
Picture of James Randi
Written by S Nagarajan
Date: 30 January 2016
Post No. 2491
Time uploaded in London :– 11-04 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact
8-1-2016 தேதியிட்ட பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை
அறிவியல் சவால் – மில்லியன் டாலர் பரிசு!
ச.நாகராஜன்
“பழைய கதை எல்லாம் இருக்கட்டும், இதோ விடுகிறேன் சவால், ஆவிகள் உலகத் தொடர்பு, பிறர் மனதை அறிவது போன்ற அதீத உளவியல் ஆற்றல் போன்றவற்றை விஞ்ஞானத்திற்கு இணங்க சோதனைச் சாலை நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிரூபித்து விட்டால் மில்லியன் டாலர் பரிசு தருகிறோம்” என்று அறிவித்துள்ள ஒருவரின் ஆய்வு சுவாரசியமானது; அறிந்து கொள்ளப்பட வேண்டியது!
அவர் பெயர் ஜேம்ஸ் ரண்டி. கனடிய அமெரிக்கரான இவருக்கு இப்போது 87 வயதாகிறது. மரணத்திற்குப் பின் மனித வாழ்க்கை ஒன்று உண்டு என்று சோதனைச்சாலை நிபந்தனைகளுக்கு உட்பட்டு யாரேனும் நிரூபித்தால் அப்படி நிரூபித்தவருக்கு உடனடியாக பத்து லட்சம் டாலர் (சுமார் ஆறு கோடி ரூபாய்) தருகிறேன் என்று அறிவித்தார் இவர்.
இதை ஏற்றுப் பல பேர் முன் வந்தாலும் சோதனைச்சாலை நிபந்தனைகளுக்கு அவர்கள் உட்பட மறுத்து விட்டனர். மீறி சோதனைக்கு வந்தவர்களால் அவரது திருப்திக்கிணங்க ஆவி உலகம் இருப்பதை நிரூபிக்க முடியவில்லை.
பங்கேற்றவர்கள் ரண்டி ஒரு மோசடிப்பேர்வழி என்று கூற ரண்டி நியமித்த விஞ்ஞானிகளோ ஆவி உலகம் என்பதே ஒரு கேலிக் கூத்து என்று முழங்கினர்.
ரண்டி பிரபலமான ஒரு மாஜிக் நிபுணர். ஜேம்ஸ் ரண்டி எஜுகேஷனல் ட்ரஸ்ட் (James Randi Educational Trust) என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் மில்லியன் டாலர் பரிசுத் தொகைக்கான போட்டியை அறிவித்தார்.
சமீபத்தில் அவர் அறக்கட்டளைப் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்று விட்டதால் இந்த போட்டி இனி கிடையாது என அறக்கட்டளை அறிவித்து விட்டப்து. அதாவது 2015 செப்டம்பர் முதல் தேதி முதல் இந்தத் தொகையில் சிறு சிறு பகுதிகள் அறக்கட்டளையின் நோக்கத்தில் செயல் படும் பல்வேறு அறிவு சார்ந்த நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதீத உளவியல் ஆற்றல் நிபுணர்கள் அனைவருமே மோசடிப் பேர்வழிகளா, இல்லை! இதை சோதனை செய்த விஞ்ஞானிகளே வியந்து ஒப்புக் கொண்டுள்ளனர்.
மனதில் ஒருவர் நினைத்த ஒரு குறிப்பிட்ட அந்தரங்க எண்ணத்தை மீடியம் ஒருவர் கூறியதே இதற்குக் காரணம்!
குறிப்பாக விஞ்ஞானிகளைக் கவர்ந்த அதீத உளவியல் ஆற்றல் நிபுணர்கள் இருவர்.
ஒருவர் பாட்ரிசியா புட் (Mrs Patriciia Putt) என்ற பெண்மணி. டி.வி, ஷோக்கள், பத்திரிகை கட்டுரைகள் என பிரபலமான இவர் சோதனையை ஏற்று முன் வந்தார்.
2009ஆம் ஆண்டு மே மாதம் நடந்தது சோதனை. 10 தன்னார்வத் தொண்டர்கள் சோதனை நாளன்று பெரிய கண்ணாடிகள், முகமூடிகள், தொளதொள ஆடை, வெள்ளை சாக்ஸ் அணிந்து சோதனை அறைக்குள் நுழைந்து அறையின் பின்னால் இருந்த சுவரைப் பார்த்து அமர்ந்தனர். பாட்ரிசியா இருபது நிமிடங்களுக்குப் பிறகு அறைக்குள் நுழைந்தார். அவர்களுக்கு 12 அடி தள்ளி அமர்ந்தார். ஒவ்வொருவரும் தன் கையில் கொடுக்கப்ப்ட்ட ஒரு சிறிய குறிப்புரையைப் படித்தனர். அது ஆவி உலகத்தினருக்கு அங்கு அமர்ந்திருப்பவர்களை அறிமுகம் செய்து கொள்ள உதவும் என்று பாட்ரிசியா கூறி இருந்ததால் அந்த ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் பாட்ரிசியா அவர்களைப் பற்றிய தனது கணிப்புகளைக் குறிப்பாக எழுதினார்.
அது முடிந்தவுடன் அந்தப் பத்து பேரும் அறையிலிருந்து வெளியேறினர். உடைகளை மாற்றிக் கொண்டு திரும்பி வந்தனர். அவர்களின் ஒவ்வொருவரைப் பற்றியுமான பிரத்யேக கணிப்புகள் பத்தும் ஒவ்வொருவரிடமும் வழங்கப்பட்டன. அந்த பத்து பேரும் அதில் தன்னைப் பற்றியதான சரியான கணிப்புத் தாளை எடுத்துத் தர வேண்டும்.
