
Compiled by London swaminathan
Article No.1907; Dated 3 June 2015.
Uploaded at London time: காலை 10-45
கம்போடியா (காம்போஜ) நாட்டின் மொழிகள், இலக்கியம் குறித்து லண்டன் பல்கலைக் கழக கீழ்திசை ஆப்பிரிக்க பிரிவில் சீனியர் விரிவுரையாளராகப் பணியாற்றிய ஜூடித் எம்.ஜாகப் எழுதிய இரண்டு புத்தகங்களில் இருந்து இந்தியா தொடர்பான சில சுவையான விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து, மகிழ்ந்து இருப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
(இதிலுள்ள புகைப்படங்கள் அனைத்தும் சிட்னி நகர் திரு கே.நடராஜன் எடுத்த படங்கள்; நன்றி)
1.க்மேர் இன மக்கள் மீகாங் ஆற்று வடிநிலத்தில் வாழ்ந்தனர். இந்த இடத்தின் பழைய பெயர் இந்தோ-சீனா. இப்பொழுது தென் கிழக்கு ஆசியா என்று அழைக்கப்படு கிறது. இவர்கள் பேசும் மொழிகளை க்மேர்-மோன் குடும்ப மொழிகளில் சேர்ப்பர். இங்கு இரண்டாம் நூற்றாண்டு முதல் இந்தியர்கள் குடியேறினர்.
(எனது கருத்து; முன்னொரு கட்டுரையில் க்மேர் என்பது குமரி என்பது போல இருப்பதையும் மா கங்கா (கங்கை அன்னை) என்பதே மீகாங் ஆனதையும் எழுதி இருக்கிறேன்)
2.அவர்கள் சம்ஸ்கிருத மொழியை இலக்கியத்துக்கான மொழியாகக் கருதினர். அரசனையும் கடவுளையும் போற்றுவதற்கான இலக்கியப் படைப்புக்கும், கல்வெட்டுப் பொறிப்புக்கும் அம்மொழியைப் பயன்படுத்தினர்.ஏழாம், எட்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் இருந்து இந்து மத, புத்த மத சம்பந்தமான நிறுவனங்கள், கோவில்கள் பற்றி தகவல் கிடைக்கிறது
3.கம்போடியாவில் புனான் என்ற பெயரில் இந்தியர்களின் ஆட்சி இரண்டாம் நூற்றாண்டு முதல் இருந்ததை சீன இலக்கியங்களின் மூலம் அறிய முடிகிறது.
(எனது கருத்து: சம்பா எனப்படும் வியட்நாமில் ஸ்ரீமாறனின் இரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டு கிடைத்திருக்கிறது. இது திருமாறன் என்று தமிழ் இலக்கியம் குறிப்பிடும் பாண்டிய மன்னனே என்று “வியட்நாமை ஆண்ட பாண்டிய மன்னன்” என்ற கட்டுரையில் முன்னரே குறிப்பிட்டுள்ளேன். மேலும் புனான் என்பதற்கு இது வரை அர்த்தம் தெரியவில்லை. பனவன் என்ற பாண்டியனின் பட்டமோ அல்லது புனல் நாடு என்பதன் திரிபாகவோ இது இருக்கலாம். பிற்காலத்தில் அந்த இடத்தை தண்ணீர் நாடு என்றே அவர்கள் மொழியிலும் அழைத்தனர். மேலும் இந்திர விழாவுக்கு இணையான நீர் விழாவும் பெரிய அளவில் எடுத்தனர். தமிழ் புத்தாண்டான சித்திரையையே அவர்களும் புத்தண்டாகக் கொண்டாடுகின்றனர்).

4.இந்தியாவிலிருந்து கவுண்டின்யன் என்னும் பிராமணன் வந்து நாகர்களின் மன்னர் மகள் சோமாவை மணந்து புதிய ஆட்சி நிறுவினான் என்று பரம்பரைக் கதை கூறுகிறது.
