அனைத்து விஞ்ஞானத் துறை நூல்களையும் காண்பித்த அதிசய மேதை ப்ரஹ்ம ஸ்ரீ சுப்பராய சாஸ்திரி! – Part1
ச.நாகராஜன்
பண்டைய ரிஷிகளையும் ஜோதிட மேதைகளையும் பற்றியே பேசுகிறோமே நவீன காலத்தில் இப்படிப்பட்ட மேதை யாரும் இல்லையா என்று கேட்பவர்க்கு பளிச்சென பதில் அளிக்க வந்த மாமணி ப்ரஹ்ம ஸ்ரீ சுப்பராய சாஸ்திரி! இவரது வரலாறு மிகவும் சுவாரசியமானது; அதிசயமானது; அற்புதமானது. அதே சமயம் நம்மை சோகத்திலும் ஆழ்த்தும். நமது கடமை தவறிய பாங்கையும் சுட்டிக் காட்டும்; எதிர்காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வழி வகுக்கும்.
பிரபல விஞ்ஞானியான ஜகதீஸ் சந்திர போஸ¤க்குத் தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றவே சுப்பராய சாஸ்திரி தனது வாழ்க்கை வரலாறை எழுதியுள்ளார். இல்லாவிடில் இப்படிப்பட்ட ஒரு பெரிய மகானைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வழியே இருந்திருக்காது. 1973ம் ஆண்டு தான் இவரது வரலாறு அச்சிடப்பட்டது. அபூர்வமான அந்த வரலாறின் சுருக்கத்தைப் பார்ப்போம்.
சாஸ்திரிகளின் இளமை வாழ்க்கை
சாஸ்திரிகள் 1866ம் ஆண்டு தமிழ்நாட்டில் தர்மபுரி ஜில்லாவில் உள்ள ஹோசூர் தாலுக்காவில் டோகரே அக்ரஹாரம் என்னும் சிற்றூரில் பிறந்தார்.பிராமண குடும்பத்தில் மூத்தவராகப் பிறந்த சாஸ்திரிகள் இளமைப் பருவத்தில் மிகவும் வறுமையில் வாடினார்.இளமையிலேயே பெற்றோரையும் இழந்ததால் பிச்சை எடுக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் அவருக்கு 12 வயது ஆகும் போது எட்டு வயது சிறுமியை மணம் வேறு செய்து முடித்தார்கள். அப்போது அங்கு பரவிய கொடுமையான காலரா தொத்து வியாதியால் சாஸ்திரிகளின் குடும்பத்தில் உள்ளவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பலி ஆனார்கள்.
காட்டிலுள்ள குகையில் குருஜி தரிசனமும் உபதேசமும்
இனி தாங்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட சாஸ்திரிகள் இந்த உலகில் வாழ வேண்டாம் எனத் தீர்மானித்து மனம் போன படி நடந்து கோலார் ஜில்லாவில் அவனி என்ற இடத்தில் ஒரு காட்டிற்குள் புகுந்தார்.அங்கு கொடிய புலிகளும் விஷப் பாம்புகளும் நிறைந்த இடத்தில் வாழ ஆரம்பித்தார்.இலை தழை கிழங்குகளையும் நீரையும் மட்டும் ஆகாரமாகக் கொண்டு பல வருடம் அங்கு வாழ்ந்து வந்தார்.ஒரு நாள் ஒரு குகைக்குள் நுழைந்த அவர் பாதாளத்தில் தென்பட்ட ஒரு வழியில் சென்றார். அங்கே அதிசயமான ஒரு பெண்மணி தோற்றமளித்தார். சாஸ்திரிகள் அவர் தன் தாயார் தான் என்பதைத் தெரிந்து கொண்டார். திடீரென்று அந்தத் தோற்றமும் மறைந்தது. இந்த குகையில் தான் தனது குருஜியை அவர் கண்டார்.குருஜி தரிசனத்திற்குப் பின்னர் அவர் வாழ்வே மாறியது. குருஜி அவர் வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார்.அவரிடமிருந்து ஏராளமான வித்தைகளையும் பௌதிக சாஸ்திரங்களையும் கற்றார்.இந்த சாஸ்திரங்களை அழிவுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்றும் தன் அனுமதியின்றி யாருக்கும் கற்றுக் கொடுக்கக் கூடாது என்றும் அவர் சாஸ்திரிகளுக்கு அறிவுறுத்தினார்!சாஸ்திரிகளது சரஸ்வதி நாடியை அவர் தூண்டி விட ஒரு பெரும் ஒளிப்பிழம்பு சாஸ்திரிகளிடம் நுழைந்து ஐக்கியமானது.பிறகு குருஜி அவர் நாக்கில் ஒரு தர்ப்பையை வைத்து எழுதினார்.இதைத் தொடர்ந்து அனைத்து பௌதிக சாஸ்திரங்களிலும் அபார வல்லமையை சாஸ்திரிகள் அடைந்தார்.
