தண்ணீர் கொண்டு வா — நியாயம்!

supermoon-may5-2012-x

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

  1. தண்ணீர் கொண்டு வா — நியாயம்!

 

Post No 1619; Dated 3rd Febraury 2015

by ச.நாகராஜன்

 

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:.

चन्द्रचन्द्रिकान्यायः

candracandrika nyayah

சந்திர சந்திரிகா நியாயம்

சந்திரனும் அதன் ஒளியும் பற்றிய நியாயம் இது. நிலவின் குளிர்ந்த ஒளியையும் நிலவையும் பிரிக்கவே முடியாது என்பதைச் சொல்லும் இந்த நியாயம் பிரிக்க முடியாதபடி இணைந்து பிணைந்து இருக்கும் இரு பொருள்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.


water1

जलानयनन्यायः

jalanayana nyayah

ஜலாநயன நியாயம்

 

நீரைக் கொண்டு வருதல் பற்றிய நியாயம் இது.

 

குடிக்கத் தண்ணீர் கொண்டு வா என்று ஒருவரிடம் சொன்னால் அதைக் கொண்டுவரும் போது அதை எடுத்து வருவதற்கான குவளையும் கொண்டு வா என்பதும் அதில் அடங்கும் அல்லவா! பிரிக்க முடியாத ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட இரு விஷயங்களைக் குறிப்பிட இந்த நியாயம் பயன்படுத்தப் படுகிறது.

pen painti1

Painting by S. Ilayaraja from Face Book

चित्रांगनान्यायः

citrangana nyayah

சித்ராங்கனா நியாயம்

ஓவியம் ஒன்றில் சித்தரிக்கப்படும் அணங்கு பற்றிய நியாயம் இது. எவ்வளவு தான் த்த்ரூபமாக ஒரு அழகியின் படத்தை வரைந்தாலும் கூட அந்த அழகி நேரில் இருப்பது போல ஆகுமா? ஆகாது. எவ்வளவு அரிய முயற்சி எடுத்து ஓவியத்தை வரைந்தாலும் கூட நிஜத்திற்கு அது நிகராகாது. அதே போல ஒருவன் எவ்வளவு தான் சித்தரித்தாலும் பேசினாலும் ஒரு விஷயத்தின் நிஜ ரூபம் காண்பிக்கப்படும் போது அதற்கு நிகராக எதுவும் ஆகாது என்பதைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் பயன்படுத்தப்படுகிறது.

tortoise

कूर्माङ्गन्यायः

kurmanga nyayah.

கூர்மாங்க நியாயம்

கூர்மம் – ஆமை அங்கம் – உறுப்பு

ஆமையின் உறுப்புகள் பற்றிய நியாயம் இது. ஆமை தனது கழுத்து மற்றும் கால்களை தேவைப்படும்போது  மட்டுமே வெளியில் நீட்டும். தேவை இல்லாவிட்டாலோ அல்லது ஒரு ஆபத்து வந்தாலோ அது தன் கழுத்தையும் கால்களையும் இழுத்து தன் ஓட்டிற்குள் அடக்கிக்கொண்டு விடும். அதே போல விஷயம் தெரிந்த ஒருவன் தன் சக்தியை தேவைப்படும் போது மட்டுமே வெளியில் காட்டுவான். சரியான வாய்ப்பு வரும் போது தன் திறனைக் காட்டிப் பயன் பெறுவான். தேவையற்ற காலங்களில் அனாவசியமாக தன் திறமைகளைக் காட்டி சக்தியை விரயம் ஆக்க மாட்டான்; தம்ப்பட்டம் அடிக்க மாட்டான்.


Sugar cane-23

इक्षुविकारन्यायः

iksuvikara nyayah

இக்ஷுவிகார நியாயம்

 

கரும்பை எப்படியெல்லாம் மாற்றுகிறோம் என்பதைக் குறிக்கும் நியாயம் இது. கரும்பை வெட்டி எடுத்து அதை முதலில் நசுக்கி அதன் சாறு எடுக்கப்படுகிறது. அந்தச் சாறு சூடாக்கப்பட்டுப் பின்னர்  மெதுவாக திட நிலைக்கு கொண்டு  வரப்படுகிறது. பின்னர் அது சுத்திகரிக்கப்பட்டு அழகிய வெல்லக் கட்டிகளாக ஆக்கப்படுகிறது. படிப்படியாக ஒரு விஷயம் பக்குவப்படுத்தப்பட்டு இறுதியில் விரும்புகின்ற ஒரு வடிவமாக ஆவதைச் சுட்டிக்காட்ட இந்த நியாயம் பயன்படுத்தப்படும்.

contact swami_48@yahoo.com
********

திருமந்திரம்: குருடன் குருடனுக்கு வழி காட்டினாற் போல!

