சேரவாரும் ஜெகத்தீரே! ஞானிகள் அறைகூவல்!!

sages bommais

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–990; தேதி:— 20th April 2014.

சங்கத் தமிழ் இலக்கியத்தில் ஆற்றுபடை இலக்கியம் என்று ஒரு பிரிவு உண்டு. திருமுருகாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்று ப் படை, பொருநராற்றுப்படை எனப் பல. ஒரு புலவன் பரிசு பெற்றவுடன் “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”– என்ற எண்ணத்துடன் மற்ற புலவர்களுக்கும் இந்த அரசன் இடத்தில் சென்றால் உங்களுக்கும் இந்தச் செல்வம் எல்லாம் கிடைக்கும் என்று கூறி வழிப்படுத்துவான். திருமுருகா ற்றுபடையில் அறுபடை வீடுகளின் அருமை பெருமைகளை நக்கீரர் விளக்குகிறார். முருகனுக்குள்ள அறுமுகங்களும் பன்னிரு கைகளும் பக்தர்களுக்கு எவ்வறெலாம் உதவுகின்றன என்றும் கூறுகிறார்.

இதே போல ஞானிகளும் தாங்கள் கண்ட பேரின்பத்தை எப்படியாவது உலகிற்குச் சொல்லிவிடவேண்டும்; எல்லோருடனும் பகிர்ந்து அனுபவிக்க வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறார்கள். இது அவர்களுடைய பாடல்களைப் படித்தால் சொல்லாமலேயே விளங்கும்.

இன்று மாலை ஒரு சிறந்த உணவு விடுதிக்குப் போய் சாப்பிட வேண்டும் என்று நாலு நண்பர்கள் தீர்மானிக்கிறார்கள். ‘சின்னக் கடைத் தெருவில் இருக்கும் ஐயர் கடை சாப்பாடுதான் மிக பிரமாதம் என்று கோடி வீட்டு குப்புசாமி சொன்னார். ‘இல்லை, இல்லை, பெரிய கடைத் தெருவில் உள்ள கோபி ஐயங்கார் மெஸ்-ஸில்தான் சாப்பாடு மிகப் பிரமாதம்’ என்று மாடி வீட்டு மாடசாமி சொல்கிறார். ‘பஸ் நிலையம் அருகில் உள்ள உடுப்பி பவன் சாப்பாடு தேவாமிர்தம்’ என்று அடுத்தவீட்டு அங்கு சாமி சொல்கிறார். உங்களுக்கு உலகமே தெரியவில்லையே! நான் நீங்கள் சொன்ன எல்லாக் கடைகளிலும் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். ரயில் நிலையம் அருகில் உள்ள ராமராஜ் பவன் தான் உலகிலேயே சிறந்தது என்று மேஜையில் அடித்துப் பேசினார் எதிர்வீட்டு எத்திராஜ். எல்லோரும் அவர் கூறியபடியே சென்று சாப்பிட்டனர்.

இனி இந்த ஹோட்டலைத் தவிர வேறு எதற்கும் போகக் கூடாது என்று அன்று இரவே முடிவு எடுத்தனர். அவ்வளவு நல்ல சாப்பாடு! மறுநாள் முதல் அவரவர் அலுவலகத்தில் இந்தச் செய்தியைப் பரப்பினர். அன்றுமுதல் ராமராஜ் பவனில் உட்கார இடம் கிடைக்காத கூட்டம்!!

இதே போல ஆயிரம் ஆண்டுகளாக ஞானிகள் நம்மிடம் கெஞ்சுகின்றனர். தயவு செய்து நான் சொல்லுவதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்களேன். ப்ளீஸ்! ப்ளீஸ்! ஒருமுறை இந்த சாப்பாட்டை அனுபவித்துவிட்டால் திரும்பி வீட்டிற்குப் போக மனம் வராமல் ‘வீடுபேறு’ அடைய ஓடுவீர்கள் என்று பாடுகின்றனர். உணவு விடுதிச் சாப்பாட்டில் கிடைத்தது எல்லாம் சிற்றின்பம். நாங்கள் சொல்லுவதோ பேரின்பம் என்று சொல்லி நமக்கு ‘’இன்னும் புரியவில்லையே’’– என்று கதறுகின்றனர். இருந்தபோதிலும் நாம் கேட்பதாகத் தெரியவில்லை. இதோ பாருங்கள்:–

தாயுமானவர் அறைகூவல்:–
காடும் கரையும் மனக்குரங்கு கால் விட்டோட அதன்பிறகு
ஓடும் தொழிலால் பயனுளதோ ஒன்றாய் பலவாய் உயிர்க்குயிராய்
ஆடும் கருணைப் பரஞ்ஜோதி அருளைப் பெறுதற்கு அன்புநிறை
தேடும் பருவம் இதுகண்டீர் சேரவாரும் ஜெகத்தீரே!

