
ராமாயண வழிகாட்டி- 4
ச.நாகராஜன்
சமுத்திரத்தில் சேரும் இரு கட்டைகள்!
யதா காஷ்டம் ச காஷ்டம் ச சமேயாதாம் மஹார்ணவே I
சமேத்ய ச வ்யபேயாதாம் காலமாஸாத்ய கஞ்சன் II
ஏவம் பார்யாஸ்ச புத்ராஸ்ச ஞாதயஸ்ச வசூனி ச I
ஸமேத்ய வ்யவதாவந்தி த்ருவோ ஹ்யேஷாம் விநாபவ: II
மஹார்ணவே –சமுத்திரத்தில்
காஷ்டம் ச காஷ்டம் ச – இரண்டு கட்டைகள்
சமேயாதாம் – சேருகின்றன
கஞ்சன் காலே சமேத்ய – சிறிது காலம் கூடி
ஆஸாத்ய ச – இருந்து விட்டு
வ்யபேயாதாம் – பிரிகின்றன
யதா ஏவம் – அவ்வண்ணமே
பார்யா ச –மனைவிமார்களும்
புத்ரா ச – புதல்வர்களும்
ஞாதய: ச – ஞாதிகளும்
வசூனி ச – பொருள்களும்
ஸமேத்ய – சேர்ந்திருந்து
வ்யவதாவந்தி – பிரிகின்றன
ஏஷாம் விநாபவ: – இவர்களின் பிரிவு
த்ருவ: ஹி – நிச்சயமே
அயோத்யா காண்டம் 105ஆம் ஸர்க்கம் 26 மற்றும் 27ஆம் ஸ்லோகங்கள்
பரதன் ராமரிடம் ராஜ்யத்தை ஏற்க வேண்டிய போது ராமர் பித்ருவாக்கிய பரிபாலனத்தைச் சொல்லும் போது கூறியது இது.
வால்மீகி மஹரிஷி முதல் முதல் காவியத்தைச் செய்தவர் என்பதால் ஆதிகவி என்று போற்றப்படுகிறார். வால்மீகி ராமாயணத்தில் வரும் அற்புதமான உவமைகளும் கருத்துக்களும் காலம் காலமாக பின் வந்த இலக்கியங்க:ளில் காணப்படுகின்றன. மேலே உள்ள கருத்தை மஹாபாரதத்திலும் காணலாம்.சாந்தி பர்வத்தில் வரும் இதே கருத்தைப் பார்க்கலாம்:
எவ்விதம் பெரிய கடலில் கட்டையும் கட்டையும் சேர்க்கை அடையுமோ, சேர்ந்த பின் விலகுமோ அவ்விதம் பிராணிகளின் சேர்க்கையிருக்கிறது. புத்ரர்களும் பௌத்ரர்களும் ஞாதிகளும் பந்துக்களும் அவ்விதமே இருக்கிறா
ர்கள்.
(சாந்தி பர்வம் 173வது அத்தியாயம்; மோக்ஷ தர்மம்)
ஸேனஜித் என்ற மன்னன் தன் புதல்வனை இழந்த சோகத்தால் வாட அவனது நண்பரான பிராமணர் ஒருவர் ஆறுதல் அளிக்கும் போது இந்தக் கருத்து தெரிவிக்கப்படுகிறது.

இதே கருத்து சங்க நூலான புறநானூற்றிலும் இடம் பெறுகிறது.
இடம் பெறும் பாடலோ உலகப் புகழ் பெற்ற பாடல். கணியன் பூங்குன்றனார் இயற்றியது. புறநானூறு பாடல் எண் 192 ஐப் பார்ப்போம்:
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னாதென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணை போல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே.
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
(புறநானூறு 192)
இதன் சுருக்கமான பொருள் :-
அனைத்து ஊர்களும் எம்முடைய ஊர்களே. அனைத்து மக்களும் எமது உறவினரே! தீமையும் நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை. துன்பமும் ஆறுதலும் கூட மற்றவர் தருவதில்லை. செத்துப் போவது புதுமை இல்லை. வாழ்தல் இன்பம் என்று மகிழ்ந்தது இல்லை. வாழ்வது துன்பம் என வெறுத்து ஒதுங்கியதுமில்லை. மின்னலொடு வரும் மழை வானத்திலிருந்து பொழிந்து கல்லை மோதி மணலைப் புரட்டி வரும் வளமார்ந்த பெரிய ஆறு ஒன்றில் ஓடுகின்ற தெப்பம் (கட்டை) போல இயற்கை வழியில் நடக்கும் உயிர் வாழ்வு என்பதை திறவோர் கண்ட காட்சியால் தெளிந்து அறிந்திருக்கிறோம். ஆகவே பெரியோரை வியப்பதும் இல்லை. சிறியோரை இகழ்ந்து தூற்றுவதும் இல்லை
ஹிந்து மதக் கருத்தான இதை முதலில் கூறிய ராமாயணம், மஹாபாரதம் ஆகிய நூல்களை விட்டு விட்டு பௌத்த மதத்திற்கு வலிந்து ஏற்றி கணியன் பூங்குன்றனாரை ஒரு பௌத்தர் என்று சிலர் சித்தரிப்பது அவர்கள் பழைய நூல்களை நன்கு கற்காததும், சம்ஸ்கிருதத்தை அவர்கள் அறியாததுமே காரணம் என்று கொள்ளலாம்.
***********