கட்டுரையை எழுதியவர் :– S Nagarajan
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1460; தேதி 5 டிசம்பர், 2014.
“என்னால் விளக்கமுடியாத எதையும் ஃப்ராட் என்று சொல்லும் காலத்துகேற்ற முட்டாள்தனத்தை என்னால் செய்ய முடியாது” – கார்ல் ஜங் (இங்கிலாந்து சைக்கிகல் ரிஸர்ச் சொஸைடியில் 1919ஆம் ஆண்டு பேசியது)
விஞ்ஞானத்திற்கு சவாலாக விளங்கும் சூப்பர் சக்திகளைக் கொண்டுள்ள பலரையும் பார்த்து விஞ்ஞானம் வியப்பதோடு அவர்களின் மீது ஆராய்ச்சிகளையும் நடத்தி வந்துள்ளது, இப்போதும் நடத்தி வருகிறது. அவர்களில் குறிப்பிடத் தகுந்த சிலரைப் பற்றிப் பார்ப்போம்.
எக்ஸ்ரே கண்கள் கொண்ட நடாஷா
ரஷிய பெண்மணியான நடாஷா டெம்கினா மனிதர்களின் உடலின் உள்ளேயும் பார்க்க வல்லவர். அதாவது எக்ஸ்ரே கண்களைக் கொண்டவர். மனிதர்களின் உடல் உறுப்புகளைப் “பார்த்து” அவர்களுக்கு என்ன வியாதி என்பதை அவர் கண்டுபிடித்து விடுவார். பத்து வயது வரை எல்லா சிறுமிகளையும் போல அவரும் சாதாரணமாகத் தான் இருந்தார். ஆனால் அந்த வயதில் திடீரென்று அவருக்கு அபூர்வ சக்தி வந்து சேர்ந்தது.!
அந்த சக்தி வந்ததைப் பற்றி நடாஷாவே இப்படிக் கூறியுள்ளார்:” வீட்டில் எனது தாயாருடன் இருந்த போது ஒரு நாள் எனக்கு ஒரு காட்சி விரிந்தது. எனது தாயாரின் உடலுக்கு உள்ளே என்ன இருக்கிறது என்பதை என்னால் பார்க்க முடிந்தது. அவருடைய உறுப்புகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன். இப்போது இதைக் காண்பதற்காக எனது சாதாரணக் காட்சியிலிருந்து மாறி ‘மெடிகல் விஷனைப்’ பார்க்க மாற வேண்டியிருக்கிறது. நான் பார்ப்பவரின் உடலின் உள்ளே இருக்கும் உறுப்புகள் ஒரே ஒரு வினாடி வண்ணப்படமாக தெரியும். பின்னர் அதைப் பற்றிய என் ஆய்வை மேற்கொள்வேன்”
நடாஷாவின் இந்த அதிசயப் பார்வைக்கு விஞ்ஞானத்தில் இதுவரை விளக்கம் இல்லை!

காந்த உடல் கொண்ட லியூ தோ
மலாசியாவைச் சேர்ந்தவர் லியூ தோ. உலோகத் துண்டுகளை அவர் உடலோடு ஒட்டிக் கொள்வார். விஞ்ஞானிகள் அவர் உடலை ஆராய்ந்தனர். ஆனால் காந்த சக்தியை அவர் எப்படி எதனால் கொண்டுள்ளார் என்பதைக் கண்டுபிடிக்க இதுவரை முடியவில்லை. எப்படி தோலுடன் ஏராளமான உலோகத் துண்டுகளை ஒட்ட வைத்துக் கொண்டு அவர் பாலன்ஸுடன் இருக்கிறார் என்பது இதுவரை யாருக்கும் புரியவில்லை. காந்த சக்தி மனிதர் லியூ தோ விஞ்ஞானத்திற்கு ஒரு புதிய சவால்!
அபார நினைவாற்றல் கொண்ட டேனியல் டெம்மெட்
உலகின் அபார நினைவாற்றல் மேதை என்ற புகழைக் கொண்டிருப்பவர் டேனியல் டெம்மெட்! ஏராளமான தகவல்களை இவர் நினைவில் தக்க வைத்துக் கொள்கிறார். ‘பை’ என்ற கணிதக் குறியீட்டை சாதாரணமாக 3.142 என்று சொல்லி முடிப்பது வழக்கம். ஆனால் இவரோ 22,514 இலக்கம் வரை பையின் இலக்கங்களைக் கூறுகிறார். ஐந்து மணி ஒன்பது நிமிடங்களில் 2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதி இந்த நிகழ்ச்சியை நிகழ்த்தி அறிவியல் உலகையே அதிசயிக்க வைத்தார். இப்படிப்பட்ட அபூர்வ நினைவாற்றல் எப்படி அவருக்கு வாய்த்துள்ளது என்பதை ஒருவராலும் விளக்க முடியவில்லை. ஆனால் இவரோ தன் சக்தியைப் பற்றி,” எனது மனத்தில் பத்தாயிரம் எண்கள் முழுதாக அதன் உருவம், வண்ணம், வடிவம் ஆகியவற்றுடன் தெளிவாகத் தெரிகிறது.” என்கிறார். இதனால் அவருக்கு எல்லா விஷயங்களையும் தெளிவாக மற்ற சாதாரண மனிதரை விட அதிகமாக நினைவில் கொள்ள முடிகிறதாம்.
அவரது நினைவாற்றல் சக்தியின் படி 289 என்ற எண்ணின் சித்திரம் மிகவும் கோரமான ஒன்று. 333 என்ற எண்ணின் சித்திரமோ மிகவும் கவர்ச்சிகரமானது. ‘பை’ மிகவும் அழகிய ஒன்று. இந்த எண்களின் சக்தியினால் தான் நியூமராலஜி எனப்படும் எண் சாஸ்திரமும் எண்களின் அலைவெண்களும் தர்க்க ரீதியான உலகத்தில் தன் சக்தியைக் காண்பிக்கிறதோ என்னவோ!
அபூர்வமான நினைவாற்றல் மேதையான டேனியல் டெம்மெட்டும் அறிவியலுக்கு இன்றைய சவால் தான்!
தூக்கம் தேவையில்லாத அல் ஹெர்பின்
தூங்காமல் யாராலாவது உலகத்தில் வாழ முடியுமா? முடியும் என்று நிரூபித்துக் காட்டி இருக்கிறார் அல் ஹெர்பின்!
இவருக்கு அபூர்வமான இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மை வியாதி இருந்தது என்கின்றனர்! ஒரு சமயம் அவர் தொடர்ந்து பத்து வருட காலம் தூங்காமல் இருந்தாராம்! இதைக் கேள்விப்பட்ட மருத்துவ நிபுணர்கள் அவரை ஆய்வு செய்வதற்காக அழைத்தனர்.
அல் ஹெர்பினின் வீட்டில் படுக்கையோ அல்லது படுக்கை அறையோ இல்லாதது கண்டு அவர்கள் திகைத்தனர்! வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பி வரும் அல் ஹெர்பின் ஒரு நாற்காலியில் அப்படியே அமர்வது வழக்கம். அடுத்த நாள் வழக்கம் போல வேலைக்குச் செல்லும் நேரத்தில் எழுந்திருந்து வேலைக்குச் செல்வார்! நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்த அவர் பழுத்த வயதான 94ஆம் வயது முடிய வாழ்ந்தார்.

