அக்னி பரீட்சையில் மீண்டு வந்த அற்புத மனிதர்கள்!(Post No. 2447)

singapore thimithi with amman face

Picture:–Singapore Mariamman Festival Fire walking

 

Written by S NAGARAJAN

 

Date: 1 January 2016

 

Post No. 2447

 

Time uploaded in London :–  7-17 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

பாக்யா ஜனவரி 2016 முதல் தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை

 

 

அக்னி பரீட்சையில் மீண்டு வந்த அற்புத மனிதர்கள்!

.நாகராஜன்

 

 Agni-pariksha-of-sita

Sita Devi’s Fire Walking

“1871ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ஆம் தேதியன்று அமெரிக்க நகரான சிகாகோவில் ஏற்பட்ட தீ, 24 மணி நேரம் தொடர்ந்து எரிய, நகரில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் இல்லங்களை இழந்தனர். 300 பேர்கள் இந்த மாபெரும் தீ விபத்தில் கொல்லப்பட்டனர்” – பஞ்ச பூதங்களில் ஒன்றான தீயின் கோர தாண்டவம் பற்றி அமெரிக்க வரலாறு

 

 

சீதா பிராட்டியை ராமன் அக்னியில் பிரவேசிக்கச் செய்ததையும் அக்னி ப்ரவேசம் செய்த சீதை கற்புக்கரசி என அக்னியால் புகழப்பட்டதையும் ராமாயணம் விளக்குகிறது.

 

தமிழகத்தில் ஆங்காங்கு மாரியம்மன் கோவில் திருவிழாக்களில்  பல நூறு ஆண்டுகளாக தீ மிதி வைபவம் நடைபெறுவதை நமது சரித்திரம் கூறுகிறது. இதில் கலந்து கொள்வோர் நெருப்புத் துண்டுகள் உள்ள பாதை வழியே பக்தியுடன் செல்வதையும் அவர்கள் கால் உள்ளிட்ட அங்கங்கள் எந்த வித பாதிப்புமின்றி இருப்பதையும் பார்த்து வியக்க முடிகிறது. இதை பூ மிதி திருவிழா என்றும் கூறுவது வழக்கம். அம்மன் தீயைப் பக்தர்களுக்குப் பூவாக மாற்றுவதாக ஐதீகம்.

 

இப்படி “ஃபயர் ஃப்ரூப்” ஆக இருப்பது சாத்தியம் தானா? பல காலமாக அறிவியல் உலகம் இதை ஆராய்ச்சி செய்து வருகிறது.

ஹிந்து இதிஹாஸங்கள் மட்டுமல்ல, உலகின் இதர மதங்களும் பல மகான்கள் தீ மீது நடந்ததைக் குறிப்பிடுகின்றன.

 

செயிண்ட் ஃப்ரான்ஸிஸ் ஆஃப் பாலா (1508ஆம் ஆண்டு) பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டைத் தன் கைகளில் ஏந்தியவாறே தன்னை வியந்து பார்த்துக் கொண்டிருந்த மக்களிடம்,” தூய மனமுடன் இறைவனை வழிபடுவோரின் கட்டளைக்கு அனைத்து உயிரினமும் கீழ்ப்படியும்” என்றார்.

 

சியனா நகரைச் சேர்ந்த செயிண்ட் காதரீன் கொழுந்து விட்டெரியும் இரும்பு உலையில் கரித் துண்டுகளின் மீது முகம் படிந்திருக்க நெடு நேரம் இருந்தார். அந்தப் புனிதப் பெண்மணி நெருப்பில் இருப்பதைப் பார்த்து திகைத்தவர்கள் அவரை அப்புறப்படுத்திய போது அவருக்கு ஒரு தீக்காயமும் ஏற்பட்டிருக்கவில்லை!