உலகின் முதல் விமானத்தை அமைக்க விஞ்ஞானம் தந்தவர்
பின்னர் குருஜி அனுமதி தர சாஸ்திரிகள் 25 வருட காலம் தனது மனைவியுடன் அனெகல் என்னும் சிற்றூரில் தங்கி இருந்தார். அவரைப் பேரும் புகழும் வந்தடைந்தன.பாரதமெங்கும் அவரது புகழ் பரவவே பூஞ்ஜிலால் கிரிதர் என்ற பெரும் தொழிலதிபர் பம்பாய்க்கு சாஸ்திரிகளை அழைத்தார். டாக்டர் டால்படே என்பவர் அப்போது ஆகாயவிமானங்களை அமைக்க ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அவர் சாஸ்திர்களைச் சந்திக்கவே பாரத்வாஜர் இயற்றிய ஆகாய விமானம் கட்டும் முறையை விளக்கும் வைமானிக சாஸ்திரத்தை உபதேசித்து அவருக்கு விமானக் கட்டுமானக் கலையைக் கற்பித்தார்.
உலகின் முதல் விமானம் சௌபாத்தி கடற்கரையிலிருந்து 1900ம் வருட வாக்கில் ஒரு நாள் ஆகாயத்தில் பறந்து அனைவரையும் வியப்படைய வைத்தது. இதற்குப் பின்னரே 17-12-1903ல் ரைட் சகோதரர்கள் தங்களின் முதல் விமானத்தைப் பறக்க வைத்தது குறிப்பிடத் தகுந்தது.பம்பாயில் சாஸ்திரிகளைப் பார்க்க தினமும் கூட்டம் நிரம்பி வழிந்தது.சாஸ்திரிகளின் மேதாவிலாசத்தைக் கண்டு வியந்த இந்திய விஞ்ஞானிகள் அவர் கூறும் அனைத்து நூல்களையும் மக்களின் நன்மைக்காக வெளியிடுமாறு வேண்டினர்.தனது குருஜியிடம் அனுமதி வாங்க சாஸ்திரிகள் பெங்களூர் திரும்பினார். இந்த இடத்தோடு ஜகதீஸ் சந்திர போஸ¤க்காக எழுதிய சுய சரிதம் திடீரென்று முடிகிறது.பம்பாயில் ஜகதீஸ் சந்திர போஸை சாஸ்திரிகள் சந்தித்த விஷயம் இறுதி அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஸ்ட்ராலஜிகல் மாகஸைன் நிறுவனரின் சந்திப்பு
அஸ்ட்ராலஜிகல் மாகஸைனை நிறுவிய சூர்யநாராயண ராவ் இவரை ஷிமோகாவுக்குச் செல்லும் போது 1885ம் ஆண்டு அதிர்ஷ்டவசமாக சந்தித்தார்;அவருடன் இடைவிடாது தொடர்பை வைத்திருந்தார்.அவரது பெருமுயற்சியால் பல புத்தகங்கள் பிரசுரிக்கப்பட்டன. சாஸ்திரிகளின் இறுதிக் காலம் சோகமயமானது.சுதந்திரப் போர் உச்சகட்டத்தை அடைந்ததால் அவருக்கான ஆதரவைப் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அவரது பணிகள் முற்றிலுமாக நிறைவு பெறவில்லை.வாழ்க்கையில் அவருக்கு விரக்தி ஏற்பட்டது. ஒரு பெரும் மேதையை அவர் வாழ்நாளில் நன்கு கௌரவிக்காது அவரது பணியை முற்றுப் பெற வைக்காது இருந்த சமுதாயத்தின் அவல நிலையை எண்ணி வருந்த வேண்டியது தான். மஹாகவி பாரதி உள்ளிட்டோர் வாழ்ந்த காலத்தில் ஆதரவும் பெறவில்லை;உரிய சிறப்புக்களையும் அடையவில்லை. அதே கதி தான் சாஸ்திரிகளுக்கும் ஏற்பட்டது. அற்புதமான அந்த மேதையின் பரம்பரையினர் இன்றும் பெங்களூரில் வாழ்ந்து வருகின்றனர்.
