ரிக் வேதத்தில் உலகம் வியக்கும் அறிவியல் சிந்தனை! (Post No.4237)

Written by London Swaminathan

 

Date: 23 September 2017

 

Time uploaded in London-  7-12 am

 

Post No. 4237

 

Pictures are taken from various sources; thanks.

 

 

உலகிலேயே பழமையான சமய நூல் ரிக் வேதம் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை; உலகிலேயே மிகப்பெரிய பழங்கால கவிதைத் தொகுப்பு ரிக் வேதம் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. சரஸ்வதி நதி  கி.மு 2000க்கு முன்னரே மறைந்துவிட்டது என்று பாபா அணுசக்திக் கேந்திர விஞ்ஞானிகளும், நா ஸா (NASA) விண்வெளியிலிருந்து எடுத்த புகைப்படமும் காட்டியதால் ரிக் வேதத்தின் காலம் கி.மு 2000-க்கு முன் என்பது உறுதியாகிவிட்டது. அது மட்டுமின்றி துருக்கியில் கிடைத்த களிமண் க்யூனிபார்ம் கல்வெட்டில் ரிக்வேதத்தில் தெய்வங்கள் எந்த வரிசைக் கிரமத்தில் இருக்கிறதோ அதே வரிசைக் கிரமத்தில் இருப்பதை கி.மு.1400ல்  கண்டுபிடித்தவுடன் ரிக்வேதம் கி.மு.1400லேயே துருக்கிவரை சென்றதும் உறுதியாகிவிட்டது.

 

சரஸ்வதி நதி பற்றித் துதிக்கும் பாடல்கள் ரிக் வேதம் முழுதும் ஐம்பதுக்கும் மேலான இடங்களில் விரவிக் கிடக்கின்றன. ஆக ரிக் வேதத்தின் எந்தப் பகுதியையும் எவரும் .கி.மு2000க்குக் குறைத்து மதிப்பிட முடியாது. அதாவது மொஹஞ்சதாரோ, ஹரப்பாவுக்கு முந்தையது வேத கால நாகரீகம் (இதற்கு ஆட்சேபம் எழுப்பியோர் குதிரை, இரும்பு பற்றிக் கூறியவற்றுக்கு எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் பதில்கள் உள்ளன. கண்டு மகிழ்க).

 

இது பழைய மாக்ஸ்முல்லர் கொள்கையையும், மார்கஸீயவா(ந்)திகளின் கொள்கையையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டது.

 

 

மாபெரும் வெடிப்பு BIG BANG!

 

இந்த பிரபஞ்சம் எப்படித் தோன்றியது? என்பதற்கு அண்மைக் காலத்தில் விஞ்ஞானிகள் விளக்கம் கண்டு பிடித்துள்ளனர். அவர்கள் சொல்கிறார்கள்– 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென்று ஒரு வெடிப்பு ஏற்பட்டது. அப்போது முதல், நட்சத்திரங்கள், பூமி, கிரஹங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக உற்பத்தியாகின. அந்தப் பிரபஞ்சம் இன்னும் பலூன் ஊதுவது போல பெருகிப் பரந்து விரிந்து கொண்டே போகிறது. முடிவு என்ன ஆகும் என்று எங்களுக்குத் தெரியாது. இந்த மாபெரும் வெடிப்பு (BIG BANG) ஏன் ஏற்பட்டது, எப்படி ஏற்பட்டது என்பதும் எங்களுக்குத் தெரியாது – என்று அறிவியல் நூல்கள் செப்பும்.

 

இதில் ஒரு பெரிய விந்தை என்னவென்றால் ஒரு பிரம்மாவின் யுகக்கணக்கில் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இப்போதைய பிரபஞ்சம் தோன்றியதாக இந்து சமய நூல்களும் பகர்கின்றன. அது மட்டுமின்றி காலம் என்பது வட்ட வடிவில் (Cyclical, not linear) பயணம் செய்யும் ; ஆகையால் இது மீண்டும் சுருங்கி, மீண்டும் விரிவடையும் என்றும் இந்து சமய நூல்கள் விரித்துரைக்கின்றன. இனி நாசதீய சூக்தத்தில் உள்ள  அதிசய விஷயத்தைக் காண்போம்.

 

இப்பேற்பட்ட ரிக் வேதத்தில் கடைசி பாடலில் உலக சமாதானம் , உலக மக்கள் நலம் பற்றிய பாடல் இருப்பது – 6000, 7000 ஆண்டுகளுக்கு முன்னரே — வேத கால ரிஷிகள் ஆடிப்பாடி ஆனந்தக் கூத்தாடி இருப்பது உலகையே வியக்க வைக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை உருவாகும் முன்னரே இப்படி ஒரு சிந்தனை எழுந்தது வேத கால நாகரீகம் ஒன்றே முதன்மையானது என்பதைக் காட்டிவிட்டது.

