Byச.நாகராஜன்
(Part 15 of The History of Zen Buddhism in Tamil)
ஹகுயின் போல ஜென் பிரிவில் நூற்றுக் கணக்கான குருமார்கள் ஆயிரக்கணக்கான சாதகர்களுக்கு அற்புதமாக போதித்துள்ளனர். பாங்கெய் யோடாகு (1622 -1693) Bankei Yotaku குறிப்பிடத் தகுந்த ஜென் மாஸ்டர்களுள் ஒருவர்.
அவரது பேச்சைக் கேட்க ஐயாயிரம் பேர் – பத்தாயிரம் பேர் ஏன் சில சமயம் ஐம்பதினாயிரம் பேர்கள் திரண்டனர். அவர் கடினமான சூத்ரங்களைச் சொல்வதில்லை. பண்டிதர்களுக்கு மட்டுமே புரிகின்ற வார்த்தை ஜாலங்களையும் செய்வதில்லை. அவரது இதயத்தின் ஆழத்திலிருந்து வரும் எளிய சொற்களால் அனைவரையும் அவர் கவர்ந்தார்.
ஏராளமான சுவையான சம்பவங்களை அவர் வாழ்க்கையிலிருந்து கூறலாம்.
அவரது கீர்த்தியைக் கேள்விப்பட்ட நிசிரென் பிரிவைச் சேர்ந்த ஒரு துறவிக்கு வெகுவாகக் கோபம் வந்தது. ஒரு முறை அவரை விட்டு விட்டு பாங்கெயின் பேச்சைக் கேட்க அனைவரும் சென்று விட்டதால் அவரது ஆத்திரம் எல்லை கடந்தது. நேராக பாங்கெய் பேசுகின்ற இடத்திற்கு வந்தார். அவருடன் வாதம் புரிந்து அவரை மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கவே, “ஏய், ஜென் மாஸ்டர்! நீ எல்லோரையும் கீழ்ப்படிய வைத்து விடுவாயாமே! எங்கே என்னைக் கீழ்ப்படிய வை, பார்ப்போம்!” என்று சவால் விட்டார்.
“வாருங்கள், என் பக்கம் வாருங்கள்!” என்று அவரை அழைத்தார் பாங்கெய்.
கூட்டத்தை விலக்கியவாறே பாங்கெயை அணுகினார் அவர்.
“எனது இடப்புறம் வாருங்கள்” என்றார் பாங்கெய்.
அவர் பாங்கெயினின் இடப்புறம் வந்தார். “இல்லை,இல்லை, நீங்கள் வலப்புறம் வந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.வலப்பக்கம் வாருங்கள்” என்றார் பாங்கெய்.
அவர் வலப்பக்கம் வந்தார். அவரை நோக்கிய பாங்கெய் “பாருங்கள்! நீங்கள் நன்கு கீழ்ப்படிகிறீர்கள்! எந்தப் பக்கம் வரச் சொன்னாலும் வருகிறீர்கள்! நீங்கள் அற்புதமான ஒரு கனவான். இப்போது இங்கே உட்கார்ந்து சொல்வதைக் கேளுங்கள்” என்றார், பிறகென்ன, அவர் கீழே உட்கார்ந்து கேட்டார். அவரது சிஷ்யராக ஆனார்.
இன்னொரு சம்பவம்:-
துறவி ஒருவர் பாங்கெயிடம் வந்தார். “ எனக்கு எப்போதும் முன்கோபம் வருகிறது. எவ்வளவோ முறை எனது மாஸ்டர் அதை விட்டு விடுமாறு கூறியும் என்னால் முடியவில்லை. இதை விட்டு விட ஏதாவது செய்ய வேண்டும் என்று உளமார நினைக்கிறேன். ஆனால் எதைச் செய்தாலும் அதை விட முடியவில்லை. உங்கள் போதனைகளால் அதை விட்டு விடலாம் என்று உங்களிடம் வந்திருக்கிறேன்” என்றார்.
அவரை நோக்கிய பாங்கெய்,” அட்டா, சுவாரசியமாக இருக்கிறதே நீங்கள் சொல்வது! உங்கள் முன்கோபம் உங்களிடம் இப்போது இருக்கிறதா, அதைச் சற்று காண்பியுங்கள். நான் குணப்படுத்தி விடுகிறேன்” என்றார்.
துறவியோ,” எனக்கு இப்போது கோபமே இல்லை. திடீரென்று கோபம் வந்து விடும்” என்றார்.
