
Picture of Dr Raghavan, Sanskrit Scholar
Written by S NAGARAJAN
Date: 26 December 2015
Post No. 2427
Time uploaded in London :– காலை 6-35
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
சம்ஸ்கிருதச் செல்வம்
சுபாஷித இலக்கியம்
ச.நாகராஜன்
கூகிளின் புத்தகத் திட்டம்
உலகில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கையைச் சொல்வது முடியக் கூடிய காரியமா என்ன?
மலைக்க வேண்டாம்.
வானத்தில் உள்ள கோடிக்கணக்கான நட்சத்திரங்களையே பட்டியலிடும் இந்தக் காலத்தில் முடியாதது என்று ஒன்று உண்டா என்ன?
கூகிள் களத்தில் இறங்கியது. தி டெலகிராஃப் பத்திரிகை 6-8-2010 தேதியிட்ட இதழில் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதன்படி புத்தகம் பற்றிய கூகிள் திட்டம் முடிந்து விட்டதென்றும் உலகில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை சரியாக 129,864,880 (பன்னிரண்டு கோடியே தொண்ணூற்றெட்டு லட்சத்து அறுபத்தி நான்காயிரத்து எண்ணூற்றி எண்பது) என்றும் அந்தச் செய்தி கூறியது.
புத்தகங்களின் கணக்கு ஒருவாறாக வந்து விட்டது!

டாக்டர் வி.ராகவனின் அரிய பணி
நல்லது, புத்தகமாக வெளி வராத சுவடிகள் எவ்வளவு? அதில் சம்ஸ்கிருதச் செல்வம் எவ்வளவு உள்ளது? மலைக்க வைக்கும் அளவில் பல லட்சக்கணக்கான சுவடிகள் உலகெங்கும் பல்வேறு இடங்களில், – பல்கலைக் கழகங்களில், கோவில்களில், மடாலயங்களில், தனியாரது சேகரிப்பில், அருங்காட்சியகங்களில் என்று இப்படிப் பல்வேறு இடங்களில் – உள்ளன.
இதை மொத்தமாகப் பட்டியலிடும் பெரிய திட்டத்தை யாரும் மேற்கொள்ளவில்லை.
சம்ஸ்கிருத பேரறிஞர் டாக்டர் வி.ராகவன் (1908-1979) இந்தப் பணியில் தீவிரமாக இறங்கினார். உலகெங்கும் பயணம் செய்தார். ஓரளவுக்கு பல்லாயிரம் சுவடிகள் மற்றும் புத்தகங்களின் விவரத் தொகுப்பை நூலாக்கினார்.
ஆனால் தஞ்சையில் உள்ள சரஸ்வதி மஹாலில் தொடங்கி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வரை பகல்லாயிரக்கணக்கான இடங்களில் உள்ளவற்றை முழுவதுமாக யாரே தொகுப்பர்? காலம் தான் விடை சொல்ல வேண்டும்.
என்றாலும் கூட தங்களால் முடிந்த அளவில் பல அறிஞர்கள் தங்கள் வாழ்நாள் பணியாக சம்ஸ்கிருதச் செல்வத்தைக் காக்க முயற்சி எடுத்திருப்பதை சரித்திரம் சொல்கிறது.

மஹாசுபாஷித சம்க்ரஹா – லுட்விக் ஸ்டர்ன்பாக்
சம்ஸ்கிருத இலக்கியத்தில் சுபாஷிதம் ஒரு தனி இடத்தைப் பெறுகிறது.
பல்லாயிரக்கணக்கான சுபாஷித ஸ்லோகங்களை வெளியிடுவது ஒன்றையே தன் வாழ்நாள் பணியாக மேற்கொண்ட அறிஞர் லுட்விக் ஸ்டர்ன்பாக் (Ludwik Sternbach) அனைத்து சம்ஸ்கிருத ஆர்வலர்களாலும் போற்றிக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு பெரியார்.
மஹாசுபாஷித சம்க்ரஹா என இவர் அரிய சுபாஷிதங்களைத் தொகுக்கும் பணியை ஆரம்பித்தார். இந்தத் திட்டத்தின் கீழ் எட்டுத் தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில்
அகரவரிசைப்படி ஸ்லோகங்கள்/செய்யுள்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
சம்ஸ்கிருத மூலமும் அதன் கீழ் ஆங்கில மொழிபெயர்ப்பும் அரிய குறிப்புகளும் இந்த எட்டுத் தொகுதிகளில் உள்ளன.
முதல் தொகுதியில் 1 முதல் 1873 ஸ்லோகங்களும் இரண்டாம் தொகுதியில் 1874 முதல் 4208 முடிய உள்ள ஸ்லோகங்களும் மூன்றாம் தொகுதியில் 4209 முதல் 8285 முடிய உள்ள ஸ்லோகங்களும் நான்காம் தொகுதியில் 6286 முதல் 8264 முடிய உள்ள ஸ்லோகங்களும் ஐந்தாம் தொகுதியில் 8265 முதல் 9979 முடிய உள்ள ஸ்லோகங்களும் ஆறாம் தொகுதியில் 9980 முதல் 11491 முடிய உள்ள ஸ்லோகங்களும் ஏழாம் தொகுதியில் 11492 முதல் 13018 முடிய உள்ள ஸ்லோகங்களும் எட்டாம் தொகுதியில் 13019 முதல் 14653 முடிய உள்ள ஸ்லோகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

முதல் பாகம் 586 பக்கங்களையும் இரண்டாம் பாகம் 608 பக்கங்களையும் மூன்றாம் பாகம் 564 பக்கங்களையும் நான்காம் பாகம் 571 பக்கங்களையும் ஐந்தாம் பாகம் 492 பக்கங்களையும் ஆறாம் பாகம் 575 பக்கங்களையும் ஏழாம் பாகம் 671 பக்கங்களையும் எட்டாம் பாகம் 732 பக்கங்களையும் கொண்டுள்ளது. ஆக சுமார் 4799 பக்கங்களில் 14653 சுபாஷித செய்யுள்களைப் படிக்க முடியும்.
அறிஞர் லுட்விக் ஸ்டர்ன்பாக்கிற்கு அறிவுச் செல்வத்தைப் போற்றும் உலகினர் அனைவரும் நன்றிக் கடன் பட்டுள்ளனர். இந்தத் தொகுதிகளை விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள் தக்க நூலகத்தை அணுகி இவற்றைப் படிக்கலாம். இணையதளத்திற்கான இணைப்பு வசதி உள்ள,
சுபாஷிதத்தைப் படிக்க ஆரம்பிக்க விரும்பும் ஆர்வலர்கள் கீழே குறிப்பிட்டுள்ள இணையதளங்களை நாடலாம்; நற்பயன் பெறலாம் :-

http://sanskritdocuments.org/doc_z_misc_subhaashita/doc_z_misc_subh_1_index.html
http://www.scribd.com/doc/94115369/Sanskrit-Subhashita-Collection#scribd
—Subham—-
You must be logged in to post a comment.