்!

 

அதிசயிக்க வைக்கும் கர்ம பலன் ரகசியம்!

By ச.நாகராஜன்

 

கர்மத்திற்கு ஏற்ற பலன் கிடைக்கும்

 

மற்ற மதங்களிலிருந்து ஹிந்து மதத்தை வேறுபடுத்திக் காண்பிக்கும் முக்கியக் கொள்கை கர்மத்திற்கு ஏற்ற பலனின்படி மறுபிறப்பு உண்டு என்பதாகும்.

 

கீதையின்  மூன்றாம் அத்தியாயம் கர்ம யோகத்தைப் பற்றி அற்புதமாக விளக்குகிறது.

“எவனும் எவனும் எப்பொழுதும் ஒரு கணம் கூட கர்மம் செய்யாமல் இருக்க முடியாது” என்று கண்ணன் அர்ஜுனனிடம் விளக்குகிறான். (ந ஹி கஸ்சித் க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத்- கீதை, மூன்றாம் அத்தியாயம் 5ஆம் ஸ்லோகம்)

இயற்கை குணங்களினால் ஒவ்வொருவனும் கர்மம் செய்யும் படி தூண்டப்படுகிறான்.அந்தக் கர்ம பலனின் விளைவுகள் அவனைத் தவறாமல் சென்று சேர்கின்றன.

கன்று தாயைச் சேர்வது போல கர்ம பலன் சேரும்

இதை மஹாபாரதமும் உபநிடதங்களும் ஒரே உவமையால் விளக்குகின்றன. எப்படி பசு மந்தைக்கூட்டத்தில் ஒரு கன்றானது தாய்ப்பசுவைத் தவறாமல் சென்று அடைகிறதோ அதே போல ஒருவன் செய்த நல்ல கர்மங்களின் விளைவும் தீய கர்மங்களின் விளைவும் உரிய காலத்தில் தவறாமல் அவனைச் சென்று அடைகிறது என்று இப்படி அழகாக கர்ம பலன் வந்து சேரும் விதத்தை விளக்குகிறது.

 

காந்திஜி வாழ்க்கையில் 

கண்களையும் மனதையும் திறந்து வைத்துக் கொண்டால் கர்ம பலனின் ரகசியங்களை யார் வேண்டுமானாலும் உணர முடியும். மகாத்மா காந்தியடிகளின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்.

இந்தியா சுதந்திரம் அடைய வேண்டுமென்பதை வலியுறுத்தி விட்டு வெளிநாட்டிலிருந்து டெல்லிக்குத் திரும்பிய மகாத்மா டெல்லி ரயில் நிலையத்திற்குச் சென்று ரயிலில் ஏறினார். அப்போது அவரது கால்களில் மாட்டி இருந்த செருப்புகளில் ஒன்று கீழே தரையில் விழுந்து விட்டது. உடனே ரயில் கிளம்பி விட்டது. மகாத்மா உடனே தனது அடுத்த காலிலிருந்த செருப்பையும் கழட்டிக் கீழே ஏறிந்தார் அருகில் இருந்தவர் மகாத்மாவிடம், “பாபாஜி, ஏன் அடுத்ததையும் கழட்டிக் கீழே எறிந்தீர்கள்” என்று கேட்டார்.

அதற்கு அவர், “கீழே கிடக்கும் ஒரு செருப்பைக் கண்டெடுப்பவர் அதனால் பயன் அடைய முடியாது அல்லவா? அதற்காகத் தான் இன்னொரு செருப்பையும் அதன் அருகில் எறிந்தேன்” என்று பதில் கூறினார்..

பன்னிரெண்டு மாதங்கள் கழிந்தன.லக்ஷ்மி தேவியின் திருவிழாவில் கலந்து கொள்ள ஒரு நகருக்கு காந்திஜி விஜயம் செய்தார்.கூட்ட நெரிசலில் காந்திஜியுடன் சென்ற தொண்டர்கள் அவரை விட்டுச் சற்று விலகி விட்டனர். அப்போது அவருக்குப் பின்னாலிருந்து கடூரமான குரல் ஒன்று ஒலித்தது. “நீங்கள் பாரதத்தை நாசம் செய்கிறீர்கள்.”