(எனது கருத்து: தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் நாக லோகம், பாதாள லோகம் எது என்று தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தியத் துறை முகங்களில் கப்பலில் ஏறி கீழ் திசையிலோ, தென் திசையிலோ சென்றால் அது எல்லாம் நாக லோகம்.அங்கு வசிப்பவர்கள் எல்லாம் நாகர் இன மக்கள்; பெண்கள் எல்லாம் நாக கன்னிகைகள். ஆகவே இலங்கை முதல் தென் கிழக்காசியாவின் தென் கோடி வரை எல்லாம் நாக நாடு. அதையும் கடந்து வெகு தூரம் சென்றால் — அதாவது மாயா, இன்கா, அஸ்டெக் நாகரீகமுள்ள – தென் அமெரிக்கா வரை சென்றால் அது பாதாள லோகம்)
5.கம்போடியா என்பது காம்போஜ என்பதன் திரிபு. கம்பு ஸ்வயம்புவ என்ற ரிஷி, இந்த நாட்டுக்கு வந்து மீரா என்பவரை மணந்து, அவர்கள் மூலம் பெருகிய இனத்தால் இவர்கள் காம்போஜர்கள் என்று அழைக்கப்படுவதாக இன்னொரு கர்ண பரம்பரைக் கதையும் இங்கே இருக்கிறது.
6.இறுதியாக, ஒன்பதாம் நூற்றாண்டு முதல் 14-ஆம் நூற்றாண்டு வரை நிலவிய அரசுக்கு அங்கோர் ராஜ்யம் என்று பெயர். அவர்கள்தான் உலகம் வியக்கும் அங்கோர்வட் முதலிய பிரம்மாண்டமான கற்கோவில்களை எழுப்பியவர் ஆவர். கி.பி 611-ல் பொறித்த முதல் க்மேர் மொழிக் கவெட்டும் கி.பி.613-ல் செதுக்கிய முதல் சம்ஸ்கிருதக் கல்வெட்டும் கிடைத்தன. ஆயினும் வியட்னாம் நாட்டில் (சம்பா) இரண்டாம் நூற்றாண்டு முதல் சம்ஸ்கிருதக் கல்வெட்டு கிடைக்கிறது. தெ.கி. ஆசிய நாடுகளில் 800- க்கும் மேலான சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள் உள்ளன.
7.ஆறு கவிஞர்களின் பெயர்களைக் கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். மேலும் ராமாயண, மஹாபாரத உபந்யாசங்கள் நடத்தப்பட்டதையும் அறிய முடிகிறது.
8.ராம கீர்த்தி என்ற பெயரில் ராமாயண இலக்கியம் இருக்கிறது கம்போடிய மக்களும் ஏரி, குளங்களில், மரங்கள், மலைகளில் தேவதைகள் (அணங்கு) இருப்பதாக நம்பினர். அவ்விடங்களை இதற்காக வழிபட்டனர். அவைகளை அணங்குடா என அழைத்தனர்.
(எனது கருத்து: தமிழ் இலக்கியம் முழுதும் அணங்குகள் பற்றி குறிப்புகள் உள.)

8.பதினாறாம் நூற்றாண்டில் ராம கீர்த்தி என்னும் ராமாயண நூல் எழுதப்பட்டது; இதில் ராம், லக்ஸ், ராப் (ராவணன்), ஹேமந்த் (இமயமலை), ஹனுமான் ஆகிய பெயர்கள் வருகின்றன. ஒரிஜினல் வால்மீகி ராமாயணத்துக்கும் இதற்கும் பல வேறுபாடுகள் உண்டு. ராமர் என்பவர் புத்தரின் பூர்வஜன்ம அவதாரம் என்று துவங்குகிறது. ஒரு கட்டத்தில் சீதையைக் காட்டிற்குக் கொண்டுபோய் கொன்றுவிடும்படி ராமன் கூறுகிறான். ஆனால் அவன் சீதையை ஒளித்துவைக்கிறான். லவன் குசர்கள் பிறந்து வளர்ந்து ராமர் முன்னிலையில் ராமகாதையை இசைத்த போது ஒருவர் கைது செய்யப்படுகிறான். பின்னர் அவனது சகோதரன் போய் அவனை விடுவிக்கிறான். இறுதியில் அயோத்திக்குப் போகுமாறு சீதையிடம் சொல்லுகின்றனர். அவள் மறுக்கவே ராமன் இரந்துவிட்டதாக பொய் சொல்லுகின்றனர். உடனே சீதை வருத்தப்பட்டு பாதாள லோகத் துக்குச் சென்று விடுகிறாள்.
