
WRITTEN BY LONDON SWAMINATHAN
swami_48@yahoo.com
Date: 2 September 2018
Time uploaded in London – 7-08 am (British Summer Time)
Post No. 5386
இந்துக்கள் ஏராளமான வழிகளில் எதிர்காலத்தை அறிவர். காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் (1894-1994), ரிக் வேத பண்டிதர் கூத்தனூர் சிங்கார சுப்ரமண்ய சா ஸ்திரிகளை அழைத்து தன் கையில் அக்ஷதையைப் போடச் சொல்லி, அதை எண்ணி, தானெவ்வளவு காலம் உயிருடன் இருப்பேன் என்று கண்டு பிடித்ததை முன்னர் எழுதியுள்ளேன்.
நாடி ஜோதிடம் உண்மை என்றும் இதை நாஸா (NASA, USA) விஞ்ஞானிகள் ஆராய வேண்டும் என்றும் எழுதினேன். நூற்றுக்கு 90 சதவிகித நாடி ஜோதிடர்கள் பித்தலாட்டக் காரர்கள் என்ற போதிலும், கையின் அமைப்பைப் பார்த்தே ஒருவர் பிறந்த வருடம், இடம் முதலியவற்றைக் கண்டுபிடிக்கும் விஷயம் நாடி ஜோதிடத்தில் இருப்பதை எழுதினேன்.
பெரிய சைவ ஆசார்யர்களும் கூட புத்தகத்தில் நூலை நுழைத்து (ROPE OR THREAD ASTROLOGY) அந்தப் பக்கத்தில் வரும் செய்தியைக் கொண்டு, குழந்தை பிறக்கும் என்று சொன்ன செய்தியை ஒரு கட்டுரையில் தந்தேன்.
ஒற்றைத்த் தும்மல் ;போட்டால் ஆகாது; இரட்டைத் தும்மல் கேட்டால் காரியம் சித்திக்கும் என்பதை அறிவோம்.
மீனாட்சி கோவில் போன்ற இடங்களி வரையப்பட்ட தாமரை போன்ற சிற்பத்தில் கைவைத்து காரியம் கைகூடுமா என்று கண்டு பிடிப்பது பற்றியும் எழுதினேன்.
கிளி ஜோதிடம், பஞ்சபக்ஷி சாத்திரம், வராஹமிஹிரரின் கருங்குருவி ஜோதிடம், பல்லி சொல்லுக்குப் பலன், ஸீதாராம சக்ரம், எண் ஜோதிடம், கை ரேகை ஜோதிடம், ஜாதக ஜோதிடம், முகத்தைப் பார்த்து சொல்லும் (FACE READING) ஜோதிடம், குற வஞ்சி குறி சொல்லுதல், சாமி ஆடுவோர் குறி சொல்லுதல்– வெற்றிலையில் மாயக் கறுப்பு மை தடவி பார்த்தல்— இப்படி எண்ணற்ற வகைகளைத் தந்தேன்.
நேற்று மூச்சுக் காற்று ஓடும் திசையை வைத்து நீங்களே ஆரூடம் சொல்லலாம் என்று எழுதினேன்
இப்போது இன்னும் ஒரு அதிசயச் செய்தியக் காண்போம்

கீழ்கண்ட தகவல் பிரபஞ்ச உற்பத்தி என்னும் 1900ம் ஆண்டு நூலில் உளது. விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்த பார்ப்பது அவஸியம்.
முனிசாமி முதலியார் 1900ல் வெளியிட்ட பிரபஞ்ச உற்பத்தி நூலில்
‘சாயா தெரிசனக் குறிப்பு’
“ஆகாயத்தில் மேக மறைவுகளில்லாமல் பரிசுத்தமாய் வெய்யில் காணும்போது, பூமியில் மேடு பள்ளம் இல்லாத இடத்தில் நின்று கொண்டு, தன்னுடைடைய நிழல் ஐந்து அடி முதல் பத்து அடி நீளத்திற்கு உட்பட்ட தருணத்தில், த்னது நிழலின் முகமாக பார்த்தபடி நின்று, , அந்த நிழலின் கை, கால், தலை, கழுத்து இவ்வுறுப்புகளில் ஒன்றை கண் சிமிட்டாமல், கால் அல்லது அரை நாழிகை மட்டும் பார்த்து (ஒரு நாழிகை 24 நிமிடம்), அப்படியே ஆகாயத்தை நோக்கிப் பார்க்கவும்.
