ஆயிரம் கோடி ரூபாய் ரத்தின பூமி உருண்டை !

இந்தியா விலை மதிக்க முடியாத செல்வச் செழிப்புள்ள நாடு. இன்றும் இந்தியாதான் உலகிலேயே பணக்கார நாடு. இது பற்றி இந்தியாவே பணக்கார நாடு Indiahhhhh—-Richest country in the World  என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ள கட்டுரைகளையும் படிக்கவும். அலெக்சாண்டரையும் கஜினி முகமதுவையும் மேலும் பல படை எடுப்பாளர்களையும் இந்தியாவுக்கு இழுத்தது இந்தச் செல்வம்தான். உலகில் முதல் முதலில் நல்ல வைரங்களைத் தோண்டி எடுத்து உலக நாடுகளுக்கு அனுப்பியதும் நாம்தான். வட மொழி, தமிழ் மொழி இலக்கியம் முழுதும் தங்கம், ரத்தினம், தந்தம், முத்து, பவளம் பற்றிப் பேசாத புத்தகமோ பாடலோ இல்லை.

 

நம் நாட்டின் கோஹினூர் வைரம் உள்பட பல வைரங்கள் லண்டன் டவர் மியுசியத்தில் இருப்பதை பலரும் அறிவர். கோஹினூர் வைரம் போலவே புகழ் பெற்ற ஹோப் வைரம் (கிருஷ்ண பரமாத்மாவின் சியமந்தக மணி) அமெரிக்காவில் வாஷிங்டனில் ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தில் இருக்கிறது ( Is Krishna’s diamond in USA அல்லது கொலவெறி வைரம் கட்டுரையை படிக்கவும்)

இதை எல்லாம் விட உலகிலேயே மிகப் பெரிய ரத்தினக் குவியல் ஈரானில் இருக்கிறது. அந்நாட்டின் தலை நகரான டெஹ்ரான் மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கும் ரத்தின சிம்மாசனங்களும், ரத்தின மணி மகுடங்களும், தங்க, ரத்தின ஆபரணங்களும் காண்போரை வியக்கச் செய்யும்.  பிரிட்டிஷ் ராஜ நகைகளை விட பன் மடங்கு மதிப்புடையன. இவைகளில் பெரும்பாலானவை இந்தியாவிலிருந்து சென்றவை !

 

உலகம் வியக்கக் கூடிய பூமி உருண்டை(குளோப்) டெஹ்ரான் மியூசியத்தில் உள்ளது. இதில் 51,000 ரத்தினக் கற்கள் இருக்கின்றன. அவைகளில் பெரும்பாலானவை மரகதக் கற்கள். மரகதம் பற்றி 1990களில் நேஷனல் ஜியாக்ரபிக் மாகசின் ஒரு பெரிய கட்டுரை வெளியிட்டது. அப்போது இந்த ரத்தின பூமி உருண்டை படத்தை வெளியிட்டு அதன் மதிப்பை 300 கோடி ரூபாய் என்றது. இப்போது குறைந்தது ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு உயர்ந்திருக்கும். அதில் 35 கிலோ தங்கம் வேறு இருக்கிறது. அதன் உயரம் கிட்டத்தட்ட நாலு அடி, விட்டம் ஒன்றரை அடி.

மயில் ஆசனம்

இன்று உலகில் இருந்தால் மிகப்பெரிய அதிசயமாக இருந்திருக்கக் கூடியது மொகலாய மன்னன் ஷாஜஹான் செய்து வைத்திருந்த மயில் ஆசனம் ஆகும். அவன் செய்த போது அதில் 1100 கிலோ தங்கமும் 250 கிலோ ரத்தினக் கற்களும் இருந்தன. உலகிலேயே மிகப்பெரிய தங்கக் காசும் ஷாஜஹானுடையதே. அதை பல ஆண்டுகளுக்கு முன் லண்டனில் ஏலம் விட்டார்கள். ஷாஜஹானுக்கு, தங்கம் என்பது தண்ணீர் பட்ட பாடு. கஜினி மொஹமது போன்றோர் கொள்ளை அடித்த பின்னரும் நம்மிடம் அவ்வளவு தங்கமும் வைரமும் இருந்தன.