(எனது கருத்து: புத்த ஜாதகக் கதைகளில் இந்தியாவின் பழைய கதைகளை எல்லாம் மாற்றி, போதிசத்துவரின் பூர்வ ஜன்ம அவதாரங்கள் என்று திரித்துச் சொல்லுவர். அதிலுள்ள தசரத ஜாதகத்திலேயே ராமாயணக் கதையைத் திரித்து வைத்துள்ளனர். இதே கதை கம்போடியா சென்றவுடன் மேலும் கொஞ்சம் திரிக்கப்பட்டுவிட்டதில் வியப்பில்லை).
9.கம்போடிய க்மேர் இன மக்கள் இந்தியர்களைப் போலவே பனை ஓலைச் சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதினர். இவை இப்பொழுது அரண்மனைகளிலும், புத்தமத மடாலயங்களிலும் உள்ளன. மிகப் பழமையான சுவடி பாட்டம்பாங் மடாலயத்தில் இருக்கிறது.

தனஞ்ஜயன் கம்போடிய தெனாலி ராமன்
- இந்த இன மக்களுக்கு விடுகதை, புதிர்கள், புதினங்களில் மிகுந்த ஆர்வம் உண்டு. தனஞ்ஜயன் என்னும் ஒரு புத்திசாலிக் கதாபாத்திரத்தை வைத்து நூற்றுக்கணக்கான கதைகளை எழுதியுள்ளனர். இந்தக் கதைகள் அனைத்தும் தெனாலி ராமன் கதைகள் போலவே உள்ளன. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கதைகள் இவை என்பதற்கு தனஞ்ஜயன் என்ற சம்ஸ்கிருதப் பெயரே சான்று. விஜயநகரப் பேரரசன் கிருஷ்ணதேவராயனை எப்படி தெனாலிராமன் ஏமாற்றினானோ அப்படி சீனப் பேரரசனையும் தனஞ்ஜயன் ஏமாற்றி கம்போடியாவைக் காப்பாற்றியதாகவும் கதைகள் இருக்கின்றன.
ஒரே ஒரு மாதிரிக் கதை: சீன மன்னனிடம் தன்னிடம் இந்திரி என்ற அதிசயப் பறவை இருப்பதாகக் கூறி வெறும் காகிதத்தால் ஆன பட்டத்தைப் பறக்கவிட்டு பரிசு பெறுகிறான். சீன மன்னர் மூன்று கேள்விகள் கேட்பார். அதற்குத் திறமையாகப் பதில் சொல்லி கம்போடியா மீது படை எடுக்காமல் காப்பாற்றுகிறான்.
11.க்மேர் மொழி அகராதியில் நிறைய சம்ஸ்கிருதச் சொற்களும் பாலி மொழிச் சொற்களும் காணப்படுகின்றன.
கம்போடிய வரலாற்றைப் பல கட்டங்களாகப் பிரிக்கலாம்.
(1).அங்கோர் ராஜ்யத்துக்கு முந்தைய காலம் (கி.பி எட்டாம் நூற்றாண்டுக்கு முன்னர்)
(2). அங்கோர் அரசு காலம்- (கி.பி எட்டாம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரையான காலம்)
(3).மத்திய காலம்- 16ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை.