பாங்கெய்: “ஓஹோ! நீங்கள் அத்துடன் பிறக்கவில்லை போலும்! நீங்களே அவ்வப்பொழுது ஏதோ ஒரு காரணத்தை வைத்து அதை உருவாக்கி வெளியில் காண்பிப்பீர்கள் போலும்! அதைக் காண்பிக்காத போது அது எங்கே இருக்கிறது? அடுத்தவர்களை எதிர்த்து உங்கள் வழியே சிறந்த்து என்று நினைத்து உங்களுடைய ஒரு தலையான மனப்பான்மையால் நீங்களே கடினமாக உழைத்து அதை உருவாக்குக்கிறீர்கள் ஆனால் வமிசாவளியாக உங்கள் பெற்றோரே இதைத் தந்து விட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்துகிறீர்கள். எப்படிப்பட்ட விசுவாசமில்லாத மகனாக நீங்கள் இருக்கிறீர்கள்! ஒவ்வொருவரும் பிறக்கும் போது புத்தரின் மனதை பெற்றோரிடமிருந்து பெறுகிறார். பாரபட்சமாக இருப்பதால் தன்னிடம் முன்கோபம் போன்றவை வந்து விட்டதாக ஒரு மாயையினால் எண்ணுகிறார். வமிசாவளியாக இவை வருகின்றன என்று எண்ணுவது தவறு. நீங்கள் கோபப்படாமல் இருக்கும் போது அந்தக் கோபம் எங்கே இருக்கிறது? இது போன்றே தான் எல்லா மாயைக:ளும்! நீங்கள் அவற்றை உருவாக்காவிடில்,அவை இல்லாமலேயே போய் விடும்! கெட்ட பழக்கங்கள் அனைத்தும் சுயநலமான ஆசைகளால் உருவாக்கப்படுகின்றன! மாயையான சில மனப் பழக்கங்கள் உங்களுடனேயே இயல்பாகப் பிறக்காதவை. இதைத் தான் அனைவரும் உணரத் தவறுகின்றனர்”

அன்பான பாங்கெயின் உபதேசத்தைக் கேட்டவுடன் அந்த துறவி முன் கோபத்தை மட்டும் விட்டு விடவில்லை. அனைத்துக் கெட்ட பழக்கங்களையும் துறந்து அற்புதமான ஒரு துறவியாக மாறினார்.
எந்தக் கெட்ட பழக்கமுமே நம்மிடம் பிறக்காதவை என்பதை அவர் சுட்டிக் காட்டியதால் “அன்பார்ன்” (Unborn) என்ற செல்லப் பெயரால் அவரை அழைக்கலாயினர்.
பாங்கெய் யோடாகு (Bankei Yotaku) அபூர்வமான ஜென் மாஸ்டர்களில் ஒருவர். கன்பூஸியஸை பின்பற்றும் ஒரு குடும்பத்தில் ஹமாடா என்ற நகரில் அவர் பிறந்தார். அவரது தந்தையார் ஒரு சாமுராய். 1632இல் அவரது பத்தாம் வயதில் அவரது தந்தை இறந்தார். எதை எடுத்தாலும் குடைந்து குடைந்து கேள்விகளைக் கேட்பது இளமையிலிருந்தே அவருக்குப் பழக்கமாகி விட்டது. அவரது கேள்விகளுக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. ஒரு பள்ளி விட்டு இன்னொரு பள்ளி, ஒரு துறவி விட்டு இன்னொரு துறவி என்று அவர் மாறிக் கொண்டே இருந்தார்.
இறுதியில் உம்போ என்ற மகானைச் சந்தித்தார். 1638இல் அவர் உம்போவின் சிஷ்யராக ஆனார். சில வருடங்கள் அவருடன் கழித்த பின்னர் புனிதத் தலங்களுக்கு யாத்திரையை மேற்கொண்டார்..1647ஆம் ஆண்டு மனிதனின் உள்ளார்ந்த இயற்கை எது என்று கண்டுபிடிக்க தீவிரமான தவத்தை மேற்கொண்ட அவர் சிறிய அளவு உணவையே உட்கொள்ள ஆரம்பித்தார். விளைவு, ஒரு நாள் தொண்டையை ஏதோ அடைப்பது போன்ற ஒரு உணர்வை அடைந்தார். தனது சக்தியை எல்லாம் ஒருங்கு திரட்டி தொண்டைய அடைத்திருப்பதைக் காறி உமிழ்ந்தார். உடனடியாக அவரது பலஹீனம் மறைந்தது. இதுவரை அவர் கேட்டுக் கொண்டிருந்த கேள்விக்கு அவருக்கு விடை கிடைத்தது. ஆதி மூலமாக இருக்கும் மனம் பிறக்காத ஒன்று – ஒரிஜினல் மைண்ட் இஸ் அன்பார்ன் – என்ற பேருண்மையை அவர் கண்டு பிடித்து உணர்ந்தார். அன்பார்ன் என்ற செல்லப் பெயருடன் பிரபலமானார்.
சின்ன உண்மை
பாங்கெய்க்கு சூத்ரங்கள், கோயன்கள், சீன குருமார்களின் போதனைகள் ஆகிய எதுவும் பிடிக்காது. 30 நாட்கள் நீங்கள் பிறக்காமல் – “அன்பார்ன்” ஆக -இருந்து பாருங்கள், போதும் என்பார்!
-தொடரும்


You must be logged in to post a comment.