மாணிக்கவாசகரின் காலம் என்ன? மிகப் பெரிய சைவப் புதிர்!!

asia soci,NYmanik

By London Swaminathan
Post No 880 Date: 2-3- 2014
This article is available in English as well.

Q.1.மாணிக்கவாசகரின் காலம் என்ன?
Q.2.அவருடைய உண்மைப் பெயர் என்ன?
A.1.மாணிக்கவாசகரின் காலம் தேவாரம் பாடிய மூவருக்கும் முந்தியது.
A.2.அவருடைய இயற்பெயர் வேதபுரீஸ்வர சத்தியதாசன்.

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என்ற நால்வர் சைவ சமயத்தின் மாபெரும் தூண்கள். தமிழகத்தைக் காப்பாற்றிய காவலர்கள். நாத்திகம் பேசி நாத்தழும்பி ஏறியவர்களைப் பாதாளப் படுகுழியில் தள்ளிய சமய வீரர்கள். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானிகள். 30,000 தமிழ் நாட்டுக் கோவில்களுக்குப் புத்துயிர் ஊட்டிய புனிதர்கள். வேத ஆகம நெறியை வேரூன்ற வைத்த வித்தகர்கள், சத்திய சீலர்கள். இந்த நால்வரும் தமிழ் கூறு நல்லுலகத்துக்கு இட்ட விடுகதையை, புதிரை விடுவிக்க முடியாமல் அறிஞர்கள் தவித்தனர்.

என்ன புதிர்?

மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம் என்ன? அவருடைய பெயர் என்ன? யாருக்கும் விடை தெரியாத கேள்வி. தேவாரம் பாடிய மூவருக்கு முன்னால் இவர் வாழ்ந்திருந்தால் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் இவர் பெயரைச் சொல்லாதது ஏன்? நாயன்மார்கள் பட்டியலில் இவர் பெயர் இல்லாதது ஏன்?
இந்த மூவருக்கும் பின்னால் அவர் வாழ்ந்திருந்தால் திருவாசகத்திலோ, திருக்கோவையாரிலோ மூவரையும் மாணிக்கமாவது குறிப்பிட்டிருப்பாரே! ஏன் குறிப்பிடவில்லை? மதுரை வரை வந்து கூன் பாண்டியனை நின்ற சீர்நெடுமாறனாக்கிய சம்பந்தரை எப்படி மாணிக்கம் மறக்கமுடியும்?
இனி ‘மா’ என்ற சுருக்கெழுத்தில் நான் குறிப்பிடுவதை மாணிக்கவாசகர் என்று நீட்டிப் படிக்கவும்:–
சுருக்கமாகச் சொன்னால் மூவரை ‘மா’ குறிப்பிடவில்லை. ‘மா’வை மூவர் குறிப்பிடவில்லை. ஆனால் சில குறிப்புகள் சில ஆராய்ச்சியாளர்களை ஒரு முடிவுக்கு வர உதவியது. பாவை பாடிய வாயால் கோவையும் பாடியவர் மாணிக்கம். அதாவது திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவையைப் பாடியவர், திருக்கோவையார் என்னும் நூலையும் அவர் இயற்றியதை அறிஞர் உலகம் ஒப்புக்கொள்கிறது. அதில் சைவத்தில் பற்றுள்ள ஒரு வரகுணனைப் பற்றி ஒரு குறிப்பும் உள்ளது. அதைக் கொண்டு ‘மா’ ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று பலரும் முடிவு கட்டிவிட்டனர். ஆனால் எனது ஆராய்ச்சிகள் இது பிழை என்றே காட்டுகின்றன.

Thiruvathavur,December 1997
Thiruvathavur near Madurai

சைவ வரலாற்றில் மிக முக்கியமான நக்கீரர்– சிவ பெருமான் மோதல் நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு திருவிளையாடல் புராணத்தை உண்மை என்று நிரூபித்தவர் அப்பர் பெருமான்.

