சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்
- நெக்லஸ் முதல் கிணறு வரை சில நியாயங்கள்!
by ச.நாகராஜன்
Post No 1585; Dated 18th January 2015.
Compiled by S Nagarajan
நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்.
कण्ठचामीकरन्यायः
kanthacamikara nyayah
கண்டசாமீகர நியாயம்
கண்டசாமீகரம் – கழுத்தில் அணியும் நெக்லஸ்
கழுத்தில் நெக்லஸை அணிந்து கொண்டு ஊர் முழுவதும் தேடிய கதை என்று சொல்லப்படும் நியாயம் இது.
ஒரு பெண்மணி தன் கழுத்தில் நெக்லஸை அணிந்து கொண்டிருந்தாள். ஆனால் தன் நெக்லஸைக் காணோம் என்று தேட ஆரம்பித்தாள். இன்னொருத்தியிடம் அவள் என் நெக்லஸ் எங்கே என்று கேட்ட போது அந்தப் பெண்மணி, உங்கள் கழுத்திலேயே அதை அணிந்திருக்கிறீர்களே, கழுத்திலே பாருங்கள் என்று பதில் சொன்ன போது அவள் நாணினாள்.
இந்த நியாயம் வேறு எங்கேயோ ஒன்றைத் தேடப் போகும் ஒருவன் அது தன்னிடமே இருப்பதை அறியாமல் இருக்கும் போது சுட்டிக் காட்டப்படும் நியாயம். பரவலாக உலக வாழ்க்கையில் வழங்கப்படும் நியாயங்களுள் இதுவும் ஒன்று!
करिवन्यस्तिबर्लवन्यायः
karavinyastabilva nyayah
கரவிந்யஸ்த பில்வ நியாயம்
உள்ளங்கை நெல்லிக்கனி போல என்று அறியப்படும் நியாயம் இது. கரத்தில் உள்ள வில்வப்பழம் போல என என்று வழங்கப்படுகிறது.
கையில் இருக்கும் வில்வப்பழம் போல வெளிப்படையாக எந்த வித விளக்கமும் தேவையின்றி இருக்கும் ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் வழங்கப்படுகிறது. நேரடியாக பார்க்க இருக்கும் வில்வக்கனிக்கு விளக்கம் வேறு தேவையா? நன்கு அறிய முடியும் ஒரு விஷயத்திற்கு விளக்கம் எதற்கு வேண்டும்!
कुम्भधान्यन्यायः
kumbhadhanya nyayah
கும்ப தான்ய நியாயம்
தானியம் நிரம்பி உள்ள ஜாடி எனப்படும் நியாயம் இது. ஒரு பெரிய குதிர் முழுவதும் தானியம் வைத்திருக்கும் ஒருவனுக்கு தானியம் வழங்கி என்ன பயன்? தானம் செய்வதை அது தேவையாய் உள்ள ஏழைகளுக்குச் செய்ய வேண்டும். பணக்காரனுக்கு தானம் செய்து பயன் என்ன?
ஆங்கிலத்தில் TO SEND COAL TO NEW CASTLE என்று வழங்கப்படுவதை இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
काशकुशावलम्बनन्यायः
kasakusavalambana nyayah
காஷகுஷாவலம்பன நியாயம்
வைக்கோல்போரைப் பிடித்த நியாயம்.
ஒரு கப்பல் உடைந்து விடவே அதில் மூழ்க ஆரம்பித்த போது அதில் இருக்கும் ஒருவன் தன் உயிரைக் காக்க எதையேனும் பிடிக்க முயல்கிறான். அவன் கையில் ஒரு சிறு வைக்கோல்போரின் பகுதி தான் கிடைக்கிறது. இருந்தாலும் அதைப் பிடித்துக் கொள்கிறான். எப்படியேனும் தன் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதே அப்போதைய முனைப்பாக இருக்கும் அல்லவா! அது பயனற்ற வீணான முயற்சி என்றாலும் கூட அதைச் செய்கிறான் அவன். அது போல பயனற்ற முயற்சி என்று தெரிந்தும் கூட ஒரு விவாதத்தில் சிறிய விஷயத்தைப் பிடித்துக் கொண்டு தனது தரப்பு வாத த் தை முன் வைக்க முயலும் ஒருவனைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் பயன்படுத்தப்படுகிறது. இது நகைப்புக்கே இடமாகும்.
कूपखानकन्यायः
kupakhanaka nyayah
கூபகானக நியாயம்
கிணறு வெட்டும் நியாயம் இது.
ஒரு கிணறை வெட்டும் போது முதலில் வெட்டுபவனுடைய உடலில் சேறு, சகதி ஆகியவை படியும். ஆனால் நேரம் செல்லச் செல்ல தண்ணீர் பீறிட்டு எழும் போது அந்த சேறும் சகதியும் அதிலிருந்து வரும் தண்ணீராலேயே கழுவப்பட்டு அவன் சுத்தமாவது போல ஒருவன் முதலில் செய்யும் பாவங்கள் எல்லாம் பின்னால் அவன் செய்யும் புண்ய காரியங்கள் மூலம் கழுவப்பட்டு அவன் பாவமற்றவனாகிறான்.
இதுவே கிணறு வெட்டிச் சுத்தமாகின்றவனது நியாயம் ஆகும்.
contact swami_48@yahoo.com
****************






You must be logged in to post a comment.