ஜோதிட புத்தகங்கள்
சாஸ்திரிகளின் ஜோதிட ஞானம் அபாரமானது.ஏராளமான புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.ஜோதிட நூல்களுக்கான அபாரமான விரிவுரைகளையும் அவர் எழுதியுள்ளார். அவரது நூல்களைப் பற்றி எழுதப் புகுந்தால் அது பெரும் நூலாக ஆகி விடும் என்பதைக் கருதி அவரது சில புத்தகங்களின் தலைப்பையும் அது கூறும் விவரங்களையும் சிறு குறிப்புகளாக இங்கு காணலாம்:
1) ப்ரஹ்மாண்ட சாரம்:- மஹரிஷி வியாஸர் அருளியது.இதில் பல ப்ரஹ்மாண்டங்களைப் பற்றியும் அதில் உள்ள உலகங்கள் மற்றும் சக்திகள் பற்றியும் அசையும் ஜந்துக்கள் மற்றும் அசையாப் பொருள்கள் பற்றியும் விவரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2) அம்ச போதினி :-மஹரிஷி பரத்வாஜர் அருளியது. இதில் சூரியன், சந்திரன் போன்ற கிரகங்கள் பற்றியும் அதன் கிரணங்கள், வெப்ப சக்தி ஆகியவை பற்றியும் விவரங்கள் உள்ளன.வெவ்வேறு விதமான கண்ணாடிகளை உருவாக்குவது பற்றியும் ஒவ்வொரு கிரகத்திலிருந்து வரும் வெவ்வேறு ஆற்றல்களை அளவிடும் முறையும் விளக்கப்பட்டுள்ளது.சூரிய கிரணங்களைச் சேமிக்கும் இயந்திரங்கள் பற்றியும் அந்த கிரணங்களை ஆற்றலுக்குத் தக்கவாறு பிரிக்கும் முறைகளும் இதில் விளக்கப்பட்டுள்ளது.
சாஸ்திரிகளின் நூல்களின் தலைப்புக்களையாவது நாம் தெரிந்து கொண்டால் பாரத ரிஷிகளின் எல்லையற்ற விஞ்ஞான அறிவை ஒரு சிறிதாவது புரிந்து கொள்ள முடியும் என்பதால் இன்னும் சில நூல்களின் தலைப்பைப் பார்ப்போம்.
-தொடரும்
இந்தக் கட்டுரை ஸ்ரீ ஜோஸியம் பத்திரிக்கையில் வெளியான கட்டுரை
இதை விரும்புவோர் இதர அபூர்வ ஜோதிட மேதைகள் பற்றியும் நாடி ஜோதிடம் பற்றியும் இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதிய கட்டுரைகளைப் படிக்க விரும்புவர்
My brother’s contact details : santhanam nagarajan snagarajans@gmail.com