யார் இப்படிப் பேசுகிறார் என்று காந்திஜி திரும்பிப் பார்ப்பதற்குள் அந்த அசம்பாவிதம் நடந்து விட்டது. பின்னால் இருந்து குற்றம் சாட்டியவர் மகாத்மாவைக் கீழே தள்ளி விட்டார். கீழே விழுந்த காந்திஜி ஒரு புறமாகத் தள்ளப்பட்டார். அப்போது.” அவரை ஒன்றும் செய்யாதே”, என்ற கம்பீரமான குரல் ஒன்று கேட்டது.பின்னால் கசமுச என்று சப்தம் கேட்டதை காந்திஜி உணர்ந்தார். தன்னைத் தள்ளியவரை ஒருவர் அப்புறப்படுத்தியதை உணர்ந்து கொண்டார். அப்புறப்படுத்தியவரின் கால்களைத் தரையில் படுத்திருந்த காந்திஜி பார்க்க நேர்ந்தது.

 

ஆஹா! அதே ஜோடி செருப்புகள்!! அவருக்குத் தெரிந்து விட்டது. தான் ரயிலில் முன்பொரு சமயம் தூக்கி எறிந்த செருப்பும் தவறி விழுந்த செருப்பும் தன்னைக் காப்பாற்ற முயன்றவரின் காலில் மாட்டப்பட்டிருப்பதை காந்திஜி பார்த்தார்.  அவரது செருப்புகளை அவருக்கு நன்கு அடையாளம் தெரியும். ஏனெனில் அவை விசேஷமான அளவுகள் உடையவை.

காந்திஜியை மெதுவாக தூக்கி நிறுத்திய அவர், “பாபுஜி! ஒன்றும் தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள்! அந்த முரடன் ஒரு முட்டாள்! நானும் கூட அவனைப் போலத் தான் சென்ற வருடம் வரை இருந்தேன்” என்றார்

காந்திஜி வியப்பு மேலிட,” சென்ற வருடம் வரை என்றால்..? உங்களை மாற்றியது எது?” என்று தன் மேலிருந்த தூசியைத் தட்டி விட்டவாறே கேட்டார்.

காந்திஜியைக் காப்பாற்றியவர் தன் கதையைச் சொன்னார்

சென்ற வருடம் வரை எனக்கு வேலையே கிடைக்காமல் இருந்தது.தாங்க முடியாத கஷ்டத்தில் இருந்தேன்.என்னுடைய நண்பன் ஒருவன் அருகிலிருந்த லக்ஷ்மி கோவிலுக்கு என்னை அழைத்தான். செல்வச் செழிப்பை அருளும் லக்ஷ்மியின் கோவிலுக்கு வந்தால் நல்ல வழி பிறக்கும் என்றான். ஆனால் எனக்கோ மனமே இல்லை.

என் நண்பனிடம், “ அந்தக் கோவில் மிகவும் தூரத்தில் இருக்கிறது. எனக்கோ காலில் செருப்பு கூட இல்லை? எப்படி வருவதாம்?” என்றேன். அப்போது ரெயில் தண்டவாளப் பாதை வழியே நடந்து சென்று கொண்டிருந்தோம். அங்கே அழகிய ஒரு ஜோடி செருப்பைக் கண்டேன். அதை எடுத்து அணிந்து கொண்டேன். அது என் காலுக்குச் சரியாகப் பொருந்தியது.

 

“இப்போது வரலாமில்லையா” என்றான் நண்பன். அவனுடன் கோவிலுக்குச் சென்றேன்.

என்ன ஆச்சரியம்! அந்த புதிய செருப்புகளை அணிந்ததிலிலிருந்து எனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. கோவிலில் சேவை செய்து அனைவருக்கும் உதவலானேன். அங்கிருந்த கோவில் முக்கியஸ்தர்களுள் ஒருவர் என் சேவையைப் பார்த்து மிகவும் மகிழ்ந்து எனக்கு பக்கத்திலிருந்த டவுனில் ஒரு வேலை போட்டுக் கொடுத்தார். நான் இப்போது அனைவராலும் மதிக்கப்படுகிறேன்.”

