Article no. 1727; Date- 18th March 2015
Written by S Nagarajan
London Time- 5-10 am
சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்
23. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதை!
ச.நாகராஜன்
நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:
काकतालीयन्यायः
kakataliya Nyayah
காக தாலீய நியாயம்
காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்தது போல என்ற நியாயம் அனைவரும் அறிந்த பிரசித்தி பெற்ற ஒரு நியாயம்.
காக்கை ஒன்று பனைமரக் கிளை ஒன்றில் உட்கார, அதே கணம் அதன் தலையில் பனம் பழம் ஒன்று விழுந்து அதைக் கொல்லப் பார்த்த சம்பவத்திலிருந்து இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படுகிறது. யதேச்சையாக நடந்த ஒரு சம்பவத்தை சுட்டிக் காட்டுகிறது இது.
காசிகாவிருத்தியில் பாணிணி பற்றிச் சொல்லும்போது இது எடுத்துக்காட்டப்படுவதாக டாக்டர் எக்கிலிங் (Dr Eggeling) சுட்டிக்காட்டுவதாக கர்னல் ஜி.ஏ.ஜாகோப் (Colonel G.A.Jacob – A Handful of Popular Maxmims- Current in Sanskrit Literature – Volume 1 page 17) எடுத்துக் காட்டுகிறார்.
நீலகண்ட கோவிந்தர் மஹாபாரதம் சாந்திபர்வத்தில் தனது விளக்கவுரையில் இந்த நியாயத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.
அவர் கூறுவது: காக்கை உட்காருவதும் பனம் பழம் விழுவதும் இரண்டு தனித் தனிச் செயல்கள். யதேச்சையாக ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல் நடந்தவை. ஆனால் காக்கை உட்கார்ந்ததால் தான் பனம் பழம் விழுந்ததாக எடுத்துக் கொள்வது போல இந்த நிகழ்வு அமைகிறது.
இந்தத் தொகுப்புகளை கர்னல் ஜாகோப் தொகுத்துக் காட்டுகிறார்.
गोमयपायसीयन्यायः
gomayapayasiya nyayah
கோமயபாயசீய நியாயம்
கோமயமும் (பசுஞ்சாணி) பால் பாயசமும் பற்றிய நியாயம் இது.
முட்டாள் ஒருவன் சாணி, பசும்பாலினால் தான் ஆனது; ஏனெனில் அது பசுவிடமிருந்து தானே வருகிறது என்று வாதம் புரிந்தால் அவன் புத்தியை என்னவென்று சொல்வது? முட்டாள்தனமாக வாதம் புரிவதை – விதண்டா வாதம் புரிவதை – இந்த நியாயம் எடுத்துக் காட்டுகிறது.
யோகசூத்திரத்தில் வியாசபாஷ்யத்தில் இந்த நியாயம் அழகுற எடுத்துக் காட்டப்படுகிறது.நியாயவார்திக தாத்பர்ய டீகாவிலும் இது எடுத்துக் காட்டப்படுகிறது.
புத்தரின் சர்வதர்சன சங்க்ரஹத்தில் இந்த நியாயம் பார்க்கப்படும் பொருள் மற்றும் பார்ப்பவன் பற்றி எடுத்துரைக்கும் போது சுட்டிக் காட்டப்படுகிறது.
இந்த விளக்கங்களை சம்ஸ்கிருத மேற்கோள்களுடன் கர்னல் ஜி.ஏ.ஜாகோப் நூலில் படிக்கலாம். (Colonel G.A.Jacob – A Handful of Popular Maxmims- Current in Sanskrit Literature – Volume 1 page 25)
குறிப்பு: –
இத்துடன் இந்தத் தொடரில் இத்துடன் நூறு நியாயங்கள் விளக்கப்பட்டுள்ளன. நியாயம் பற்றி அதிகம் அறிந்து கொள்ளப் பலரும் விரும்புவர். ஆங்கில அறிவும் சம்ஸ்கிருத ஞானமும் கொண்டவர்கள் கர்னல் ஜி.ஏ,ஜாகோப் தொகுத்து எழுதியுள்ள A Handful of Popular Maxmims- Current in Sanskrit Literature நூலை இணையதளத்தில் படிக்கலாம்; இலவசமாக தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.
இனி, நூற்றியொன்றாவது நியாயம், தொடர்கிறது:-
कार्यनाशे कारणनाशः
karyanase karananasah
கார்யநாஷே காரண நாஷ நியாயம்
ஒரு காரணத்தினால் தான் ஒரு விளைவு ஏற்படுகிறது. விளைவைத் தடுக்க என்ன செய்வது? காரணத்தை அழித்து விட்டால் காரியம் அதாவது விளைவே ஏற்படாது. காரண நாசத்தினால் காரிய நாசம் ஏற்படும் இந்த நியாயம் பிரபலமான ஒன்று.
गुडजिह्मिकान्यायः
gudajihmika nyayah
குடஜிஹ்மிகா நியாயம்
சர்க்கரைப் பாகும் வேம்பும் பற்றிய நியாயம் இது.
குழந்தையின் உடல் நலத்திற்காக வேப்பம்பழம் தர வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. கசப்பான வேம்பை குழந்தை எப்படி சாப்பிடும்? அதைச் சாப்பிட வைக்க முதலில் இனிப்பான கருப்பஞ்சாறை முதலில் கொடுத்து கூடவே வேம்பையும் தருவது உலக வழக்கம்.
ஒரு காரியத்தை நிறைவேற்ற முயலும் போது அதில் இருக்கும் கஷ்டங்களை நினைத்து ஒருவன் மலைத்து நிற்கையில் அவனுக்கு சுலபமான சில வேலைகளை முதலில் கொடுத்து விட்டுப் பிறகு அந்த கஷ்டமான வேலையைக் கொடுத்தால் அதைச் செய்வதற்கான மனப் பக்குவமும் திறமையும் அவனுக்கு வந்து சேரும்.
இது போன்ற சந்தர்ப்பங்களில் இந்த வேம்பும் கருப்பஞ்சாறும் பற்றிய நியாயம் சுட்டிக் காட்டப்படும்.
**********




You must be logged in to post a comment.