
Written by S Nagarajan
Date: 29 January 2016
Post No. 2488
Time uploaded in London :– 14-25
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact
பரமஹம்ஸரைத் தரிசித்த பங்கிம் சந்திரரிடம் அவர் கூறிய பொற்கொல்லர் கதை!
ஹிந்து தேசீயம்
ச.நாகராஜன்

ஹிந்து தேசீய கீதம்
ஹிந்து தேசீயத்தைத் தட்டி எழுப்பிய மாபெரும் மஹரிஷி பங்கிம் சந்திர சட்டோபாத்யாய. (ஜனனம் 26-6-1838 மறைவு 8-4-1894) வந்தேமாதரம் கீதத்தைத் தந்து தூங்கிக் கிடந்த 30 கோடி மக்களைத் தட்டி எழுப்பினார் அவர்.
ராமகிருஷ்ண பரமஹம்ஸரை பெரிதும் மதித்து வணங்கியவர் பங்கிம் சந்திரர்.(பரமஹம்ஸ அவதார தோற்றம் 17/2/1836 அவதார மறைவு 1/1/1886)
கேள்விகளைக் கேட்ட பங்கிம் சந்திரர்
அவரது சந்திப்புகளில் சுவையான சந்திப்பு ஒன்று இது.
ஒரு நாள் பரமஹம்ஸரை அவரது அணுக்க பக்தரான ஆதார் சந்த்ர சென்னின் வீட்டில் அவர் தரிசித்தார். அவரிடம் சிக்கலான பல கேள்விகளை சந்தேகக் கண்ணோட்டத்துடன் கேட்க ஆரம்பித்தார். அனைத்துக் கேள்விகளுக்கும் பரமஹம்ஸர் பதிலளித்தார்.
எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளித்த பின் பரமஹம்ஸர் பரிகாசமாக ‘பங்கிம்’ என்ற வார்த்தையை வைத்து தமாஷ் செய்ய ஆரம்பித்தார்.
ஏன் பங்கிம் ஆனீர்கள்?
‘பங்கிம்’ என்றால் சந்திரனின் பிரகாசமான பக்கம் என்று பொருள். வங்காள மொழியில் இதற்கு கூன் போன்று வளைந்த தன்மையைக் குறிக்கும் இன்னொரு பொருளும் உண்டு.
பரமஹம்ஸர் பங்கிமை நோக்கி, “ நீங்கள் பெயரிலும் பங்கிம். செயல்களிலும் பங்கிம்” என்றார். (கோணலானவர்)
இந்தக் கேலியை ஏற்ற பங்கிம், பரமஹம்ஸரின் பதில்கள் அவரது இதயத்தைத் தொட்டு விட்ட காரணத்தினால், “ நீங்கள் அவசியம் ஒருநாள் எங்கள் கந்தல்பாரா வீட்டிற்கு வர வேண்டும். அங்கே இறைவழிபாட்டிற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படும். ஹரி நாமத்தை நாம் எல்லோரும் உச்சரிக்கலாம்” என்று சொன்னார்.
உடனே பரமஹம்ஸர்,” ஹரியின் நாமத்தை எப்படி நீங்கள் உச்சரிப்பீர்கள்? பொற்கொல்லர் உச்சரித்தது போலவா?” என்று கேட்டார்.
அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.
பொற்கொல்ல கதையை அவர்கள் பரமஹம்ஸர் வாயிலாக முன்னமேயேர் கேட்டிருந்தனர்.
பங்கிம் சந்திரருக்கும் பொற்கொல்லர் கதையை பரமஹம்ஸர் சொல்ல ஆரம்பித்தார்.

