தராசு முதல் கரும்பு வரை சில நியாயங்கள்!

scale2

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

 

  1. தராசு முதல் கரும்பு வரை சில நியாயங்கள்!

Compiled by ச.நாகராஜன்

Post No. 1578; Dated 16th January 2015

 

“எனக்கு ஒரு நியாயம் சொல்லுங்க!”

“அங்கே நீதி, நேர்மை நியாயம் எதுவுமே இல்லீங்க!”

“இது நியாயமா!’

அன்றாட வாழ்வில் நாம் இப்படி எத்தனை “நியாயமான” சொற்றொடர்களைக் கேட்டு வருகிறோம்! தீமையான நிகழ்வு எதையும் பார்த்து விட்டால் சாமானியனான எழுத்தறிவற்ற ஒருவனும் கூட “இது என்ன அநியாயமாக இருக்கிறதே” என்று ஆவேசப்படுவதையும் பார்க்கிறோம்.

இந்த நியாய உணர்வு பாரத தேசமெங்கும் வாழும் அனைவருக்கும் பொதுவான பண்பாட்டுடன் வந்த ஒரு சொல். “ஆ ஸேது ஹிமாசல” – அதாவது ஸேது முதல் இமயம் வரை ஒரே பண்பாடு தான் என்பதற்கான எத்தனையோ காரணங்களில் இங்கு திகழும் பொதுவான நியாயங்களும் ஒரு காரணமே!

பொதுவான நியாயமா? அது என்ன? என்று வியப்போருக்காகவே இந்தத் தொடர்!

இந்த நியாயங்கள் இன்றைய இந்தியாவில் நீதிமன்றங்களால் கூட வெகுவாக அங்கீகரிக்கப்பட்டு போற்றப்படுகின்றன.

சில நியாயங்களை வரிசைப்படுத்திப் பார்ப்போம்:

  1. तुलोन्नमन नयायः

tulonnamana nyayah

துலோன்னமன நியாயம்

தராசுத் தட்டை அடிப்படையாக க் கொண்டு எழுந்த நியாயம் இது. ஒரு தராசின் இரு தட்டுகளில் ஒன்று கீழே இறங்கும் போது மற்றொரு தட்டு மேலே எழுகிறது.

தராசு இரண்டும் சமமாக இருக்க வேண்டும் எனில் அதில் உள்ளவையும் சமமாக இருக்க வேண்டும். அது போல நம்முடைய முன்னேற்றமும் கூட சமமாக சீராக அனைத்துத் துறைகளிலும் இருக்க வேண்டும். ஒன்றில் மட்டும் இருந்தால் இன்னொரு தட்டு உயரத்தானே செய்யும்! ஒன்றில் மட்டும் உயர்ந்திருந்தால் போதாது, அனைத்திலும் சீரான முன்னேற்றம் வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது.

எடுத்துக்காட்டாக குழந்தைகள் படிக்கும் போது ஒரு பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்று மற்றதில் குறைந்த  மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அங்கு இந்த துலோன்னமன நியாயம் சொல்லப்படும்.

(துலா – தராசு)

Common_Crow_01

  1.  काकाक्षिगोलकन्यायः

kakaksigolaka nyayah

காகாக்ஷிகோலக நியாயம்

காக்கைக்கு ஒரு கண் தான் உண்டு. ஆனால் அது கண்ணை ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடி வரை தேவைப்பட்ட போது சுழற்றிப் பார்க்கும். இதே போல ஒரு சொல்லோ அல்லது சொற்றொடரோ ஒரு வாக்கியத்தில் ஒரு முறைதான் பிரயோகிக்கப்பட்ட போதிலும் கூட அது தேவைப்பட்டால் இரண்டு காரணங்களுக்காக உபயோகிக்கப்படலாம்.

  1. कारणगुणप्रक्रमन्यायः

karanagunaprakrama nyayah

காரண குண ப்ரக்ரம நியாயம்

காரண காரிய விளைவைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது. ஒரு காரணத்திற்குரிய சில அம்சங்கள் அதன் விளைவில் ஏற்படுவதை இது சுட்டிக் காட்டுகிறது.

  1. काकदन्तपरीक्षान्यायः

kakadantapariksa nyayah

காக தந்த பரீக்ஷா நியாயம்

ஒரு காகத்தின் பல்லைப் பரிசோதிப்பது பற்றிய நியாயம் இது. பயன்படாத ஒரு விஷயத்தை ஆராய்ந்தால் அல்லது செய்தால் யாருக்கு என்ன லாபம்! அதைச் செய்ய முயலும்போது இந்த காக தந்த பரிக்ஷா நியாயம் சுட்டிக் காட்டப் படுகிறது.

(தந்தம் – பல்)

Cut_sugarcane

  1. आक्षुरसन्यायः

iksurasa nyayah

இக்ஷு ரஸ நியாயம்

கரும்புச் சாறை அடிப்படையாக க் கொண்ட நியாயம் இது. கரும்பைச் சாறை எடுப்பதற்காக கரும்பை நசுக்கி ஒரு உருளையில் விட்டி கடைசிச் சொட்டு சாறு வரை எடுத்து விடுகிறோம். அது போல சில சமயங்களில் சில விஷயங்களில் ஒரு பலனைப் பெற கடுமையான திடமான வலுவான நடவடிக்கையை எடுத்தால் தான் எண்ணிய பலன் கிடைக்கும்.

(இக்ஷு ரஸம் – கரும்புச் சாறு)

 

அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பல நிகழ்வுகளில் வளவள என்று பேசாமல் இந்த நியாயங்களைச் சுட்டிக் காட்டி விட்டால் சொல்ல வேண்டியதை நறுக்கென்று சொல்லி விடலாம் இல்லையா!

 

பாரத தேசத்தில் இப்படி நியாயங்களைச் சுட்டிக் காட்டி நல்நெறிப் படுத்துவது தொன்று தொட்டு இருந்து வரும் ஒரு வாழ்க்கை முறை!

 

*****************

contact swami_48@yahoo.com