கருணை ததும்பும் விழிகளுடன் அவரைப் பார்த்த மஹாத்மா, “நல்லது. உங்களுக்கு நன்றி” என்று மெதுவாகக் கூறியவாறே நகர்ந்தார்.

இந்தச் சம்பவத்தை தன் ‘கர்மா மானுவல்’ என்ற நூலில் விளக்கும் டாக்டர். ஜான் மம்போர்ட், “நல்ல விளைவுகளை விளைவிக்கும் ஆகாமி கர்மா (உள்ளுறையும் கர்மம்) விதைக்கப்பட்டது. அதுவே வெகு சீக்கிரமே பிராரப்த கர்மாவாக மாறி பலனை அளித்தது” என்று விளக்குகிறார்.

 

கர்மங்களில் தான் எத்தனை ரகங்கள்!

 கர்மங்களில் தான் எத்தனை ரகங்கள்! கத்தி கையில் கீறியவுடன் வெளிப்படுகிறது ரத்தம். சில கர்மங்கள் உடனடி பலனைத் தருபவை.

இரவிலே கொண்டைக்கடலையை ஈரத் துணியில் முடிந்து வைத்தால் காலையில் அவை முளை விடுகின்றன. சில கர்மங்கள் சில மணி நேரம் கழித்துப் பலனைத் தருகிறது.

ஒரு ஆலமரத்து விதையை ஓரிடத்தில் விதைத்தால் அது முழு மரமாகிப் பலன் தர பல்லாண்டுகள் ஆகின்றன, சில கர்மங்கள் ஆலமர விதையைப் போன்றவை. அடுத்த ஜென்மத்தில் பலனைத் தருபவை.

இப்படி ஒவ்வொரு நிமிடமும் கர்மங்களை விதைத்துக் கொண்டே சென்றால் அவற்றின் பலன்கள் நமக்கு நல்லவையாகவும் தீயவையாகவும் வந்து கொண்டே தானே இருக்கும்.

கீதை காட்டும் பாதை

 ஆகவே தான் நமது அற நூல்கள் கர்ம பலன் ரகசியங்களை விளக்கும் விதமாக இரண்டு முக்கிய வழிகளைச் சொல்கிறது.

ஒன்று (மனோ வாக்காய கர்மாணி) மனம் வாக்கு செயலால் நல்லதையே நினை; செய் இரண்டாவது கர்மம் செய்வதில் தான் உனக்கு அதிகாரம் ஒரு பொழுதும் அதன் பலனில் இல்லை (கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷ¤ கதாசன – கீதை இரண்டாம் அத்தியாயம் 47ஆம் ஸ்லோகம்). ஆகவே பலனைக் கருதாது கர்மத்தைச் செய்!

எந்தக் கர்மத்திற்கு என்ன பலன்: உமையின் கேள்வி

எந்த எந்த கர்மத்திற்கு என்ன என்ன பலன் என்பதை உமா தேவியார் பரமேஸ்வரனிடம் கேட்க அவர் அருள் கூர்ந்து மனித குல நன்மைக்காக அவற்றை விளக்கிக் கூறுவதை மஹாபாரதம் விளக்கிக் கூறுகிறது!

கிருஷ்ணர் கேட்க நாரதர் விளக்கும் உமா மஹேஸ்வர சம்வாதமாக அமையும் கர்மமும் அதன் விளைவுகளும் பற்றிய பட்டியல் மிக நீண்ட ஒன்று. அநுசாஸன பர்வம் 205ஆம் அத்தியாயம் முதல் 250 அத்தியாயம் முடிய சுமார் 46 அத்தியாயங்களில் கர்மபலன்களின் ரகசியங்கள் விளக்கப்பட்டுள்ளன.

