Hindu Wonder: Malaysian Glass Temple
இந்துமதம் ஒரு வண்ணக் கலவை; மிகவும் கவர்ச்சிகரமானது. நாள் தோறும், யுகம் தோறும் மாறக்கூடியது. பரந்த மனப்பான்மையும் ஜனநாயகமும் கொண்டது. எல்லா மதக் கொள்கைகளையும் உள்ளடக்கியது. ஆயிரம் தலை ஆதிசேஷன் போல பல்லாயிரம் தெய்வங்களைக் கொண்டது. பல்லாயிரம் பாடல்களைக் கொண்ட பல நூறு நூல்களை உடையது. இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கோவில்கள் இருப்பதை ஏற்கனவே எழுதியுள்ளேன். ஆயினும் விந்தையிலும் விந்தை– அடிப்படைக் கொள்கைகளை மாற்றாதது!
ஆயிரம் ஆண்டுகளாக ஒரே கொள்கையில் பற்றுதல் உடையது. உருவங்கள் மாறலாம்; சாது சந்யாசிகள் மாறலாம். ஆயினும் கொள்கைகள் மாறாது: (1)கடவுள் ஒருவரே- அவரைப் பல உருவங்களில் வணங்கலாம் (2) நல்லது செய்தால் நல்லது நிகழும் (கர்ம வினைக் கொள்கை) (3) ஆத்மா அழியாதது, இறந்த பின்னர் மறுபிறப்பு உண்டு (4) இந்துக்களின் இறுதி லட்சியம்– ஜனன-மரணச் சுழலில் இருந்து விடுபடவேண்டும்.
Malaysia’s Raja Kali Amman Temple: Architectural Wonder
இந்த அடிப்படைக் கொள்கைகளை ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு காலத்திலும் உதிக்கும் சாது சந்யாசிகள், சித்த புருஷர்கள், மஹா யோகிகள், ரிஷிகள், ஞானிகள் –அவர்களுக்கே உரித்தான பாணியில்—புதிய பாணியில்—வழங்குவார்கள். கடவுளைக் கல்லிலும் சமைப்பார்கள்—கண்ணாடியிலும் சமைப்பார்கள்; தங்கத்திலும் வடிப்பார்கள், மரகதம், ஸ்படிகத்திலும் செதுக்குவார்கள்.
Sri Narayana Guru’s Mirror and Lamp Temple
நாராயண குருவின் கண்ணாடிக் கோவில்
கேரளத்தில் அவதரித்த பெரியார்களில் ஒருவர் நாராயண குரு(1856-1928) அவர் பெரிய சமூக சீர்திருத்தவாதி, தத்துவ வித்தகர். ஏழை எளிய மக்களுக்கு நம்பிக்கை ஒளி ஊட்டியவர். அவர் தோன்றாவிடில் ஈழவா எனப்படும் பின் தங்கிய வகுப்பு மக்கள் எல்லோரும் மதம் மாறி இருப்பார்கள். பல நூறு கோவில்களை புணருத்தாரணம் செய்ததோடு, பல புதிய கோவில்களையும் உருவாக்கியவர்.
நாராயண குரு செய்த பல புதிய கோவில்களில் கண்ணாடி , விளக்கு, ஓம் எழுதிய பித்தளைப் பட்டயம் ஆகியனவும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கலவம்கூடம் என்னும் இடத்தில் கண்ணாடியையும், முருகம்புழவில் ஓம் எழுதிய பித்தளைத் தகட்டையும்,சித்தம்பரத்தில் விளக்கையும், வைக்கம் அருகில் ஓம்காரேஸ்வரத்தில் கண்ணாடியையும் பிரதிஷ்டை செய்தார். இது ஒவ்வொன்றிலும் பெரிய தத்துவம் அடங்கி இருக்கிறது.
