ரமண பக்தையைக் காத்த நாகம்! (Post No.5337)

Written by S Nagarajan

Date: 19 August 2018

 

Time uploaded in London – 6-17 AM  (British Summer Time)

 

Post No. 5337

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ரமண பக்தை மா பிரோஜா தலயார்கானைக் காத்த நாகம்!

 

ச.நாகராஜன்

 

பகவான் ப்ரியா மா பிரோஜா தலயார்கான் (Ma Firoza Taleyarkhan 1898-1984) மிக மிக செல்வச் செழிப்புடைய பார்ஸி குடும்பத்தில் பிறந்தவர்.

 

ரமணரை அடைக்கலம் புகுந்து திருவண்ணாமலையில் வாழ்ந்த அவரது சரித்திரம் மிக சுவையான ஒன்று.

ஏராளமான அனுபவங்களை அவர் தொகுத்து எழுதியுள்ளார். அதில் ஒன்று தான் அவரை நாகம் காத்து வந்ததை பகவான் சுட்டிக் காட்டிய சம்பவம்.

ஆண்டு 1945. ஒரு நாள் அலஹாபாத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தவரும் சிறந்த ரமண பக்தருமான டாக்டர் சையத்தின் மனைவியும் சூனா என்பவரும் திருமதி தலயார்கானின் வீட்டிற்கு வந்து பேசிக் கொண்டிருந்தனர்.

மெக்காவில் உள்ள கபாலாவை (Kharbala) பற்றி திருமதி சையத் விவரித்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் தான் அவர் மெக்கா சென்று திரும்பியிருந்தார்.

 

திருமதி தலயார்கானின் எதிர்புறத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அவர்கள் திடீரென்று அவரை விசித்திரமாகப் பார்த்தனர்.

 

திடீரென்று அவர்கள், “உங்களுக்குப் பின்னால் பாம்பு இருக்கிறது, ஜாக்கிரதை” என்று அவர்கள் கத்தினர். உண்மையில் அவருக்குப் பின்னால் ஒரு பாம்பு படம் விரித்துக் கொண்டு நின்றிருந்தது.

தலையை மெதுவாகத் திரும்பிப் பார்த்தார் அவர். பாம்பு அவரை தீண்டி இருக்கக் கூடும். ஆனால் அது மெதுவாக நாற்காலியிலிருந்து இறங்கி வெளியே ஊர்ந்து சென்றது. தோட்டக்காரரைக் கூப்பிட்ட திருமதி தலயார்கான் அந்தப் பாம்பைக் கொல்ல வேண்டாம் என்று உத்தரவிட்டார். பாம்பு பாம்பு என்ற சத்தத்தால் அந்த இடம் சற்று களேபரமானது.

திருமதி தலயார்கானுக்கு அண்டை வீட்டில் வசித்து வந்த ராஜகோபாலய்யங்கார் அப்போது தான்  ஆசிரமத்திலிருந்து வந்து கொண்டிருந்தார். ராஜகோபாலய்யங்கார் பகவானை அருகிலிருந்து கவனித்து வந்த பகவானின் அணுக்கத் தொண்டர்.

சத்தம் கேட்டு அவர் ஓடி வந்தார்.

திருமதி தலயார்கானைப் பார்க்க வந்திருந்த இரு பெண்மணிகளும் நடந்த விஷயத்தைப் பரபரப்புடன் ராஜகோபாலய்யங்காருக்கு விளக்கினர்.

அவர் திருமதி தலயார்கானை நோக்கி, “பாம்பை அடித்துக் கொன்று விட்டீர்களா?” என்று கேட்டார்.

அதைத் தன்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்று பதில் அளித்தார் அவர்.

 

அவர் உடனடியாக ஓடோடிச் சென்று பகவான் ரமணரிடம் நடந்த விஷயத்தை விவரித்தார்.

 

பகவானின் முதல் கேள்வி பாம்பை தலயார்கான் அடித்துக் கொன்று விட்டாரா என்பது பற்றித் தான்.

 

இல்லை என்ற பதில் வந்ததும் அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார் பகவான் ரமணர்.

 

“நல்லது” என்ற அவர், அந்த பாம்பு தான் அவரைப் பாதுகாத்து வரும் நாகம் என்றார்.

ஒரு நாள் காலை திருமதி தலயார்கான் படுக்கையிலிருந்து எழுந்த போது அவர் பிரார்த்தனை செய்யும் மேஜைக்கு அருகில் ஒரு பாம்பின் ஒரு பெரிய தோல் உரிக்கப்பட்டு கிடந்ததைக் கண்டார்.

அவர் தூங்கிக் கொண்டிருந்த போது திறந்திருக்கும் ஜன்னல் வழியாக உள்ளே அது வந்திருக்கக் கூடும்!

வெல்லூர் மாவட்ட நீதிபதியாக அப்போது இருந்த அனந்தநாராயணன் (பின்னால் மதராஸ் ஹை கோர்ட் நீதிபதியாக இருந்தவர்) இந்தச் சம்பவத்தைக் கேட்டு முதலில் இதை நம்பவில்லை.

