அஸ்ட்ராலஜிகல் மாகஸைன் ஆசிரியர் மாடர்ன் ரிஷி ஸ்ரீ சூர்யநாராயண ராவ்
ச.நாகராஜன்
ஷிமோகாவுக்கு சென்ற போது அபூர்வ சந்திப்பு
1885ம் ஆண்டு ஒரு நாள். தன் சக குடும்ப உறுப்பினர்களுடன் ஷிமோகாவுக்கு ஒரு கல்யாணத்திற்காகச் சென்று கொண்டிருந்த பி.எல் படிக்கும் இளைஞர் ஒருவர் குப்பி ஸ்டேஷனில் ரயிலை விட்டு இறங்கினார்.பங்களூர் சென்ட்ரல் காலேஜில் அப்போது தான் ஆரம்பிக்கப்பட்டிருந்த விஞ்ஞானப் படிப்பில் முதல் குழுவில் முன்னணி மாணவராக இருந்தார் அவர். ஆங்கிலப் படிப்பினால் ஹிந்து சாஸ்திரங்களில் பகுத்தறிவுக்கு ஒத்த பௌதிக விஞ்ஞானத்திற்கு இடமே இல்லை என்று அவர் முடிந்த முடிவுக்கு வந்திருந்தார்.
அப்போது தான் எஸ்.எம்.ரயில்வே ரயில் பாதையை அமைத்துக் கொண்டிருந்தது. ஆகவே ஷிமோகாவுக்கு மாட்டு வண்டியில் தான் செல்ல வேண்டும்!ஷிமோகா 150 மைல் தூரம். ஒரு நாளைக்கு 20 அல்லது 25 மைல் வீதம் சென்றால் ஏழு அல்லது எட்டு நாட்கள் ஆகும்- ஷிமோகா போய்ச் சேர! ரயிலை விட்டு இறங்கிய அந்த இளைஞரின் கண்ணில் ஒரு ஏழை வைதிக அந்தணர் போலத் தோற்றமளித்த ஒருவர் தென்பட்டார். அவரது முகத்தில் ஒளிர்ந்த தேஜஸ் அந்த இளைஞரை வெகுவாகக் கவர்ந்தது. அவரிடம் சென்று, “நீங்கள் யார்? எங்கு போக வேண்டும்”, என்று கேட்டார் அந்த இளைஞர்.
“எனது பெயர் சுப்பராய சாஸ்திரி. நான் ஷிமோகா செல்ல வேண்டும்.அங்கு ரெவரண்ட் மிஸ்டர் ராபர்ட்ஸிடம் நான் முன்ஷியாகப் பணி புரிகிறேன்” என்றார் அவர்.
அடுத்த எட்டு நாட்களில் சூர்யநாராயணராவ் என்ற அந்த விஞ்ஞான மனப்பான்மை படைத்த இளைஞரின் வாழ்க்கைப் போக்கே மாறி விட்டது சுப்பராய சாஸ்திரி என்ற அந்த அற்புதமான மனிதரால்! உலகில் உள்ள எல்லா பௌதிக விஞ்ஞானத்துறைகளும் ஓர் உருவம் எடுத்து நடை பயில்வது போல இருந்த அவர் சூர்யநாராயணராவின் கண்களைத் திறந்தார்.
“அடுத்த 25 ஆண்டுகள் அவருடன் பழகினேன். எனது நீண்ட வாழ்வில் அவரைப் போல ஒரு மனிதரை நான் கண்டதே இல்லை. முதல் சில நாட்கள் அவருடன் உரையாடியது என் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாது” என்று பின்னாளில் பெரும் புகழ் படைத்த ஜோதிடரான பின்பு கூறினார் சூரியநாராயண ராவ்.
ஜோதிடக் கலையைத் தானே கற்றவர்
பங்களூர் சூரியநாராயணராவ் (1856-1937) மிகவும் புகழ் வாய்ந்த ஜோதிடராக சென்ற நூற்றாண்டில் விளங்கியவர். ஜோதிட சாஸ்திரத்தை யாரிடமும் பயிலாமல் தானே கற்றுக் கொண்டவர். பல்வேறு பழைய நூல்களைப் படித்து ஜோதிட நுட்பங்களில் அவர் நன்கு தேர்ந்து, ஜோதிடத்திற்கு தேசீய அளவில் ஒரு புது மதிப்பை ஏற்படுத்தியவர். வரலாறு, வாழ்வியல், இலக்கியம், சாஸ்திரம் என பல துறைகளிலும் மேதை. எழுபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். எல்லாவற்றிற்கும் மேலாக புகழ் வாய்ந்த ஜோதிட மேதை பி.வி.ராமனை உருவாக்கியவர். ஸ்ரீ பி.வி.ராமனுடைய பாட்டனார் தான் சூரிய நாராயண ராவ்.
