
Written BY S NAGARAJAN
Date: 24 April 2016
Post No. 2754
Time uploaded in London :– 15-28
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
பாக்யா 2016, ஏப்ரல் 22 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
2900 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மருத்துவர் செய்த மூளை அறுவை சிகிச்சை!
ச.நாகராஜன்

2900 ஆண்டுகளுக்கு முன்னரே திபெத்திய மருத்துவர்கள் மூளை அறுவை சிகிச்சை செய்தனர். அதை மிகவும் பிரமாதமான முறையில் செய்ய இந்திய மருத்துவர் ஒருவரே உதவி செய்தார் என்ற ஆய்வுச் செய்தி பரபரப்பூட்டும் ஒரு செய்தி!
லாஸாவில் உள்ள திபெத்திய பல்கலைக் கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றும் கர்மா ட்ரின்லே (Karma Trinley) திபெத்திய கலைக் களஞ்சியமான திரிபிடகத்தை ஆராயப் புகுந்த போது அவர் இந்த உண்மையைக் கண்டுபிடித்தார்.
திரிபிடகம் என்பது புத்த மதத்தைச் சேர்ந்த ஒரு பெரும் அறிவுக் களஞ்சிய நூல். அதில் சூத்ரங்கள், வினயா, அவி-தர்மா ஆகியவை தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. முதலில் வாய்வழியாக பரப்பப்பட்ட திரிபிடகம் பின்னால் கி,மு.மூன்றாம் நூற்றாண்டில் நூலாக எழுதப்பட்டது. சம்ஸ்கிருத திரிபிடகத்தை திபெத்திய மொழியில் மொழியாக்கம் செய்தனர்.
இது இரு பகுதிகளைக் கொண்ட நூல்.முதல் பகுதி காங்யுர். அடுத்த பகுதி டாங்யுர். காங்யுர் புத்தரின் போதனைகளைத் தொகுத்துத் தருகிறது. டாங்யுர் காங்யுர் கூறும் புத்தரின் போதனையை விளக்குவதோடு விரிவுரையையும் தருகிறது. இதில் தத்துவம், தர்க்கம், இலக்கியம்,மொழியியல்,கலை, வானவியல், மருத்துவம், கட்டிடக்கலை, பஞ்சாங்க கணிதம் உள்ளிட்ட அனைத்து கலைகளும் அடங்கியுள்ளன.
இந்தியாவிலிருந்து மிகச் சிறந்த அறிவுத் தொகுதிகள் திபெத், சைனா, சிலோன்,பாலி, சுமத்ரா ஆகிய அண்டை நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

திபெத்தைச் சேர்ந்த கூர்மையான அறிவை உடைய ஆயிரக்கணக்கான புத்த பிட்சுக்கள் இந்திய தொழில்நுட்பத்தால் கவரப்பட்டு அவற்றை நன்கு கற்று தங்கள் நாட்டில் அதைப் பரப்ப ஆர்மபித்தனர். குறிப்பாக மருத்துவத் துறையில் மிகப் பெரும் விற்பன்னரான தன்வந்த்ரி மற்றும் அவரது சீடரான சுஸ்ருதர் ஆகியோர் மிக அரிய மருத்துவக் கண்டுபிடிப்புகளைச் செய்திருந்தனர். இவற்றைத் தொகுத்த சுஸ்ருதர் சுஸ்ருத சம்ஹிதா என்ற நூலை இயற்றினார். அதில் அரிய மருத்துவ விஷயங்களை அவர் விளக்கியுள்ளார்.
கி.மு.ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த நூலை கி.பி,ஐந்தாம் நூற்றாண்டில் மிகப் பெரும் புத்த மத மேதையான நாகார்ஜுனர் திருத்திப் பதிப்பித்தார்.
சுஸ்ருதர் 127 விதமான அறுவைச் சிகிச்சைக்கான நுட்பமான கருவிகளைப் பற்றி விளக்குகிறார்.
மன்னர் பிம்பசாரனின் மருத்துவரான ஜீவகன் உலகின் அதி நவீனமான மூளை அறுவைச் சிகிச்சையைச் செய்து புகழ் பெற்றார். மண்டையோட்டில் துளையிட்டு ஒரு புழுவை எடுத்து ஒரு மனிதனை அவர் குணப்படுத்தியது அனைவரையும் வியக்கச் செய்தது.
இது மட்டுமின்றி மிஸௌரி கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதியிட்ட டெலகிராப் இதழில் 9000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் இருந்த பல் வைத்தியர்கள் பல்லில் துளையிட்டு அங்கு சொத்தையை அகற்றுவதில் நிபுணராக இருந்தனர் என்ற செய்தியை வெளியிட்டனர்.