 

இந்தியாவில் குற்றமிழைக்காதவன் என்று தன்னை நிரூபிக்க விரும்புவோர் கொதிக்கும் எண்ணெயில் கையை விடுவது, தீ மீது நடப்பது, பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டை கைகளில் ஏந்துவது என இப்படிப் பலவற்றில் ஒன்றைச் செய்து தீயின் பாதிப்பு இன்றி மீண்டு தம்மை நிரபராதி என்று நிரூபிப்பது வழக்கம். இதே போல இடைக்காலத்தில் மேலை நாடுகளிலும் இந்தப் பழக்கங்கள் கையாளப்பட்டு வந்திருக்கின்றன.

charity-fire.jpgeast cheshire

Charity Fire Walking in East Cheshire Hospice (UK)

 

1929ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் மரிஸ்பர்க் என்ற இடத்தில் தீ மிதி விழா ஒன்று நடைபெற்றது. 15 மீட்டர் (அதாவது சுமார் 49 அடி) நீளமுள்ள குழியில் 12 டன் விறகு போடப்பட்டு அக்னி ஜொலிக்க 8 ஹிந்துக்களும் 4 ஆங்கிலேயரும் அந்த தீக்குழியில் வெற்றிகரமாக நடந்தனர். ஒரே ஒரு ஆங்கிலேயர் மட்டும் இரண்டு அடி மட்டுமே குழியைத் தாண்டுவதற்கு இருக்கும் நிலையில் அப்படியே கீழே விழுந்தார். உடனடியாக சமாளித்து எழுந்து நடந்தவரின் கால்களில் தீப் புண்கள் ஏற்படவே அவரை மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு குழுமிய பத்திரிகையாளர்களிடம் அவர், “கூட்டத்தின் ஆரவாரம் மிகவும் அதிகமாகவே என்னால் உயர் சக்தியின் மீது மனதை ஒருமுனைப்படுத்த முடியவில்லை. அது தான் நான் விழுந்ததற்குக் காரணம்”, என்று கூறினார்.

 

 

உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற மீடியமான டி.டி, ஹோம் -டேனியல் டங்ளஸ் ஹோம் – (Daniel Dunglas Home) செய்து காட்டாத அபூர்வமான அதீத உளவியல் ஆற்றல் நிகழ்வுகளே இல்லை எனலாம். அவரது பல நிகழ்ச்சிகளில் அவர், தான் “ஃபயர் ஃப்ரூபாக” இருப்பதை மட்டும் நிரூபிக்கவில்லை,  அடுத்தவரையும் அப்படி தீ பாதிக்காத தன்மையைக் கொண்டவராக அவர் ஆக்கினார், அது தான் ஆச்சரியம்!

“டையாலக்ட்ரிகல் சொஸைடி” (Diaelectrical Society) என்ற அமைப்பின் சார்பில் ஐவர் குழு ஒன்று அவரை நேரடியாக சோதனை செய்தது. ஹோம் பலரது கைகளிலும் தலைகளிலும் எரியும் கரித்துண்டுகளை வைத்தார். ஆனால் அவர்களோ தீயின் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருந்தனர்!

 

Daniel-Dunglas-Home-levitation

Daniel Dunglas

1869ஆம் ஆண்டு  மார்ச் மாதம் 17ஆம் தேதி நடந்த ஒரு அதீத உளவியல் அமர்வு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. ஒரு பெண்மணியின் வெண்மையான மஸ்லின் ஆடையில் ஹோம் பழுத்து எரியும் ஒரு கரித் துண்டத்தை வைத்தார். ஆடை எரியவே இல்லை. பின்னர் அங்கிருந்த மலர்களின் மீது எரியும் கரித்துண்டை வைக்க அங்கு பொசுங்கிய நாற்றம் வந்ததே தவிர மலர்களுக்கு ஒரு சேதமும் ஏற்படவில்லை. அதே அமர்வில் அங்கிருந்த ஹனிவுட் என்ற பெண்மணி மற்றும் லார்ட் லிண்ட்ஸே ஆகியோரது கையில் நன்கு சூடேறிய கண்ணாடி விளக்கைக் கையில் தர அதை அவர்கள் எந்த வித பாதிப்புமின்றி ஏந்தி நின்றனர். அப்போது தன் வாயில் ஒரு தீக்குச்சியை வைத்துக் கொண்டு அதை கண்ணாடியின் மீது ஹோம் உரச அந்தச் சூட்டினால் உடனே தீக்குச்சி பற்றி எரிய ஆரம்பித்தது.

இதே போல அருகில் யார் இருந்தாலும் அவர்கள் கையில் பழுக்கக் காய்ச்சிய நெருப்புத் துண்டுகளை கொடுப்பது அவரது வழக்கமானது.