Indian Stam and First Day Cover for Sri Narayana Guru
சாக்ரடீஸும் ஸ்ரீ நாராயண குருவும்
கிரேக்க நாட்டில் டெல்பி என்னும் இடத்திலும் எகிப்து நாட்டில் லக்சார் என்னும் இடத்திலும் “உன்னையே நீ அறிவாய்” என்னும் தத்துவ வசனம் எழுதப்பட்டிருந்தது. இதை சாக்ரடீஸ் பிரபலப்படுத்தியதாக அவரது சீடர் பிளாட்டோ நமக்கு எழுதி வைத்துள்ளார். ஆனால் இவர்களுக்கு எல்லாம் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே நமது வேத, உபநிஷதங்களில் இந்தக் கருத்து கூறப்பட்டிருக்கிறது. “தத்வம் அசீ” (நீயே அது) “அஹம் பிரம்மாஸ்மி” ( நானே பிரம்மம்) என்ற வாசகங்கள் மிகவும் பிரபலமானவை. இதையே பாமர மக்களுக்கு விளங்க வைக்க ஒரு கண்ணாடியை முன்னர் வைத்து “நீயே உன்னை அறிவாய்” என்று சொல்லாமல் சொல்லிவைத்தார் ஸ்ரீ நாராயண குரு என்னும் மஹான். விளக்கு என்பது கல்வி அறிவையும் இறைவன் பற்றிய அறிவையும் எடுத்துக் காட்டும்.
“ஒரு ஜாதி,ஒரு மதம், ஒரு தெய்வம்” என்ற தாரக மந்திரத்தை உபதேசித்தார். ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சங்கம் தோற்றுவிக்கக் காரணமானார். “ ஜாதியைக் கேட்காதே, சொல்லாதே, நினைக்காதே” என்றும் கற்பித்தார். காவி உடை அணியாதத் துறவியாகத் திகழ்ந்தார். எதையும் கண்டிக்காமல், கண்டனம் செய்யாமல் ஆக்கபூர்வமான சமுதாயக் கட்டுமானத்தில் கவனம் செலுத்தினார். நாம் வணங்கத்தக்க மாபெரும் புனிதர் அவர்.
மலேசிய அதிசயம்– கண்ணாடிக் கோவில்
உலகில் கோவில்களில் கண்ணாடி பயன்படுத்தப்பட்டது இப்போது துவங்கியதல்ல. அழகர்கோவில், காஞ்சீ ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்பட நிறைய கோவில்களில் கண்ணாடி அறைகள் உண்டு. இங்கு சுவாமி எழுந்தருளும்போது நாம் உள்ளே சென்றால், கடவுளுடன் நாமும் பல நூறு இடங்களில் பிரதிபலிப்போம். கடவுள் திரு உருவைச் சுற்றி பல கோணங்களில் பல கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருப்பதால் நம் உருவம் நூற்றுக்கணக்கில் தோன்றும். வட இந்தியாவில் ரிஷிகேஷ் போன்ற தலங்களில் தற்காலத்தில் கண்ணாடிச் சிற்பங்கள் செய்துவைத்துள்ளனர். ஆயினும் இவை எல்லாவற்றையும் விஞ்சும் ஒரு அரிய சாதனையை மலேசிய இந்துக்கள் செய்துவிட்டனர்.
ஜோஹுர் பாஹு என்னும் இடத்தில் உள்ள ராஜ காளி அம்மன் கோவில் உலகிலேயே பெரிய, முதலாவது கண்ணாடிக் கோவில் என்றால் அது மிகை ஆகாது. மூன்று லட்சம் வண்ணக் கண்ணாடித் துண்டுகளால் ஜெகஜ் ஜோதியாக இந்தக் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுவர்களை எல்லாம் நேபாள நாட்டில் இருந்த கொண்டுவரப்பட்ட மூன்று லட்சம் ருத்ராக்ஷ மணிகள் அலங்கரிக்கின்றன. ஆத்மலிங்க சந்நிதி நடு நாயகமாக ஜொலிக்கிறது. விளக்கு வெளிச்சத்தில் கண்ணைப் பறிக்கும் பிரகாசம் நம்மை மாயாஜால உலகில் கொண்டுபோய் நிறுத்திவிடும். இது அதிசயக்கத் தக்க ஒரு கட்டுமான விந்தை. மலேசியாவில் மாபெரும் சுற்றுலாக் கவர்ச்சி.
