Written by S NAGARAJAN
Research Article No: 1824
Date: 24 April 2015; Uploaded in London at 8-22 am
சம்ஸ்கிருதச் செல்வம் – பாகம் 3
2. கேசவர், த்ரோணர், கௌரவரை வைத்து ஒரு புதிர்!
ச.நாகராஜன்
கம்பன் ஒரு மஹா கவி. அவனைப் போல் ஒரு கவி இனி பிறப்பானா என்பது சந்தேகமே. சரஸ்வதியின் அருள் இருந்தால் மட்டுமே அப்படி ஒரு மஹாகவி இனி தமிழ் நாட்டில் பிறக்கக் கூடும்.
அபார கற்பனை மின்னல்களை ஆங்காங்கு பளிச்சிடச் செய்து கவிதை வானில் பறந்து கொண்டே இருப்பான் அவன்.
உதாரணம் இந்திரஜித்தின் மாளிகை காவலர்களும் புதிர்களும். இது என்ன? இந்திரஜித்தின் மாளிகைக் காவலர்களுக்கும் புதிர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று திகைப்பு ஏற்படுகிறதல்லவா! கம்பனால் மட்டுமே இப்படிப்பட்ட திகைப்புகளைத் தர முடியும்!
அபார வீரனான இந்திரஜித்தை வெல்ல யாராலும் முடியாது. அவன் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அனைவரும் நடுநடுங்குவர். அப்படிப்பட்ட வீரனின் மாளிகையில் காவல் காப்போர் பெயருக்குத் தான் காவல் வீரர்கள்! அவர்கள் யாரைக் காவல் காப்பது? அவர்களுக்குப் பொழுதே போகவில்லையாம், என்ன செய்வது? ஆகவே அவர்கள் இரவு முழுவதும் விழித்துத் தங்கள் பணியை ஆற்ற ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள்! அது தான் ஒருவர் புதிர்களைப் போட வேண்டியது, மற்றவர் அதை விடுவிக்க வேண்டியது. பழங்கதைகளைப் பேசிக் கொண்டே இருப்பது, இப்படி பொழுதைப் போக்கினார்களாம், அவர்கள்!
பாடலைப் பார்ப்போம்:-
ஏதி யேந்திய தடக்கையர் பிறையெயி றிலங்க
மூதுரைப் பெருங்கதைகளும் பிதிர்களு மொழிவார்
ஓதி லாயிர மாயிர முறுவலி யரக்கர்
காது வெஞ்சினக் களியினர் காவலைக் கடந்தான்
சுந்தர காண்டம் – ஊர்தேடு படலம் – பாடல் 138
இதன் பொருள் : சொல்லப் போனால், ஆயுதங்களை ஏந்திய அகன்ற கைகளைக் கொண்டவர்களும் பகைவரைக் கொல்ல வல்ல கோபமாகிய கள்ளை அருதியவரும் தம் பிறைகளை ஒத்த பற்கள் தெரியும்படி பழமையாகச் சொல்லப்பட்டு வரும் பெரிய கதைகளையும் விடுகதைகளையும் தமக்குள் பேசிக் கொண்டிருப்பவருமான பல ஆயிரம் மிக்க வலிமை பெற்ற அரக்கர்கள் அமைந்த காவலை அனுமன் தாண்டி உள்ளே சென்றான்.
இதற்கு உரை எழுதிய உ.வே.சாமிநாதையர், மூதுரை – ‘பழமொழிகளும் ஆம். பிதிர்கள் – வழக்க்கு அழிப்பாங்கதைகள் ; இவற்றை உறக்கம் வராதபடி உரைப்பர் என்பது பழைய உரை” என்று விளக்குகிறார்.
இன்னொரு பிரபல உரையாசிரியரான வை.மு.கோபாலகிருஷ்ண மாச்சாரியார் பாடலின் மூன்றாம் அடியில் உள்ள ‘முறுவலி அரக்கர்’ என்பதற்கு பதிலாக ‘உணர்விலி அரக்க’ர் என்ற பாட பேதத்தைத் தருகிறார்.
அவரது விளக்கவுரை:-
மூதுரை – முதுமொழி; அதன் இலக்கணம் – :நுண்மையும் சுருக்கமும் ஒளி உடைமையும், மென்மையும் என்று இவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரும் , ஏது நுதலிய முது மொழியான” என தொல்காப்பியத்தில் காண்க.
பெரும் கதை:- தேவாசுர யுத்தம், க்ஷீராப்தி மதநம், பூர்வீக ராக்ஷஸர் வரலாறு போல்வன.
பிதிர் – ஒரு சமயத்தில், கம்பர் ஔவையாரை நோக்கி,
“ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ” என்று சொல்லி, “இதன் பொருள் என்?” என்று வினாவியதும், “ஆரையடா சொன்னாயடா” என்று விடை கூறியதும் போல்வன! (ஆரைக்கீரை முதலின் காம்புகள் நான்கு பிளவுபட்ட இலையை உடையனவாய் இருக்கும்.)