Tirumular+Tirumantiram2

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

 

  1. திருமந்திரம்: குருடன் குருடனுக்கு வழி காட்டினாற் போல!

 

Compiled by S Nagarajan

Post No: 1596: Dated 23 January 2015

 

by

ச.நாகராஜன்

 

நியாயங்கள் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்கள்:

दग्धदहन न्यायः

Dagdha dahana nyayah

தக்த தஹன நியாயம்

தக்த – எரிபட்டதை; தஹன – எரிப்பது

எரித்ததை எரிப்பது என்னும் இந்த நியாயம் தீயில் எரிபட்டுப் போன ஒரு பொருளை தீ மீண்டும் எரிக்காது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. முடியாத ஒரு காரியத்தையோ அல்லது பயனற்ற ஒரு காரியத்தையோ வீணாக ஒருவன் செய்யும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படுகிறது.


Blind Faith- Blind leading Blind

अन्धपरम्परान्यायः

andha parampara nyayah

அந்த பரம்பர நியாயம்

அந்த(கன்) – குருடன்

குருடனைக் குருடன் பின்பற்றும் இந்த நியாயம் பரவலாக உபயோகப்படுத்தப்படும் ஒன்று. குருட்டுத்தனமாக, அறிவற்று, சுய சிந்தனையற்று ஒருவனைப் பின்பற்றும்போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.

ஒரு குருடனை வழிகாட்டியாகக் கொண்டு ஒருவன் சென்றால் அவன் விழுவதோடு அடுத்தவனையும் கிணற்றில் தள்ளி விடுவான்.

 

நல்ல குருவினைப் பின்பற்றாமல் தீய ஒருவனைக் குருவாகப் பாவித்து ஒருவன் பின்பற்றுவது குருடனைக் குருடன் பின்பற்றியது போல ஆகும் என்பது அற நூல்கள் பலவற்றிலும் குறிப்பிடப்படுகிறது.

 

எடுத்துக்காட்டாக திருமுலரின் திருமந்திரத்தில் வரும் இந்தப் பாடலைக் கூறலாம்:

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்  

குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்                          

குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்                                  

குருடும் குருடும் குழி விழுமாறே —- (திருமந்திரம் பாடல் எண் 1680)

 

‘Blind leading the blind’ என்ற இதே கருத்து கதோபநிஷத்திலும் காணப்படுகிறது.

பைபிளிலும் இந்தக் கருத்தை மாத்யூ 15:13-14 மற்றும் ல்யூக் 6:39-40லும் காணலாம். புத்தமத த் தின் முக்கிய நூலான சாங்கி சூத்திரத்திலும் இது கையாளப்படுகிறது. அருளாளர்கள் எழுதிய பாஷ்யங்களிலும் இந்த நியாயம் எடுத்துச் சொல்லப்படுகிறது.

 

உலகளாவிய விதத்தில் பேசப்படும் இந்த நியாயம் மிகச் சில சொற்களில் அரிய கருத்தை விளக்கும் ஒன்றாகும்.

Blind-leading-the-blind

अश्मलोष्टन्यायः

ashma loshta Nyayah

அஷ்ம லோஷ்ட நியாயம்

அஷ்ம- கல்; லோஷ்ட – மண்ணாங்கட்டி,

கல்லும் மண்ணாங்கட்டியும் என்னும் நியாயம் இது. மண்ணாங்கட்டி ஒன்று பஞ்சை விடக் கெட்டியானது தான்; ஆனால் அதைக் கல்லுடன் ஒப்பிட்டால் அது மிகவும் மிருதுவானது தானே! உடைத்து உதிரக் கூடிய ஒன்று அது! அது போலவே ஒரு மனிதன் அவனது கீழ் வேலை பார்ப்போரை ஒப்பிட்டால் மிகவும் முக்கியமானவன் தான்! ஆனால் அதே சமயம் அவனை விட மேல் நிலையில் உள்ளோரை ஒப்பிடுகையில் அவன் சிறிய நிலையில் உள்ளவன் தான்! ஒரு விஷயத்தை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடுகையில் எதை எத்துடன் ஒப்பிடுகிறோம் என்பதில் ஏற்படும் முக்கியத்துவத்தை இந்த நியாயம் விளக்குகிறது.