குறிப்பு : நன்றி ஞான ஆலயம் ( ஜுலை 2012 இதழில் வெளியான கட்டுரை)

 

கர்மம் பற்றிய குறுந்தொடர்! சென்ற கட்டுரையில் மஹாத்மா காந்திஜியின் வாழ்வில் நடந்த சம்பவத்தையும் அது விளக்கும் கர்ம பலன் ரகசியத்தையும் பார்த்தோம். இதோ, இன்னும் ஒரு அதிசய சம்பவம் – அமெரிக்காவில் நடந்தது! நூறு கோடி கல்பம் ஆனாலும் செய்த கர்மங்களின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற உண்மை என்றும் அழியாத ஒன்று!

 

அதிசயிக்க வைக்கும் கர்ம பலன் ரகசியம்! – 2

 

ச.நாகராஜன்

 

பார்வதி, பரமசிவன் உரையாடலின் சுருக்கம்

உமாதேவிக்கு மனித ஜன்மத்தில் எந்தக் கருமத்திற்கு என்ன பலன் என்று சந்தேகம் ஏற்பட பரமேஸ்வரன் அனைத்து சந்தேகங்களுக்கும் தெளிவாக பதில் சொல்வதைத் தொகுத்துப் பட்டியலிட்டால் அது மிக நீண்ட ஒன்றாக ஆகி விடும்.

இருந்தாலும் அதன் சுருக்கத்தை இப்படி உரைக்கலாம் :

தானத்தையும் தர்மத்தையும் உரியவர்களுக்கு அவர்கள் கேட்காமலேயே தாமாகவே முன் வந்து உதவுபவர் அடுத்த ஜன்மத்தில் முயற்சியின்றியே செல்வத்தையும் அந்தஸ்தையும் அதிகாரத்தையும் பெறுவர்.

யாசிப்பவர்க்கு மட்டுமே தானம் செய்பவர் முயற்சிகள் செய்து பாக்கியத்தை மறு ஜன்மத்தில் அடைவர்.

யாசித்தவர்க்கும் ஒன்றும் தராதவர் அடுத்த ஜன்மத்தில்  முயற்சி செய்த போதும் பலனை அடையார்.

செல்வத்தைக் கொண்டிருந்தும் யாருக்கும் இளமையில் உதவாமல் இருந்து, முதிர்ந்த பிராயத்தில் பிணிகள் வந்தவுடன் தானம் செய்வோர் அடுத்த பிறவியில் முதிர்ந்த பிராயத்தில் போகங்களை அனுபவிப்பர்.

ஏழைகளிடம் அடாத வட்டி வாங்கியோரும் மிருகங்களை வேட்டையாடி வதை செய்தோரும் ஹிம்ஸை நிறைந்த நாட்டில் ஜன்மம் எடுப்பர்.

முற்பிறவியில் செய்த கர்மங்களுக்கான பலன்களை இந்த ஜன்மத்திலும், இந்த ஜன்மத்தில் செய்யும் கர்மங்களுக்கான பலன்களை அடுத்த ஜன்மத்திலும் அனுபவிப்பர்.

 

ஆச்சரியமான ஒரு சம்பவம்

கர்ம பலன்களின் விளைவுகள் அதிசயக்கத் தக்க விதத்தில் ஒரு கணம் கூடத் தவறாது எப்படியோ நம்மை வந்து அடைகின்றன. இதை விளக்க ஒரே ஒரு ஆச்சரியமான சம்பவத்தை மட்டும் இங்கே பார்ப்போம்:

 

பிரபல ஆங்கில மாத இதழான ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ இதழை அறியாதவர்கள் இருக்க முடியாது. மிகவும் சிறந்த கட்டுரைகளை மட்டுமே அது ஒவ்வொரு இதழிலும் வெளியிடும் – அதுவும் ஒவ்வொரு சம்பவமும் தகவலும் ஏன் எழுத்தும் கூடச் சரி பார்க்கப்பட்டு! ரீடர்ஸ் டைஜஸ்ட் க்ளாஸிக் என்ற ஒரு சிறப்புப் புத்தகத்தில் பல வருடங்களாக இது வரை வெளியான கட்டுரைகளிலிலிருந்து மிகவும் சிறந்த கட்டுரைகளை அது வெளியிட்டுள்ளது. அதில் ஒரு அற்புதமான கட்டுரை கர்மபலன் சம்பந்தப்பட்டது. (இதன் மறுபதிப்பை ஜனவரி 2010 இதழில் படிக்கலாம்) அதில் வரும் சம்பவம் தான் இது!

