S.நாகராஜன்
அகாலிகம்
புத்தரின் போதனைகள் எளிமையானவை. ஞானோதயம் பெற்ற மஹா உள்ளத்தின் ஆழத்திலிருந்து மனித குலம் உய்க்க வேண்டும் என்ற பெரும் அருள் நோக்கில் அருளப்பட்டவை. அவர் அருளியவற்றை அகாலிகம் என்பர். அதாவது அ-காலிகம் – காலத்தை வென்றவை என்று பொருள். எந்தக் காலத்திற்கும் பொருந்துபவற்றை அப்படித் தானே சொல்ல முடியும்!
தான, சீல, பாவனா
புத்தரின் தத்துவம் ஒரு வறட்டு போதனை அல்ல, வாழ்ந்து காட்டிய ஒரு வழி முறை! அந்த வழி முறையை பாலி மொழியில் எளிய மூன்று சொற்களில் கூறி விடுவர்.
தானம். சீலம். பாவனை – இவையே அந்த மூன்று சொற்கள். கொடுக்கும் மனப்பான்மை இருந்தால் சேர்க்கும் மனப்பான்மையோ திருடும் மனப்பான்மையோ வராது. அதாவது ஆசைகள் அழியும்.
இரண்டாவது சீலம். வாழ்வாங்கு வாழ உண்டான அற நெறிகளே சீலம். கொல்லாமை, சத்யம். தயை உள்ளிட்ட அடிப்படையான அறப்பண்புகள்.
மூன்றாவது பாவனை. அதாவது தியானம். மனதைக் கட்டுப்படுத்தும் அற்புத சாதனை.மன சாந்தியை அனைவருக்கும் அளித்து துன்பமயமான உலகத்தை ஸ்வர்ண லோகமாக மாற்றும் வழி மனதைச் செம்மைப்படுத்துவதே!
அறிவால் அறி
இதையும் அவர் வற்புறுத்தி வலுக்கட்டாயமாக அனைவருக்கும் புகட்ட முற்படவில்லை. வந்து பார். ஆராய்ந்து ஏற்றுக் கொள் என்பதே அவர் அறிவுரை. இந்தப் பகுத்துப் பார்த்து ஏற்றுக் கொள்ளும் வழிமுறையை அவர் உபதேசித்ததாலேயே விஞ்ஞானிகள் உள்ளிட்ட அறிவால் அறியும் மனப்பான்மை கொண்டோர் புத்தமதத்தின் பால் வெகுவாக ஈர்க்கப்படுகின்றனர்.
கடவுள் என்றேனும் இந்தப் பூவுலகில் வந்தார் என்றால் அது புத்தரே
பேரறிஞர் அனடோல் பிரான்ஸ் தனது சுய சரிதத்தில் இப்படி எழுதுகிறார்: 1890ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதி அன்று பாரிஸில் உள்ள மியூசியத்திற்குச் செல்லும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆசிய கடவுளரின் மத்தியில் மோன மூர்த்தியாக எளிமையாக நின்று கொண்டிருந்த துன்புற்றலையும் மனித குலத்திற்கு புரிதலையும் தயையும் மேற்கொள்ள வழிகாட்டும் புத்தரின் பால் என் பார்வை பதிந்தது. கடவுள் என்றேனும் இந்தப் பூவுலகில் நடந்திருந்தார் என்றால் அவர் இவரே என்று நான் உணர்கிறேன். கடவுளாக அவரைக் கொண்டு அவர் முன்னால் மண்டியிட்டு பிரார்த்திக்கத் தூண்டப்பட்டேன்.
புத்தர் எண்பது வயது வரை வாழ்ந்தார். தனது 35ஆம் வயதில் அவர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார். தான் அறிந்த உண்மைகளை வெளிப்படையாக மன்னர்களுக்கும், ஆண்டிகளுக்கும், கற்றோருக்கும் மற்றோருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எளிய மொழியில் கூறினார். அவர் பேசியது புத்த வாஸனா. அதாவது புத்த வாக்கியங்கள் எனப்படும்.
ராஜக்ருஹத்தில் கூடிய முதல் சபை
அவர் மஹா நிர்வாணம் அடைந்த பின்னர் மூன்று மாதங்கள் கழித்து இப்போது பீஹார் மாநிலத்தில் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ராஜ்கீரில் கூடினர். பழைய மகத தேசத்தின் தலை நகராக இருந்த அதன் முந்தைய பெயர் ராஜக்ருஹம். பாலி மொழியில் இதை ராஜகஹா என்பர்.