Clay-Lumps-1964438

अहि-निर्ल्वयनीन्यायः

ahi nir-lvayani nyayah

அஹி நிர்-ல்வயனி நியாயம்

பாம்பு தன் சட்டையை உரித்து விடுவது பற்றிய நியாயம் இது.

 

எப்படி ஒரு பாம்பானது தன் சட்டையை உரித்து விட்டவுடன், அதை இனிமேல் தன் உடலில் ஒரு பகுதியாக்க் கருதுவதில்லையோ அதே போல ஒருவன் உண்மையான வித்யாவை ( மெய் கல்வி) அடைந்தவுடன் – தன்னை ஆன்மா என்று அறிந்தவுடன் -உடலை இனியும் தனதாக எண்ண மாட்டான்.

உயர்ந்த ஆன்மீகக் கருத்தைச் சொல்லும் நியாயம் இது.

shed-snake-skin2

अहिकुंडलन्यायः

ahi kundala nyayah

அஹி குண்டல நியாயம்

பாம்பு சுருண்டு படுத்திருக்கும்போது அதன் சுருள்களைச் சொல்லும் நியாயம் இது.

எப்படி சுருண்டு படுப்பது பாம்பின் இயற்கையோ (அதன் சுருள்கள் அதன் இயற்கையோ) அதே போல கெட்டவன் ஒருவனின் வழிகளும் அவனுடன் இயற்கையாக  இருக்கும் ஒன்றே! இயல்பாகத் தீயவரிடம் அமைந்திருக்கும் கெட்ட செயல்களையும் தீய எண்ணங்களையும் சுட்டிக் காட்டும் நியாயம் இது.

இப்படி எத்தனை எத்தனை நியாயங்கள்! ஒவ்வொன்றையும் படிக்கவும் கேட்கவும் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தவும் சுவையான ஒன்றாக அமைகிறது இல்லையா!

best coiled

contact swami_48@yahoo.com

***************

நெக்லஸ் முதல் கிணறு வரை சில நியாயங்கள்!

necklace

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

  1. நெக்லஸ் முதல் கிணறு வரை சில நியாயங்கள்!

by ச.நாகராஜன்

Post No 1585; Dated 18th January 2015.

Compiled by S Nagarajan

 

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்.

कण्ठचामीकरन्यायः

kanthacamikara nyayah

கண்டசாமீகர நியாயம்

கண்டசாமீகரம் – கழுத்தில் அணியும் நெக்லஸ்

கழுத்தில் நெக்லஸை அணிந்து கொண்டு ஊர் முழுவதும் தேடிய கதை என்று சொல்லப்படும் நியாயம் இது.

ஒரு பெண்மணி தன் கழுத்தில் நெக்லஸை அணிந்து கொண்டிருந்தாள். ஆனால் தன் நெக்லஸைக் காணோம் என்று தேட ஆரம்பித்தாள். இன்னொருத்தியிடம் அவள் என் நெக்லஸ் எங்கே என்று கேட்ட போது அந்தப் பெண்மணி, உங்கள் கழுத்திலேயே அதை அணிந்திருக்கிறீர்களே, கழுத்திலே பாருங்கள் என்று பதில் சொன்ன போது அவள் நாணினாள்.

இந்த நியாயம் வேறு எங்கேயோ ஒன்றைத் தேடப் போகும் ஒருவன் அது தன்னிடமே இருப்பதை அறியாமல் இருக்கும் போது சுட்டிக் காட்டப்படும் நியாயம். பரவலாக உலக வாழ்க்கையில் வழங்கப்படும் நியாயங்களுள் இதுவும் ஒன்று!


fruit-in-hand

करिवन्यस्तिबर्लवन्यायः

karavinyastabilva nyayah

கரவிந்யஸ்த பில்வ நியாயம்

உள்ளங்கை நெல்லிக்கனி போல என்று அறியப்படும் நியாயம் இது. கரத்தில் உள்ள வில்வப்பழம் போல என என்று வழங்கப்படுகிறது.

