Part 13 of Zen Buddhism by Santanam Nagarajan
13. ஹகுயின் கோயன்கள்!
ச.நாகராஜன்
சென்ற அத்தியாயத்தில் தரப்பட்டுள்ள கோயன்களுக்கான சரியான விடைகளைப் பார்க்கலாம்.
1) இப்போது ஒரு கையின் ஓசையைக் கேட்ட நீங்கள் அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?
விடை: நான் களையைப் பிடுங்குவேன். தரையைச் சுத்தம் செய்வேன். நீங்கள் களைத்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு மசாஜ் செய்வேன்.
2) ஒரு கையின் ஓசையைக் கேட்பது அவ்வளவு எளிது என்றால் நானும் தான் அதைக் கேட்கிறேனே?
விடை:ஒரு பேச்சும் பேசாமல் மாஸ்டரின் முகத்தில் சிஷ்யர் அறைகிறார்!
3) ஆயிரம் மைலுக்கு அப்பால் உள்ள தீயை அணை!
விடை: விரல் நுனிகளால் சிஷ்யர் தீ ஜுவாலையின் வடிவத்தைச் செய்து காட்டுகிறார்.பிறகு அதை உஸ் என்று ஊதி அணைக்கிறார்.
4) உங்கள் கைகளைப் பயன்படுத்தாமல் என்னை நிற்க வை!
விடை: சிஷ்யர் எழுந்து நிற்கிறார்.இரண்டு மூன்று அடிகள் முன்னால் நடக்கிறார்.
5) வானம் எவ்வளவு உயரம்?
விடை: சிஷ்யர் அறையின் கூரையைச் சுட்டிக் காட்டி
இங்கிருந்து அது ஏழு அடி என்கிறார்.
ஹகுயின் இகாகு
கோயன்கள் வரலாற்றில் தலையாய இடத்தைப் பிடிப்பவர் மாஸ்டர் ஹகுயின் இகாகு. ஜப்பானில் ஹரா என்ற சிறிய கிராமத்தில் 1686ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி ஹகுயின் பிறந்தார்.அவர் பிறந்த காலத்தில் ஜென் பிரிவு தனது க்ஷீண தசையில் இருந்தது.அதை உன்னதமான நிலைக்கு ஏற்றி விட்டார் ஹகுயின். ரிஞ்ஜாய் பிரிவைச் சேர்ந்த அனைவரும் ஹகுயினையே பெரும் மாஸ்டராக இன்றளவும் போற்றி வருகின்றனர்.
குழந்தையாக இருந்த போது ஒரு நாள் ஹகுயின் துறவி ஒருவரின் சொற்பொழிவைக் கேட்கப் போனார். அந்தத் துறவி எட்டு கடும் நரகங்களைப் பற்றிப் பேச நரகம் பற்றிய பயம் ஹகுயினுக்கு ஏற்பட்டது. நரகத்திலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் புத்த துறவியாக வேண்டும் என்ற எண்ணம் அவர் ஆழ் மனதில் பதியவே தனது 15ஆம் வயதில் பெற்றோரிடம் அனுமதி பெற்று ஷோயின்-ஜி மடத்தில் அவர் சேர்ந்தார்.அங்குள்ள தலைமை துறவிக்கு உடல் நலக் குறைவு ஏற்படவே அருகிலிருந்த டைஷோ-ஜி மடாலயத்தில் சேர்ந்தார்.தாமரை சூத்திரம் உள்ளிட்ட புத்த மத நூல்களைக் கசடறக் கற்றார்.
19ஆம் வயதில் அவர் பிரபல மாஸ்டரான யான்டோ க்வான்ஹோ பற்றிய கதையைப் படிக்க நேர்ந்தது. க்வான்ஹோவை கொள்ளையர்கள் கொன்றார்கள் என்பதைக் கேட்ட அவர் ஒரு துறவியாக இருந்தும் அவர்களிடமிருந்து கூடத் தப்பிக்க முடியவில்லை எனில் நரகத்திலிருந்து தப்பிப்பது எப்படி சாத்தியம் என்று எண்ணலானார். விளைவு, துறவியாகும் எண்ணத்தைக் கை விட்டு நாடெங்கும் சுற்றித் திரியலானார். ஒரு நாள் கவிஞரும் புத்த துறவியுமான போ என்பவரைச் சந்திக்க நேர்ந்தது.போவின் தொடர்பால் திரும்பவும் துறவியாகும் எண்ணம் அவருக்கு வலுப்பட்டது.
புத்த மடாலய முற்றத்தில் ஏராளமான சுவடிகள் இருப்பதைப் பார்த்த ஹகுயின் அவற்றை ஒவ்வொன்றாகப் படிக்கலானார். அதில் மிங் வம்சத்தில் உருவான ஜென் கதைகளைப் பற்றிய புத்தகம் ஒன்றும் இருந்தது. அதில் ஈர்க்கப்பட்ட ஹகுயின் ஜென் பிரிவு போதித்த சூக்ஷ்மங்களை ஆழ்ந்து கற்றார்.