பத்து பேரில் ஐவர் சரியான கணிப்புகளைத் தந்து விட்டால் போதும் மில்லியன் டாலர் பரிசு பாட்ரிசியாவுக்கு உண்டு. ஆனால் பத்து பேர்களும் தங்களுக்கு எழுதித் தரப்படாத ஒன்றையே எடுத்துத் தந்தனர். ஆகவே பாட்ரிசியா வெற்றி பெறவில்லை. ஆனால் இது பற்றி அவர் கவலைப்படவில்லை. மம்மி போல ஆடைகளை அணிந்து வந்தவர்களிடம் ஆவிகள் எளிதில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதே அவரது பதில்!

Kim Whitton and Patricia Putt with science writer Simon Sing and others.
இதே போல இந்த சோதனைக்கு வந்த இன்னொரு மீடியம் கிம் விட்டன் (Kim Whitton) என்ற பிரபலமான பெண்மணி.
ஒரு தடுப்புத் திரைக்குப் பின்னால் ஒருவர் அமர கிம் அவரைப் பற்றிய தன் கணிப்பை எழுதினார். ஐந்து பேரைப் பற்றி அவர் சரியாக எழுதினாலே போதும், வெற்றி தான். இந்த சோதனையை வடிவமைத்தவர் புரபஸர் க்ரிஸ் ப்ரெஞ்ச் என்பவர். இவர் ஒரு அதீத உளவியல் பேராசிரியர். சோதனையில் கிம் வெற்றி பெறவில்லை. என்றாலும் அதிலிருந்த ஒருவர் தன் மனதில் இருந்ததை அப்படியே கிம் விளக்கி விட்டதாகவும் அந்த அந்தரங்கமான விஷயம் வேறு யாருக்கும் தெரியாது என்றும் கூறி பரவசப்பட்டார். பத்துக்கு எட்டு என்ற மதிப்பெண்களை அவர் பெற்றாலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படவில்லை. ஏனெனில் தற்செயல் ஒற்றுமையாகக் கூட அப்படி கூற வாய்ப்பு உண்டு என்ற அறிவியல் கோட்பாட்டின் படி அவர் நிராகரிக்கப்பட்டார்.
ஆனால் மீடியம்கள் இருவரும் இது பற்றிச் சற்றும் கவலைப்படவில்லை. சோதனைமுறைகள் தவறானவை மற்றும் கடுமையானவை என்று அவர்கள் கூறினர். இந்தச் சோதனையில் தோல்வி அடைந்ததால் பெண்மணிகளின் இருவரது மதிப்புக் குறைந்ததா? தொழில்வாழ்க்கை பாதிக்கப்பட்டதா? இல்லவே இல்லை. அவரது வாடிக்கையாளர்கள் சோதனையை மதிக்கவே இல்லை. தங்களுக்கு அனுபவபூர்வமாகத் தெரியும் ஆவி உலக வழிகாட்டுதலை யார் பொய் என்று சொன்னாலும் அவர்கள் ஏற்கத் தயாரில்லை.
ஆவி உலகத் தொடர்பாளர்களிடம், “சோதனை செய்கிறோம் வாருங்கள்” என்கின்றனர் விஞ்ஞானிகள். இவர்களில் சிலர் பிரக்ஞை பற்றிய உண்மைகளை மீடியம்களை வைத்துக் கண்டுபிடிப்பதும் இப்போது அதிகமாகி வருகிறது.
ஆகவே அதீத உளவியல் ஆற்றல் உள்ளவர்களுக்குச் சமுதாயத்தில் ஒரு தனி இடம் இன்றும் கூடக் கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
அபல்லோ-8 விண்வெளிக்கலத்தில் சந்திரனைச் சுற்றி வந்த விண்வெளி வீரர் வில்லியம் அலிஸன் ஆண்டர்ஸ் (William Alision Anders) விண்வெளிப் பயணத்தால் பெரும் புகழ் பெற்றார். அவரைச் சுற்றி எப்போதும் கூட்டம். பத்திரிகையாளர்களும் புகைப்பட நிபுணர்களும் அவர் எங்கு போனாலும் பின் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தனர். மனிதர் தளர்ந்து போனார். எப்படியாவது யார் கண்ணிலும் படாமல் தன் மனைவியுடன் ஓய்வு எடுக்க வேண்டும் என்று எண்ணிய அவர் அகாபல்கோ என்ற கடற்கரை ஸ்தலத்திற்குச் சென்றார். சில நாட்கள் கழிந்தன. தனது வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்த அவரை நோக்கி ஒரு நபர் வந்தார்.
தயங்கியவாறே, “உள்ளே வரலாமா? போட்டோ எடுக்கலாமா?” என்று கேட்டார். “ஹூம்” என்ற ஆண்டர்ஸ்,” வரலாம், போட்டோ எடுக்கலாம்” என்றார்.
சந்தோஷத்துடன் உள்ளே வந்த போட்டோகிராபரிடம் முன்னால் இருந்த பெரும் கடலைக் காட்டி, “அழகிய காட்சி. எத்தனை போட்டோ வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
போட்டோகிராபருக்கு முகம் போன போக்கு!
–subham-



You must be logged in to post a comment.