 

ஆனால் அடுத்த நாள் காலை உணவருந்திய பின்னர் இருவரும்  வீட்டின் வாசலில் கைகளை அலம்பிக் கொண்டிருந்த போது அவரே அந்த நாகம் ஊர்ந்து செல்வதைப் பார்த்தார்.

முதலில் நம்பாதவர் இப்போது அதிசயப்பட்டு முழு விஷயத்தையும் நம்பினார்.

 

அந்த நாகத்தைப் பற்றிய உண்மையை பகவான் விளக்கியதால் அதைப் பற்றிய பயம் இல்லாமல் மா தலயார்கான் வாழ்ந்து வந்தார்.

 

இப்படிப் பல சம்பவங்கள் அவரது வாழ்க்கையில்  நிகழ்ந்துள்ளன. பகவானின் அருளுக்குப் பாத்திரமான அவர் தனது சுவையான அனுபவங்களை Sages, Saints and Arunachala Ramana என்ற நூலில் விவரித்துள்ளார்.

****

 

 

 

‘நல்லோர் அவை புக்க நாகமும் சாகா!’

B_Id_411182_manasa-puja-2
Picture of Snake blessing during Naga Panchami puja

By London Swaminathan
Post No. 894 dated 8th March 2014

தமிழர்களின் இரக்க சிந்தனையில் பாம்பு கூட உயிர் பிழைத்து விடுமாம்!
சங்க நூலில் ஒன்றான கலித்தொகையில் ஒரு உவமை வருகிறது:–

‘’தாங்காச் சினத்தொடு காட்டி உயிர் செகுக்கும்
பாம்பும் அவைப்படின் உய்யுமாம்’’ — நெய்தற்கலி

பொருள்: பயங்கர கோபத்துடன் சீறிப் பாய்ந்து மற்றவர்கள் உயிரை வாங்கும் பாம்பையும் கூட நல்லவர்கள் கூடி இருக்கும் இடத்திற்குள் வந்தால் அடித்துக் கொல்ல மாட்டார்கள் என்கிறார் நெய்தற்கலி பாடிய நல்லந்துவனார்.

மகாபாரதத்திலும் இப்படி ஒரு கதை வருகிறது.

கல்வி கேள்விகளில் தேர்ச்சிபெற்ற கவுதமி என்ற பிராமணப் பெண்ணின் மகனைப் பாம்பு கடித்திவிடுகிறது. அவன் இறந்த பின்னர் அந்தப் பாம்பை ஒரு வேடன் பிடித்துக் கொண்டுவந்து, அம்மையே உன்மகனைக் கொன்ற இந்தப் பாம்பினை எந்த வகையில் கொல்ல வேண்டும் என்ரு சொல்லுங்கள் கொன்று பழி தீர்க்கிறேன் என்றான். அவளோ இதை கொன்றாலும் தன் மகன் உயிருடன் வரப்போவத்ல்லை என்று சொல்லி பாம்பினை உயிருடன் விட்டுவிடச் சொல்கிறாள் (ம்.பா. 13/1)
‘’நல்லவர் கண்ணில் நாகம் அகப்பட்டாலும் கொல்லார்’’ என்ற தமிழ்ப் பழமொழியை இது உண்மையாக்கிவிட்டது.

‘’நல்லோரவை புக்க நாகமும் சாகா’’ — என்று பிற்காலத்திலும் சொல்லப்பட்டுள்ளது.

B_Id_411187_snakes-1
Naga Panchami Festival

பாம்புகளை எப்போதுமே தீய பிராணிகளாகவே எல்லா நாட்டு இலக்கியங்களும் வருணிக்கும்.அதிலும் விஷமுடைய பாம்பையும் விஷமற்ற பாம்பையும் வேறுபடுத்தியும் காண்பர்:

நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங் கிடக்கும் நீர்ப்பாம்பு – நெஞ்சில்
கரவுடையார் டம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத்தவர் –(வாக்குண்டாம்)

நாகப் பாம்புக்கு விஷம் இருப்பதால்தான் மறைந்து வாழ்கிறது. நீர்ப் பாம்புக்கு விஷம் இல்லாததால் அஞ்சாமல் வெளியே இருக்கும்.. அதுபோல நெஞ்சில் வஞ்சனை (கரவு) உடையார் தங்களைத் தாமே மறைத்துக் கொள்வர். வஞ்சம் இல்லாதோர் மறைந்து வாழ மாட்டார்கள்.

நாக பஞ்சமி அன்று உயிருடன் இருக்கும் நாகத்துக்குப் பூஜை செய்வதும், வாரம் தோறும் பாம்புப் புற்றில் பால் வார்ப்பதும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது. கேரளத்தில் பாம்புக் கோவில்கள் உள்ளன. ஆயினும் இவை எல்லாம் தெய்வ வழிபாடு என்ற வகையில் வந்துவிடும். தமிழர்களோவெனில், தெய்வ சம்பந்தம் இல்லாத ‘அசெம்பிளிக்குள்’ வந்தாலும் பாம்புகளை அடிக்கமாட்டார்கள் என்பது ரசிக்கத் தக்கது!!

contact swami_48@yahoo.com