 

இப்படி பசு மாடு, குதிரை, டெஸிமல் சிஸ்டம் , உலக மக்கள் நலம் என்பதில் எல்லாம் முன்னொட்டியில் நிற்கும் விஞ்ஞானத்திலும் முன்னனியில் இருப்பது  எல்லோர் மூக்கிலும் விரலை வைக்கவைத்து விட்டது.

 

இதைப்படித்த வெளிநாட்டு “அறிஞர்கள்” வேதம் பற்றிய எல்லாப் புத்தகத்திலும் இதைச் சேர்த்துவெளியிட்டனர். நூற்றுக்கும் மேலான “அறிஞர்கள்” இது பற்றி பிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கில, லத்தீன் மொழிகளில் உரை- வியாக்கியானம்- கருத்துக்களை மொழிந்துள்ளனர்.

 

இந்த துதியின் பெயர் நாஸதீஅய சூக்தம். ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் உள்ளது (10-129)

 

சரஸ்வதி நதி தீரத்தின் கரையில் 6000, 7000 ஆண்டுகளுக்கு முன்னர் உட்கார்ந்திருந்த ஒரு முனிவர் இரவு நேரத்தில் பல்லாயிரக் கணக்கான நடசத்திரங்கள் வான வீதியில் பவனி வருவதைக் கண்டார். உடனே இவை எப்படித் தோன்றின என்று ஞான திருஷ்டியில் கண்டார். அதை ஒரு பாடல் மூலம் வெளியிட்டார். அதுதான் நாசதீய சூக்தம் என்னும் துதி.

 

ஒரு விஞ்ஞானியோ நாஸ்தீக வாதியோ, மாபெரும் வெடிப்புக்கு (Before The Big Bang) முன்னர் என்ன இருந்தது? அதை யார் தோற்றுவித்தார்? அவர் எப்படி வந்தார் அல்லது அது எப்படி வந்தது என்று கேள்வி கேட்டுக் கொண்டே போனால் விடையே கிடைக்காது. ஒரு நேரத்தில் இப்படி யோசிப்பதை நிறுத்தாவிடில் வேட்டி சட்டையைக் கிழித்துக் கொண்டு பைத்தியம் பிடித்து அலைவார்.

 

ஆனால் ரிக் வேத ரிஷியோ மாபெரும் வெடிப்பை வர்ணித்துவிட்டு இது கடவுளின் இச்சையால் ஏற்பட்டது என்று மொழிகிறார். விஞ்ஞானிகள் காரணமே தெரியாது என்று சொன்ன இடத்தில் கடவுள் என்பவரையும் அவரது விருப்பத்தையும் பகர்ந்தவுடன் விடை கிடைத்துவிடுகிறது.

 

அதெல்லாம் சரிதான், ஐயா? 7000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வேத கால இந்துவுக்கு எப்படி இப்படி ஒரு அபூர்வ, அதிசய, அற்புத சிந்தனை பிறந்தது? அப்படியானால் அவர்கள் நாகரீகத்தின் சிகரத்தில் அல்லவா வாழ்ந்திருக்க வேண்டும்? மார்கஸீய வா(ந்)திகளும் வெள்ளைத் தோல் :அறிஞர்களும்” செப்பியது தவறு அன்றோ! கைபர் கணவாய் வழியாக மாடு மேய்த்து வந்த நாகரீகமற்ற நாடோடிகள் ஆரியர்கள் என்று கற்பனையை எழுதிய கயவர்களைக் கண்டு நாம் இன்று கைகொட்டிச் சிரிக்கலாமே!

 

இதோ அற்புதமான நாசதீய சூக்தம்:–

 

1.அப்போது எதுவுமே இல்லை; இல்லாமலும் இல்லை; ஏதுனும் இருந்ததுமில்லை; இல்லாமலும் இல்லை. அப்போது விண்வெளியோ ஆகாயமோ இல்லை; அதற்குப் பின்னரும் எதுவுமே இல்லை. என்ன நேர்ந்தது? எங்கே? யார் இதைக் கவனித்தார்? ஆழம் தெரியாத அளவுக்கு அப்போது தண்ணீர் இருந்ததா?

 

2.சாவு என்பதே அப்போது கிடையாது; மரணமில்லப் பெருவாழ்வு என்பதும் இல்லை. பகல் இரவு என்பதே இல்லை. ஆனால் ஒன்றுமட்டும் உயிர்மூச்சுடன் இருந்தது; காற்றே இல்லாவிடினும் அது தனது சக்தியால் சுவாசித்துக் கொண்டிருந்தது. அதைத்தவிர எதுவுமே இல்லை.