இக் காலங்களிலும் இலக்கியம் கல்வெட்டுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட மொழிகள் சம்ஸ்கிருதமும் பாலியும் ஆகும்.
(4).நவீன காலம் – 19, 20 ஆம் நூற்றாண்டுகள்: சம்ஸ்கிருதம், பாலி, பிரெஞ்சு, தாய்(லாந்து) மொழி, ஆங்கிலம்
12.கல்வெட்டுகள் இந்தியாவிலுள்ள தமிழ், சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள் அமைப்பிலேயே பொறிக்கப்பட்டன. முதலில் மன்னரின் ஆட்சி ஆண்டு, பின்னர் கடவுள் வாழ்த்து, பின்னர் நன்கொடை கொடுத்தவர் பெயர், நில எல்லைகள், அது யாரிடமிருந்து பெறப்பட்டது, அதற்கான விலை என்ன, எந்த தர்ம ஸ்தாபனத்துக்கு தானம் செய்யப்படுகிறது, நிலத்துடன் அனுப்பப்பட்ட பணியாட்கள் எத்தனை பேர், அவர்களுடைய பெயர்கள் என்ன, சமய சம்பந்தப்படோருக்கு ஊதியம் என்ன, இறுதியில் கல்வெட்டில் கைவைப்பவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை, நரகங்களின் விவரம்.
இவைகளில் இந்துக் கடவுளர் மீதான துதிகளும், இறுதியில் தண்டனை விவரங்களும் எப்பொழுதும் சம்ஸ்கிருதத்திலேயே இருக்கும். மற்ற விவரங்கள் கலப்பு மொழியில் அல்லது க்மேர் மொழியில் இருக்கும்.

13.பல கதைகளில் கஷ்டங்களைத் தீர்க்க உதவும் கடவுளாக இந்திரன் காட்டப்படுகிறான். மேலும் விக்ரமாதித்தன் கதை மாதிரியில் வழக்குகளைத் தீர்க்கும் புத்திசாலி மன்னரின் கதைகளும் தனி ஒரு நூலாகக் காணப்படுகிறது. ஒரே குழந்தையை இரண்டு தாய்மார்கள் தனது குழந்தை என்று உரிமை கொண்டாடவும் நீதிபதிகளும் திணறிப்போய் புத்திசாலி மன்னனிடம் அனுப்புகின்றனர். அவன் இந்தக் குழந்தையைக் கொன்று ஆளுக்குப் பாதி கொடுங்கள் என்று சொன்னவுடன் உண்மைத்தாய் வேண்டாம், வேண்டாம் என் குழந்தை எங்கிருந்தாலும் உயிருடன் வாழட்டும் என்பாள். உடனே அவளே உண்மைத் தாயார் என்று அறிந்து மன்னன் அவளிடம் குழந்தையைத்தர உத்தரவிடுவான். இந்தக் கதை பைபிளில் வரும் சாலமன் பெயரிலும் உள்ளது.
(எனது கருத்து: பிரம்ம, விஷ்ணு, சிவனுக்கு முந்தைய வேத காலக் கடவுளான இந்திரன் முன்னிலை வகிப்பது மிகப் பழங்கலத்திலேயே இந்திய செல்வாக்கு அங்கு பரவியதைக் காட்டுகிறது. அடுத்ததாக சாலமன் — குழந்தை கதை முதலியன இந்தியாவிலிருந்து சென்ற கதைகளே என்பதும் தெரிகிறது)

தமிழ்ப் பெயர்கள்
14.தென் கிழக்காசிய நாடுகளின் எழுத்து (லிபி) முறை எல்லாம் பல்லவ கிரந்தத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஆக தென் இந்திய செல்வாக்கிற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. மேலும் கட்டிடக் கலையும் பல்லவர் காலக் கட்டிடக் கலையை அடிப்படையாக உடையது. அங்கிருந்து அவர்கள் தென் அமெரிக்கா வரை சென்று மாயா நாகரீகக் கட்டிடங்கலையும் இப்படி அமைத்தனர். மூன்றின் படங்களையும் அருகருகே வைத்துப் பார்த்தால் ஒற்றுமை நஙகு விளங்கும். மேலும் பிரம்மதத் என்ற மன்னைன் மனைவி சதுரங்கம் விளையாடும் ஒருவனுடன் ஓடிவிடவே அவளைப் பிடித்துக் கொண்டு வர அனுப்பிய தளபதியின் பெயர் கந்தன். இது தூய தமிழ்ப் பெயர். இதே நாட்டுப்புற கதைத் தொகுப்பில் காமராஜ், அருணராஜ், கிருஷ்ணகுமார் முதலிய பெயர்களும் வருகின்றன.
