
சம்ஸ்கிருதச் செல்வம்-10
10. அனைத்தும் பெற ஆறு கேள்விகள் !
ச.நாகராஜன்
வாழ்க்கையில் வெற்றி பெறவும் ஒரு திட்டத்தில் வெற்றி பெறவும் ஒரு பொருள் அல்லது இடம் அல்லது நிறுவனம் அல்லது ஒரு தனி நபர் பற்றி மதிப்பீடு செய்ய SWOT analysis என்ற உத்தியை நிபுணர்கள் இன்றைய நவீன உலகில் கடைப்பிடிக்கின்றனர். SWOT என்றால் Strengths, Weaknesses, Opportunities,Threats என்று அர்த்தம். பலம், பலஹீனம், வாய்ப்புகள், எதிர் வரும் அபாயங்கள் ஆகிய நான்கை நன்கு அலசி ஆராய்ந்தால் வெற்றி நிச்சயம் என்கிறது ஆல்பர்ட் ஹம்ப்ரி என்பவர் கண்டுபிடித்த ஸ்வாட் அனாலிஸிஸ்.
ஆனால் வெகு காலம் முன்பே நமது அறிஞர்கள் “ஆறு கேள்வி அனாலிஸிஸைக்” கண்டு பிடித்துள்ளனர். கவிஞர் அழகுற அதை இரண்டே வரிகளில் கூறுகிறார்:
க: கால: கானி மித்ராணி
கோ தேஷ: கௌ வ்யயாகமௌ I
கோஹம் கா சைவ மே
ஷக்திரிதி சிந்தயம் முஹுர்முஹு: II
க: கால: – என்ன நேரம் இது? (What time is this?)
கானி மித்ராணி – எனது நண்பர்கள் யார் யார்? (Who are my friends?)
கோ தேஷ: – இது என்ன இடம்? (Which is this place?)
கௌ வ்யயாகமௌ – இதில் செலவுகள் என்ன? ஆதாயங்கள் என்ன? (What are expenses an gains?)
கோஹம் – நான் யார் (Who am I ?)
கா சைவ மே ஷக்திரிதி – எனது பலம் என்ன? (What is my strength?)

“ஒருவன் எப்போதுமே என்ன காலம் இது? எனது நண்பர்கள் யார், யார்? இது என்ன இடம்? இதில் செலவுகள் என்னென்ன, ஆதாயங்கள் என்னென்ன? நான் யார்? எனது பலம் என்ன? என்பனவற்றைச் சிந்திக்க வேண்டும்.” என்பது இந்தச் செய்யுளின் பொருள்.
இதில் நான் யார் (கோஹம்) என்று எப்போதும் சிந்திப்பது பெரிய சித்திகளை அருளி முக்திக்கே வழி வகுக்கும் என்பது பகவான் ரமணரின் அருளுரை.

ஆக இந்த ஆறு கேள்விகளை எப்போதும் சிந்திக்கும் எவருக்கும் அபாயம் ஒரு நாளும் இல்லை என்பதோடு வெற்றி நிச்சயம் என்பதில் சந்தேகமே இல்லை.
சிந்தனீயா ஹி விபதாம் ஆதாவேவ ப்ரதிக்ரியா I
ந கூபகனனம் யுக்தம் ப்ரதீப்தே வஹ்னினா க்ருஹே II
“ஒரு ஆபத்தான நிலையை அடையும் முன்னரே ஒருவன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.வீடு தீப்பற்றி எரியும் போது கிணறு வெட்டும் வேலையை ஆரம்பிக்கக் கூடாது!” என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.
வீடு தீப்பற்றி எரியும் போது கிணறு வெட்ட ஆரம்பிக்கும் மூடன் அழியாமல் இருப்பது எப்படி? எப்பொழுதும் முன் ஜாக்கிரதையுடன் அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்து வாழ்க்கைத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்பது கவிஞரின் அறிவுரை.
வெற்றி பெற வழி வகுக்கும் ஆறு கேள்விகளைக் கேட்டு பதிலைப் பெற்றுத் திட்டங்களை வகுத்தாலே வாழ்க்கையில் ஆபத்தே வராது வந்தாலும் அவற்றை “மா சம்பத்தாக” மாற்றி விடலாமே!
*************************************