நான்கு சைவ சமயத் தூண்களில் நெடுங்காலம் வாழ்ந்தவரும் இவர்தான். பழுத்த சமயவாதி, புரட்சிவாதியும் கூட. சைவத்தில் இருந்து சமணத்துக்குத் தாவி, பின்னர் சமணத்தில் இருந்து சைவத்துக்குத் தாவி, மகேந்திர பல்லவனுடன் பயங்கரமாக மோதிப் பின்னர் அவரையும் சைவ சமயத்துக்கே அழைத்துவந்த—இழுத்து வந்த புரட்சிவாதி. ஆகையால் அவர் சொல்லுவது தவறாக இராது. தருமி என்னும் பார்ப்பனப் புலவர் தமிழ் சங்கம் ஏறியது பற்றி இவர் பாடியதை ‘திருவிளையாடல் புராணம் உண்மையே என்ற கட்டுரையில் காட்டினேன். அதே வாயால் ‘மா’வின் வாழ்க்கையில் நடந்த நரி-பரி ஆக்கல் திருவிளையாடலையும் இவர் பாடி இருக்கிறார். இதை யாரும் புறக்கணிக்க முடியாது.ஆக மா’ அப்பருக்கும் முன் வாழ்ந்தவர் என்பது தெள்ளத் தெளிவு.

இப்போது வரகுணன் பற்றிய குறிப்பை ஆராய்வோம். வரலாற்றுக்குத் தெரிந்த வரகுணன்கள் இருவர் உண்டு. அதில் சைவ சமயப் பற்றுடைய ஒருவருடன், ‘மா-’ வை தொடர்புபடுத்துவது நியாயமாகவே தோன்றும். ஆனால் இவரைத் தவிர வேறு வரகுணன்கள் இருந்திருக்கலாம் என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும். ஏனெனில் ‘வரகுண’ என்பது ஒரு அடைமொழி. யாரும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் இது வெறும் ஊகமே. ஆகையால் வேறு சில சான்றுகளைக் காண்போம்.

63 நாயன்மார்களைப் பாடிய சேக்கிழார் பெருமான் ஏன் இவரை (மா–வை) விட்டுவிட்டார்? என்பது மற்றொரு புதிர். இந்தப் புதிருக்குப் பலரும் கூறிய விடை ஏற்புடையதே. திருத்தொண்டர் தொகையில் ‘மா’ பெயர் இல்லாததால் சேக்கிழார் பாடவில்லை. அவருக்கு திருத்தொண்டர் தொகையே ஆதார நூல் என்பர் அறிஞர் பெருமக்கள். ஆனால் திருத்தொண்டர் தொகையிலும் ஒரு புதிர் உள்ளது. அதை விடுவித்தால் மா’ பற்றிய புதிர் விட்டுப்போகும்.

திருத் தொண்டர் தொகையில் பொய்யடிமை இல்லாத புலவர் என்று ஒரு வரி வருகிறது. யார் இவர்? அல்லது யார் இவர்கள்?

பொய் அடிமை இல்லாத புலவர்

பொய் அடிமை இல்லாத புலவர் என்பது மாணிக்கவாசகரே. இதுவரை ‘மா’ பற்றி எழுதிய யாரும் அவருடை இயற்பெயரைக் கூறாமல் திருவாதவூரர் என்று அவர் பிறந்த ஊரின் பெயராலும் கடவுள் கொடுத்த மாணிக்கவாசகர் என்ற பெயராலுமே அழைத்து வருகின்றனர். மாணிக்கவாசகரின் இயற் பெயர் –தாய் தந்தை இட்ட உண்மைப் பெயர் ‘பொய் அடிமை இல்லாதவர்’ என்பதாகும். இதற்கு ஆதாரம் என்ன?

Thiruvathavur,December 1997-2

Manikkavasagar shrine

டாக்டர் நாகசாமி புத்தகம்

எனது குருநாதர் டாக்டர் இரா. நாகசாமி எழுதிய கட்டுரையில் இதற்கு ஆதாரம் இருக்கிறது:
டாக்டர் நாகசாமியின் புத்தகத்தின் பெயர் ‘பொய்யிலிமாலை’ அதில் பக்கம் 189-ல் பொய்யடிமை இல்லாத புலவர் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அவருடைய கட்டுரைச் சுருக்கம்:

1.திருத் தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகள், ‘பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்” என்று பாடுகிறார். இது ஒருவரா பலரா என்று தெரியாது.

2. சுந்தரமூர்த்திக்குப் பின், நம்பியாண்டார் நம்பி, இத்தொகையை விரிவாக்கி திருத் தொண்டர் திருவந்தாதி பாடுகையில் கபிலர், பரணர், நக்கீரர் முதலிய பலர் என்றும் சங்கப் புலவர் என்றும் பாடிவிட்டார்.
#

3.அடியார் புராணத்தை விரித்துரைத்த சேக்கிழார் பாடலில் பொய்யடிமை இல்லாத புலவர் ஒருவரா பலரா என்று தெளிவாக இல்லை. ஆனால் நம்பி குறிப்பிடும் கபிலர், பரணர், நக்கீரர் பற்றி சேக்கிழார் எதுவுமே குறிப்பிடவில்லை. இது ஏன் எனக் கூற இயலவில்லை.