 

சாஜஹான் மகனான அவுரங்கசீப்புக்குப் பின்னர் மொகலாய சாம்ராஜ்யம் பலவீனம் அடைந்தது. மொஹமது ஷா என்ற மன்னன் டில்லியை ஆண்டபோது பாரசீகத்திலிருந்து (தற்போது ஈரான் என்று பெயர) நாதிர் ஷா படை எடுத்து வந்தான். பெரிய கொடுங்கோலன். அவன் டில்லியில் இறந்துவிட்டான் என்று சிலர் வதந்தியைப் பரப்பியவுடன் அவனுக்குக் கடுங்கோபம் வந்தது. டில்லியை சூறையாடி ஒரே இரவில் 30,000 பேரைக் கொல்ல உத்தரவிட்டான். மன்னன் மகமது ஷா கொலை நடுங்கிப்போய் எல்லோரையும் உயிரோடு விட்டால் என்ன செல்வம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றான்.

 

நாதிர் ஷா மயில் ஆசனம், ரத்தின  பூமி உருண்டை உள்பட எல்லா செல்வங்கலையும் கொள்ளை அடித்து பாரசீகத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். போகும் வழியில் குர்தீஷ் இன மக்களையும் ஒரு கை பார்க்கத் தீர்மானித்தான். ஆனால் அவர்கள் நாதிர்ஷாவை படுகொலை செய்தனர். அலெக்சாண்டருக்கு நேர்ந்ததுபோல இவனும் நாடு திரும்பாமல் பிணமானான். மயில் ஆசனத்தை அக்கு வேறு ஆணி வேறாகக் கழற்றி பங்கு போட்டுக் கொண்டார்கள் படைத் தலைவர்கள்!

இப்பொழுது டெஹ்ரானில் ஒரு மயில் ஆசனம் உள்ளது. அது உண்மையானது அல்ல என்றே கருதப்படுகிறது. ஆனாலும் உலகிலேயே அதிகமான ராஜ வம்ச பொக்கிஷங்கள் அங்கேதான் உள்ளன என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. எல்லாம் இந்தியப் புதையல்கள்!

 

இந்தியாவுக்கு விஜயம் செய்த பிரெஞ்சுகாரரான ஜீன் பாப்டிஸ்ட் டவர்னியர் ஒரு ரத்தின பரிசோதகர். அவர் மயில் ஆசனம் முதலியவற்றை மதிப்பிட்டு எழுதி வைத்திருக்கிறார். விஜய நகர சாம்ராஜ்யத்தின் ரத்தினக் குவியலை மதிப்பிடும் ஆற்றல் தனக்கு இல்லை என்றும் எழுதிவைத்தார். மாலிக்காபூர் போன்ற படைத் தலைவர்கள் தென்னிந்தியாவை சூறையாடிய பின்னரும் அங்கே அத்தனை செல்வம். இப்போதும் திருப்பதி, மதுரை, ஸ்ரீரங்கம், திருவனந்தபுரம் அனந்த பத்மனாப சுவாமி கோவில் செல்வங்களைக் கணக்கில் கொண்டால் இந்தியாவைச் செல்வச் செழிப்பில் மிஞ்சுவதற்கு யாரும் இல்லை. இவைகளைக் கண் போலக் காப்பது நமது கடமை.

 

லண்டனில் திப்புவின் புலி

லண்டனில் விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தில் எல்லோர் கவனத்தையும் ஈர்க்கும் இன்னொரு அற்புதம் திப்புவின் புலி பொம்மை! ஒரு மியூசியத்தில் கோஹினூர் வைரம், இன்னொரு மியூசியத்தில் திப்பு சுல்தானின் புலி ! நமக்கு பாதுகாக்க வக்கு இல்லை, எல்லாம் வெளி நாட்டுக்கு ஓடிப் போயின. இப்பொதுழும் வாரம் தவறாமல் இந்தியச் செல்வங்கள் லண்டன், நியூயார்க் ஏல நிறுவனக்களில் ஏலம் போய்க் கொண்டுதான் இருக்கின்றன.

திப்புவின் புலி பிரெஞ்சுக்காரர்களால் செய்யப் பட்டது. திப்பு சுல்தானைப் போலவே பிரெஞ்சுக் காரர்களுக்கும் ஆங்கிலேயர் என்றால் வெறுப்புதான். இந்தப் புலி பொம்மை உண்மையான புலி அளவுக்குச் செய்யப்பட்டது. ஒரு ஆங்கிலேயனை கடித்துக் குதற வருவதுபோல வடிவமைக்கப் பட்டது. அதற்குள் ஒரு பைப் ஆர்கன் இசைக்கருவி போன்ற இயந்திர உறுப்புகள் இருக்கின்றன. வெளியே தெரியும் கைப்பிடியால் இந்த மரத்தால் ஆன பொம்மையை இயக்கலாம். அதன் ஒரு கை, கீழே விழுந்திருக்கும் ஆங்கிலேயனைக் கிழிக்கப் போவது போல நகரும். அப்போது புலியின் உறுமல் சத்தமும் கீழேயுள்ளவனின் அவலக் குரலும் கேட்கும். புலி அவனை விழுங்கிச் சாப்பிடத் தயாராக இருக்கும். இந்த பொம்மையை வெள்ளைக்காரர்கள் பத்திரமாக லண்டனுக்குக் கொண்டுவந்து கண்ணாடிப் பெட்டிக்குள் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். ஏராளமானோர் இதைக் கண்டு அதிசயிக்கின்றனர்.