1895 முதல் அஸ்ட்ராலஜிகல் மாகஸைன் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்து ஜோதிட சம்பந்தமான நூல்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டு அவர் உலக அறிஞர்களை வேத ஜோதிடத்தின் பால் பார்வையைப் பதிக்க வைத்தார்,சுப்பராய சாஸ்திரிகளின் நூல்களை அவர் வெளியிட்டார். 1914 மார்ச் மாதமே முதல் உலகப் போர் வரப்போவதை அவர் முன் கூட்டியே அறிவித்தது அனைவரையும் பிரமிக்க வைத்தது. பல்வேறு ராஜாக்களும், மந்திரிகளும், வைசிராய்களும், பிரமுகர்களும் அவரிடம் ஜோதிடம் கேட்டுப் பிரமித்துப் போனார்கள். தன் வாழ் நாள் முழுவதும் ஒரு கர்மயோகியாகத் திகழ்ந்த அவர் ப்ருஹத் ஜாதகம்,ஜைமினி சூத்திரங்கள் உள்ளிட்ட பழம் பெரும் முக்கிய நூல்களை வடமொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தார்.
புகழ்பெற்ற நூல்களில் சில
அவரது நூல்களில் மாதிரிக்குச் சிலவற்றைப் பார்ப்போம்:
ஸ்திரீ ஜாதகம்:பாரத நாகரிகத்தின் ஹிந்து வாழ்க்கை முறைக்கு ஜீவாதாரமாக விளங்குபவள் பெண். பல்வேறு நூல்களிலிருந்து அற்புதமான தகவல்களைச் சேகரித்து அபூர்வமான இந்த நூலை அவர் உருவாக்கியுள்ளார். ஆண், பெண் ஜனனம், ஆண் பெண்ணாக மாறுவது, அர்தவ லக்னம், பெண்களின் குணாதிசயங்கள்,வாழ்க்கையில் துணையாக இருக்கும் மனைவி லட்சணம், புத்ரபாக்கியம், கல்யாணமாகாமல் இருக்கும் பெண்கள்,பெண்களின் ஆன்மீக சிந்தனை, பழக்க வழக்கங்கள், கிரக தசா புக்தி பலன்கள், சந்திர, சூர்ய, செவ்வாய், குரு, சுக்ர, சனியின் பாவ பலன்கள், ராஜயோகம் உள்ளிட்ட நல்ல யோகங்களின் விவரணம் ஆகியவை கொண்ட இந்த நூல் 15 அத்தியாயங்களைக் கொண்டது.
ஸ்ரீ சர்வார்த்த சிந்தாமணி :இரண்டு தொகுதிகள். முதல் பாகம் 1899ம் ஆண்டும் இரண்டு மூன்றாம் பாகங்கள் 1920ம் ஆண்டும் வெளியிடப்பட்டது. வெங்கடேச தைவக்ஞர் இயற்றிய அற்புதமான இந்த நூலை சூரியநாராயண ராவ் மொழிபெயர்த்தார். திருமணம், யோகங்கள், தசா புக்தி பலன்கள், பாவங்களைப் பற்றிய பகுப்பாய்வு உள்ளிட்ட அரிய நூல் இது.
புகழ்பெற்றவரின் ஜாதகங்கள் : ஸ்ரீ ராமர், ஹரிச்சந்திரன், ஸ்ரீ கிருஷ்ணர்,ஆதி சங்கரரிலிருந்து ஆரம்பித்து தற்கால மஹாராஜாக்கள் வரை உள்ள ஏராளமானோரின் ஜாதங்களைத் தொகுத்து வழங்கும் நூல்.1921ல் வெளிவந்தது.
ஜோதிடத்திற்கு புத்துயிரூட்டிய மாடர்ன் ரிஷி ஸ்ரீ சூர்யநாராயண ராவ்.
ஜோதிட ஆர்வலர்கள் அவரது நூல்களைப் படிக்க வேண்டிய அவசியத்தை இந்த ஒரு வரியே விளக்கி விடும்.
*********


You must be logged in to post a comment.