புத்தர், ஏசு, அன்னை தெரசா முதலிய பத்து பளிங்குச் சிலைகளும் பிரகாரத்தை அலங்கரிக்கின்றன. அத்தோடு பொற்சிலைகளும் உண்டு. இந்துக் கடவுளரின் உருவங்கள் எல்லாம் இங்கே ஒளிவீசுகின்றன.
கண்ணாடி பற்றிய விநோத நம்பிக்கைகள்
உலகில் கண்ணாடி பற்றிய விநோத நம்பிக்கைகள் ஏராளமாக இருக்கின்றன. இந்தியாவில் இதை சுபம் தரும் சின்னம்மாகக் கருதுவர். தமிழ் புத்தாண்டை ஒட்டி வரும் மலையாளிகளின் “விஷு” புண்ய காலத்தில் காலையில் தூங்கி எழுந்தவுடன் பார்க்கவேண்டிய பொருள்களில் கண்ணாடியும் அடக்கம். நவராத்ரி மற்றும் சுமங்கலி, கன்யாப் பெண்கள் பூஜைகளில் குங்குமம், சிமிழ், சீப்பு ஆகியவற்றுடன் கண்ணடியையும் கொடுப்பர். இது ஆண்டாள் காலத்தில் இருந்து வரும் வழக்கம் என்பதை திருப்பாவை இருபதாம் பாடலில் அவரே கூறுகிறார் (உக்கமும் தட்டொளியும்).
கண்ணாடி உடைந்தால் அபசகுனம் என்றும் அதில் முகம் தெரியாவிட்டால் மரணம் சம்பவிக்கும் என்றும் அச்சம் உண்டு. “கண்ணாடியில் படியும் மாசும், மூச்சுக் காற்றும் நீங்குவது போல” என்ற உவமை தமிழ், வடமொழி இலக்கியங்களில் பல இடங்களில் பயிலப்படுகின்றன. ஆதிசங்கரர் (விவேக சூடாமணி 291), திருவள்ளுவர் (குறள்706), ஆண்டாள் (பாவை 20), புத்தரின் தம்மபதம், தொல்காப்பியம் ஆகியவற்றில் கண்ணாடி பிரதிபலிப்பு பற்றிய உவமைகள் உள்ளன.
மேலை நாடுகளில் கண்ணாடியை ஒரு தாயத்தாக பயன்படுத்தினர். இதற்குக் காரணம் பேய்களுக்கு கண்ணாடியில் முகம் தெரியாதென்ற நம்பிக்கையாகும். இறந்தவர்களின் ஆவியை கண்ணாடிகள் பிடித்துவைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை காரணமாக பழங்காலத்தில் இறந்தவர்கள் இருக்கும் அறையில் கண்ணாடிகளைத் துணி போட்டு மூடிவைத்தனர். படுக்கைக்கு முன்னால் கண்ணாடி இருந்தால் தூக்கம் வராது என்ற வாஸ்து சாஸ்திரமும் உண்டு. கண்ணாடி பற்றி முஸ்லீம் கிறிஸ்தவ அறிஞர்களும் எழுதி வைத்துள்ளனர். விரிவஞ்சி இத்தோடு நிறுத்துகிறேன்.
(லண்டன் சுவாமிநாதன் எழுதிய 600 கட்டுரைகளையும், நாகராஜன் எழுதிய 50–க்கும் மேலான கட்டுரைகளையும் இந்த பிளாக்—கில் படிக்கலாம். கட்டுரைகளைப் பயன்படுத்துவோர் பிளாக் பெயரையோ கட்டுரையாளரின் பெயரையோ கட்டாயம் வெளியிடவேண்டும்).
Sri Lankan Stamp for Sri Narayana Guru









You must be logged in to post a comment.