 

இதுதவிர மீனாட்சி கோவில் திரைச் சீலை போன்ற அயிட்டங்களும் உண்டு. ( The Wonder That is Madurai Meenakshi Temple கட்டுரையில் மேலும் பல அதிசயச் செய்திகளைப் படியுங்கள்)

**********************

அமுதசுரபி எங்கே? மயில் ஆசனம் எங்கே?

( This is translation of “India needs an Indiana Jones” already posted here)

இந்தியாவின் அரிய பெரிய பொக்கிஷங்கள், புதையல்கள், செல்வங்கள் எல்லாம் மாயமாய் மறைந்துவிட்டன. ஆனால் பல புதையல், பொக்கிஷங்களை, நல்ல வேளையாக, நமது நாட்டின் பெயர் போட்டே வெளிநாட்டு மியூசியங்களில் வைத்திருக்கிறார்கள்.

இந்திய வைரத்தை வைத்து ஹாலிவுட்காரகள் இந்தியானா ஜோன்ஸ் பாணி (Indiana Jones and Temple of Doom)  படங்களைக் கூட எடுத்து, அதிலும் மில்லியன் கணக்கில் காசு பண்ணிவிட்டார்கள். கிரேக்க நாட்டு மற்றும் பைபிளில் வரும் “ஹோலி க்ரெயில்” (Holy Grail) போன்றவை குறித்து ஏராளமான நாவல்கள், சினிமாக்கள் வந்துவிட்டன. ஆனால் நாமோ நமது செல்வம் பற்றியே ஒன்றும் அறியாத அப்பாவிகளாக இருக்கிறோம்.

 

வாரம் தவறாமல் லண்டன், நியூயார்க் நகரங்களில் நம் நாட்டு தொல் பொருட் செல்வங்கள் பகிரங்கமாகவே ஏலத்துக்கு விடப் படுகின்றன. ஆக நமது நாட்டிலும் ஒரு இந்தியானா ஜோன்ஸ் (Indiana Jones) போல ஒருவர் புதைபொருள் வேட்டை நடத்த புறப்படவேண்டும். நமது செல்வங்கள் குறித்து கதைகளும் சினிமாக்களும் வெளிவரவேண்டும்.

திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோவிலில் உலகிலேயே மிகப் பெரிய புதையல் கிடைத்துள்ளது. அதை எல்லாம் அழகாக பாதுகாப்பாக மியூசியத்தில் வைக்க வேண்டும். இந்த விஷயங்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்ச்சி வரவேண்டும். ஏன் வெளிநாட்டுக்காரர்கள் இதில் அக்கறை செலுத்துகிறார்கள் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

 

நம்முடைய உலகப் புகழ்பெற்ற கோஹினூர் வைரம் இன்று லண்டன் டவர் மியூசியத்தில் (Tower Museum, London)  உள்ளது. பிரிட்டிஷ் மஹாராணியின் முடியை (Crown Jewels)  அலங்கரிக்கும் வைரங்களில் அதுவும் ஒன்று.

திப்பு சுல்தானின் இயந்திரப் புலி (Tippu’s Tiger)  பொம்மை லண்டன் விக்டோரியா ஆல்பெர்ட் மியூசியத்தில் உள்ளது. இந்தோநேஷியாவின் இந்துக் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட அகத்தியர் சிலையும் அங்கேதான் உள்ளது.

நாமோ மீனாட்சி கோவில், திருப்பதி கோவில், ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ரத்தினங்கள், தங்க நகைகளின் மகிமை பற்றி அறியாதவராக உள்ளோம். அரசியல்வாதிகள், பல அற்புதமான ரத்தினக் கற்களை மாற்றிவிட்டு, போலி கற்களை வைத்துவிட்டதாகவும் வதந்திகள் உலவுகின்றன.

 

ராஜராஜ சோழன் போன்ற மாமன்னர்கள் கொடுத்த பெரிய பெரிய தங்க நகைகள், ரத்தினக் கற்கள், பாத்திரங்கள் பற்றி கல்வெட்டுகள் பேசுகின்றன. அவைகள் எங்கே என்று யாருக்கும் தெரியாது.