 

 

இதனால் விஞ்ஞானிகள் உள்ளிட்ட பார்வையாளர்கள் திகைத்து நின்றனர்.

உலகின் அபூர்வ மனிதரான டேனியல் டங்ளஸ் ஹோம் (பிறப்பு 20-3-1833 இறப்பு 21-6-1886) பற்றிப் பல புத்தகங்கள் எழுதுமளவு சுவையான நிகழ்வுகளை அவர் வாழ்வு கொண்டிருந்தது.

 

SirChristopher

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

சர் கிறிஸ்டோபர் ரென் என்பவர் (1632-1723) பிரிட்டனின் பிரசித்தி பெற்ற கணிதமேதை, வானவியல் நிபுணர் மற்றும் சிறந்த கட்டிடக் கலை நிபுணர். விண்ட்சார் டவுன் ஹால் கட்டிட்டத்தின் உட்புறத்தை மிகவும் ஆர்வமுடன் அவர் வடிவமைத்துக் கொண்டிருந்தார். அதன் மேற்கூரையை அழகிய தூண்கள் வலுவாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தன. அதைப் பார்வையிட வந்த கட்டிட ஆய்வாளர்கள் போதுமான தூண்கள் இல்லை என்றும் ஆகவே கட்டிடத்தில் வலு போதுமானதாக இல்லை என்றும் கருத்துத் தெரிவித்தனர். ஆனால் ரென்னுக்கோ தன் திறமையின் மீது அபார நம்பிக்கை. என்றாலும் கட்டிட ஆய்வாளர்கள் திருப்தி தெரிவிக்கவில்லையே! அவர் உடனே நான்கு தூண்களை அழகுற அமைத்தார். கட்டிட ஆய்வாளர்கள் திருப்தி தெரிவித்தனர். ஆனால் உண்மையில் அந்தத் தூண்கள் மேற்கூரையைத் தொடவே இல்லை. அழகுக்காக தொடாமல் அமைக்கப்பட்டிருந்தன. ரென் சிரித்தார். இன்றும் அந்தத் தூண்கள் அந்தக் கட்டிடத்தில் உள்ளன!

 

England, P-381a 50 Pounds, Inv1766(b)(1000)

இதே போல அமெரிக்காவின் கட்டிடக் கலை நிபுணர் ஃப்ராங்க் லாயிட் ரைட் என்பவர் (1869-1956) விஞ்ஞான முறையில் கட்டிடங்களைக் கட்டி வந்தார். அவரை பிரபல தொழிலதிபரான ஹிப்பர்ட் ஜான்ஸன் தனக்கு ஒரு வீட்டைக் கட்டித் தருமாறு கேட்டுக் கொண்டார். ஒரு நாள் அந்த வீட்டில் ஜான்ஸன் தனக்கு மிகவும் வேண்டியவர்களைக் கூப்பிட்டு ஒரு விருந்து கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பெரிய மழை பெய்ய ஆரம்பித்தது. மேற்கூரை வழியாகத் தண்ணீர் ஒழுக ஆரம்பித்தது. சரியாக ஜான்ஸன் அமரிந்திருந்த இடத்தின் மேலிருந்து சொட்டு சொட்டாகத் தண்ணீர் விழ, அவரது வழுக்கைத் தலை மீது நீர் சொட்ட ஆரம்பித்தது. விருந்தினர்கள் இதைப் பார்த்துக் கொண்டிருக்க கோபமடைந்த ஜான்ஸன் அரிஜோனாவில் இருந்த கட்டிட  ரைட்டைப் போனில் அழைத்தார். “என்ன கட்டிடம் கட்டினீர்கள். மழையில் மேற்புறம் ஒழுக, என் தலை மீதே நீர் ஒழுகுகிறது” என்று அவர் கோபமாகக் கத்தினார்.

 

 

மறுமுனையிலிருந்து அமைதியான குரலில் வந்த பதிலை விருந்தினர்கள் அனைவரும் கேட்டனர்:” அது சரி, உங்கள் நாற்காலியை நீங்கள் ஏன் சற்று நகர்த்திப் போட்டுக் கொள்ளக் கூடாது!”

*******