1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி பிற்பகல். மார்செல் ஸ்டெர்ன்பெர்கர் என்பவர் ஹங்கேரியில் பிறந்தவர். பிழைப்புக்காக நியூயார்க் வந்து போட்டோகிராபராக தன் வாழ்க்கையைக் கழிக்கலானார். அவரது தினசரி வாழ்க்கை வழக்கமான ஒன்று – வீட்டிலிருந்து ஐந்தாம் அவென்யூவில் உள்ள தன் அலுவலகத்திற்குச் செல்வது, அங்கு வேலையை முடித்து விட்டு திரும்பவும் வீடு வந்து சேர்வது என்பது தான் அவரது வழக்கம்.

 

50 வயதான மார்செல் வழக்கம் போல சரியாக 9.09க்குக் கிளம்பும் லாங் ஐலேண்ட் ரெயில்ரோட் புகை வண்டியில் ஏறி உட்சைடு என்ற அவரது இடத்துக்குப் போயிருக்க வேண்டும். அன்று அவருக்கு வழியில் ப்ரூக்ளினில் இருக்கும் தன் நண்பரைப் பார்க்க வேண்டும் போலத் திடீரென்று தோன்றியது.ஆகவே ஒஸோன்பார்க் என்ற ஸ்டேஷனில் இறங்கி ப்ரூக்ளின் செல்லும் ரயிலில் ஏறினார்.தனது நண்பரின் இல்லத்திற்குச் சென்று அவருடன் சற்று நேரம் அளவளாவி மகிழ்ந்து பின்னர் ரயில் நிலையம் வந்து மன்ஹாட்டனுக்குச் செல்லும் ரயிலில் தன் அலுவலகம் செல்வதற்காக ஏறினார்.ரயிலில் ஒரே கூட்டம்.உட்கார இடமே இல்லை.ஆனால் என்ன ஆச்சரியம். அவர் உள்ளே நுழைந்த போது அடுத்த ஸ்டேஷனில் இறங்க வேண்டிய ஒருவர் தன் இருக்கையை விட்டு எழுந்திருக்க சடக்கென்று அந்த இடத்தைப் பிடித்தார் மார்செல்.போட்டோகிராபருக்கே உரித்தான இயல்புடன் தனக்கு அடுத்து உட்கார்ந்திருந்தவரின் முகத்தைப் பார்த்தார். அடுத்த சீட்டில் உட்கார்ந்திருந்தவருக்கு சுமார் முப்பது வயது இருக்கும். ஒரு விதமான சோகம் அவர் கண்களில் ததும்பி இருந்தது.அவர் ஹங்கேரிய மொழியில் வெளிவரும் செய்தித்தாள் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார். தனது தாய் மொழியில் இருக்கும் பேப்பரைக் கண்டு ஆனந்தம் அடைந்த மார்செல் உடனே அவரிடம் அதைச் சற்று தருமாறு ஹங்கேரிய மொழியில் வேண்டினார். அவருக்கு ஒரே ஆச்சரியம். நியூயார்க்கில் ஹங்கேரிய மொழியில் பேசும் ஒருவரா! அடுத்த அரை மணி நேரப் பயணத்தில் அவர் தன் சோகக் கதை முழுவதையும் கூறி விட்டார்.அவரது பெயர் பாஸ்கின். சட்டம் படிக்கும் மாணவராக இருந்த போது இரண்டாம் உலக மகா யுத்தம் ஆரம்பமானது. அவரைப் பிடித்து இறந்த ஜெர்மானியர்களைப் புதைப்பதற்காக உக்ரேனில்   இருந்த முகாமுக்கு அனுப்பி விட்டார்கள்.யுத்தம் முடிந்தவுடன் பல நூறு மைல்கள் நடந்து ஹங்கேரியில் இருந்த டெப்ரெசென் என்ற தன் சொந்த ஊருக்கு வந்த தனது வீட்டிற்குச் சென்ற போது அதிர்ந்து போனார். அங்கே அவரது தந்தை, தாயார், சகோதர சகோதரிகள்,மனைவி யாரையும் காணோம்.அங்கே இருந்தவர்களுக்கு பாஸ்கின் குடும்பம் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. மலைத்து நின்ற பாஸ்கினை நோக்கி ஓடி வந்த சிறுவன் பாஸ்கின் அங்கிள், உங்கள் வீட்டில் இருந்த அனைவரும் இறந்து விட்டனர்.நாஜிக்கள் உங்கள் மனைவியை அசுவிச் சித்திரவதை முகாமுக்கு கொண்டு சென்று விட்டனர்.” என்று கூறினான்.சோகத்தோடு பாரிஸ் திரும்பிய மார்செல் 1947இல் அக்டோபர் மாதம் நியூயார்க் வந்து சேர்ந்தார்.