இந்த முதல் சபைக் கூட்டத்தில் புத்தர் அருளிய தம்மா அதாவது தர்மமும் வினயமும் ஓதப்பட்டன. தர்மம் பற்றி யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் வினயம் பற்றிய விதிகளில் ஏதேனும் மாற்ற வேண்டுமா என்று ஆலோசனை செய்தனர்.புத்தர் தனது பிரதான சீடரான ஆனந்தரிடம் சிறு விதிகளை தேவையெனில் மாற்றிக் கொள் என்று சொல்லி இருந்தார். ஆனால் புத்தர் தங்களை விட்டுப் பிரியப் போகிறாரே என்று கண்ணீர் விட்டுக் கலங்கிய ஆனந்தர் அந்த இறுதி நேரத்தில் எவை சிறிய விதிகள் (Minor Rules) என்று கேட்கவில்லை. ஆனால் இந்த விவாதத்தில் மன்னர் மஹா காஸ்யபர் குறுக்கிட்டு, “எதையும் மாற்ற வேண்டாம். அவர் மறைந்தவுடனேயே விதிகள் மாற்றப்பட்டன என்ற பழிப்பெயர் நமக்கு வேண்டாம்” என்றார். அனைவரும் அத ஏக மனதாக ஆமோதித்தனர்.
இரண்டாவது சபையில் தோன்றிய மஹா சங்கிகா
அடுத்து நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாவது சபைக் கூட்டம் கூடியது. வினயத்தில் சில சிறு விதிகள் காலத்தின் தேவைக்கு ஏற்ப மாற்றலாமா என்று விவாதிக்கப்பட்ட து. சிலர் மாற்றலாம் என்றனர். சிலர் மாற்றக் கூடாது என்றனர். துறவிகளில் ஒரு பகுதியினர் தனியே பிரிந்து சென்று மஹா சங்கிகா- பெரும் சங்கம்- என்ற அமைப்பை உருவாக்கினர்.
அசோகர் காலத்தில் கூடிய மூன்றாவது சபை.
மூன்றாவது சபைக்கூட்டம் மாமன்னர் அசோகரின் காலத்தில் (கி.மு. மூன்றாம் நூற்றாண்டு) கூடியது. இதில் தர்மம் பற்றியும் வினயம் பற்றியும் விவாதிக்கப்பட்டது. சபைக்குத் தலைமை வகித்த மொக்கலிபுத்த திஸ்ஸா, கதா வாத்து என்ற புத்தகத்தைத் தொகுத்தார்.
இது தேரா வாதம் என்ற பெயரைக் கொண்டது.அசோகரின் மகனான மஹிந்தா இந்த சபையில் ஓதப்பட்ட திரிபிடகா மற்றும் உரைகள் ஆகிய அனைத்தையும் எடுத்துக் கொண்டு ஸ்ரீலங்கா வந்தார். அந்த ஏட்டுப் பிரதிகள் அனைத்தும் அப்படியே மாறாமல் ஸ்ரீலங்காவில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மஹாயானம் உருவானது
அடுத்த நானூறு ஆண்டுகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. மஹாயானம் உருவானது. இதற்கு மாறுபட்டது ஹீன யானம் என்று ஆனது.
மிகப்பெரும் மேதையான நாகார்ஜுனர் தோன்றி மஹாயான கொள்கைகளை சரியான விதத்தில் விளக்கும் மத்யாமிக காரிகா என்ற நூலை எழுதினார்.
ஆக புத்த மதம் தனது தாயகமான பாரதத்திலிருது கிளம்பி, ஸ்ரீலங்கா, தாய்லாந்து, பர்மா, கம்போடியா,லாவோஸ், சீனா, ஜப்பான் என உலகெங்கும் பரவலாயிற்று.
இன்றோ அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் புத்த மதம் எதையெல்லாம் போற்றி வளர்த்ததோ அதையெல்லாம் கற்க ஆயிரக்கணக்கில் ஆர்வலர்கள் கூடுகின்றனர்.
அப்படி இந்த ஆர்வத்திற்கு என்ன காரணம்? வரும் வாரங்களில் புத்த மதம் பற்றிய வரலாற்று அற்புதங்களைப் பார்ப்போம்.
| சின்ன உண்மை
1950ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவில் கூடிய பௌத்தர்களின் அமைப்பு ஹீனயானம் என்ற வார்த்தையை ஒட்டு மொத்தமாக நீக்கி விடலாம் என்று முடிவெடுத்தது. ஆக இன்று இருப்பது ஒரே புத்த மதம் தான்! |
-தொடரும்
Please visit Dr R Nagasamy’s following blog to read research articles on Tamil and Sanskrit literature, History and archaeology.


You must be logged in to post a comment.