 

கையில் இருக்கும் வில்வப்பழம் போல வெளிப்படையாக எந்த வித விளக்கமும் தேவையின்றி இருக்கும் ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் வழங்கப்படுகிறது. நேரடியாக பார்க்க இருக்கும் வில்வக்கனிக்கு விளக்கம் வேறு தேவையா? நன்கு அறிய முடியும் ஒரு விஷயத்திற்கு விளக்கம் எதற்கு வேண்டும்!

kumba yaya

कुम्भधान्यन्यायः

kumbhadhanya nyayah

கும்ப தான்ய நியாயம்

தானியம் நிரம்பி உள்ள ஜாடி எனப்படும் நியாயம் இது. ஒரு பெரிய குதிர் முழுவதும் தானியம் வைத்திருக்கும் ஒருவனுக்கு தானியம் வழங்கி என்ன பயன்? தானம் செய்வதை அது தேவையாய் உள்ள ஏழைகளுக்குச் செய்ய வேண்டும். பணக்காரனுக்கு தானம் செய்து பயன் என்ன?

ஆங்கிலத்தில் TO SEND COAL TO NEW CASTLE  என்று வழங்கப்படுவதை இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

vaikkal

काशकुशावलम्बनन्यायः

kasakusavalambana nyayah

காஷகுஷாவலம்பன நியாயம்

வைக்கோல்போரைப் பிடித்த நியாயம்.

ஒரு கப்பல் உடைந்து விடவே அதில் மூழ்க ஆரம்பித்த போது அதில் இருக்கும் ஒருவன் தன் உயிரைக் காக்க எதையேனும் பிடிக்க முயல்கிறான். அவன் கையில் ஒரு சிறு வைக்கோல்போரின் பகுதி தான் கிடைக்கிறது. இருந்தாலும் அதைப் பிடித்துக் கொள்கிறான். எப்படியேனும் தன் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதே அப்போதைய முனைப்பாக இருக்கும் அல்லவா! அது பயனற்ற வீணான முயற்சி என்றாலும் கூட அதைச் செய்கிறான் அவன். அது போல பயனற்ற முயற்சி என்று தெரிந்தும் கூட ஒரு விவாதத்தில் சிறிய விஷயத்தைப் பிடித்துக் கொண்டு தனது தரப்பு வாத த் தை முன் வைக்க முயலும் ஒருவனைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் பயன்படுத்தப்படுகிறது. இது நகைப்புக்கே இடமாகும்.

villagewell

कूपखानकन्यायः

kupakhanaka nyayah

கூபகானக நியாயம்

கிணறு வெட்டும் நியாயம் இது.

ஒரு கிணறை வெட்டும் போது முதலில் வெட்டுபவனுடைய உடலில் சேறு, சகதி ஆகியவை படியும். ஆனால் நேரம் செல்லச் செல்ல தண்ணீர் பீறிட்டு எழும் போது அந்த சேறும் சகதியும் அதிலிருந்து வரும் தண்ணீராலேயே கழுவப்பட்டு அவன் சுத்தமாவது போல ஒருவன் முதலில் செய்யும் பாவங்கள் எல்லாம் பின்னால் அவன் செய்யும் புண்ய காரியங்கள் மூலம் கழுவப்பட்டு அவன் பாவமற்றவனாகிறான்.

இதுவே கிணறு வெட்டிச் சுத்தமாகின்றவனது நியாயம் ஆகும்.

well

contact swami_48@yahoo.com

****************

தராசு முதல் கரும்பு வரை சில நியாயங்கள்!

scale2

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

 

  1. தராசு முதல் கரும்பு வரை சில நியாயங்கள்!

Compiled by ச.நாகராஜன்

Post No. 1578; Dated 16th January 2015

 

“எனக்கு ஒரு நியாயம் சொல்லுங்க!”

“அங்கே நீதி, நேர்மை நியாயம் எதுவுமே இல்லீங்க!”

“இது நியாயமா!’

அன்றாட வாழ்வில் நாம் இப்படி எத்தனை “நியாயமான” சொற்றொடர்களைக் கேட்டு வருகிறோம்! தீமையான நிகழ்வு எதையும் பார்த்து விட்டால் சாமானியனான எழுத்தறிவற்ற ஒருவனும் கூட “இது என்ன அநியாயமாக இருக்கிறதே” என்று ஆவேசப்படுவதையும் பார்க்கிறோம்.

இந்த நியாய உணர்வு பாரத தேசமெங்கும் வாழும் அனைவருக்கும் பொதுவான பண்பாட்டுடன் வந்த ஒரு சொல். “ஆ ஸேது ஹிமாசல” – அதாவது ஸேது முதல் இமயம் வரை ஒரே பண்பாடு தான் என்பதற்கான எத்தனையோ காரணங்களில் இங்கு திகழும் பொதுவான நியாயங்களும் ஒரு காரணமே!

பொதுவான நியாயமா? அது என்ன? என்று வியப்போருக்காகவே இந்தத் தொடர்!