3.ஆரம்பத்தில் இருளை இருட்டு வளைத்துப் பிடித்துக் கொண்டிருந்தது. எதையும் பிரித்துக் காட்டுவதற்கு எதுவுமே இல்லை. எங்கும் தண்ணீரோ! எல்லா இடமும் வெற்றிடம். அப்போது தவ சக்தியால், தவ (Heat) வெப்பத்தால் ஒன்று மட்டும் எழுந்தது (மாபெரும் வெடிப்பு BIG BANG இதுதான்)

 

4.துவக்கத்தில் அதற்கு ஆசை எழுந்தது. அதுதான் மனதில் விதைக்கப்பட்ட முதல் விதை; ஒன்றுமே இல்லாததில் ஒன்று இருந்ததை ஞானத்தை நாடும் தெய்வீக கவிஞர்கள் கண்டார்கள்.

 

5.அந்தக் கயிறு– இணைப்பு- எங்கும் சென்ற து ஆனால் கீழ், மேல் என்று ஏதாவது அப்போது உண்டா? விதைகள் தூவப்பட்டன. எங்கும் சக்தி. உயிர்த்துடிப்பு மேலும் கீழும்.

 

யாருக்குத் தெரியும்? யார் இதைச் சொல்ல முடியும்? அது எப்போது தோன்றியது? இந்த படைப்பு என்பது எப்போது ஏற்பட்டது ?படைப்புக்குப் பின்னரே (நாம் இன்று வணங்கும்) கடவுளர் வந்தனர். அப்படி இருக்கையில் இது எப்போது தோன்றியது என்பதை எவர் அறிவார்?

 

  1. எப்போது இந்தப் படைப்பு ஏற்பட்டது? அதுவே ஏற்பட்டதா? இல்லையா? யார் இதை மேலிருந்து கவனித்தாரோ அந்த உயர்ந்த சுவர்கத்துக்கே அது தெரியும்; தெரியாமலும் இருக்கலாம்.

 

இதை இந்துக்கள் கடவுள் உலகைப் படைத்தார் என்ற கருத்தில் எடுத்துக் கொள்ளுவர். நாஸ்தீகவாதிகள் இங்கு சந்தேக த்வனி இருப்பதாவும் எடுத்துக் கொள்ளுவர். இவ்விருவர் கோணத்தில் பார்த்தாலும் இப்படி ஒரு ரிஷி முனிவருக்கு ஒரு சிந்தனை 6000, 7000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதும், அதை வாய்மொழியாக 7000 ஆண்டுகளாக இந்துக்கள் பாடிப் பாதுகாத்து வைத்திருப்பதும் உலக மஹா அதிசயம். ஏனெனில் வேதங்க ளை எழுதக்கூடாது. வாய்மொழியாக மட்டுமே மூன்று ஜாதியினர் கற்காலாம். சங்கத் தமிழ் நூல்கள் வேதங்களை எழுதாக் கிளவி, எழுதா மறை, எழுதாக் கற்பு என்று போற்றுகின்றன.

 

மாபெரும் எடிப்பு என்பதை இறைவனின் தவ வலிமையில் பிறந்த இச்சை- காமம்- விருப்பம் -ஆசை என்று அற்புதமாக வருணிக்கிறார் வேத காலப் புலவர். கவிஞருக்கே உரித்தான பாணியில் சந்தேகக் கேள்விகளை எழுப்பி—அதாவது தடை எழுப்பி விடை காண்கிறார்.

 

நாகரீகத்தின் உச்சானிக் கொம்பில் இருந்தால்தான் இப்படி ஒரு சிந்தனை பிற க்கும் அல்லது பாபிலோனியாவில் உள்ளது போல ஒரு லட்சம் கல்வெட்டுகளிலும் உப்பு, புளி, மிளகாய், எண்ணை வாங்கிய பழங்கால கணக்குகளை  எழுதி இருப்பார்கள். அல்லது ஜில்காமேஷ் “காவியம்” போல ஏதாவது பிதற்றி இருப்பர்!

 

சில வெளிநாட்டு அரை வேக்காடுகள் – ‘கடவுளரே படைப்புக்குப் பின்னர் தோன்றியதாக’ வரும் வரியை எடுத்துக் கொண்டு – படைப்புக்குக் கடவுள் காரணம் அல்ல – என்று பகர்ந்து தன் அறியாமையை வெளிப்படுத்துவர். ஏனெனில் இதே துதியில் “அந்த ஒன்று” உயிர்த்துடிப்புடன் இருந்தது; அது தவத்தினால் ( தவம்= வெப்பம்), இச்சையினால் இதைத் தோற்றுவித்தது — என்பது தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

 

கவிகளுக்கே உரித்தான பாணியில் எழுதும் போது இப்படிக் கேள்விகளை எழுப்பி – உளதோ இலதோ — என்று புகல்வர். மாணிக்க வாசகரின் திருவாசகத்தைப் படித்தவர்களுக்கு இது இன்னும் நன்றாக விளங்கும்.

 

உருவம், அருவம் அருஉருவம் எல்லாம் உடையவன் அவன்!

 

TAGS: -மாபெரும் வெடிப்பு, நாசதீய சூக்தம், வேதத்தில் விஞ்ஞானம்

–சுபம்–