ஆகாயத்தில் அவன் உருவம் தோன்றும். அவ்வுருவமானது பொன் நிறமாக இருந்தால் அவனுக்கு செல்வம் வரும். வெண்மையாக இருந்தால் பிராண பயமில்லை; ஆயுள் வளரும். செம்மை நிறமாகில் மனக்குறை, சஞ்சலம், அபாண்டம் சம்பவிக்கும். கருமையாகில் தேக நலன் கெடும். அன்றியும் அவ்வுருவில் கை அல்லது காலாவது தோன்றாமல் இருந்தால் ஆறு மாதத்தில் மரணம் உண்டாம். இதுவுமன்றி தலையே தோன்றாமல் கவந்தமாய் தோன்றினால் மூன்று மாதத்தில் மரணம்.
இம்மதிரியாய் சந்திரனிலும் பார்ப்பதுண்டு.
இதற்கு ‘சாயா புருஷ தரிசனம்’ என்று சொல்லுவார்கள்.
இச்சாயா தெரிசனத்தை இடைவிடாமல் 12 வருஷம் பார்த்துக் கொண்டு வந்தால் தன் முன் நிற்கும் நிழல் தன்னுடன் பேசும். அப்படிப் பேசும் பருவம் நேரிடுங்கால், அதன் முகாந்திரமாய் அட்ட மா சித்தும் (அஷ்ட மஹா சித்தி) பெறலாகும். பெருவதன்றிப் பின்னும் சில நாட்களில் தன்னிழல் உருவமாகித் தன்னுடனே திரியும். படுத்தால் தானும் படுக்கும் எழுந்தால் தானும் எழும்பும்; அன்றியும் இவனுக்கு நேரிடும் நன்மை தீமைகளை முன்னதாக தெரிவிக்கும். இன்னும் அநேக அற்புதங்களை விளைவிக்கும் என்று பெரியோர் சொல்லுகிறார்கள்”.
XXX

இவற்றையெல்லாம் அறிவியல் ரீதியில் ஆராய பணம் வேண்டும். மேலை நாட்டு மருத்துவக் கம்பெனிகள் புதிய மருந்துகளைச் சோதிக்க பெரிய ஆராய்ச்சி அமைப்புகள் வைத்துள்ளன. தனிப்பட்ட முறையில் செய்யும் ஆராய்ச்சிகளையும் விலைக்கு வாங்கி தாங்களும் அதை மெய்யெனக் கண்டு பிடித்து, மருந்து மாத்திரைகளைத் தயாரித்து கோடி கோடியாச் சம்பாதிக்கின்றனர். நம்மிடம் பணம் இருந்தால் நாமும் முறையான ஆராய்ச்சிகளைச் செய்து முடிவுகளை வெளியிடலாம. பல ஊர்களில் தல மரங்கள் (ஸ்தல வ்ருக்ஷங்கள்) இத்தனை ஆயிரம் ஆண்டுப் பழமை என்றெலாமெழுதி வைக்கின்றனர். தற்காலக் கருவிகளைக் கொண்டு இவற்றின் வயதை எளிதில் காணாலாம். புத்தரின் பல் (TOOTH) என்று கண்டி முதலான இடங்களில் வைத்துள்ளனர் . அதை அறிவியல் முறையில் ஆராய்ந்து வயதைக் கண்டு பிடிக்கலாம். புத்தர் வாழ்ந்ததாக கூறப்படும் ஆண்டுகளில் 600 ஆண்டுகள் வரை வேறுபாடுள்ளது. ஒரு தரப்பினர் சொல்லுவது போல அவர் கி.மு 1400 வாக்கில் வாழ்ந்தார் என்று நிரூபிக்கப்பட்டால் இந்திய வரலாறே தலைக் கீழாக மாறும். ஆராய்ச்சி செய்ய மனமும் பணமும் தேவை!
–சுபம்–