
Written by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 11 April 2019
British Sumer Time uploaded in London – 5-51 am
Post No. 6251
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 7-3-2019 அன்று காலை சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை
நதிகளைக் காப்போம்!
ச.நாகராஜன்

லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக அமைவது இந்திய நாட்டில் ஓடும் நதிகளே.
கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா, நர்மதா, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, வைகை என ஏராளமான நதிகள் ஆங்காங்கே வாழும் மக்களின் ஜீவாதாரமாகத் திகழ்கின்றன.
ஆனால் இப்படிப்ப்ட நதிகளின் நீரை அசுத்தமாக்குவதும், ஆற்றில் உள்ள மணலைச் சுரண்டி அள்ளி நதியின் ஜீவ ஓட்டத்தைத் தடைப்படுத்துவதும் நாளுக்கு நாள் அதிகமாகி வருவது வருத்தமூட்டும் ஒரு விஷயம்!
தூய்மைக்கே தூய்மை தரும் நதி என நமது பண்டைய இலக்கியங்கள் புகழும் கங்கை நதி ஐந்து மாநிலங்கள் வழியே சுமார் 2525 கிலோமீட்டர் பாய்ந்து ஓடி 50 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்குக் காலம் காலமாகப் பயனை அள்ளி வழங்கும் ஒரு நதியாகும்.
கங்கோத்ரியில் சிறு துளியாகத் துளிர்த்து பெரும் ஜீவநதியாக உருமாறும் இந்த நதியின் இன்றைய நிலை மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கங்கோத்ரியில் இதன் தூய்மை கெடவில்லை.
பின்னர் ஹரித்வாரை அடையும் போது கங்கை நீர் நல்ல நிலையில் இருக்கிறது.
அதன் பின்னர் தொழில் நகரமான கான்பூரில் கங்கை நீர் அசுத்தமாகி விடுகிறது. அங்கு நீரை சுத்தப்படுத்தி நன்னீராக்கும் அவசியம் ஏற்படுகிறது.
கங்கை, யமுனை, மறைந்து அந்தர்வாஹினியாக ஓடும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் அலஹாபாத்திலோ கங்கை நீர் கலங்கலாக இருக்கிறது.
வாரணாசி என புகழப்படும் புனித ஸ்தலத்தில் குளிப்பதற்குத் தகுதியான நீர் என்றாலும் கூட அசுத்தத்துடனேயே இன்று பாய்கிறது.
அடுத்து பாட்னா போன்ற பகுதிகளில் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் தகுதியற்ற நிலையை உடையதாக இருப்பதால் வாடர் ட்ரீட்மெண்ட் எனப்படும் நன்னீராக்கும் பணி தேவைப்படுகிறது.
இப்படி ஒவ்வொரு நதியாக ஆய்வு செய்து பார்த்தால் மனிதனால் மட்டுமே இப்படிப்பட்ட இயற்கைச் செல்வங்கள்
அசுத்தமாக்கப்படுவது தெரிய வரும். பெரும்பாலான தொழிற்சாலைக் கழிவுகள் உள்ளிட்ட அசுத்தங்கள் தூய்மையான நீரைக் கெடுப்பதால் இந்த நதிகளில் வாழும் ஆமை மீன் உள்ளிட்ட உயிரினங்களும் இறந்து படுகின்றன.
ஆகவே நதிக்கரையோரம் வாழும் மக்கள் புனித நதிகளைக் காக்கும் உறுதி மொழியை எடுத்துக் கொண்டு அவற்றைக் காக்க வேண்டியது இன்றைய இன்றியமையாத அவசியமான தேவை; அவசரமான தேவையும் கூட என்றே சொல்லலாம்!
***

