சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்
- வீட்டு வாசற்படியில் வைக்கும் விளக்கு!
Article No.1588; Date: 19th January, 2015
Part 4 of Nyayas in Tamil written by S Nagarajan
by ச.நாகராஜன்
நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்.
देहलीदीपन्यायः
dehalidipa nyayah
தேஹலி தீப நியாயம்
வீட்டு வாயிற்படியில் வைக்கும் தீப நியாயம் காலம் காலமாக வழங்கி வரப்படும் ஒரு நியாயம். வீட்டு வாயிற்படியில் வைக்கும் விளக்கானது வீட்டிற்கு உள்ளேயும் வெளிச்சம் தரும். வீட்டை நோக்கி வருவோருக்கும் வெளியே வெளிச்சம் தரும். அதனால் ஒரே சமயத்தில் இரு நன்மைகள்!
ஒரே சமயத்தில் இரு நன்மைகளைத் தரும் ஒரு விஷயத்தைப் பற்றிக் கூற இந்த நியாயம் பயன்படுகிறது.
இதை அற்புதமாக துளசிதாஸர் பயன்படுத்தி ராம நாம மஹிமையை விளக்குகிறார். ஹிந்தியில் இரண்டு அடிப் பாடல்கள் தோஹா என்று வழங்கப்படுகிறது.
துளஸிதாஸரின் தோஹாவைப் பார்ப்போம்:-
ramnam mani dipa dharu, jiha dehari dvara
tulasi bhitara baherihi, jau cahasi ujiyara
ராமநாம மணி தீப தரு, ஜிஹ தேஹரி த்வாரா I
துளஸி பிடாரா பஹேரிஹி ஜா சாஹஸி உஜியாரா II
வீட்டு வாயிலில் வைக்கப்படும் விளக்கு போல நாக்கில் வைக்கப்படும் ராம நாமம் உள்ளேயும் வெளியேயும் நலம் தரும். ஆத்மாவுக்கும் நலம். வெளி உலகிலும் நலம் தரும்.
இந்த நியாயமே இன்னும் இரு நியாயங்களாகப் பெயரிடப்பட்டு இப்படிப் பரிமளிக்கிறது.
அந்தர்தீபிகா நியாயம்
மத்யதீப நியாயம்
பல்வேறு சூத்திரங்களிலும் இந்த நியாயம் கையாளப்படுகிறது.
अन्धगोलाङ्गूलन्यायः
andha go langula nyayah
அந்த கோ லாங்கூல நியாயம்
அந்த: – குருடன்’; கோ-காளை; லாங்கூலம் – வால்
ஒரு குருடன் பார்த்த காளையின் வால் என்ற நியாயம் இது.
இது எப்படி எழுந்த து என்பதை விளக்கும் கதை இது.முன்னொரு காலத்தில் ஒரு குருடன் தனது கிராமத்திலிருந்து கிளம்பி அருகில் உள்ள ஒரு நகருக்குச் செல்ல ஆரம்பித்தான். அவன் சென்று கொண்டிருக்கும் போது ஒரு மற்றவர்கள் படும் கஷ்ட்த்தைக் கண்டு மகிழும் ஒரு கொடூரமான ஆசாமியைச் சந்தித்தான். அந்த ஆசாமி குருடன் அடுத்துள்ள நகருக்குச் சென்று நிறைய தானம் பெறலாம் என்ற அவனுடைய எண்ணத்தை அறிகிறான். உடனே அவனது சுபாவப்படி அவனிடம் அவனுக்கு தகுந்த ஒரு வழிகாட்டியைக் காண்பிப்பதாக க் கூறுகிறான். அங்கே மேய்ந்து கொண்டிருக்கும் ஒரு காளையின் வாலை அவன் கையில் தந்து, “இதோ பார்! இதைப் பிடித்துக் கொண்டு செல்! நகரம் வந்து சேரும் என்கிறான். குருடனும் அவன் சொற்களை நம்பி காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறான். பிறகு என்ன நடந்தது என்பதை யாரும் விளக்கவே வேண்டாம்! வெகுண்ட காளை அவனை முட்புதருக்குள் தள்ளி விட்டது!
நம்பக்கூடாத ஒருவனை நம்பிக் கெடுவதை இந்த நியாயம் விளக்குகிறது.
இதை ஆதி சங்கரர் வேதாந்த சூத்திரத்தில் போலி குருவை அண்டி சரியான வழிகாட்டுதலின்றிக் கெடும் சீடனைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்துகிறார்.

कूपमण्डूकन्यायः
kupamanduka nyayah
கூப மண்டூக நியாயம்
கூபம் – கிணறு மண்டூகம் – தவளை
கிணற்றுத் தவளை நியாயம் என்று அழைக்கப்படும் இது பெரும்பாலும் உலக வழக்கில் அன்றாடம் வழங்கப்பட்டு வரும் ஒரு நியாயம்.
இது எப்படி வந்த து என்பதை விளக்க ஒரு கதை உண்டு. கடலிலிருந்து ஒரு தவளை கிணற்றுக்கு வந்து சேர்ந்தது.அதைப் பார்த்த கிணற்றுத் தவளை நீ எங்கிருந்து வந்தாய் என்று கேட்க அது நான் கடலிலிருந்து வருகிறேன் என்றது.
“கடல் என்றால்.. அது எவ்வளவு பெரியது?” என்று கேட்டது கிணற்றுத் தவளை.
“மிகவும் பெரியது”
“இந்தக் கிணறு அளவு இருக்குமா?”
“இன்னும் பெரியது”
“இதைப் போல இன்னும் ஒரு மடங்கு இருக்குமா?”
“அதற்கு எல்லையே இல்லை. மிக மிகப் பெரிய் ய்ய் யது..”
இதைக் கேட்ட கிணற்றுத் தவளை சிரித்தது. “நீ சொல்வது பொய்”, என்றது. ‘கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது’, என்றது அது.
சிறிதே படித்து கொஞ்சம் அனுபவமே கொண்டிருக்கும் ஒருவன் பரந்த உலக அனுபவத்தையும் ஆழ்ந்த அறிவையும் பற்றித் தெரிந்திருக்க முடியாது என்பதைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படுகிறது. அவன் வெறும் கிணற்றுத் தவளை என்பது உலக வழக்கு!
contact swami_48@yahoo.com
***************




You must be logged in to post a comment.