 

இந்தக் கதையைக் கேட்டுக் கொண்டிருந்த மார்செலுக்கு திடீரென்று தான் சமீபத்தில் சந்தித்த ஒரு பெண்மணி பற்றிய ஞாபகம் வந்தது… அவர் டெப்ரெசனைச் சேர்ந்தவர் தான். அவரது உறவினர்கள் நச்சு வாயு சேம்பர்களில் நாஜிக்களால் கொல்லப்பட்டனர். அசுவிச்சில் ஜெர்மானிய ஆயுத பேக்டரியில் வேலை பார்த்து வந்த அவரை யுத்த முடிவில் அமெரிக்கர்கள் விடுவித்தனர்.

பாஸ்கினிடம் மார்செல் அவரது மனைவியின் பெயர் மரியாவா என்று கேட்டார். பாஸ்கின் ஆச்சரியப்பட்டுப் போனார். எப்படி முகம் அறியாத ஒருவருக்குத் தன் மனைவியின் பெயர் தெரிந்தது/

அடுத்த ஸ்டேஷனில் பாஸ்கினை இறங்குமாறு கூறிய மார்செல் ஒரு போன் பூத்திற்குச் சென்று தனது டயரியை எடுத்து ஒரு போன் நம்பரை டயல் செய்தார். மரியாவிடம் அவர் கணவரின் அடையாளங்களைக் கேட்டார். பாஸ்கின் தான் அவரது கணவர் என்று உறுதிப்படுத்திக் கொண்ட மார்செல் போனை பாஸ்கினிடம் தந்து, “உங்கள் மனைவியிடம் பேசுங்கள்” என்றார். வாயடைத்துப் போன பாஸ்கின் சில நிமிடங்கள் அப்படியே நின்றார். பின்னால் போனில் தன் மனைவியுடன் பேசி ஆனந்தக் கண்ணீர் விட்டார். பின்னர் பாஸ்கினை ஒரு டாக்ஸியில் ஏற்றி மனைவியிடம் செல்லுமாறு கூறிய மார்செல் தம்பதிகள் இணையும் புனிதமான தருணத்தில் தான் இருப்பது அழகல்ல என்று விளக்கி பாஸ்கினை மட்டும் அனுப்பினார்.

இப்போது கூட இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று என்னால் நம்ப முடியவில்லை என்று கூறும் மார்செல் சம்பவத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் அலசுகிறார். ஏன் அவர் தன் நண்பரைப் பார்க்க திடீரென்று அவருக்கு ஏன் தோன்ற வேண்டும். சரியாக ஒரு குறிப்பிட்ட ரயிலைத் திரும்பும் போது ஏன் பிடிக்க வேண்டும், அதில் ஒரு இருக்கை தனக்கு மட்டும் ஏன் கிடைக்க வேண்டும், அருகில் இருந்தவர் அந்தக் கணத்தில் ஏன் ஹங்கேரிய பேப்பரைப் படிக்க வேண்டும்.. ஏராளமான அதிசயங்கள்.

 

இறைவனின் வழி தனி வழி என்று முடிகிறது கட்டுரை!.

