தாவரங்களின் அறிவு!–Part 4

அறிவியல் அதிசயங்கள்

தாவரங்களின் அறிவு! -4

———————————-

ச.நாகராஜன்

ஒரு செடியானது கீழே போட்டு மிதித்துக் கொலையுண்ட பின்னர் மீதியிருந்த இன்னொரு செடி  லை – டிடெக்டருடன் இணைக்கப்பட்டது. ஒவ்வொரு மாணவனும் அதன் முன்னே நடந்து செல்லுமாறு கூறப்பட்டான். ஐந்து மாணவர்கள் அந்தச் செடியின் அருகே சென்ற போது அந்தச் செட் எந்த விளைவையும் காண்பிக்கவில்லை. ஆனால் ஆறாவது மாணவனான ‘செடியின் கொலைகாரன்’அதன் அருகே சென்றவுடன்  லை – டிடெக்டருடன் இணைக்கப்பட்டிருந்த எலக்ட்ரோடு வெகு வேகமாக அசையத் தொடங்கியது. அது கொலையாளி யார் என்பதை அடையாளம் காட்டியது!

இந்தச் சோதனையின் மூலம் தாவரங்களுக்கு ஞாபக சக்தி உண்டு என்பதையும் அது தமக்குத் தீங்கு செய்த மனிதரையோ அல்லது இதர வஸ்துவையோ யார் அல்லது எதாக இருந்தாலும் கூட இனம் காண்பித்து விடும் என்பதும் நன்கு தெரிய வந்தது!

தாவரங்கள் அதை வளர்க்கும் எஜமானர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கின்றன!

ஒரு முறை பாக்ஸ்டர் நியூஜெர்ஸியிலிருந்து நியூயார்க் நகருக்குத் திரும்பினார். தனது ரிகார்டரில் பதிவு செய்யப்பட்ட கிராப் பேப்பர்களைப் பார்த்த போது  எல்லா தாவரங்களும் தன் எண்ணங்களை வெளிப்படுத்தியதை அவரால் காணமுடிந்தது. சில தாவரங்கள் ‘ அப்பாடா’ என்ற பெருமூச்சை வெளியிட்டன. (எஜமானர் திரும்பி வந்து விட்டார்; இனி கவலை இல்லை!) சில தாவரங்களோ அவருக்கு நல்வரவு கூறி வரவேற்றன!

இந்த ‘அப்பாடா’ என்ற பெருமூச்சும், ‘நல்வரவு’டன் கூறிய வரவேற்பும் எப்போது எந்த நேரத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதை அவர் கூர்ந்து கவனித்துப் பார்த்தார்.

அது அவர் நியூஜெர்ஸியிலிருந்து நியூயார்க் திரும்ப முடிவு செய்த அதே நிமிடத்திலேயே பதிவு செய்யப்பட்டிருந்தது!

சின்ன ‘செல்லானாலும்’ கூட உயிருடன் இருக்கும் திசு ஒன்று இறந்து போனால் அதைக் கண்டு கொள்ளத் தவறுவதில்லை. இதை பாக்ஸ்டர் எதேச்சையாக ஒரு நாள் கண்டுபிடித்தார். ஒரு நாள் அவர் தன் சாப்பிடவிருந்த யோஹர்ட்டுடன் (தயிர்) ஏதோ ஒரு பழ ஜாமைக் கலந்தார். தயிரில் இருந்த ‘லாக்டோபஸில்லி’ செல்களை ஜாமில் சேர்க்கப்பட்டிருந்த ப்ரிஸர்வேடிவ் கொன்று விட்டது. இதைக் கூடத் தாவரங்கள் உணர்ந்து விட்டன.

பாக்ஸ்டர் சிங்க்கில் (Sink) கொதிக்கும் நீரை ஓட விட்ட போதும் தொட்டியில் இருந்த சில நுண்ணிய  பாக்டீரியாக்கள் இறந்து விட்டதை எண்ணி அவை அலறின போலும் என்று கூறுகிறார் அவர்!

இதை உறுதி செய்வதற்கான இன்னொரு சோதனையை அவர் மேற்கொண்டார். உப்பு நீரில் இருந்த ஒரு ‘ஷ்ர்ம்ப்’ ஒன்றை தானியங்கி மெக்கானிஸம் வாயிலாக தானாகவே சுடுநீரில் கரையும் படி அவர் ஒரு ஏற்பாட்டை அமைத்தார். மனிதன் யாராலும் தொடப்படாமல் இருப்பதை உறுதி செய்யவே ஆடோமாடிக் மெக்கானிஸம் பயன்படுத்தப்பட்டது. சுடு நீரில் ‘ஷ்ரிம்ப்’ விழுந்தவுடன் தாவரம் அதைப் பதிவு செய்து விட்டது!

இப்படி ஏராளமான சோதனைகளை நடத்தியதன் மூலமாக பாக்ஸ்டர் தாவரங்களின் அதிசயிக்கத்தக்க அறிவைக் கண்டு வியந்தார். இந்த சோதனைக¨ளையும், தனது முடிவுகளையும் உலகிற்கு அறிவித்தார்.

உண்மையிலேயே தாவரங்களின் அறிவு அதிசயிக்கத் தக்க ஒன்று தானே!!