எஃகினால் ஆன வயிறுள்ள மைக்கேல் லோடிடோ
சாதாரண மனிதர்கள் ஜீரணிக்க முடியாத அனைத்தையும் ஜீரணிக்கும் வல்லமை வாய்ந்த வயிறை உடையவர் மைக்கேல் லோடிடோ. கண்ணாடித் துண்டுகள், உலோகங்கள், ரப்பர் மற்றும் இதர பொருள்கள் அனைத்தையும் ‘அல்வா’ போல விழுங்கும் இந்த அபூர்வ மனிதரைக் கண்டு விஞ்ஞானம் வியக்கிறது. இதனால் இவருக்கு எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லை என்பது கூடுதல் போனஸான அபூர்வ விஷயம்!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
விண்ணிலிருந்து விண்கற்கள் (meteorites) ஒருபோதும் பூமியில் விழுவதில்லை, விழவும் விழாது என்பது பழைய கால நம்பிக்கை. விண்கற்கள் பூமியில் விழுந்த சம்பவங்களை அறிஞர்கள் உள்ளிட்ட அனைவரும் அந்தக் காலத்தில் அது கட்டுக்கதை என்றே கூறி வந்தனர். கடவுள் பூமியில் (மனிதர்களின் தலை மீது) ஒருபோதும் கற்களைப் போட மாட்டார் என்பது மதவாதிகளின் கொள்கையாக இருந்தது! பிரான்ஸ் நாட்டில் ப்ரெஞ்ச் அகாடமி ஆஃப் சயின்
ஸஸ்,” வானத்திலிருந்து கற்கள் விழவே விழாது” என்று அறுதியிட்டு உறுதி கூறியது.
இதை உடைத்தவர் எர்னஸ்ட் கால்ட்னி என்னும் இயற்பியல் விஞ்ஞானி. ஒரு தகட்டின் மீது நுண்துகளைப் பரப்பி வெவ்வேறு ஒலி அலைகளை ஒலிக்கச் செய்து நுண்துகள்கள் வெவ்வேறு வடிவம் எடுப்பதை நிரூபித்துக் காட்டிய மாமேதை இவர். வைப்ரேஷன் எனப்படும் அதிர்தல் பற்றிய அபூர்வ விஷயங்களைத் தன் சோதனைகள் மூலம் இவர் உலகுக்கு நிரூபித்துக் காட்டினார்..1794இல் விண்கற்கள் விண்ணிலிருந்து வந்து பூமியில் விழுகின்றன என்பதை ஒரு நூல் வாயிலாக வெளியிட்டார். பிரான்ஸில் பர்போடன் என்னுமிடத்தில் 1790ஆம் ஆண்டில் விண்ணிலிருந்து விழுந்த கற்களைப் பற்றி இவர் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார்.இந்தக் கற்கள் விழுவதை 300 பேர்கள் தங்கள் கண்களால் நேரடியாகக் கண்டிருந்தனர்.
விண்ணிலிருந்து தான் விண்கற்கள் விழுகின்றன என்ற இவரது கூற்றை அனைவரும் கேலி செய்தனர்.
1803ஆம் ஆண்டில் தான் இவர் கூறியது சரி என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று. ஜீன் பாப்டிஸ் என்ற இன்னொரு அறிஞர் இப்படி விண்கற்கள் விழுவதை பல்வேறு விதமாக நிரூபித்துக் காட்டியதால் மக்கள் அதை ஏற்க வேண்டியதாயிற்று.
மந்திர ஒலிகளுக்குச் சக்தி உண்டு என்பதை நிரூபிக்க கால்ட்னியின் சித்திரங்கள் பெரிதும் உதவின. அபூர்வ அறிவியல் மேதை கால்ட்னி என்பதை காலம் கடந்து இப்போது நம்மால் உணர முடிகிறது!
Contact swami_48@yahoo.com (This articles was written by my brother S Nagarajan for a Tamil magazine)


You must be logged in to post a comment.