நீண்ட காலம் ஆண்ட மன்னன் கரிகாலன்?

Kallanai24

Karikal Choza (Mr Burnt Feet Choza)

கட்டுரையாளர் லண்டன் சுவாமினாதன்

 

ஆராய்ச்சிக் கட்டுரை எண் – 1592; தேதி-  21 ஜனவரி 2015

சோழ மன்னர்களில் மிகவும் புகழ் பெற்றவன் கரிகாலன். நமக்குத் தெரிந்து அவனது பெயரில் பிற்காலத்தில் ஆதித்த கரிகாலன் என்ற ஒரு மன்னன் இருந்தான். ஆனால் இவ்விருவர் தவிர மூன்றாம் கரிகாலன் ஒருவன் இருந்திருக்க வேண்டும். இவர்களில் யார் காவிரியில் அணை கட்டிய கரிகாலன் என்பது கேள்விக்குறியாக தொக்கி நிற்கும்.

 

பேராசிரியர் மு. ராகவ அய்யங்கார் பல ஆண்டுகளுக்கு முன் சென்னை கீழ் திசை சுவடிகள் நிலையத்தில் இருந்து பின்வரும் பாடலைக் கண்டுபிடித்தார்:-

அஞ்சில் முடிகவித்து ஐம்பத்து மூன்றளவில்

கஞ்சிக் காவேரி கரை கண்டு – தஞ்சையிலே

எண்பத்து மூன்றளவும் ஈண்ட விருந்தேதான்

விண்புக்கான் தண்புகார் வேந்து

 

இந்தப் பாட்டு கரிகால் பெருவளத்தான்  ஆட்சிக் காலத்தை 83 ஆண்டுகளாகக் கூறுகிறது. அவன் ஐந்து வயதில் பட்டம் ஏற்று 53 வயதில் காவிரிக்கு கரை எழுப்பி 83 ஆண்டில் உயிர் துறந்ததை தெள்ளிதின் விளம்பும் பாட்டு இது.

Chola-Empire-Map

ஆனால் இதில் தஞ்சை என்பதில் இருந்து இப்பாட்டு குறித்து சந்தேகம் எழுந்தது. ஏனெனில் சோழர்களின் தலை நகராக தஞ்சாவூர் உருவாநது மிகவும் பிற்காலத்தில். பி.டி சீனிவாச அய்யங்கார் என்னும் பேரறிஞர், திரிலோசன பல்லவன் காலத்தில் வாழ்ந்த ஒரு கரிகாலன் பற்றி அக்காலத்தில் எழுதி வந்தார். அவன் ஆறாம் நூற்றாண்டவன் என்பதும் அவர் கருத்து. ஆகவே மூன்று கரிகாலன்கள் இருந்திருக்க வேண்டும் என்றே நானும் கருதுகிறேன். இவர்களில் யார் கல்லணையில் காவிரி நதியின் குறுக்கே அணை கட்டினர் என்பதும் ஆய்வுக்குரிய விஷயமே.

 

நமக்குத் தெரிந்த கரிகாலன் கதை எல்லாம் சுவையான கதைகள் ஆனால் சரித்திரச் சான்றுகள் எதுவும் இல! சிறுவயதில் கரிகாலனை மன்னர் ஆக்க விடாமல் சதிகள்– அரண்மனைக்கு தீ வைப்பு — கரிகாலன் தப்பி ஓட்டம்– கால் கருகி கரிகாலன் என்ற பெயர் — யானை கையில் மாலை கொடுத்து அனுப்பவே அது அந்தச் சிறுவன் கழுத்தில் போட அவன் மீண்டும் மன்னன் ஆனான்— என்பன செவி வழிச் செய்திகள்.

மூன்றாம் நூற்றாண்டுக்கும் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் இடையே ஆண்ட சோழ மன்னர்களின் பெயர்கள் நமக்குக் கிடைக்கவில்லை.சங்க காலத்துக்கு முந்தைய சோழ மன்னர்களின் பெயர்களும் நமக்குக் கிடைக்கவில்லை. ஒரு நூற்றாண்டுக்கு குறைந்தது ஐந்து மன்னர் வீதம் கிட்டத்தட்ட முப்பது சோழ மன்னர்களாவது சங்க காலத்துக்குப் பின்னர் இருந்திருக்க  வேண்டும். ஆகவே பல கரிகாலன் கொள்கையில் பசை இருக்கிறது என்போமாக!

??????????????????????????????

Rajaraja on Indian Postage Stamp

மோசஸ் என்பவர் தலைமையில் அமைந்த யூத மதத்தை நாம் அறிவோம். ஆனால் அந்த மோசசுக்கு வரலாற்று சான்று எதுவும் இல. சங்க கால மன்னர்கள் பெரும்பாலோர் வரலாற்றுச் சான்று அற்றவர்களே. ஆயினும் அனைவரும் உண்மையில் ஆட்சி புரிந்ததை நாம் அறிவோம்.

 

பழஙகால புராண மன்னர்களின் பெயர்களை 18 புராணங்கள் ராமாயண, மஹா பாரதம் ஆகியன எடுத்தியம்பும். ஆயினும் வரலாற்றுச் சான்று இல்லாமலேயே நாம் நம்புகிறோம்.