மனம் ஒரு குரங்கு. ஓயாமல் தாவிக்கொண்டே இருக்கும். அதன் பின்னால் அலைந்து ‘மனம் போன போக்கில் போய்’ நேரத்தை வீண் அடிப்பதில் என்ன பயன்? எல்லை இலாத கருணயுடைய அன்பு நிறைந்த கடவுளின் அருளைப் பெற அருமையான மனிதப் பிறவி கிடைத்திருக்கிறது. வாருங்கள் ! என்னுடன் சேருங்கள் ! நாம் எல்லோரும் சேர்ந்து பயணம் செய்வோம் என்று தாயுமானவர் கூப்பிடுகிறார்.

chaitanyam
Picture of Sri Chaitanya

நம்மாழ்வார் துடிப்பு !
கண்டோம், கண்டோம், கண்டோம்; கண்ணுக்கு இனியன கண்டோம்;
தொண்டீர்; எல்லீரும் வாரீர்; தொழுது தொழுது நின்று ஆர்த்தும்;
வண்டு ஆர்த் தண்ணந் துழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்தான் பாடி நின்று, ஆடி, பரந்து திரிகின்றனவே.
நம்மாழ்வார் திருவாய்மொழி

நம்மாழ்வாரோ எனில் “கண்டுவிட்டேன், இது போன்ற இனிய காட்சி உலகிலேயே கிடையாது எல்லோரும் ஓடி வாருங்கள் என்று கூத்தாடுகிறார். வண்டுகள் மொய்க்கும் துளசிமாலை அணிந்த மாதவனைக் கண்டுவிட்ட மகிழ்ச்சி அவருக்கு!

புவியுள் நான் கண்டதோர் அற்புதம் கேளீர்!

பெரியாழ்வார் இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று உலக அற்புதம் ஒன்றைக் கண்டு பிடித்துவிட்டதாக அறிவிப்பு வெளியிடுகிறார். அவர் பார்த்த அற்புதத்தை நாமும் பலமுறை பல இடங்களில் பார்த்திருக்கிறாம். ஆனால் கண்டும் காணவில்லை. அதனால் அவர் போல பூரிப்பு அடையவில்லை!. அனுபவித்தவர்க்கல்லவா அதன் அருமை பெருமைகள் தெரியும்! கண்ணன் ஊதிய புல்லங்குழல் ஓசை செவிக்கு உணவாகக் கிடைத்தது. அதை அருந்த வானவர் (தேவர்கள்) எல்லாம் வந்துவிட்டனர் என்கிறார்.

புவியுள் நான் கண்டதோர் அற்புதம் கேளீர்!
பூணிமேய்கும் இளங்கோவலர் கூட்டத்து
அவையுள் நாகத்து அணையான் குழல் ஊத
அமரலோகத்தளவும் சென்றிசைப்ப
அவியுணா மறந்து வானவர் எல்லாம்
ஆயர்பாடி நிறையப் புகுந்து ஈண்டி,
செவியுள் நாவின் சுவைகொண்டு மகிழ்ந்து
கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே.
-பெரியாழ்வார்

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்,
திருமூலர் ஒருபொதுவுடைமைவாதி. கிடைத்ததை எல்லோருக்கும் சமமாகக் கொடுக்கவேண்டும் என்று கருதி நான் நமச்சிவாய மந்திரத்தைச் சொல்லி பேரின்பம் அடைந்தேன். அது எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்று பாடுகிறார்.

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்,
வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடில்
ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்,
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே.
—————திருமூலர், திருமந்திரம்

appar1
Image of Appar

மனிதர்காள் இங்கே வாருங்கள் !! ஒன்று சொல்லுகிறேன்!!!

அப்பர் பெருமான் மிகவும் தெளிவாகப் புரியும்படி சொல்லுகிறார். ஏ, மனிதர்களே இங்கே வாருங்கள். ஒன்றே ஒன்றுதான் சொல்லப்போகிறேன். நான் மிக மிக இனிப்பான மாம்பழம் தந்தால் மாம்பழம் சாப்பிடுவீர்களா? சரி, நெய் மணத்துடன் இருக்கும் செவ்வாழைப் பழம் தருகிறேன் சாப்பிடுவீர்களா? இதைக் கேட்ட கூட்டம் ஆமாம் ,சாப்பிடுவோம் என்றது. இதைவிட இனிப்பான இறையருள் என்னும் கனி தருகிறேன். வாருங்கள் என்கிறார்.

மனிதர்காள் இங்கேவம் ஒன்று சொல்லுகேன்
கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே
புனிதன் பொற்கழல் ஈசன் னும் கனி
இனிது சாலவும் ஏசற்றவர்கட்கே.
—————திருக்குறுந்தொகை, 5ஆம் திருமுறை, அப்பர்.

இவ்வளவு தெளிவாகக் கூறிய பின்னரும் புரியவில்லை என்றால் நாம் எல்லோரும் நாடகத்திலோ திரைப்பத்திலோ நடிக்கத்தான் தகுதி உடையவர்கள். அதாவது நாம் புரிந்தும் புரியாதது போல நாடகம் ஆடுகிறோம்!!

contact swami_48@yahoo.com