
Zodiac Coins issued by Mogul Emperor Jehanghir
Compiled by S NAGARAJAN
Date: 14 December 2015
Post No. 2388
Time uploaded in London :– 7-40 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
ச.நாகராஜன்
தமிழ் என்னும் விந்தை
நட்சத்திரப் பாடல்
தமிழ் மக்களின் அன்றாட வாழ்வில் 27 நட்சத்திரங்கள் தொன்று தொட்டு இடம் பெற்று வந்துள்ளன. இந்த நட்சத்திரங்களைப் புலவர்கள் தம் பாடல்கள் பலவற்றில் பல்வேறு விதமாகக் கையாண்டுள்ளனர். மிக சுவாரசியமான பாடல்கள் அவை.
மதுரகவிராயர் என்றொரு புலவர் இருந்தார். அவர் இளம் பெண் ஒருத்தியைக் கண்டு மோகித்தார். அப்போது அவருக்கு ஞாபகம் வந்தது 27 நட்சத்திரங்களின் ஒன்றின் பெயர். அதைப் பாடலில் சூசகமாகப் பயன்படுத்திப் பாடலை இயற்றினார்.

Zodiac stamps issued by India
பாடல் இதோ:-
மூவொன்ப தென்பதிலோர் நாளில்லை மொய்வனத்தில்
தாவுந் தனிமிருகந் தானில்லை – நேரே
வளையா நடையில்லை வாரிறுக விம்மும்
முலையாளை யான் முயங்குதற்கு
இதன் பொருளைப் பார்ப்போம்:
வாரிறுக விம்மும் முலையாளை – கச்சு இறுகும் படி விம்மிப் பருத்துள்ள மார்பகங்களை உடையவளை
யான் முயங்குதற்கு – நான் கட்டித் தழுவுவதற்கு மூவொன்ப தென்பதில் – மூன்று ஒன்பது, அதாவது 27 நட்சத்திரங்களில் ஓர் நாளில்லை – ஒரு நட்சத்திரம் இல்லை மொய்வனத்தில் – அடர்ந்த காட்டில் தாவுந் தனிமிருகந் தானில்லை – தாண்டித் திரிகின்ற ஒப்பற்ற மிருகம் இல்லை
நேரே வளையா நடையில்லை – நேராக வளையாத நடையும் இல்லை.
மூவொன்பதில் ஓர் நாளை இங்கு உத்தரம் என்று கொள்ள வேண்டும். அதாவது 27 நட்சத்திரங்களில் ஒன்று உத்தரம். அவள் நான் கட்டித் தழுவுவதற்கு எனக்கு உத்தரம் – மறுமொழியும் சொல்ல மாட்டேன் என்கிறாள்.
மொய் வனத்தில் தாவும் தனி மிருகம் வேங்கையாகும் வேங்கைக்கு இன்னொரு சொல் பொன் என்பதாகும். என்னிடம் தங்கமும் இல்லை.
நேரா வளையா நடை அன்னத்திற்கே உரியது. அந்த அன்னமும் என்னிடம் இல்லை.
பொன்னும் அன்னமும் இல்லாத அவளை எப்படிக் கட்டித் தழுவுவது, அவளோ உத்தரம் தர மாட்டேன் என்கிறா என்று அங்கலாய்க்கிறார் கவிஞர்.

Zodiac Stamps issued by Sri Lanka
ராசிப் பாடல்
இன்னொரு பாடலில் 12 ராசிகளையும் அமைத்துப் பாடியுள்ளார் ஆசுகவிப் புலவர் கவி காளமேகம்.
அவரிம் ஒருவர் சவால் விடுத்தார். சவால் விடுத்தவரோ சாதாரணமானவர் இல்லை. மன்னரிடம் பாடல் பாடி அவன் வியந்து தண்டிகை பரிசை அளித்தால் அவர் சிறந்த தண்டிகைப் புலவர் எனப்படுவார். அப்படிப்பட்ட அருமையான 64 தண்டிகைப் புலவர்களில் அவரும் ஒருவர்.
அவர் போட்ட நிபந்தனைகள் இவை:
ஒரு வெண்பா பாட வேண்டும். அதன் முதல் சீராக பகருங்கால் (சொல்லப் போனால்) என்று வர வேண்டும். இறுதியிலோ வசையறு மிராசி வளம் என்று ஈற்றடி (கடைசி அடி) அமைய வேண்டும். இடையில் 12 ராசிகளின் பெயர்கள் வரவேண்டும். ராசிகளுக்கு அடைமொழிகள் எதுவும் இருக்கக் கூடாது.
கடினமான போட்டி தான். கவிஞருக்கு கிடைத்திருப்பது இரண்டே முக்கால் அடி தான். விட்டாரா காளமேகம்.
பாடினார் இப்படி:-
பகருங்கால் மேடமிட பம்மிதுனங் கர்க்க
டகஞ்சிங்கம் கன்னி துலாம் விர்ச் – சிகந்த
நுசுமகரங் கும்பமீ நம்பன்னி ரண்டும்
வசையறு மிராசி வளம்
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆக பன்னிரண்டு ராசிகளும் முறையே வரிசையாக அமைத்து வெண்பா இலக்கணம் தவறாமல் பாடி வெற்றி பெற்றார் காளமேகம்.
தமிழ் என்னும் விந்தையில் உலக மொழிகளில் இல்லாதபடி நட்சத்திரப் பாடல்கள் ஏராளம் உள்ளன.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்!
மேலே உள்ள நட்சத்திரப் பாடலும் ராசிப் பாடலும் தமிழுக்கே உரித்தான முத்திரைப் பாடல்களில் சில!
********
You must be logged in to post a comment.