
Compiled by London swaminathan
Date: 19 November 2015
POST No. 2342
Time uploaded in London :– 10-25
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!
DON’T USE THE PICTURES;
THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
சுவாமி ராமதாஸ் சொன்ன கதை:தமிழ் மொழி பெயர்ப்பு-லண்டன் சுவாமிநாதன்
திருமணமான ஒருவருக்கு மாமனாரிடமிருந்து அழைப்புக் கடிதம் வந்தது. “தொலைதூரத்தில் வசிக்கிறீர்களே; நீண்ட நாளாகிவிட்டதே; இங்குவந்து எங்களுடன் தங்கிவிட்டுப் போகக்கூடாதா?” — என்று. குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம் இருந்ததால் அவர் மட்டும் பயணமானார். ஒரு கில்லாடிக்கு எப்படியோ இந்தக் கடித விஷயம் தெரிந்தது. அவனும் டிப்-டாப்பாக உடைகளை அணிந்து மாப்பிள்ளை புறப்பட்ட அதே ரயிலில் புறப்பாட்டான்.
இருவரும் மாமனார் ஊருக்கு வந்தனர். மாப்பிள்ளையை வரவேற்க, மைத்துனர் கார் கொண்டு வந்திருந்தார். அவரைக் காரில் பின் சீட்டில் மரியாதையாக அமர்த்தியபோது, அதே ரயிலில் வந்த டிப்-டாப் பேர் வழி “ஹலோ” என்று வணக்கம் சொல்லி காரில் அமர்ந்துகொண்டான். மைத்துனர் நினைத்தார் இவர் மாப்பிள்ளையின் தோழர் போல என்று. மாப்பிள்ளை நினைத்தார், அவர் மாமனார் வீட்டுக்கு வேண்டியவர் போலும்; ஒரே ரயிலில் வந்ததால் அவரையும் அழைத்துப் போகத்தான் மைத்துனர் வந்தார் போலும் என்று!
இருவரும் வீடு போய்ச் சேர்ந்தவுடன் உற்சாக வரவேற்பு கிடைத்தது. டிப்-டாப் பேர்வழி யரும் எதையும் கேட்டு விடக் கூடாதென்பதற்காக என்னுடைய அறை எது? என்று கேட்டவுடன், மாமனார் அவனுக்கு ஒரு அறையை ஒதுக்கினார். மாப்பிள்ளையின் சந்தேகமெல்லாம் பறந்தோடிவிட்டது. ஓஹோ! இவர் மாமனாரின் நெருங்கிய நண்பர் போலும்; அதுதான் உரிமையோடு அறையைக் கேட்க, மாமனாரும் உடனே கொடுத்துவிட்டார் என்று.
ஒரு நாள் ஆயிற்று, இரண்டு நாள் ஆயிற்று. டிப் டாப் பேர்வழி எல்லா அறைகளிலும் சென்று எல்லாப் பொருட்களையும் எடுத்தார். எல்லோர் உடைகளையும் எடுத்து அணிந்தார்; வீட்டிலுள்ள நல்ல செருப்புகளை தன்னுடைய சொந்த செருப்பு போலப் பயன்படுத்தினார். எல்லோருக்கும் “ஹலோ, குட் மார்னிங்” எல்லாம் சொன்னார்.பேச்சு கொடுக்கக் கூடாதென்பதற்காக, பெரும்பாலான நேரங்களில் வெளியே போய்விடுவார். சாப்பாட்டு நேரத்தில், சாப்பாட்டு ராமன் — பெருந்தீனீ – என்னும் பெயருக்குரியவராகி விடுவார்!!!
மாப்பிள்ளையும், மாமனாரும் இது ஏது, இப்படி இங்கிதம் இல்லாமல் மோசமாக நடந்து கொள்கிறான் என்று மனதுக்குள் புகைந்தனர். ஆனால் எதுவும் சொல்ல பயந்தனர்.
மானாருடைய சொந்தக்காரரைக் குறைகூறினால் அவர் தப்பாக நினைப்பாரே என்று மருமகன் பயந்தார். மருமகனின் சொந்தக்காரரைக் குறை சொன்னால் மருமகன் கஷ்டப்படுவாரே என்று மாமனார் தவித்தார்.
ஒரு நாள் அந்த ஆள்மாறாட்ட டிப்டாப் பேர்வழி எல்லை மீறி சுதந்திரத்தைப் பயன்படுத்தினார். யார் அனுமதியும் கேட்காமல் காரை எடுத்துக்கொண்டு ஊரைச் சுற்றி எல்லா பெட்ரோலையும் செலவழித்துவிட்டுக் காரை நிறுத்தினார். இந்த வேலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்று கருதி மாமனார், மாப்பிள்ளையிடம் யார் இந்த பிருஹஸ்பதி? என்று கேட்போம் என்று அவரை நெருங்கினார். ஆள்மாறாட்டக்காரனின் இந்த அடாத செயலைப் பார்த்துக்கொண்டிருந்த மாப்பிள்ளையும் இவ்வளவு மோசமான இவன் யார்? என்று கேட்க மாமனாரை நெருங்கினார். ஆள்மாறாட்டப் பேர்வழிக்கு நிலைமை முற்றிப்போனது தெரிந்துவிட்டது. நைஸாக நழுவிவிட்டார். இப்போது மாமனாருக்கும் மாப்பிள்ளைக்கும் (மருமகன்) உண்மை விளங்கியது.

படம்: சுவாமி ராமதாஸ்
அந்த டிப் டாப் ஆள்மாறாட்டப் பேர்வழியின் பெயர் என்ன தெரியுமா? அஹங்காரம்; அதாவது “யான்” “எனது” என்னும் செருக்கு.
யார் ஒருவன் அஹங்காரத்தை அடையாளம் காண்கிறனோ, அப்பொழுது அது பயந்து ஓடிவிடும். அதைப் புரிந்துகொள்ளாமல் அதற்கு இடம் கொடுக்கும் வரைக்கும் அது (டிப்-டாப் ஆள் மாறாட்டப் பேர்வழி) ஆட்டம்போடும்!
இது சுவாமி ராமதாஸ் சொன்ன கதை; தமிழ் மொழிபெயர்ப்பு; லண்டன் சுவாமிநாதன்
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் – திருக்குறள் 346
–சுபம்–
You must be logged in to post a comment.