
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 6 November 2018
GMT Time uploaded in London – 7-22 am
Post No. 5632
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
வேலைக்காரியை கட்டி அணைத்த அகராதி ‘பிடித்த’ வெப்ஸ்டர்! (Post No.5632)
வெப்ஸ்டர் அகராதியை அறியாதோர் அறியாதோரே (அறிவற்றவர்களே) ஏனென்றால் இன்று அமெரிக்கர்கள் பின்பற்றும் எளிமையாக்கப்பட்ட ஆங்கில ஸ்பெல்லிங்- குகளை அறிமுகப்படுத்தியவர் அவரே. எழுத்து சீர்திருத்தத்தின் சிற்பி.
அவர் அகராதி ‘படித்தவர்’, அகராதி ‘பிடித்தவர்’, அகராதி ‘செய்தவர்’ என்பது இரு சுவையான சம்பவங்கள் மூலம் வெளிப்படும்.
அமெரிக்காவின் எழுத்தாளர், அகராதி உருவாக்கியவர், அமெரிக்க அறிவுத் தந்தை, பத்திரிக்கை ஆசிரியர், பெடரெலிஸ்ட் கட்சியின் பிரமுகர் என்று பெயர் எடுத்த நோவா வெப்ஸ்டர் (NOAH WEBSTER) 1758ல் பிறந்தார்; 1843ல் இறந்தார். யேல் பல்கலைக் கழகத்தில் கற்றவர்.
தமிழில் அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசுவோரை அகராதி பிடித்த ஆள் என்று பறைவர். உண்மையில் அவர்கள் செப்ப விழைவது- அகராதி ‘படித்த’ ஆள் என்பதே. அந்தக் காலத்தில் ஸம்ஸ்க்ருதம் கற்றவர்கள், தநது புலமையினை வெளிக்காட்ட நிறைய பொன்மொழிகளை– சுபாஷிதங்களை- உதிர்ப்பர். விதண்டா வாதம், குதர்க்க வாதம், வாக்குவாதம் முதலியவற்றில் ஈடுபட்டு சொற்களுக்கு புது வியாக்கியானம் தருவர். இதன் அடிப்படையில் பிறந்ததே அகராதி ‘பிடித்த’ பயல்.
நோவா வெப்ஸ்டர் ஒரு முறை சமையல் அறையில் வேலைக் காரியை கட்டி அணைத்து முத்தம் தந்தபோது அவரது மனைவி திடீரென்று உள்ளே வந்துவிட்டார்.
ஆங்கில பாணியில், “மிஸ்டர் வெப்ஸ்டர், உமது செயலைக் கண்டு திடுக்கிட்டுப் போனேன்” என்றார்
மற்ற யாராவது இப்படி செய்திருந்தால் கை, கால் நடுங்கி, உளறிக்கொட்டி, கிளறி மூடி இருப்பர்.
ஆனால் (அகராதி பிடித்த) வெப்ஸ்டர் சொன்னார்:
“அடி, என் செல்லக்கிளியே!
“நீ திடுக்கிடவில்லை! நீ ஆச்சர்யப்பட்டுப் (amazed) போனாய்!
நாங்கள் இருவர்தான் திடுக்கிட்டுப் (surprised) போனோம்”.
படித்தவர்கள் தவறு செய்தபோதும் நயமிக்கச் சொற்களைப் பிரயோகித்து தம் அறிவை பிரகாஸம் போட்டுக் காட்டுவர்.
XXXX

இன்னொரு முறை எழுத்து அறிவு இல்லாத ஒரு ஜீவனுக்கு கடிதம் எழுத வெப்ஸ்டர் உதவினார். அவன் கொச்சை ஆங்கிலத்தில் சொல்லச் சொல்ல, இவர் அதை சரியான மொழியில் எழுதிக்கொண்டு இருந்தார்.
இறுதியாக கடிதத்தை முடிக்கும் தருவாயில், வெப்ஸ்டர் கேட்டார்,
“ஐயா, வேறு ஏதேனும் சொல்ல விழைகிறீர்களா?” என்று.
அந்த ‘ஜந்து’ சொன்னது,
ஆமாம், மறக்காமல் இந்த வரியையும் சேர்த்து விடுங்கள்.
“இப்படி கொச்சையாக எழுதியதை மறந்துவிட்டு, கடித்தின் அர்த்ததி மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்!” (என்று எழுதிவிடுங்கள்)
அவனுக்காக அருமையான ஆங்கிலத்தில் கடிதம் எழுதிக் கொண்டிருந்த வெப்ஸ்டருக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.
‘நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு’, ‘குலத்து அளவே யாகுமாம் கல்வி’ என்று ஆன்றோர்கள் செப்பியது பொய்யாமோ?

Tags-வெப்ஸ்டர், வேலைக்காரி
–சுபம்–


You must be logged in to post a comment.