மஹாபாரத காலத்தில் பாண்டவர்கள் பயன்படுத்திய மாபெரும் தங்க சிம்மாசனம் மைசூர் அரணமனையில் இருக்கிறது. நளன் போன்றோர் கொடுத்த அற்புதமான ரத்தினக் கற்கள் மீனாட்சி கோவிலில் உள்ளன.

தி ஒண்டர் தட் இஸ் மீனாட்சி டெம்பிள் (The Wonder That is Madurai Meenakshi Temple) மற்றும் கொலவெறி வைரம் (Is Krishna’s Diamond in USA?) (கிருஷ்ணரின் சியமந்தகம் அமெரிக்காவில் உள்ளது ) என்ற எனது கட்டுரையில் பல புதிய தகவல்களைப் படிக்கலாம்.

ஆயிரக் கணக்காணோருக்கு உணவு வழங்க திரவுபதி பயன்படுத்திய அக்ஷய பாத்திரம் எங்கே?

பசிப்பிணி என்னும் பாவியை ஒழித்து உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று பிரசாரம் செய்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவுகொடுக்க மணிமேகலை பயன்படுத்திய அமுத சுரபி எங்கே?

 

திருவள்ளுவரை மற்றும் ஏற அனுமதித்து போலிப் புலவர்களைக் கீழே தள்ளிய சங்கப் பலகை எங்கே?

பாண்டிய நாட்டு மக்களின் பசிப்பிணி தீர்க்க சிவபெருமான் அனுப்பிய உலவாக் கிழியும் உலவாக் கோட்டையும் எங்கே?

வசிட்ட மாமுனிவர் வளர்த்த காமதேனு எங்கே? இது உயிருள்ள பசு என்று நினைக்கக் கூடாது. இந்தக் காலத்தில் ஆயிரம் சப்பாத்தி ஆயிரம் (Instant Chapathi/Idli Oven) இட்லி தயாரிக்கப் பயன்படும் இயந்திரம் இருப்பது போல ஒரு எந்திரத்தின் பெயர் காமதேனு என்று கருதலாம் அல்லவா?

நினைத்ததை எல்லாம் வழங்கும் கற்பக விருட்சம் எங்கே? இவைகளை கற்பனை என்று நினைத்தால் கதை எழுதவும் சினிமா எடுக்கவும் இந்த விஷயங்களைப் பயன்படுதலாமே !!

 

உலகப் புகழ்பெற்ற மயில் ஆசனம்(Peacock Throne) மொகலாயப் பேரரசன் ஷாஜஹானிடம் இருந்தது. அதை பாரசீக மன்னன் நாதிர்ஷா கொள்ளை அடித்துச் சென்று ஈரானுக்குத் திரும்புகையில் அவன் இறக்கவே அதை ராணுவ தளபதிகள் பங்குபோட்டதாக ஒரு பேச்சு. இல்லை அது ஈரானில்தான் இருக்கிறது என்று இன்னொரு பேச்சு. இப்போது டெஹ்ரான (ஈரான்)(National Museum, Tehran, Iran) மியூசியத்தில் இந்தியாவின் அற்புதமான ரத்தினநகைகள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. அதிலும் ஒரு சிறிய மயில் ஆசனம் உண்டு. (இது அற்றி எனது தனி கட்டுரை உள்ளது)

முட்டாள்களையும் புத்திசாலியாகும் 32 பதுமைகள் பதித்த விக்ரமாதித்தன் சிம்மாசனம் எங்கே?

மதுரை மீனாட்சி கோவிலில் ஒரு கடம்ப மரத்தை வேலி போட்டு பாதுகாத்து வைத்துள்ளார்கள். இதை “கார்பன் டேட்டிங்” முறையில் ஆராய்ந்து இதன் காலத்தைக் கண்டு பிடிக்கலாம். இது போன்ற ஆய்வுகள் இந்து மதத்தின் மீது நமக்குள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும். எந்த வகையிலும் குறைவு உண்டாக்காது. ஏசு கிறிஸ்து மீது போர்த்திய சால்வை என்று டூரினில் வைத்துள்ள துணியை ஆராய்ந்தார்கள். இது போல எவ்வளவோ ஆய்வுகளை நடத்தினால் பல புதிய செய்திகள் கிடைக்கலாம்.

 

இந்திய மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, நம்முடைய செல்வங்களை பட்டியலிட்டு, அவை எங்கே இருக்கிறது என்றாவது சொல்ல வேண்டும். கோவிலின் அற்புத செல்வங்களை கண்ணிரண்டையும் இமைகள் காப்பது போலக் காக்கவேண்டும். இந்திய செல்வங்களை வெளிநாடுகளில் ஏலம் போகாமல் காக்கவேண்டும்.

********************