அவர்களது ஆய்வு விவரமாக குழுவின் தலைவரான ஆண்ட்ரியா க்யூஸினாவால் (Andrea Cusino) எழுதப்பட்டு பிரப்ல அறிவியல் இதழான ‘நியூ ஸயிண்டிஸ்ட்’ இதழில் பிரசுரிக்கப்பட்டது. ம்ஹர்ஹர் என்ற இடத்தில் கிடைத்த தொல் படிமங்களை ஆராய்ந்த அவர்கள் இப்படிப் பல்லில் மிகச் சிறிய துளையைப் போட மிகவும் சிறந்த கருவியை அவர்கள் பயன்படுத்தி இருக்க வேண்டும் என்று வியப்புடன் தெரிவித்தனர்.
இதே வழியில் திரிபிடகத்தை இப்போது ஆராய்ந்த கர்மா ட்ரின்லே இந்திய மருத்துவரான ட்ஸோஜியல் (Tsogyel) மூளை அறுவை சிகிச்சை நட்ந்த போது கூட இருக்க மட்டும் அனுமதிக்கப்பட்டர் என்னும் செய்தியைத் தருகிறார்.
திரிபிடகம் தரும் சுவையான ஆபரேஷன் தகவல்கள் விரிவாக அவரால் விளக்கப்படுகின்றன.
வலி தாங்காத நோயாளி தன் தலையை படார் படாரென்று வலிமை வாய்ந்த பொருள்களின் மீது மோத வைத்து வலியைத் தணித்துக் கொண்டாராம். இரண்டு ட்வீஸர்களை வைத்து மூளை அறுவைச் சிகிச்சையை திபெத்திய மருத்துவர்கள் ஆரம்பித்த போது இந்திய மருத்துவர் ஓவென்று அலறினாராம்.
முதலில் ட்வீஸர்களை சூடு படுத்தி அதைத் தூய்மைப் படுத்துங்கள் என்று கூற அவரது அறிவுரையைப் பின்பற்றி ஆபரேஷன் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதாம். இந்திய மருத்துவர்கள் செய்த மூளை அறுவைச் சிகிச்சைகள் பெரும் மருத்துவ முன்னேற்றத்தின் அறிகுறி.
இப்படி நாளுக்கு நாள் இப்போது நடந்து வரும் ஆய்வுகள் அதி நவீன உத்திகளையும் சாதனங்களையும் வைத்து செய்யப்படுபவை.
அறிவியல் பூர்வமாக இந்தியாவின் புராதன பெருமை இப்போது நிரூபிக்கப்பட்டு வருவதைப் பார்த்த ஸ்வீடனைச் சேர்ந்த பிரபல ராஜதந்திரி க்வுண்ட் ப்ஜோர்ண்ட்ஜெர்னா (Count Bjornstjerna) , “ஹிந்துக்களின் மிக உயரிய நாகரிகம் மேற்கே எதியோப்பியா,எகிப்து, போனீஷியாவிலும் கிழக்கே சயாம், சைனா, ஜ்ப்பானிலும் தெற்கே சிலோன், சுமத்ரா, ஜாவாவிலும் வடக்கே பெர்ஸியா, கால்டியா கால்ஸிஸ் வழியே கிரேக்கம் மற்றும் ரோமிற்கும் பரவின .பூவுலகில் உள்ள எந்த ஒரு நாடும் ஹிந்துக்களின் புராதனமான நாகரிகம் மற்றும் மதத்தைப் பார்த்து வியக்காமல் இருக்க முடியாது” என்று புகழாரம் சூட்டுகிறார்.
சுதந்திரம் பெற்ற இந்தியா அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் பழைய பெருமையை மீண்டும் பெறும் என்று நம்பலாம்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
ஆண்ட்ரியாஸ் வெஸல்லஸ் (Andrea Vesallus 31-12-1514 – 15-10-1564) என்பவரே நவீன உடல்கூறியலின் தந்தை எனப்படுபவர். மனித உடலை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்த விஞ்ஞானி இவர். பிரேதங்களை இவர் கூறிட்டுப் பார்க்கும் போது இவரது மாணவர்கள் அருகிலிருந்து பார்ப்பது வழக்கம்.
1564ஆம் ஆண்டு அவர் ஜெருசலத்திற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டார். அங்குள்ளவர்கள் இவரை பேராசிரிய்ராகப் பணி புரியுமாறு வேண்டினர். ஆனால் அவர் இதை ஏற்கவில்லை.
கப்பலில் திரும்பிய அவர் கடல் புயலில் மாட்டிக் கொண்டார். அவரது கப்பல் உடைய, ஜகிந்தோஸ் என்ற தீவில் அவர் கரை ஒதுங்கினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் அங்கேயே இறந்தார். அங்கோ அவரிடம் பணமே இல்லை. கடனாளியானார். அந்தத் தீவின் வழக்கப்படி யார் ஒருவர் தனது இறுதிச் சடங்கிற்கு பணம் ஒதுக்கவில்லையோ அவரது சடலம் மிருகங்களிடம் வீசப்படும். ஐம்பதே வயதான அவர் பரிதாபகரமாக இறந்தார்.
அவர் புனிதப் ப்யணம் மேற்கொண்டதைக் கொச்சைப் படுத்தும் விதத்திலும் பல கதைகள் பரப்பப்பட்டன. அவர் ஸ்பெயினைச் சேர்ந்த ஒருவரை பிரேத பரிசோதனையின் போது அறுத்துப் பார்த்த போது அவரின் இதயம் இயங்கிக் கொண்டிருந்ததாகவும் ஆகவே அவர் மீது விசாரணை கமிஷ்ன் நிறுவப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் ஆனால் மன்னர் இரண்டாம் பிலிப் அதை மாற்றி அவரை நாடு கடத்தியதாகவும் கதைகள் பரப்பப்பட்டன.
இப்போது பழைய ஆவணங்களை எடுத்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் உடல் கூறியலின் தந்தையான அவருக்கா இந்த அவப்பெயர் என்று வியந்து உண்மையை உலகிற்கு முன் வைக்கின்றனர்.
********
You must be logged in to post a comment.