பிறகு இரண்டு வருட காலம் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு ஒரு நாள் ஐகன்-ஜி என்ற ஆலயத்திற்கு வந்து சேர்ந்தார்; அங்கு ஏழு நாட்கள் கடும் தவத்தை மேற்கொண்டார். ஆலய மணி ஓசை அடிப்பதைக் கேட்டவுடன் அங்கு அவருக்கு ஞானோதயம் ஏற்பட்டது.பின்னர் வாழ்நாள் முழுவதும் கோயென்களைப் பரப்பலானார்.

Picture of Hakuin Capping Monk
உள்ளுணர்வின் மூலம் ஆழ்ந்த அர்த்தங்களைப் பல கோயன்களுக்குத் அவர் தெரிந்து கொண்டார்.ஒரு முறை மழை கொட்டுகொட்டென்று கொட்ட முழங்கால் அளவு நீர் பெருகிய நிலையில் ஒரு சிறிய கோயனுக்கு உண்மையான அர்த்தத்தை அவர் தெரிந்து கொண்டார். இப்படிப் பல அனுபவங்கள் அவருக்கு ஏற்பட்டது.
திடீர் திடீரென இப்படி பல கோயன்களுக்கு அர்த்தங்கள் புரியும் போது அவர் சிரிப்பார். இப்படி அடிக்கடி சிரிப்பதைக் கண்ட அனைவரும் அவரை ஒரு பைத்தியக்காரர் என்று நினைத்தனர்.
தியானம் தான் மிகவும் முக்கியமானது என்பதே அவரது அடிப்படைக் கொள்கையாக இருந்தது.தியானமும் உயிர்த்துடிப்புள்ளதாக இருக்க வேண்டும் என்றார் அவர்.அமைதியாக ஓரிடத்தில் தியானம் செய்வதை விட அன்றாட உலக நடவடிக்கைகளுக்கு இடையே செய்யப்படும் தியானம் ஆயிரம் மடங்கு வலிமை வாய்ந்தது என்று வலியுறுத்தினார் அவர். ஏனெனில் தினசரி வாழ்க்கையில் அன்றாட பிரச்சினைகளுக்கு இடையே தியானத்தை மேற்கொள்வது ஒரு கஷ்டமான காரியம். அப்படிச் செய்யப்படும் தியானம் மேலான ஒரு உள்ளுணர்வைத் தரும் என்றார் ஹகுயின்.
அன்றாட உலகவாழ்க்கையில் ஈடுபடுவோர் பெரும் உள்ளுணர்வு எல்லாவற்றையும் துறந்து காடுகளிலோ அல்லது மடாலயங்களிலோ துறவிகள் செய்யும் தியானத்தினால் வரும் உள்ளுணர்வை விட மேம்பட்ட ஒன்றா என்று ஒருவர் கேள்வியை எழுப்பினார் அவரிடம். அதாவது இருவர் பெறும் ஞானோதயமும் ஒன்று தானே என்பதே அவரது கேள்வி.
இதற்கு ஹகுயின் பதில் அளித்தார் இப்படி:-“ நீ ஒரு துறவியாக இருந்தாலும் கூட உனது பயிற்சி உள்ளார்ந்த்தாக இல்லாவிடில், உனது நோக்கம் தூய்மையானதாக இல்லாவிடில் நீ சாமான்யனை விட எப்படி வேறானவனாக இருக்க முடியும்? சரி, நீ ஒரு சாமான்யனாக இருந்தால், உனது நோக்கம் தூய்மையானதாக இருந்து உனது பயிற்சியும் உள்ளார்ந்த தீவிரத்துடன் இருந்து, நீ பெரும் ஒழுக்கமுள்ளவனாக இருந்தால் அது தூய்மையான துறவியை விட எப்படி வேறானதாக இருக்க முடியும்?
தூய்மையும் நோக்கத்தில் உள்ளார்ந்த ஆர்வமும் ஒழுக்கமும் தான் முக்கியமே தவிர இருக்கும் இடம் எது என்பதில் பெரும் வேறுபாடு ஒன்றும் இல்லை என்பதே அவரின் பொருள் பொதிந்த பதில்!
சின்ன உண்மை
தனது அறுபதாம் வயதிற்குப் பின்னர் ஹகுயின் சித்திரக் கலையில் ஆர்வம் செலுத்தினார். 84 வயது வரை வாழ்ந்த அவர் சுமார் ஆயிரம் ஓவியங்களையும் சித்திர எழுத்துக்களையும் வாழ்வின் இறுதிக்குள் படைத்து விட்டார்
-தொடரும்
Part 13 of Zen Buddhism by Santanam Nagarajan


You must be logged in to post a comment.