
Written BY S NAGARAJAN
Date: 25 April 2016
Post No. 2755
Time uploaded in London :– 13-51
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
ச.நாகராஜன்

“பொன்னியின் செல்வனின் எத்தனை எழுத்துக்கள்?”
“பத்தொன்பது லட்சத்தி பதினாலாயிரத்தி நானூறு எழுத்துக்கள்!”
“அடடே! அதில் உள்ள சொற்கள் எத்தனை?”
“நாலு லட்சத்து ஏழாயிரத்து நூற்றி நாற்பத்தியேழு.”
“அட, அதில் இடம் பெற்றுள்ள வாக்கியங்கள்? அத்தியாயங்கள் எத்தனை?”
“61333 வாக்கியங்கள் 293 அத்தியாயங்களில் இடம் பெற்றுள்ளன?”
“அடடே, போகிற போக்கில் ஓர் எழுத்துச் சொற்கள் எத்தனை. இரண்டு எழுத்துச் சொற்கள் எத்தனை என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போவீர்களா?”
“நிச்சயமாக!
அதில் வரும் ஓர் எழுத்துச் சொற்கள் 2220
இரண்டு எழுத்துச் சொற்கள் 40606
மூன்று எழுத்துச் சொற்கள் 78705
நான்கு எழுத்துச் சொற்கள் 101573
ஐந்து எழுத்துச் சொற்கள் 69321
ஆறு எழுத்துச் சொற்கள் 44348
ஏழு எழுத்துச் சொற்கள் 30217
எட்டு எழுத்துச் சொற்கள் 19220
ஒன்பது எழுத்துச் சொற்கள் 9445
பத்து எழுத்துச் சொற்கள் 5830
ப்தினொன்று எழுத்துச் சொற்கள் 2961
ப்ன்னிரெண்டு எழுத்துச் சொற்கள் 1438”

“போதும், போதும் நீங்கள் யார்? உங்கள் பெயர் என்ன?”
“என் பெயர் க.சீனிவாசன். அறிவியல் அலுவலர். கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன்.”
“எப்படி இவ்வளவு நுணுக்கமாக அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைக்கிறீர்கள்?”
“அதில் ஒன்றும் சிரமம் இல்லை! இந்த நெடிய புதினத்தைச் சென்னை குரோம்பேட்டையிலுள்ள AUKBC தரவு உள்ளீடு செய்து இணணயதளத்தில் வழங்கியிருக்கிறது. எனவே எனது ஆய்வுக்குத் தேவையான தரவைப் பெறுவதில் சிக்கல் எழவில்லை.”
“நீங்கள் மேற்கொண்டு என்ன செய்தீர்கள்?”
“தர்வுகளை அலசுவதற்குத் தேவையான நிரல்களை மட்டும் கணிப்பொறிக்கென எழுத வேண்டியிருந்தது.”
“உங்கள் ஆய்வின் முடிவில் என்ன கண்டு பிடித்தீர்கள்?”

“ஏறக்குறைய நான்கு லட்சம் சொற்கள் கொண்டுள்ள இந்தப் புதினம் ஏ 4 அளவுத்தாளில் அச்சிட்டால் சுமார் 900 பக்கங்கள் வரும். அதில் பதினொன்றாயிரத்திற்கும் மேலான சொலவளத்தை கல்கி பயன்படுத்தியுள்ளார் என அறிய முடிகிறது.
புதினத்தில் உரையாடல் இடம் பெற்றிருப்பதை ஓரெழுத்து ஒரு மொழி வாயிலாகவும் ஒரு சொல் வாக்கியங்கள் மூலமாகவும் அறிய இயலும். நீண்ட சொல் அமைப்புகளையும் நீண்ட வாக்கிய அமைப்புகளையும் கொண்டு நூலாசிரியரின் நடையை ஒருவாறு தெளியலாம்.”
“ஆஹா! அருமை! இதற்கு மேல் கொண்டு என்ன செய்யலாம், இந்த ஆய்வில்?”
“ஒரு நூலாசிரியர் வாலிபப் பருவத்தில் எழுதும் போது உள்ள சொல்லாட்சிக்கும் முதிர்வுப் பருவத்தில் அவர் சிந்தனை செம்மையுறும் போது படைக்கப்படும் புதினங்களில் உள்ள சொல்லாட்சிக்கும் வேறுபாடு இருத்தல் கூடும். அறிவுத் தேடலில் ஒரு கட்டத்தில் சொல்வ்ளம் உச்சம் பெறுவதாகவும் மொழிப்பயன்பாடு இறுகுவதாகவும் (fossilation or crystallaization) அறிஞர்கள் உரைக்கின்றனர். இக்கூற்றின் தன்மையை மெய்ப்பிக்க நூலாசிரியரின் புதினங்களைக் காலவரிசைப்படுத்தி ஆய்வு செய்தல் மேலும் பயன் தரக்கூடும்!”
“சபாஷ்!சீனிவாசன் அவர்களே! கல்கியின் வாசகர்கள் உங்களைப் பெரிதும் பாராட்டுவார்கள். எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஆய்வின் மூலமாக ஒரு பெரும் உண்மையை தமிழ் மக்கள் அறிந்து கொள்கிறார்கள். பெரும் ஆய்வுகளின் ஆரம்பப் பணியை கணினி எளிதாக்குகிறது. மிகக் கஷ்டமான சொற்களின் எண்ணிக்கை மற்றும் தரவுகளை அது அனாயாசமாக அள்ளி வீசுகிறது. இது முந்தைய காலத்தில் தமிழ் அறிஞர்களால் பல்லாண்டு உழைப்பின் மூலமாகவே பெறப்பட்டது, இப்போது கணினியின் ஒரு சொடுக்கின் மூலமாகப் பெறப் படுகிறது. அந்தத் தரவுகளை அடிப்படையாக வைத்து அற்புதமான் ஆய்வுகளைச் செய்ய முடியும் என்பதை உங்கள் ஆய்வால் உணர முடிகிறது. கம்பன், பாரதி, சங்க இலக்கியம் ஆகியவற்றில் இப்படி கணினி மூலமாகப் தரவுகள் பெறப்பட்டால் தமிழகத்தில் ஒரு புதிய அறிவுப் பேரலை எழும்பும் என்பதில் சந்தேகமே இல்லை!”
*
ஆய்வாளர் திரு க.சீனிவாசனின் ‘கல்கி கிருஷ்ணமூர்த்தியின் சொல்லாட்சி’ என்ற கட்டுரையின் அடிப்படையில் மேலே கண்ட கற்பனை உரையாடல் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கட்டுரை வளரும் தமிழ் என்னும் புத்தகத்தில் இடம் பெற்ற கட்டுரை. பல நல்ல கட்டுரைகளைக் கொண்டுள்ள இந்த நூல் பதிப்பாசிரியர்கள் சா.கிருட்டினமூர்த்தி, தி.மகாலட்சுமி.சு.நரேந்திரன் ஆகிய முனைவர்களால் தொகுத்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் எமது பாராட்டுக்கள்!
நல்ல தமிழ் வளர நல்ல ஆய்வு வேண்டும். நல்ல முனைவர்கள் வேண்டும். இருண்ட தமிழகத்தில் மினுக் மினுக் என்று ஒரு சின்ன ஒளி கண்ணுக்குப் புலப்படுகிறது.
கீற்றொளி பெரும் ஜோதியாக மாறட்டும்!
************
You must be logged in to post a comment.