16.சம்ஸ்கிருதச் செல்வம்
ச.நாகராஜன்
சம்ஸ்கிருத இலக்கியத்தில் தனக்கென அழியாத இடத்தைப் பெற்ற மாபெரும் கவிஞரான பர்த்ருஹரியின் நீதி சதகத்திலிருந்து ஒரு பாடலை முன்பு பார்த்தோம்.(அத்தியாயம் 9). இன்னொரு பாடலை இப்போது பார்க்கலாம்.
ஒரு தீரனான மனிதன் கார்ய சித்தியைப் பெறுவது பற்றி அழகுற நீதி சதகத்தில் 73ஆம் பாடலில் கூறுகிறார் அவர். பாடல் இதோ:
க்வசித் ப்ருத்வீசய்ய: க்வசிதபி பர்யங்க ஸயக:
க்வசித் சாகாஹார: க்வசிதபிச ஸால்யோ தன ருசி: I
க்வசித் கந்தாதாரீ க்வசிதபிச திவ்யாம்பரதர:
மநஸ்வீ கார்யார்த்தி ந கணயதி துக்கம் ந ச சுகம் II
கார்யார்த்தி : கார்யசித்தி பெற விரும்பும் (ஒரு காரியத்தில் வெற்றி பெற விரும்பும்)
மநஸ்வீ : தீரனான ஒரு மனிதன்
துக்கம் : துக்கத்தையோ
சுகம் : சுகத்தையோ
ந கணயதி : பாராட்ட மாட்டான்
க்வசித் ப்ருத்வீசய்ய: : சில சந்தர்ப்பங்களில் வெறும் பூமியில் படுப்பான்
க்வசிதபி பர்யங்க ஸயக: : வேறு சந்தர்ப்பத்தில் உயர்ந்த கட்டிலிலும் படுப்பான்
க்வசித் சாகாஹார: : ஒரு சமயம் வெறும் காய் கிழங்குகளையே புசிப்பான்
க்வசித் ஸால்யோ தன ருசி: : இன்னொரு சமயம் உயர்ந்த சம்பா அரிசி சாதத்தைப் புசிப்பதில் ருசி கொள்வான்
க்வசித் கந்தாதாரீ : ஒரு சமயம் கந்தை ஆடையை அணிவான்
க்வசிதபிச திவ்யாம்பரதர: : இன்னொரு சமயமோ திவ்யமான ஆடையை அணிவான்
ஆக வெற்றியை விரும்பும் ஒரு மனிதன் சுக துக்கங்களைப் பொருட்படுத்தமாட்டான். இப்படி வெற்றி பெற இலக்கணம் வகுக்கிறார் பர்த்ருஹரி.
இந்தப் பாடலை குமர குருபரர் எழுதிய பாடலுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். நீதி நெறி விளக்கத்தில் 53ஆவது பாடலாக இது மலர்கிறது.
மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார் கண் துஞ்சார்,
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார், அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்
இதன் பொருள்: ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்று முனைப்புடன் இறங்கியவர்கள் தனது உடலில் உண்டாகும் நோவைப் பொருட்படுத்தமாட்டார் பசியைப் பார்க்க மாட்டார், தூங்க மாட்டார், யார் தீங்கு செய்தாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார்,காலத்தின் அருமையைப் பற்றியும் கவலைப்படமாட்டார். அடுத்தவர் கூறும் அவமதிப்பான சொற்களைக் கேட்கமாட்டார் தங்கள் காரியத்திலேயே கண்ணாயிருந்து அதில் வெற்றி பெறுவதிலேயே கவனமாக இருப்பார்.
எடுத்த காரியத்திற்குத் தடைகள் செய்வோர் ஏராளம். அதை விட்டு விடுமாறு கூறுவதோடு அவமதிப்பைச் செய்வோரும் ஏராளம்.ஆனால் அதையெல்லாம் மீறி தனது உறுதியை விடாமல் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுபவனே உண்மையில் தீரன் ஆவான்.
புராணங்களில் புகழுடன் திகழும் துருவன், நசிகேதன், பகீரதன் என ஏராளமானோர் நமக்கு உத்வேகம் ஊட்டுகின்றனர்.
நல்ல காரியத்தை லட்சியமாகக் கொள்வோம்; அதை முடித்து வெற்றியும் பெறுவோம்!
நாகராஜன் எழுதிய 60 கட்டுரைகளும் லண்டன் சுவாமிநாதன் 600 (60+600=660) கட்டுரைகளும் இந்த பிளாக்கில் கிடைக்கும். படித்து மகிழ்க.



You must be logged in to post a comment.