Post No. 10,169
Date uploaded in London – 3 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை அக்டோபர் 3-ம் தேதி 2021
ஆம் ஆண்டு
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது LONDON JAYASHREE
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.
XXXX
திருப்பதி தேவஸ்தானத்துக்கு சுப்ரீம் கோர்ட் ‘நோட்டீஸ்’
திருப்பதியில் பாலாஜி வெங்கடாசலபதிக்கு நடக்கும் பூஜைகள் பாரம்பரிய முறைப்படி நடப்பதில்லை; தவறாக நடத்தப்படுகிறது’ என கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக விளக்கம் கேட்டு, திருலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு உச்ச நீதிமன்றம், ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. ஆந்திர உயர் நீதிமன்றத்தில், பக்தர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், ‘திருப்பதியில் பாலாஜி வெங்கடாசலபதிக்கு அபிஷேக சேவை, தோமாலா சேவை, ஆர்ஜித் பிரம்மோற்சவம் உட்பட பல பூஜைகள் பாரம்பரிய முறைப்படி நடத்தப்படுவதில்லை. ‘தவறாகவும் நடத்தப்படுகின்றன. இதை தடுக்க வேண்டும்’ எனக்கூறி மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், ‘திருப்பதி தேவஸ்தானத்தின் விதிமுறைகளிலும், அதன் நடவடிக்கைகளிலும் தலையிட முடியாது’ என உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த பாலாஜி பக்தர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹீமாகோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தங்கள் தரப்பு வாதத்தை முழுமையாக கேட்க வேண்டும்’ என, கோரிக்கை விடுத்தார். அப்போது தலைமை நீதிபதி ரமணா தெலுங்கிலேயே பதில் கூறினார்.
அதன் விபரம்:நான், என் குடும்பத்தினர், இங்குள்ள அனைவரும், பாலாஜி வெங்கடாசலபதி மீது மிகவும் பக்தி கொண்டவர்கள். தனக்கு நடக்க வேண்டிய பூஜை உட்பட அனைத்து வழிபாடுகளும், சரியான முறையில் நடக்கவில்லை என்றால், அதை ஏழுமலையானே பொறுத்துக் கொள்ள மாட்டார். அவருக்கான பூஜைகளும், வழிபாடுகளும் பாரம்பரிய முறைப்படி தான் நடக்க வேண்டும் என அனைத்து பக்தர்களும் விரும்புகின்றனர்.
எனவே, தேவஸ்தானத்தின் வழக்கறிஞர், மனுதாரரின் கேள்விகளுக்கு ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்,.விசாரணை, வரும் 6- ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
XXXXX
தமிழில் அர்ச்சனை, அர்ச்சகர் நியமனம் – அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சுப்ரமணியசுவாமி மனு
தமிழக கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது மற்றும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் புதிய ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை மாநில அரசு அறிவித்து அதற்கான அரசாணையும் வெளியிட்டுள்ளது.
சுப்ரமணிய சுவாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷேஷ் கனோடியா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் புதிய ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
கோவில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது அடிப்படை உரிமை என்றாலும் அர்ச்சகர்களை அரசு நியமிக்கக் கூடாது என்றும் கோவில் நிர்வாகம்தான் அர்ச்சகர்களை நியமிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் சொத்துக்களின் உரிமையாளராக அரசு இருக்க முடியாது. இதனால் சமயம் சார்ந்த செயல்களில் அரசு தலையிடக் கூடாது. கோவில் சம்பிரதாயத்தினர்தான் தங்கள் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். பணியாளர்களை நியமித்துக்கொள்ளும் விவகாரத்தில் அரசு தலையிடாமல் இருக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
XXXXX
இந்தியாவிலேயே முதல் முறையாக பக்தர்களுக்கு தேங்காய் தண்ணீர் பிரசாதம் வழங்கும் எந்திரம்
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வரும். இந்த கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தேங்காய் உடைத்து வழிபட்டு வருகின்றனர்.
தேங்காய் தண்ணீரை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் வகையில நவீன எந்திரத்தை தஞ்சையில் உள்ள மத்திய அரசின் இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகத்தினர் வடிவமைத்தனர்.