4.அடியார்கள் புராணத்தை வடமொழியில் தரும் உபமன்யு பக்த விலாசம், இரண்டு விதமாக பொய் அடிமை இலாத புலவரை மொழி பெயர்த்துள்ளது: ‘அஸத்ய தாஸ்ய ரஹித கவி’, ‘ஸத்ய தாஸ்ய கவி’. இதைக் கூர்ந்து படித்தால் புலவர் என்னும் சொல் ஒருவரையே குறிக்கிறது என்பது தெளிவாகிறது
5.அந்தக் கவி (ஸத்யதாஸர்) சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் பாடவில்லை. அவர் பக்தியை மெச்சி பரமன் அவருக்குக் கவிபாடும் வரம் அளித்தார். அன்றிலிருந்து எப்பொழுதும் கவிதையால் மகிழ்வித்து சிவபதம் அடைந்தார்.

6. அறுபத்து மூவர் வரலாற்றைக் கூறும் அகஸ்திய பக்த விலாசம் என்ற சம்ஸ்கிருத நூலும் பொய் அடிமை இலாத புலவரை ‘ஒருவர்’ என்றே கூறி அவருடைய பெயர் ஸத்யதாசன் என்றும் குறித்துள்ளது. அவர் வேதபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர், அந்தண குலத்தவர் 12 ஆண்டுப் பரமனைப் பாடிப் பரவி சிவபதம் அடைந்தார்.

7. நம்பி மட்டும் கபிலர்,பரணர் முதலியோரைக் குறிப்பிட, மற்றவர்கள் ஒருவரே என்று கூறுவது மேலும் ஆராய்ச்சிக்கு உரித்தாகும்
என்று சொல்லி திரு நாகசாமி கட்டுரையை முடிக்கிறார்.

இனி எனது கருத்துகளைக் கூறுகிறேன்:

மாணிக்க வாசகரின் பெயர் ஸத்தியதாசன். ஏனெனில் மேலே சத்யதாசனுக்குச் சொன்ன எல்லா விஷயங்களும் ‘மா’வுக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. அதைவிட முக்கிய விஷயம் வேதபுரம் என்பது திருவாதவூரே! வேதபுர என்பது தமிழில் வாதவூர் என்று எழுதப்படும். திருவாதவூர் சுவாமிக்குப் பெயர் வேதபுரீஸ்வரர்!!!!

மதுரையில் ஒருவர் பிறந்தால் சுந்தரேஸ்வரன் என்றும் திருவாரூரில் ஒருவர் பிறந்தால் தியாகராஜன் என்றும் பெயர் சூட்டுவது போல வேதபுரத்தில் பிறந்த ‘மா’-வுக்கு வேதபுரீஸ்வரர் (தமிழில் வாதவூரர்) என்றும் மற்றொரு செல்லப் பெயராக சத்தியதாசன் என்றும் வைத்திருப்பர். ஆகவே பொய்யடிமை இல்லாத= ஸத்யதாச என்பதும் வேதபுரீஸ்வரர்=வாதவூரர் என்பதும் நாம் வணங்கும் மாணிக்கவாசகரே ஆவார்.

மேலும் பல சான்றுகளை கட்டுரையின் இரண்டாம் பகுதியில் தருவேன்.

மேற்கோள்கள்
1.தருமி பொற்கிழி கதை
நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி
நற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன் காண்
– திருப்புத்தூர் தாண்டகம், அப்பர் தேவாரம்

2.நரி—பரி லீலையும் அப்பர் தேவாரத்தில் வருகிறது.

நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவு செய்வானும்
விரதங் கொண்டு ஆடவல்லானும் விச்சின்றி நாறு செய்வானும்
முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட முன் பணிந்து அன்பர்கள் ஏத்த
அரவு அரைச்சாத்தி நின்றானும் ஆரூர் அமர்ந்த அம்மானே
–(4-33 அப்பர் தேவாரம்,திருவாரூர் பதிகம்)

தொடர்பு கொள்ள: Contact swami_48@yahoo.com