
Written by London Swaminathan
Date: 29 NOVEMBER 2017
Time uploaded in London- 9-38 am
Post No. 4444
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
ஆஸ்திரியாவில் பிறந்த புகழ்பெற்ற வயலின் கலைஞர் பிரெடெரிக் க்ரைஸ்லர் Frederic (Fritz) Kreisler (1875-1962) ஆவார். அவர் வாழ்வில் ஒரு சுவையான சம்பவம் நடந்தது.

அவர் ஒருமுறை ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் (Hamburg) நகரில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்டார். மறு நாள் லண்டனில் வயலின் கச்சேரி. ஆனால் ஹாம்பர்கில் லண்டனுக்கான கப்பல் புறப்பட ஒரு மணி நேரம் இருந்தது. அருகில் இசைக் கருவிகள் கடைகள் இருப்பதை அவர் அறிவார். ஒரு கடைக்குள் போய்ப் பார்ப்போமே என்று நுழைந்தார். அவர் கைகள் இடுக்கில் வயலினை வைத்திருந்தார். அதில் அவருடைய பெயர் கொட்டை எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தது.
இசைக் கருவிகளின் உரிமையாளரிடம் பேச்சுக் கொடுத்து, அதன்
விலை என்ன? இதன் விலை என்ன? என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
அந்தக் கடைக்காரர் கொஞ்சம் நில்லுங்கள்; இதோ வந்து விடுகிறேன் என்று வெளியே சென்றவர், சற்று நேரம் கழித்து இரண்டு போலீஸ்காரர்களுடன் வந்தார்.
ஒரு போலீஸ்காரன், பிரெடெரிக்கின் தோள் மீது கையைப் போட்டு, ‘நடடா, போலீஸ் ஸ்டேஷனுக்கு’ என்றார்.
பிரிட்ஸுக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்காக? என்றார்.
நீ ஒரு பெரியவருடைய வயலினைத் திருடிவிட்டாய். பார், உன் வயலின் மீது புகழ்பெற்ற வயலின் வித்தகர் பிரிட்ஸ் க்ரைஸ்லர் பெயர் பொறித்து இருக்கிறது’ என்றார்.
அடக் கடவுளே! நான்தான் அந்த பிரெடெரிக் க்ரைஸ்லர்’ என்றார்.
“ஏ, மாப்ளே! அந்தக் கதை எல்லாம் என்கிட்ட விடாதே; நடடா, ஸ்டேஷனுக்கு என்றார். ஆனால் இந்த சம்பாஷனை எல்லாம் கடைக்குளதான் நடந்தது. கடையின் மூலையில் ஒரு கிராமபோன் ரிகார்டர் இருந்தது. உங்களிடம் பிரிட்ஸின் இசைத்தட்டு இருக்கிறதா? என்று கடைக்காரரிடம் கேட்டார் பிரிட்ஸ்.
ஓ, இருக்கிறதே என்று சொல்லி, புகழ் பெற்ற, வாசிப்பதற்கே கடினமான ஒரு இசைத்தட்டைக் கொண்டுவதார். அதை கிராமபோன் ரிகார்டரில் போடுங்கள் என்று போடச்சொல்லி எல்லோரையும் கேட்க வைத்தார். அது முடிந்தவுடன், ‘என் வயலினை இப்போது கொடுங்கள்’ என்று கேட்டு வாங்கினார். கண்ணை மூடிக்கொண்டு அந்தப் புகழ்பெற்ற சாகித்யத்தை அப்படியே வாசித்துக் காட்டினார். எல்லோரும் அசந்தே போய்விட்டார்கள்.
பெரிய மன்னிப்பு கேட்டுக்கொண்டு பிரிட்ஸ் க்ரைஸ்லரை மரியாதையுடன் வழியனுப்பினர். என்ன பிரயோஜனம்? லண்டனுக்கான கப்பல் புறப்பட்டு போய்விட்டது!
xxxxx

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்!
“அட நீ ஒரு பெரிய மேதை, அப்பா!”
டாக்டர் ஆக்ஸில் முந்தே (Dr Axel Munthe) என்ற புகழ் பெற்ற மருத்துவரிடம் சஹ மருத்துவர் ஒருவர் உடகார்ந்திருந்தார். டாக்டர் ஆக்ஸல் ஏதோ சொன்னவுடன், அந்த சஹ மருத்துவர், நீண்ட பிரசங்கம் நடத்தி, அவரை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்தார். இறுதியில் அடேங்கொப்பா! நீ பெரிய மேதை டா! என்றார்.
பூ, ச்சீ, மேதையா? என்ன சொன்னாய்?
உனக்குத் தெரியுமா? புகழ்பெற்ற வயலின் கலைஞர் சாரசாதே (Pablo Sarasate) (ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மார்டின் மெல்டின் பாப்லோ சாரசதே) ஒருமுறை பியாரிட்ஸ் குடிலில் உட்கார்ந்து கொண்டிருந்தார். ஒரு பிரபல இசை விமர்சகர் அவரை மேதை என்று புகழ்ந்தார்.
உடனே சாரசதே சொன்னார்:
“என்ன சொன்னீர்கள்; மேதை என்றா? 37 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு நாளும் 14 மணி நேரத்துக்கு வயலின் பயிற்சி செய்திருக்கிறேன். இப்போது என்னை மேதை என்கிறீர்கள்!!!”
(அவர் மனதில் நினத்தது: கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை; உன் கிட்ட இன்றைக்கு மேதை என்று பெயர் வாங்கினால் என்ன? வாங்காவிட்டால் என்ன?)
இசைக் கலைஞர்கள் உயிரைக் கொடுத்து பயிற்சி செய்துகொண்டே இருந்தால்தான் புகழ்பெற முடியும்; அவர்கள் வாசிப்பில் மெருகு ஏறும். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்; இசைக் கருவிகள் வாசிப்புப் பழக்கம்.
xxxxx
பாடப்பாட ராகம், மூட மூட ரோகம்!

“நான் ஒரு நாள் வாசிக்காவிட்டால் நான் கண்டு பிடிப்பேன்; நான் மூன்று நாள் வசிக்காவிட்டால்,ரசிகர்கள் கண்டுபிடிப்பர்!”– பெடெரெவ்ஸ்கி
போலந்து நாட்டில் பிறந்த பியானோ வாத்திய மேதை பெடெரெவ்ஸ்கி (Faderewski) ஒரு அரசியல்வாதி; முன்னள் பிரதமர். அவர் சொல்வார்:
நான் ஒரு நாள் பியானோ பயிற்சி செய்யா விட்டால் நான் தடுமாறும்போது ‘ஓ, நான் நேற்று பிராக்டீஸ் (practice) செய்யவில்லை என்று புரியும்.
நான் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து பயிற்சி செய்யாவிடில், “ஐயா, தடுமாறுகிறார்; தப்புத் தப்பா வாசிக்கிறார். வீட்டில் பயிற்சி செய்து பார்க்கவில்லை போலும்! என்று ரசிகர்கள் சொல்லிவிடுவார்கள்.
பாடப்பாட ராகம், மூட மூட ரோகம் – என்பது தமிழ்ப் பழமொழி; வாசிக்க வாசிக்கத்தான் திறமை அதிகரிக்கும்!
TAGS:, பாடப்பாட ராகம், சித்திரமும் கைப்பழக்கம்
–SUBHAM–