தெ.கி.ஆசிய நாடுகள் பற்றி இதுவரை ஆராய்ந்தவர்கள் எல்லோரும் சம்ஸ்கிருதக் கண் கொண்டு மட்டுமே ஆராய்ந்தனர். ஒரு தமிழர் அந்தக் கதைகளை ஆராய்ந்தால் தமிழின் செல்வாக்கு புலப்படும்
மேலும் கவுண்டின்யன் என்ற பார்ப்பனரும் தென் இந்தியப் பார்ப்பனரே. சைவத்துக்கு உயிர் கொடுத்த ஞானசம்பந்தப் பெருமானும் கவுண்டிய குலப் பார்ப்பனனே. புறநானூற்றிலும் ஏனைய சங்க இலக்கியப் பாடல்களிலும் பல கவுண்டின (கவுணியன்) கோத்ரப் பார்ப்பனர்கள் பாடல் இயற்றியுள்ளனர். ஆக இவர்கள் தமிழ் நாட்டில், குறிப்பாக சோழ நாட்டில் முன்னிலையில் நின்றது தெளிவாகிறது.

15.பெண்களின் பெயர்கள் அழகிய சம்ஸ்கிருதப் பெயர்களாக உள்ளன. சங்க காலம் முதலே தமிழ் நாட்டிலும் இதைக் காண்கிறோம். திலகவதி, புனிதவதி, காமக்கண்ணி (காமாட்சி), நப்பசலை (சுபர்ணா), கண்ணகி (லோசனா) முதலிய பல பெயர்கள் காணக்கிடக்கின்றன. சங்க காலப் பெயர்களில் ஆண், பெண் பெயர்களுக்கு முன்னுள்ள முன்னொட்டு ந—என்பது, சம்ஸ்கிருதத்தில் சு – என்று வரும். இரண்டும் நல்ல, நன்மை எனப் பொருள்படும் (நக்கீரன், நக்கண்ணன், நப்பசலை, நச்செள்ளை. இப்படி முன்னொட்டுச் சேர்ப்பது வடமொழியின் சிறப்பு)
கம்போடியாவில் வசந்த மல்லிகா, தனவாங்கி, சகி ப்ரியா முதலிய பெண்கள் பெயர்கள் குறிப்பிடத்தக்கவை. பொதுவாக கலைத்துறை, அரசாங்கத் துறைப் பெயர்கள் எல்லாம் சம்ஸ்கிருதப் பெயர்களே. படித்த மக்கள் அனைவரும் அரசாங்கத்தில் சம்ஸ்கிருத மொழியை பயன்படுத்தினர். 1500 ஆண்டுகளுக்கு அங்கே சம்ஸ்க்ருதம் கொடிகட்டிப பறந்ததை தெ.கி. ஆசிய நாடுகளின் வரலாற்றைப் படிப்போர் தெள்ளிதின் உணர்வர்.
கம்போடிய நாட்டுப்புற கதைகளை ஒப்பிட்டு ஆராய்வது தமிழின் செல்வாக்கை அறிய உதவும் என்பது கருத்து.

சுபம்-
You must be logged in to post a comment.