ரூ.7 லட்சம் மதிப்பில் தாங்கள் வடிவமைத்த எந்திரத்தை புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் நிறுவினர். இந்த கருவியை மத்திய மந்திரி பிரகலாத் சிங் பட்டேல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு செப்டம்பர் 27 – ம் தேதி இயக்கி வைத்தார்.
பின்னர் இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழக இயக்குனர் அனந்தராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேங்காய் தண்ணீரில் ஊட்டச்சத்துகள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த தேங்காய் தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிகளை எடுத்து வருகிறோம். அதன்படி கோவில்களில் பொதுமக்கள் தேங்காய் உடைத்து வழிபடும்போது, அந்த தேங்காயி்ல் இருந்து வெளியேறும் நீர் அப்பகுதியில் வீணாகுவதோடு, கழிவுநீர் போல் தேங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனை தடுக்க வேண்டும் எனக் கருதி இந்த நவீன கருவியை வடிவமைத்தோம்.
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 5 ஆயிரம் தேங்காய்கள் உடைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
XXXX
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 20 கிலோ தங்கம், 26 கிலோ வெள்ளி.. அறநிலைத்துறை அறிவிப்பு.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 20 கிலோ தங்கம் இருப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. கோயில்களில் பயன்படுத்தப்படாத பழைய, சேதமடைந்த தங்க நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, பக்தர்கள் காணிக்கையாக பணம் மட்டுமல்ல தங்கம், வெள்ளி காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அவ்வாறு வரும் நகைகளை உண்டியல் திறக்கப்படும் போது, சேகரித்து அவற்றை பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. இந்த நகைகள் முழுமையாக பயன்படுத்தாமல் அப்படியே வைக்கப்பட்டிருந்தது.
இந்த நகைகளை 6 மாதங்களுக்கு ஒருமுறை மதிப்பீடு செய்யப்பட வேண்டும். ஆனால், நகை சரிபார்ப்பு அலுவலர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த நகைகள் எப்போதாவது ஒருமுறை மட்டுமே ஆய்வு செய்து மறுமதிப்பீடு செய்யப்படுகிறது.
கோவில் நகைகளை உருக்கி வங்கிகளில் முதலீடு செய்யும் திட்டத்திற்கு பாரதீய ஜனதா கட்சி எதிர்ப்பு
‘கோவில் தங்க நகைகளை உருக்கி, வங்கிகளில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் வட்டியை செலவு செய்வோம் என்பது சட்ட விரோதமானது’ என்று தமிழகபாரதீய ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: பக்தர்கள் கோவிலுக்கு செலுத்தும் தங்க காணிக்கைகளை உருக்கி, அதை வங்கிகளில் தங்க பத்திரங்களாக மாற்றி, அதிலிருந்து கிடைக்கும் வட்டியை, மற்ற கோவில்கள் பராமரிப்புக்கு செலவு செய்வோம் என்பது சட்ட விரோதமானது. பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேற செலுத்திய காணிக்கைகள், குறிப்பிட்ட கோவில்களின் முன்னேற்றத்திற்கு, நிர்வாகத்திற்கு பயன்பெற வேண்டும்.
அந்த வளத்தை பயன்படுத்தி, மற்ற கோவில்களுக்கு செலவு செய்வதற்கு, அரசுக்கு, அறநிலையத் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை. கோவில்களுக்குஅறநிலையத்துறை தான் சொந்தக்காரர் என்பது போல, தி.மு.க.,அரசு செயல்படுவது, நம்பிக்கை துரோகம். உண்மையிலேயே அரசுக்கு, கோவில்கள் முன்னேற்றத்தில் அக்கறை இருந்தால், அரசின் வருமானத்தை பெருக்கி, அதை வைத்து செலவிட வேண்டும்.
