மதப் பிரசாரம் கூடாது: இங்கிலாந்து ராஜாவுக்கு சீன ராஜா கடிதம்( Post No. 2401)

chien2

Compiled by London swaminathan

Date: 18 December 2015

 

Post No. 2401

 

Time uploaded in London :– காலை 6-20

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

Chien lung’s (1711-1799) letter to George III (1760-1801).

சீனாவை ஆண்ட சியான் லங் என்பவர் இங்கிலாந்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னருக்கு ஒரு அழகான கடிதம் எழுதியுள்ளார். அந்தக் காலத்தில் கடிதம் எழுதும் கலை எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. இதோ அந்தக் கடிதம்:_

“ பல கடல்களைத் தாண்டி தொலைவில் வசிக்கும் ஓ, மன்னவா! எங்கள் நாகரீக நன்மைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் உடையவரே! மரியாதைக்குரிய உமது கடிதத்துடன் உங்கள் நாட்டு தூதர் இங்கே வந்தார். நீங்கள் மரியாதையுடன் அனுப்பிய உங்கள் நாட்டுப் பரிசுப்பொருள்கள் கிடைக்கப் பெற்றோம்.

george3

எங்கள் சாம்ராஜ்யத்தின் மணம் இந்த சொர்கத்தின் கீழுள்ள எல்லா நாடுகளிலும் பரவி இருக்கிறது. இந்தப் பூவுலகில் எல்லா மன்னர்களும் எங்களுக்கு கடல் வழியாகவும், நிலம் வழியாகவும் கப்பம் செலுத்தி வருகின்றனர். எங்களிடம் எல்லாப் பொருட்களும் உளது. விநோதமான, விலையுயர்ந்த உங்கள் நாட்டுச் சரக்குகளில் எங்களுக்கு நாட்டம் இல்லை. தொலை தூரத்திலிருந்து மரியாதையுடன் அனுப்பியதாலேயே அவைகளை நாம் ஏற்றோம்.

 

உங்கள் கடிதத்தை நான் படித்தேன். உங்கள் பணிவும் அடக்கமும் அதில் பிரதிபலித்தது. உங்கள் நாட்டுத் தூதருக்கு நான் பல சலுகைகளை அளித்தேன். அவரைக் கௌரவித்துப் பல பரிசுப் பொருட்களையும் தந்தேன். மன்னவா, உமக்கும் நான் விலையுயந்த பரிசுப் பொருட்களை அனுப்புகிறேன். அவைகளின் பட்டியலையும் அனுப்புகிறேன். அவைகளை அன்புடன் ஏற்கவும். உன்பால் எனக்குள்ள பரிவும் பாசமும் அதில் புலப்படும்.

 

ch-ien-lung-

சொர்கம் போன்ற எனது அரசவையில் உமது நாட்டு தூதர் இருக்க விருப்பம் தெரிவித்தீர். அதை நாம் ஏற்பதற்கில்லை. பீகிங் மாநாகரில் வசிக்கும் எந்த ஐரோப்பியனும், வெளியே போக முடியாது; கடிதமும் எழுத முடியாது. ஆகையால் இங்கு உன்னாட்டு தூதரை அனுப்புவதில் யாதொரும் நன்மையும் விளையாது. மேலும் ஐரோப்பாவில் உம் நாட்டைப் போல பல நாடுகள் உள. அவ்வளவு ஆட்களும் எமது அரசவையில் அமர வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தால் நாம் ஏற்பது எங்கனம்? நீங்கள் கேட்பதற்காக இந்த சாம்ராஜ்யம், அதனுடைய  பழக்க வழக்கங்களை (சம்ப்ரதாயங்களை)  மாற்றிக்கொள்ள முடியுமா?

 

காண்டன் நகரத்துக்கு வெளியேயும் உங்கள் நாட்டு சரக்குகளின் வியாபாரம் நடத்த அனுமதி வேண்டுமென்ற கோரிக்கையையும் உமது தூதர் தெரிவித்தார். வேறு எந்தத் துறைமுகத்திலும் வசதிகளுமில்லை; மொழிபெயர்ப்பாளர்களுமில்லை. ஆகையால் உன்னாட்டு வணிகர்கள் அங்கே வர்த்தகம் செய்ய இயலாது. கடந்தகாலத்திலும் சரி, எதிர்காலத்திலும் சரி உமது வேண்டுகோளை நிராகரிக்கிறேன். காண்டன் துறைமுகத்தில் மட்டும் நீவீர் வியாபாரம் நடத்தலாம்.

 

பீகிங் நகரில் வியாபாரம் செய்ய வேண்டும், சரக்குகளைச் சேமித்துவைக்க வசதிகள் வேண்டும் என்பது செயல்முறைக்கு ஏற்றதல்ல. எனது தலைநகரம் உலகிலுள்ள எல்லாம் வலம் வரும் அச்சுப் போன்றது. அதன் சட்டதிட்டங்கள் மிகவும் கடுமையானவை. இதுவரை எந்த வெளிநாட்டானுக்கும் அங்கே அனுமதி தந்ததில்லை. ஆகையால் உமது வேண்டுகோளை அனுமதிக்க மாட்டேன்.

GeorgeIII

உமது மதத்தைப் போதனை செய்யவும் உமது தூதர் அனுமதி கோரினார். வரலாறு தோன்றிய காலம் முதற்கொண்டு சீனாவின் அறிவு சால் மன்னர்களும் சாது,சந்யாசிகளும் ஒரு மதத்தை எங்களுக்கு அளித்துள்ளனர். அதைக் கோடிக்கணக்கான எமது பிரஜைகள் பின்பற்றி வருகின்றனர்.எங்களுக்கு வெளி நாட்டான் கற்பிக்க வேண்டிய தேவை இல்லை. உமது மதப் பிரசார கோரிக்கை சாரமற்றது.

 

எங்கள் நாகரீகத்தைப் பகிர்ந்து கொள்ளவிரும்பும் பல கப்பம் செலுத்தும் நாடுகளிடம் நாங்கள் பேரன்பு காட்டிவருகிறோம். ஓ, தொலைதூரத்தில் வசிக்கும் மன்னவா! உம்மிடத்தில் வேறு எவரையும் விட கூடுதலாகவே அன்பு காட்டினோம். ஆனால் உமது கோரிக்கைகளோவெனில் எம் நாட்டு பழக்க வழக்கங்களுக்கு மாறுபட்டுள்ளன. இதனால் எந்த நன்மையும் பயக்காது. ஆகையால்தான் நாம் சற்று விவரமாகவே பதில் தருகிறோம். எங்கள் உணர்ச்சிகளை நன்கு புரிந்துகொண்டு மரியாதையுடன் அவைகளுக்கு எக்காலத்திலும் கீழ்படிந்து நடத்தல் வேண்டும். உங்களுக்கு நல்ல அமைதி கிட்டுமாக!”

 

xxxx