சிறந்த மூலிகை எது? சாணக்கியன் தகவல் (Post No.4648)

Written by London Swaminathan 

 

Date: 22 JANUARY 2018

 

Time uploaded in London 8-17 am

 

 

 

Post No. 4648

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

கௌடில்யர் என்றும் சாணக்கியன் என்றும் பெயர் கொண்ட மேதாவி 2300 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வாழ்ந்தார். ஏழையாகவும், அவலட்சணமாகவும் இருந்த அந்த ப்ராஹ்மணன், மகத சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தார். பல நீதி நூல்களை யாத்தார். உலகின் முதல் பொருளாதார நூலான அர்த்தசாஸ்திரத்தையும் எழுதினார். அவர் டாக்டர் அல்ல. ஆயினும் போகிற போக்கில் பல மருத்துவக் குறிப்புகளையும் பாடி வைத்துள்ளார். மூலிகையில் சிறந்தது எது என்றும்,  நீரின் மஹிமை, நெய்யின் சக்தி என்ன   என்றும் சொல்லிவைத்தார்.

 

இதோ மூலிகையில் சிறந்தது எது என்ற ஸ்லோகம்:-

 

ஸர்வௌஷதீனாம் அம்ருதா ப்ரதானா

ஸர்வேஷு ஸௌக்யேஷ்தசனம் ப்ரதானம்

ஸர்வேந்த்ரியானாணாம் நயனம் ப்ரதானம்

ஸர்வேஷு காத்ரேஷு சிரஹ ப்ரதானம்

சாணக்ய நீதி, அத்யாயம் 9, ஸ்லோகம் 4

 

பொருள்:

எல்லா மூலிகைகளிலும் சிறந்தது அம்ருதா

மகிழ்ச்சியான விஷயங்களில் சிறந்தது   உணவு உண்ணல்;

ஐம்புலன்களில் சிறந்தது கண்;

உடல் உறுப்புகளில் சிறந்தது தலை.

 

எண்சாண் உடம்புக்கு சிரசே (தலை) பிரதானம் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் இவர் சொல்லக்கூடிய அம்ருதாவை அம்ருதவல்லி என்ற மூலிகையாக வியாக்கியானக்காரர்கள் கருதுகின்றனர்

 

எது அமிர்தவல்லி என்பதில் கருத்து வேறுபாடு உண்டு. தமிழில் சீந்தில் கொடி என்றும் இந்தியில் ‘குடூசி’

என்றும் சொல்லுகின்றனர். இதனுடைய தாவரவியல் பெயர் கொக்குலஸ் கார்டிபோலியஸ்  (Cocculus Cordifolius OR Tinospora cordifolia) என்று சாணக்கிய நீதியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த அறிஞர் சத்ய வ்ரத சாஸ்திரி சொல்கிறார். கார்டிபோலியஸ் என்றால் இருதய வடிவிலான இலை என்று பொருள்; இந்த மாதிரி இருதய வடிவு இலைகள் அரச மரத்துக்குக் கூட உண்டு.

 

 

சீந்தில் கொடிக்கு பல    மருத்துவ குணங்கள் உண்டு; இது சர்க்கரை வியாதி, புற்று நோய் ஆகியவற்றுகும் வேறு பல நோய்களுக்கும் மருந்து என்று ஆயுர்வேத நூல்கள் பகரும்.

 

 

சிலர் அமிர்தவல்லி, ஓம வல்லி என்றும் சொல்லுவர். எப்படியாகிலும் குறிப்பிடப்படும் எல்லா மூலிகைகளுமே நன்மை பயக்கக்கூடியவையே.

XXX

நெய்யின் மஹிமை

 

சாணக்கியன் நெய், மாமிசம், பால் பற் றிப் பல சுவையான விஷயங்களைக் குறிப்பிடுகிறான். இதோ ஸ்லோகங்கள்:

 

அன்னாத் தசகுணம் பிஷ்டம் பிஷ்டாத் தசகுணம் பயஹ

பயசோ அஷ்ட குணம் மாம்ஸம் மாம்ஸாத் தசகுணம் க்ருதம்

சாணக்ய நீதி, அத்யாயம் 10, ஸ்லோகம் 19

 

 

அரிசியைவிட பத்து மடங்கு சக்தி வாய்ந்தது மாவு; மாவை விட பத்து மடங்கு சக்தி வாய்ந்தது பால்;  பாலை விட எட்டு மடங்கு சக்தி வாய்ந்தது மாமிஸம்; மாமிஸத்தை விட பத்து மடங்கு சக்தி வாய்ந்தது நெய்.

 

XXXX

 

சாகேன ரோகா வர்தந்தே பயஸா வர்ததே தனுஹு

க்ருதேன வர்ததே வீர்யம் மாம்ஸான் மாம்ஸம் ப்ரவர்ததே

சாணக்ய நீதி, அத்யாயம் 10, ஸ்லோகம் 20

 

 

பொருள்

காய்கறிகள் மூலம் வியாதிகள் வருகின்றன; பால் மூலம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது; நெய் மூலமாக ஆண்களின் விந்து பெருகுகிறது; மாமிஸம் மூலம் உடலில் மாமிஸம் கூடுகிறது.

 

இதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்; கழுவாத காய்கறிகளோ, கெட்டுப்போன காய்கறிகளோ உடலுக்குக் கேடு விளைவிக்கும். மேலும் மேலை நாட்டு வைத்திய முறையில் இல்லாத பத்தியம் என்பது ஆயுர்வேதம், சித்த மருத்துவ சிகிச்சைகளில் உண்டு; சிற்சில சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளும் போது சிற்சில காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும் என்று நாட்டு வைத்தியர்கள் சொல்லுவர். அந்த வகைகளிலும் காய்கறிகள் நோயை உண்டாக்கும் என்ற வாசகம் பொருந்தும்

 

மாமிஸத்தால் உடல் மாமிஸம் அதிகரிக்கும் எனபது வள்ளுவனும் சொன்ன அருமையான வாக்கு ஆகும்

 

 

தன்னூன் பெருக்கற்குத்தான் பிறிது ஊனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள் (குறள் 251) என்பார்

 

“தன் உடம்பைப் பெருக்குவதற்கு பிற உயிரின் ஊனைக் கொன்று தின்பவனுக்கு வாழ்க்கையில் அருள் எப்படி இருக்க முடியும்? “(குறள் 251)

வள்ளுவனின் கேள்வி நல்ல கேள்வி.

 

XXX

 

நீரின் மஹிமை

 

இன்னும்  ஒரு பாட்டில் நீரின் மஹிமை பற்றி செப்புகிறார்:

அஜீர்ணே பேஷஜம் வாரி ஜீர்ணே வாரி பலப்ரதம்

போஜனே வாரி சம்ருதம் வாரி போஜனாந்தே விஷப்ரதம்

—சாணக்ய நீதி, அத்யாயம் 8, ஸ்லோகம் 7

 

 

பொருள்

அஜீர்ணக் கோளாறு உள்ளவர்கள் தண்ணீர் சாப்பிடுவது மருந்து போலாகும்; ஜீரண சக்தியோடு உடலுக்குப் பலத்தையும் தரும்; சாப்பாட்டுடன் நீர் அருந்துவது அமிர்தத்துக்கு ஒப்பாகும்; சாப்பிட்டு முடித்த பின்னர் குடிக்கும் நீர் விஷத்துக்குச் சமம்.

 

இவ்வாறு சாணக்கியன் சொல்லும் பல மருத்துவக் குறிப்புகள் நீதி வாசகங்களுக்கு இடையே உள்ளன.

 

–SUBAHM–