கட்டுரை எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1177; தேதி:- 17 ஜூலை 2014.
தமிழ் தலைவன் யார் என்று தமிழ் கூறு நல்லுலகில் ஒரு ‘சர்வே’ நடத்தினால், சிறை சென்ற தியாகிகள் பட்டியல், மறியல் போராட்ட தியாகிகள் பட்டியல், அரசியல் தலைவர்கள் பட்டியல், ஏ.கே. 47 துப்பாக்கி சுழற்றியோர் பட்டியல், ரயில் பாதையில் படுத்துப் போராட்டம் செய்தோர் பட்டியல் என்று ஆயிரம் ஆயிரம் பேர் கொண்ட பட்டியல் வந்து நம்மைத் திக்கு முக்காடச் செய்து விடும்!
கம்பனிடம் போய் ஒருவர் இதே கேள்வியைக் கேட்டார். அவர் நாலே வரிகளில் தெளிவான பதில் கொடுத்து நம் குழப்பத்தை எல்லாம் போக்கிவிட்டார்.
அலை நெடும் புனல் அறக் குடித்தலால் அகம்
நிலை பெற நிலை நெறி நிறுத்தலால் நெடு
மலையினை மண் உற அழுத்தலால் தமிழ்த்
தலைவனை நிகர்த்தது அத் தயங்கு தானையே
-கம்ப ராமாயனம், அயோத்தியா காண்டம், பாடல் 969
பொருள்: அலைகளை உடைய ஆறுகளின் (கடலில் போய்ச்சேரும்) நீரைக் குடித்தலாலும், பூமியைச் சம நிலையில் நிறுத்தியதாலும், போகும் வழியில் நீட்டிக் கொண்டிருந்த மலையை பூமிக்குள் அழுத்தியதாலும் பரதனின் படைகள் தமிழ்த் தலைவனான அகத்தியன் செய்த செயல்களைப் போல இருந்தது. அதாவது அகத்தியர் செய்த செயல்களும் பரதன் படைகள் செய்த செயலும் ஒரே மாதிரியாக இருந்தன.
அகத்தியர் கடலைக் குடித்தார்: அதாவது வங்கக் கடல் வழியாக பாண்டியனின் படைகளை வழி நடத்திச் சென்று வியட் நாம், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, இந்தோநேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் இந்துப் பண்பாட்டைப் பரப்பினார். இதைக் “கடலைக் குடித்தார்” என்று அழகாகாகச் சொல்லுவர். அகத்தியர் கடலைக் குடித்தாரா? என்ற ஆங்கிலக் கட்டுரையிலும், பிரம்மாஸ்திரா—ஒரு அணுசக்தி ஆயுதமா? என்ற ஆங்கிலக் கட்டுரையிலும் இதை விரிவாகக் கொடுத்துவிட்டேன்.
அகத்தியர் பூமியை சமநிலைப்படுத்தினார்: இது திருவிளையாடல் புராணத்தில் உள்ள கதை. மக்கட் தொகைப் பெருக்கம் காரணமாக அகத்தியன் தலைமையில் 18 குடிகளை சிவ பெருமான் தெற்கே அனுப்பிவைத்தார். “உலகின் முதல் மக்கட் தொகைப் பெருக்கப் பிரச்னை”– என்ற ஆங்கிலக் கட்டுரையில் இதை விரிவாகக் கொடுத்துவிட்டேன்.
விந்திய மலையை மட்டம் தட்டினார்:- அகத்தியர் தென்னாட்டிற்கு வருவதற்கு முன், மக்கள் அனைவரும் கடலோரமாக நடந்தோ, படகுகளிலோ தென்னாட்டு நகரங்களுக்கு வந்து சென்றனர். காரணம் இல்வலன், வாதாபி போன்ற, நர மாமிசம் சாப்பிடும் பயங்கரக் காட்டுவாசிகளும் காட்டு மிருகங்களும் மக்களை அச்சுறுத்தி வந்தன. அகத்தியர் தவ வலிமை பெற்றதால் தைரியமாக 18 குடி மக்களை, துவாரகை நகரில் இருந்து, விந்திய மலையின் நடுவிலுள்ள அடர்ந்த காடுகள் வழியே அழைத்து வந்தார். அன்றுமுதல் இன்று வரை நாம் அந்தப் பாதையைப் பயன்படுத்தி வருகிறோம். இதையே “மண் உற அழுத்தலால்” என்று குறிப்பிடுகிறார். புராணங்கள் கத்தியர் விந்திய மலையின் கர்வத்தைப் பங்கம் செய்தார் என்று அழகாகக் கூறுகின்றன. “பழங்கால இந்தியாவின் புகழ்மிகு எஞ்சினீயர்கள்”– என்ற கட்டுரையில் இது பற்றி ஏற்கனவே விரிவாக எழுதி விட்டேன்.

இத்தகைய அரிய பெரிய செயல்களைச் செய்து இந்திய பூகோள புத்தகத்தில் அழியா இடம் பெற்ற அகத்தியனை, தமிழ்த் தலைவன் என்று கம்பன் அழைத்ததை எல்லோரும் ஏற்பர் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமும் உண்டோ?
இதைத் தொடர்ந்து வரும் இன்னொரு பாடலில்
அறிஞரும் சிறியரும் ஆதி அந்தமா
செறிபெருந் தானையும் திருவும் நீங்கலால்
குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள்
மறிகடல் ஒத்தது அவ் அயோத்தி மா நகர்.
பொருள்: அகத்தியன் கடல் நீரை எல்லாம் குடித்து வயிற்றில் அடக்கிக் கொண்ட பின்னர், எப்படிக் கடல் வெறிச்சோடிக் கிடந்ததோ அப்படி இருந்தது அயோத்தி மா நகரம். ஏனெனில் பெரியோர் முதல் சிறியோர் வரை அறிஞர்களும், படைகளும் சீதையும் நீங்கிவிட்டனர்.
இனி தமிழ்த் தலைவன் யார் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. அரசியல்வாதிகள் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டியதுதான்!!

contact swami_48@yahoo.com


You must be logged in to post a comment.