by london swaminathan
Post No738 Dated 9th December 2013
ஒரு பிராமணன் ஒரு ராஜாவின் பெண்ணுக்கு கல்வி கற்பித்துவந்தான். காலப்போக்கில் அவள் மீது காதல் கொண்டான். எப்படியாவது அவளை அடைய வேண்டும் என்று திட்டம் போட்டான். அது அந்த அப்பாவிப் பெண்ணுக்குத் தெரியாது. அவள் பூப்படைந்த காலத்தில் அவள் எதிர்காலம் பற்றி அந்தப் பிராமணன் இடத்தில், ராஜா ஜோதிடம் கேட்டான். தருணம் பாத்திருந்த அந்த பிராமணன், ராஜ குமாரத்தி பூப்படைந்த காலம் மிகவும் தோஷம் உடையது என்றும் ஆகையால் அவள் உயிரையும் நாட்டையும் காப்பதற்காக அவளை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விடுவதே பரிகாரம் என்றும் சொன்னான்.
மன்னனும் தன் உயிர், நாட்டின் எதிர்காலம், மகளின் நலன் எல்லாவற்றையும் மனதிற் கொண்டு அப்படியே செய்தான். அந்த பிராமணனோ ரகசியமாக ஆற்றில் மிதந்து வரும் பெட்டியைக் கவர தொலை தூரத்தில் ஆற்றின் கரையில் காத்திருந்தான். இதற்குள் வேறு ஒரு நாட்டின் அரசன் ஆற்றின் கரையில் இருக்கும் காட்டில் வேட்டை ஆடி ஒரு புலியை உயிருடன் பிடித்தான். ஆற்றில் தண்ணீர் குடிக்கச் சென்றபோது ஒரு பெட்டி மிதந்து வருவதைக் கண்டு அதைத் திறந்து பார்த்தான். அழகான ராஜ குமாரத்தியைக் கண்டு ஆனந்தப்பட்டு அவளை மணம் புரிய எண்ணி தன் நாட்டுக்கு அழைத்துச் சென்றான். அவள் எல்லா விசயங்கலையும் சொல்லி ஆற்றுக்குள் மிதந்தது எப்படி என்று விவரித்தாள். அதைக் கேட்ட ராஜா, அவளை அழைத்துப் போவதற்கு முன்னால், அந்தப் பெட்டிக்குள் தான் பிடித்த புலியை அடைத்து மீண்டும் ஆற்றில் மிதக்கவிட்டான்.
தொலை தூரத்தில் ஆற்றங் கரையில் ஆசையுடன் காத்திருந்த பிராமணன், பெட்டியை மீட்டு, யாருக்கும் தெரியாத இடத்துக்குக் கொண்டுபோய் ஆவலுடன் பெட்டியைத் திறந்தான். புலி அவன் மீது பாய்ந்து அவனைக் கொன்று தின்றது.
“மதியிலா மறையோன் மன்னன் மடந்தையை வேட்கையாலே
ருதுவது காலம் தன்னில் தோஷம் என்று உரைத்தே ஆற்றில்
புதுமையாய் எடுத்தபோது பெட்டியில் புலிவாயாலே
அதிருடன் கடியுண்டு அன்றே அருநரகடைந்தான் மாதே!”
(விவேக சிந்தாமணி)
விவேக சிந்தாமணியில் இது போன்ற பழங்காலக் கதைகள் அடங்கிய பாடல்கள் உள்ளன. இந்த நூலை எழுதியது யார் என்பது தெரியவில்லை.
தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்தது!
தினை விதைதவன் தினை அறுப்பான்; வினை விதைதவன் வினை அறுப்பான்!!
Contact: Swami_48@yahoo.com



You must be logged in to post a comment.