இந்த நியாயங்கள் இன்றைய இந்தியாவில் நீதிமன்றங்களால் கூட வெகுவாக அங்கீகரிக்கப்பட்டு போற்றப்படுகின்றன.

சில நியாயங்களை வரிசைப்படுத்திப் பார்ப்போம்:

  1. तुलोन्नमन नयायः

tulonnamana nyayah

துலோன்னமன நியாயம்

தராசுத் தட்டை அடிப்படையாக க் கொண்டு எழுந்த நியாயம் இது. ஒரு தராசின் இரு தட்டுகளில் ஒன்று கீழே இறங்கும் போது மற்றொரு தட்டு மேலே எழுகிறது.

தராசு இரண்டும் சமமாக இருக்க வேண்டும் எனில் அதில் உள்ளவையும் சமமாக இருக்க வேண்டும். அது போல நம்முடைய முன்னேற்றமும் கூட சமமாக சீராக அனைத்துத் துறைகளிலும் இருக்க வேண்டும். ஒன்றில் மட்டும் இருந்தால் இன்னொரு தட்டு உயரத்தானே செய்யும்! ஒன்றில் மட்டும் உயர்ந்திருந்தால் போதாது, அனைத்திலும் சீரான முன்னேற்றம் வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது.

எடுத்துக்காட்டாக குழந்தைகள் படிக்கும் போது ஒரு பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்று மற்றதில் குறைந்த  மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அங்கு இந்த துலோன்னமன நியாயம் சொல்லப்படும்.

(துலா – தராசு)

Common_Crow_01

  1.  काकाक्षिगोलकन्यायः

kakaksigolaka nyayah

காகாக்ஷிகோலக நியாயம்

காக்கைக்கு ஒரு கண் தான் உண்டு. ஆனால் அது கண்ணை ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடி வரை தேவைப்பட்ட போது சுழற்றிப் பார்க்கும். இதே போல ஒரு சொல்லோ அல்லது சொற்றொடரோ ஒரு வாக்கியத்தில் ஒரு முறைதான் பிரயோகிக்கப்பட்ட போதிலும் கூட அது தேவைப்பட்டால் இரண்டு காரணங்களுக்காக உபயோகிக்கப்படலாம்.

  1. कारणगुणप्रक्रमन्यायः

karanagunaprakrama nyayah

காரண குண ப்ரக்ரம நியாயம்

காரண காரிய விளைவைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது. ஒரு காரணத்திற்குரிய சில அம்சங்கள் அதன் விளைவில் ஏற்படுவதை இது சுட்டிக் காட்டுகிறது.

  1. काकदन्तपरीक्षान्यायः

kakadantapariksa nyayah

காக தந்த பரீக்ஷா நியாயம்

ஒரு காகத்தின் பல்லைப் பரிசோதிப்பது பற்றிய நியாயம் இது. பயன்படாத ஒரு விஷயத்தை ஆராய்ந்தால் அல்லது செய்தால் யாருக்கு என்ன லாபம்! அதைச் செய்ய முயலும்போது இந்த காக தந்த பரிக்ஷா நியாயம் சுட்டிக் காட்டப் படுகிறது.

(தந்தம் – பல்)

Cut_sugarcane

  1. आक्षुरसन्यायः

iksurasa nyayah

இக்ஷு ரஸ நியாயம்

கரும்புச் சாறை அடிப்படையாக க் கொண்ட நியாயம் இது. கரும்பைச் சாறை எடுப்பதற்காக கரும்பை நசுக்கி ஒரு உருளையில் விட்டி கடைசிச் சொட்டு சாறு வரை எடுத்து விடுகிறோம். அது போல சில சமயங்களில் சில விஷயங்களில் ஒரு பலனைப் பெற கடுமையான திடமான வலுவான நடவடிக்கையை எடுத்தால் தான் எண்ணிய பலன் கிடைக்கும்.

(இக்ஷு ரஸம் – கரும்புச் சாறு)

 

அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பல நிகழ்வுகளில் வளவள என்று பேசாமல் இந்த நியாயங்களைச் சுட்டிக் காட்டி விட்டால் சொல்ல வேண்டியதை நறுக்கென்று சொல்லி விடலாம் இல்லையா!

 

பாரத தேசத்தில் இப்படி நியாயங்களைச் சுட்டிக் காட்டி நல்நெறிப் படுத்துவது தொன்று தொட்டு இருந்து வரும் ஒரு வாழ்க்கை முறை!

 

*****************

contact swami_48@yahoo.com