பரமஹம்ஸர் கூறிய பொற்கொல்லர் கதை
பொற்கொல்லர் ஒருவரின் கடைக்கு சில நண்பர்களுடன் ஒருவர் வந்தார். அவருக்கு ஒரு நகையை விற்க வேண்டியிருந்தது.
பொற்கொல்லர் உடம்பு முழுவதும் தெய்வீகமான சந்தனக் கீற்றுகள்.பரம பக்தராக அவர் தோன்றினார். தலையில் குடுமி. கழுத்திலோ ருத்திராட்சம்!
வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த அவர் ஹரி நாமத்தை பரம பக்தியுடன் உச்சரித்துக் கொண்டிருந்தார்.
வீட்டின் உள்ளே அவரது உதவியாளர்கள் நான்கு பேரும் கூட இதே போலத் தோற்றமளித்தனர். அவர்கள் வெவ்வேறு நகை வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர்.
அவர்களின் அற்புதமான இந்த கோலத்தைப் பார்த்து வந்தவரும் அவர் நண்பர்களும், “இந்தப் பொற்கொல்லர் மிகவும் நல்லவர். ஒருவரையும் ஏமாற்ற மாட்டார்” என்று எண்ணினர்.
தான் கொண்டு வந்த நகையைப் பொற்கொல்லரிடம் தந்த அவர் அதன் சரியான விலையைச் சொல்லுமாறு வேண்டினார்.
வந்தவர்களை முதலில் அன்புடன் உட்கார வைத்தார் பொற்கொல்லர்.தன் சீடன் ஒருவனிடம் அவர்கள் அனைவருக்கும் புகைக்க ஹீக்கா (பைப்) ரெடி செய்யுமாறு உத்தரவிட்டார்.
பின்னர் உரைகல்லில் அந்த நகையை உரைத்துப் பார்த்து தங்கத்தின் விலையைக் கூறினார். பின்னர் அதை உருக்குவதற்காக (தங்கம் எவ்வளவு தேறும் என்பதைப் பார்க்க) அவர்கள் அனுமதியைப் பெற்ற பின் வீட்டினுள்ளே அனுப்பினார்.
அதை வாங்கிக் கொண்ட சீடன் உடனே அதை உருக்க ஆரம்பித்தான். திடீரென்று பக்தி மேலிட “கேசவா, கேசவா” என்று உரக்கக் கூச்சலிட்டான் அவன்.
அந்த திவ்ய நாமத்தைக் கேட்ட பொற்கொல்லரும் பக்தி பரவசராகி, “கோபாலா, கோபாலா” என்று உரக்கச் சொன்னார்.
உடனே உள்ளேயிருந்த இன்னொருவன், “ஹரி, ஹரி, ஹரி” என்று கத்திச் சொன்னான்.
அப்போது புகைக்க பைப்பைத் தயாராகக் கொண்டு வந்தவன் “ஹர ஹர ஹர” என்று சொல்லியவாறே அவர்களிடம் புகைக்குழாய்களைத் தந்தான்.
இதைக் கேட்டவுடன் முதலில் உருக்கிக் கொண்டிருந்தவன் அந்த நகையை நீர் இருந்த பானையில் முக்கி தங்கள் பங்கிற்குத் தேவையான தங்கத்தை ஒதுக்கிக் கொண்டான்.
வந்தவர்கள் அவர்களின் பக்தியை மெச்சிக் கொண்டாடினர். உண்மையில் நடந்தது என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது.
நடந்தது இது தான்.
கேசவா என்று முதல்வன் இறைவன் நாமத்தை உச்சரிக்கவில்லை.
வங்காள மொழியில் அவன், “கே – சவா?” என்று கேட்டான். அதற்கான பொருள், “அவர்கள் யார்?”
அதாவது வந்திருந்தவர்கள் புத்திசாலிகளா அல்லது ஒன்றும் தெரியாத முட்டாள்களா என்பதே அவனது கேள்வி.
இதற்கு பொற்கொல்லர் கோ-பாலா, கோ-பாலா என்று பதில் சொன்னார். கோ – பசு, பாலா – பராமரிக்கும் கூட்டம்; அதாவது பசுக்களை மேய்க்கும் முட்டாள்கள் போல என்று அவர் பதில் கூறினார்.
உடனே ஹரி என்றவன், அப்படியானால் கொஞ்சம் திருடிக் கொள்ளலாமா (அபகரிக்கலாமா?) என்றான்.
உடனே அதற்கு ஹர என்று பதில் வந்தது – (அபகரி) திருடிக் கொள் என்று.
பரம பக்தர்களிடம் அல்லவா வந்திருக்கிறோம் என்று எண்ணி எண்ணி மகிழ்ந்த வந்தவர்கள், உருக்கப்பட்ட தங்கத்தின் எடையைப் போட்டு பொற்கொல்லன் தந்த காசை வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியுடன் திரும்பினர்.
தங்கத்தில் சிறிது திருடப்பட்டது அவர்களுக்குத் தெரியாமல் போனது.
இந்தக் கதையைப் பரமஹம்ஸர் சொல்ல பங்கிம் சந்திரரும் விழுந்து விழுந்து சிரித்தார்.
“ஏன் நீங்கள் பங்கிம் ஆனீர்கள்?” என்ற பரமஹம்ஸரின் கேள்விக்கு பரிகாசமாக அவரும். “இந்த இங்கிலீஷ்காரன் தன் ஷூ காலினால் என் முதுகைக் குத்தியதால் நான் பங்கிம் ஆனேன்” என்றார்.
அனைவரும் கலகலப்புடன் நகைத்தனர்.

பங்கிம் சந்திரரின் உண்மையான சொரூபம்
பரமஹம்ஸருக்கும் பரமஹம்ஸரின் பிரம்மாண்டமான பெரிய நிலை பங்கிமுக்கும் நன்கு தெரியும்.
அவர்களிடம் ஆத்மார்த்தமான நட்பு தொடர்ந்து நிலவியது.
பல சுவையான நிகழ்ச்சிகள் அவர்கள் சந்தித்த போதெல்லாம் நிகழ்ந்தன.!
*********
குறிப்பு : ஆங்கிலம் அறிந்தோர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது Swami Saradananda எழுதியுள்ள Sri Ramakrishna The Great Master என்ற நூலைப் படிக்க வேண்டும். அதில் உள்ள நிகழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டே இந்த கட்டுரை உருவாகியுள்ளது. ராமகிருஷ்ண மடத்தில் இந்த நூலைப் பெற முடியும். இது விலை மதிக்க முடியாத பொக்கிஷம் போன்ற ஒரு புத்தகம்.
-Subham-
You must be logged in to post a comment.