கர்ம பலன்கள் தவறாது அந்தந்த கணத்தில் உரியவரை வந்து அடையும் என்பதற்கான சரியான நடந்த சம்பவம் இது! ஆனால் ஆயிரக்கணக்கானோருக்கு இது போன்ற அதிசய சம்பவங்கள் தினந்தோறும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. அதில் உள்ள அபூர்வமான நிகழ்வுகளை இனம் காணும் மனோபாவம் தான் ஏராளமானோருக்கு இல்லை. அப்படி அதிசய நிகழ்ச்சிகளை இனம் காணும் சிலருக்கும் அதைக் கர்ம பலன்களோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தெரியவில்லை. ஒவ்வொருவரும் தனது வாழ்வில் நிகழும் சம்பவங்களை அன்றாடம் இரவு படுக்கப் போகும் முன்னர் அலசினால் கர்ம பலன்களின் ரகசியத்தை ஓரளவு உணர்ந்து கொள்ளலாம்!

 

நூறு கோடி கல்பம் ஆனாலும் வினை விடாது

 

ஹிந்து மதத்தின் மிக முக்கியமான இந்த கர்மபலன் தத்துவத்தை விளக்கும் சுபாஷித சுலோகம் ஒன்று உண்டு.

க்ருத கர்ம க்ஷயோ நாஸ்தி கல்போ கோடி ஷதைரபி I

அவஸ்யமேவ போக்தவ்யம் க்ருதம் கர்ம சுபாசுபம் II

இதன் பொருள்: ஒருவன் செய்த கர்மங்களின் பலன்கள் (செயல்களின் விளைவுகள்) ஒரு பொழுதும் அழியாது. அநேக நூறு கோடி கல்பம் போனாலும் சரி, (அழியாது) த்னது கர்ம பலனை ஒருவன் அனுபவித்துத் தான் ஆக வேண்டும். அவை நல்லவையாக இருந்தாலும் சரி, தீயவையாக இருந்தாலும் சரி, அனுபவித்தே ஆக வேண்டும்!

இந்த கர்ம பலனை உரிய நேரத்தில் உரியவரை யார் கொண்டு சேர்க்கின்றனர், இதற்கான செயல் முறை என்ற மாபெரும் இறை ரகசியத்தை அறிந்தவர் யாரும் இல்லை என்றே நமது அற நூல்கள் வியந்து கூறுகின்றன!(ந மே விது: ஸ¤ரகணா ப்ரபவம் ந மஹர்ஷய: – என்னுடைய ப்ரபாவத்தை தேவர் கூட்டங்களோ மஹரிஷிகளோ அறியார் – கீதையில் கண்ணன் வாக்கு – 10ஆம் அத்தியாயம் 2ஆம் ஸ்லோகம்)

உத்தரேத் ஆத்மனாத்மானம்

 கர்ம பலன்களையும் அதற்கான பலன்களையும் பூர்வ ஜன்ம புண்ணியத்தால் சில தீய விளைவுகளுக்கான பரிகாரம் செய்து இந்த ஜன்மத்திலேயே நலம் பெறுவதற்கான வழிகளையும் ரிஷிகள் உள்ளுணர்வால் அறிந்து அதை பல தர்ம சாஸ்திர நூல்களில் விவரித்துள்ளனர். அவற்றை அறிந்து நலம் பெறலாம்; பலனை எதிர்பார்க்காமல் கர்மங்களைச் செய்து கர்ம விளைவுகள் நம்மைப் பற்றாமல் அடுத்த ஜன்மத்தைப் புனிதம் நிறைந்ததாக ஆக்கிக் கொள்ளலாம்; கர்ம பலன் ரகசியத்தை விசாரத்தால் அறிந்து, இறைவனை அடிபணிந்து ஜன்ம நிவிருத்தி பெற்று முக்தியையும் அடையலாம்! எல்லாம் நம் கையில் தான் இருக்கிறது.

இதையே கீதையில் சுருக்கமாக கண்ணன் ‘உத்தரேத் ஆத்மனாத்மானம்’ (உன்னை நீயே உயர்த்திக்கொள்ளலாம்) என்று கூறி விட்டான்!

நன்றி: ஞான ஆலயம் ஆகஸ்டு 2012                                          இந்தத் தொடர் நிறைவுறுகிறது

Article written by S Nagarajan