கரிகாலன் பற்றிய இந்தப் பாடல் உண்மையானால் அவன் தான் இந்தியாவில் நீண்ட காலம் ஆண்ட மன்னன் ஆவான். காஷ்மீரின் வரலாற்றை எழுதிய கல்ஹணர் பல மன்னர்களுக்கு நீண்ட ஆட்சி ஆண்டுகளை அளிக்கிறார். அவர் கணக்குப் படி மிகிரகுலன் என்ற ஹூண மன்னன் 70 ஆண்டுகள் ஆண்டான். மேலும் பத்து மன்னர்கள் தலா 60 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்.

ஆயினும் வரலாற்றுச் சான்று உடைய அரசர்களில் மிகவும் நீண்ட ஆட்சி புரிந்தவன் பல்லவ மல்லன் எனப்படும் இரண்டாம் நந்தி வர்மன் தான் – அவன் 65 ஆண்டுகளும், அவனுக்கு அடுத்ததாக ராஷ்டிரகூட மன்னன் அமோகவர்ஷன் 64 ஆண்டுகளும் ஆண்டதை வரலாறு பதிவு செய்துள்ளது.


raja_raja_cho

Rajaraja

பதிற்றுப் பத்து தரும் அரிய தகவல்

 

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் – 58 ஆண்டுகள் ஆண்டான்

 

பல்யானை செல்கெழு குட்டுவன் – 25 ஆண்டுகள் ஆண்டான்

 

நார் முடிச் சேரல்– 25 ஆண்டுகள் ஆண்டான்

 

செங்குட்டுவன் – 55 ஆண்டுகள் ஆண்டான்

 

ஆடுகோட்பாட்டு சேரலாதன்- 38 ஆண்டுகள் ஆண்டான்

செல்வக் கடுங் கோ வாழியாதன்-25 ஆண்டுகள் ஆண்டான்

 

பெருஞ்ச் சேரல் இரும்பொறை –17 ஆண்டுகள் ஆண்டான்

 

குடக்கோ இளஞ்ச் சேரல் இரும்பொறை –16 ஆண்டுகள் ஆண்டான்

கரிகால் சோழன்

ஏனைய சில மன்னர்கள் ஆட்சி புரிந்த ஆண்டுகள்:

 

பிம்பிசாரன்- 52

சாளுக்கிய விக்ரமாதித்யன் -50

பல்லவ தந்தி வர்மன் – 50

குலோத்துங்க சோழன் – 50

ஹொய்சாள வினயாதித்யன்-51

ஹொய் சாள வீர வல்லாளன்- 51

கனிஷ்கன் -45

 

இலங்கை மன்னர்கள்:

பாண்டுகாபயன்- 70

மூடசிவன் – 60

பராக்ரம பாஹு-55

விக்ரமபாஹு– 55

காளிதாசன் எழுதிய ரகுவம்ச காவியத்தில் சூரிய குல மன்னர்கள் — பேரக் குழந்தைகளைப் பார்க்கும் வரை ஆண்டுவிட்டு காடேகியதாக — வானப்ரஸ்தம் சென்றதாகக் கூறுவான்.

 

ராமாயணத்தில் இராமபிரான் 10, 000 ஆண்டுகள் ஆண்டதாகக் கூறியதை 2000  ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மாபெரும் அறீஞர் பதஞ்சலி— 10,000 நாட்கள் என்று கொண்டு கணக்கிட்டு ராமன் 28 ஆண்டுகள் ஆண்டதாக எழுதியுள்ளார். அக்கலத்திலேயே வரலாற்றைப் புதுமைக் கண்களோடு கண்ட மாபெரும் அறிஞன் — பாணினியத்துக்கு உரை கண்ட மஹா பாஷய ஆசிரியர் — பதஞ்சலி!

நம்முடைய இன்றைய ஆய்வுக்கு எல்லாம் முன்னோடி பதஞ்சலி!!

சுமேரியாவிலும் ஆரம்ப கால மன்னர்களுக்கு 28 ஆயிரம், 36 ஆயிரம் என்று ஆட்சி ஆண்டு கொடுத்தனர். உலகு எங்கிலும் நாட்களை வருடக் கணக்கில் சொல்லும் வருடம் இருந்திருக்க வேண்டும்!


1000_Rupee_thumb[7]

வரலாற்றில் மிகவும் நீண்ட காலம் ஆண்ட மன்னன் எகிப்திய மன்னன் பெபி ஆவான் அவன் 94 ஆண்டுகள் ஆண்டான். ஆவனுக்கு அடுத்ததாக ராமசேஷன் (ராம்செஸ் ) என்ற மன்னன் 67 ஆண்டுகள் !

நவீன கால (பிரிட்டிஷ் ஆட்சிக் கால இந்திய மன்னர்கள்) இந்திய மன்னர்களில் பலர் நிறைய ஆண்டுகள் ஆண்ட — பெயர் அளவுக்கு “மன்னர்களாக” இருந்திரு க்கிறார்கள். இவர்களில் “நீண்ட ஆட்சி” புரிந்தோர் உண்டு. இவர்கள் போர் என்ற சொல்லை அறியாதவர்கள். தங்க பஸ்பம் சாப்பிட்டுக் கொண்டு பல மஹா ராணிகளுடன் உல்லாச சுக போக வாழ்க்கை நடத்தியவர்கள். ஆகையால் அவர்களை ஒதுக்கி விடுதல் சாலப் பொருத்தம்.

 

contact swami_48@yahoo. com