திருப்பதி கோவிலில், இதுபோன்று செய்வதாக அமைச்சர் சேகர்பாபு சொல்லியிருப்பது, உண்மைக்கு புறம்பானது. இந்த அறமற்ற செயலை, தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
XXX
கர்நாடகத்தில் கட்டாய மத மாற்ற தடுப்புச்சட்டம்
கர்நாடக மாநிலத்தில் கட்டாய மதமாற்ற தடுப்பு சட்டத்தை கொண்டு வர பரீசிலிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் பொம்மை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, மாநிலத்தில் மதமாற்றம் தூண்டுதலின் பேரிலோ அல்லது வலுகட்டாயமாகவோ நடைபெற்றால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
கர்நாடக மாநிலத்தின் வடக்கு பகுதியில் இருக்கும் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மதமாற்றம் முயற்சி செய்ய வந்த கும்பலின் வீடியோ ஒன்று வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவில் பெண்களை வளையல் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிய கூடாது எனவும் மேலும் இந்த செயல் அரசாங்கதின் அனுமதி பெற்று நடைபெறுவதாகவும் கூறினர். இந்த வீடியோ சமூகவளைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் கடந்த வாரம் சட்டமன்றத்தில் உள்துறை அமைச்சர் அரேகா ஜானேந்திரா கட்டாய மதமாற்ற சட்டம் குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.
ஏற்கனவே உத்ரபிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது. மேலும், அசாம், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சட்டம் குறித்து பரிசீலித்து வருகின்றன.
மேலும், கட்டாய மதமாற்ற தடை சட்டம் மதங்களுக்கு இடையிலான திருமணத்தை தடுப்பதற்காக கொண்டு வரபடவில்லை மாறாக கட்டாய மதமாற்றத்தால் நடைபெறும் குற்றங்களை கண்டறியவே இந்த சட்டம் என் தெரிவித்துள்ளது.
. இதனை எதிர்த்து கர்நாடக கத்தோலிக்க ஆயர்கள், பீட்டர் மச்சாடோ லைமையில் கர்நாடக முதல்வர் பசவ்ராஜ் பொம்மையை சந்தித்து மனு அளித்தனர். தாங்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவதில்லை என்றும், இந்த சட்டம் தேவையற்ற வகுப்புவாத பிரச்சனைகள், அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்றும் கூறினர்.
கேரளாவில் முஸ்லிம்கள் நடத்தும் லவ் ஜிஹாத், போதைப்பொருள் ஜிஹாத் குறித்து அங்குள்ள கிறிஸ்தவ அமைப்புகளே கவலை தெரிவித்துள்ள சூழலில் மதமாற்ற தடுப்பு சட்டத்தை இவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என பல கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.
XXXX
தத்தாத்ரேயா கோவிலில் தொழுகை -கர்நாடக அரசின் உத்தரவு செல்லாது
சிக்கமகளூரு தத்தாத்ரேயா கோவிலில் தொழுகை நடத்த அனுமதித்து முல்லாவை நியமனம் செய்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிக்கமகளூருவில் பாபாபுடன்கிரி மலையில் தத்தாத்ரேயா கோவில் உள்ளது. அங்கு இந்து மற்றும் முஸ்லிம் மதத்தினர் பூஜை செய்கிறார்கள். அது இந்துக்களுக்கு சொந்தமானது என்று இந்துக்களும், முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்று முஸ்லிம்களும் உரிமை கொண்டாடுகிறார்கள். இதுதொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, அந்த கோவில் யாருக்கு சொந்தம் என்பது குறித்து மாநில அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
கர்நாடக ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையிலான உயர்மட்ட குழு பரிந்துரைப்படி, தத்தாத்ரேயா கோவிலில் முஸ்லிம் முறைப்படி தொழுகை நடத்த முல்லாவை (முஜாவர்) நியமனம் செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு அந்த கோவிலில் தொழுகை நடத்த முல்லாவை நியமனம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டது.
மாநில அரசின் உத்தரவை எதிர்த்து தத்தாத்ரேயா கோவில் மேம்பாட்டு குழு, கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது. நீதிபதி தினேஷ்குமார் இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்தார். அதில் தத்தாத்ரேயா கோவிலில் தொழுகை நடத்த முல்லாவை நியமனம் செய்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பில் கூறியுள்ளார்.
XXXXX
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் LONDON JAYASHREE
நன்றி, வணக்கம்
tags- tamilhindu, newsrpoundup, 3102021,