எதிர்ப்பார் இல்லாமையால் புதிர்களைச் சொல்லிக் காலம் போக்கினர் காவல் வீரர்கள் என்பது கம்பனின் மின்னல் கற்பனை!
இனி இப்படிப்பட்ட அரும் புதிர்கள் தமிழ் மொழியிலும் சம்ஸ்கிருத மொழியிலும் ஆயிரக் கணக்கில் உள்ளன. அவற்றைத் தொகுப்பவர் தான் இல்லை.
ஆக இப்படிப்பட்ட பழம் பெரும் வரலாற்றைக் கொண்டவை கவிதைப் புதிர்கள்! அதை எடுத்துக் காட்டவே மேலே உள்ள கம்பனின் பாடல் உதாரணமாகத் தரப்பட்டது!
மேலும் சில சம்ஸ்கிருத புதிர் கவிதைகளைக் காண்போம்.
இப்போது காண இருப்பது ‘கூட ஸ்லோகம்’ என்னும் புதிர் கவிதை. இதை விடுவிப்பது சற்று சிரமமான காரியம்.
கேசவம் பதிதம் த்ருஷ்ட்வா த்ரோணோ ஹர்ஷசுபாகத: I
ருதந்தி கௌரவா: சர்வே ஹா கேசவ கதம் கத: II
இதன் பொருள் : ஒரு சவம் (பிணம்) நீரில் விழுவதைப் பார்த்த கழுகு ஒன்று மிக்க மகிழ்ச்சியை அடைந்தது – தனக்கு சரியான விருந்து தான் என்று! ஆனால் நரிகள் ஏமாற்றத்துடன் ஊளையிடுகின்றன – “ஓ, கேசவா, எப்படி அது இப்படிப் போய்விட்டது” –என்று!
இந்தப் பாடலில் கே+ சவம் = கேசவம் ஆகிறது. சவம் என்றால் பிணம்; கே என்றால் நீர். த்ரோண என்றால் கழுகு; கௌரவா என்றால் நரிகள்.
ஆனால் பாடலை முதலில் கேட்கும் போது கேசவன், த்ரோண, கௌரவா என்றவுடன் பாண்டவ, கௌரவர்களை நினைத்தும் துரோணரை மனதில் கொண்டும் புதிரை அவிழ்க்கத் தோன்றும்.
உண்மையான விடையைக் கேட்டவுடன் புன்முறுவல் தான் தோன்றும்!
இப்படி ஒரு வகைப் புதிரும் இது போல் உண்டு!
இது அமைந்துள்ள விருத்தம் ஆர்யா விருத்தம்.
இனி பஹிர் ஆலாப வகை புதிர் ஒன்று இது:-
கேசரத்ருமதலேஷு சம்ஸ்தித: கீத்ருஷோ பவதி மத்தகுஞ்சர: I
தத்தவத: சிவமபேக்ஷ்ய லக்ஷணைர் அர்ஜுன: சமிதி கீத்ருஷோ பவேத் II
இது அமைந்துள்ள விருத்தம் – ரதோத்தாத விருத்தம்
இதன் பொருள் :-
மத்த யானை கேசர மரத்தின் அருகே இறந்து பட்டால் என்ன ஆகும்?
சிவனை ஆராதித்து அர்ஜுனன் போர்க்களத்தில் எப்படி போர் புரிந்தான்?
இதற்கான விடை :- தான – வகுல – ப்ரமர– ஹிதா:
இப்படிப் பார்த்தால் முதல் கேள்விக்கு விடை கிடைக்கும்– கேசர மரத்தில் உள்ள தேனீக்களுக்கு யானையிடமிருந்து ஒழுகும் மதம் இதமான ஒன்றாகும்.
தானவ – குல – ப்ரம – ரஹிதா: – என இப்படிப் பார்த்தால் இரண்டாவது கேள்விக்கு விடை கிடைக்கும்.
அரக்கர்களின் கூட்டத்திலிருந்து ஏற்படும் கவலையிலிருந்து அர்ஜுனனுக்கு விடுதலை கிடைக்கும்.
(தானவ – அரக்கர்)
எப்படி தானவகுலப்ரமரஹிதா: என்ற சொற்றொடரை இரு விதமாகப் பிரித்தால் புதிர் கேள்விகளுக்கு விடை கிடைக்கிறது.
விடைகளுடன் படிப்பதால் எளிதாக ரஸிக்க முடிகிறது. கேள்வியைக் கேட்டு விடையைக் கண்டு பிடியுங்க்ள் என்றால் சம்ஸ்கிருத பண்டிதராக இருந்தாலும் இரவுத் தூக்கம் போய்விடும்!
*************







You must be logged in to post a comment.