
Article Written S NAGARAJAN
Date: 11 July 2016
Post No. 2960
Time uploaded in London :– 6-25 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
உலகின் அதிசய நூல் யோகவாசிஷ்டம் ! – 5
பழைய கால நூல் தற்காலத்திற்குப் பொருந்துமா?
ச.நாகராஜன்
யோக வாசிஷ்டம் என்னும் நூலோ பழைய காலத்தில் இயற்றப்பட்டது. இன்னும் சொல்லப் போனால் வசிஷ்ட முனிவர் பழைய யுகம் ஒன்றில் ராமருக்கு உபதேசித்த நூல் அது.
இன்றைய நவீன இண்டர்நெட் யுகத்திற்கு அது பொருந்துமா?
எத்தனை தொழில்நுட்பங்கள்! எத்தனை அறிவியல் முன்னேற்றங்கள்!!
இந்தக் காலத்திற்கு அந்த நூல் பத்தாம்பசலித்தனமான நூல் அல்லவா? பகுத்தறிவுக்கு ஒத்த நூலாகுமா?
இப்படி கேள்விகளைப் பகுத்தறிவாளர்கள் கிளப்பினால் சாதாரண மனங்களே குழம்பி விடும்! விடையைப் பார்க்கலாம்.
முதலில் விஞ்ஞான முன்னேற்றம் புறவுலகை அளப்பதில் தான் இருக்கிறது. விண்வெளியில் விண்கலங்கள் சுழல்கின்றன. நெட் உலகில் தகவல் பரிமாற்றம் நன்கு நடைபெறுகிறது. உண்மை தான்!
ஆனால் அகவுலகைப் பொருத்த வரையில் விஞ்ஞானம் திகைக்கவே செய்கிறது! உயிர் என்பது என்ன? அது எப்படி கருவில் எப்போது வந்து சேர்கிறது? உடலை விட்டு உயிர் எப்போது எப்படி நீங்குகிறது? மனம் என்பது என்ன? பிரக்ஞை என்பது என்ன” – என்றெல்லாம் கேட்கப் போனால் விஞ்ஞானம் விலகி ஓடுகிறது.

ஆகவே விஞ்ஞானம் பதில் சொல்ல முடியாமல் திகைக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் ஒரே நூல் யோக வாசிஷ்டம் தான்! ஒருவேளை விஞ்ஞானமும் மனம், பிரக்ஞை, உயிர் என்பது பற்றியெல்லாம் விளக்கி இருந்தால் அப்போது மட்டுமே நாம் ‘பகுத்தறிவாளர் நம்மைக் குழப்புகின்ற’ மேலே கூறியுள்ள கேள்விகளைக் கேட்கலாம்.
அப்படி விஞ்ஞானம் விளக்காத நிலையில் அப்படிப்பட்ட கேள்விகளே தவறு என்று சொல்லி விடலாம்.
சரி, இன்றைய யுகத்திற்கு யோக வாசிஷ்டம் பொருந்துவது எப்படி என்பதற்குப் பதில் உண்டா?
உண்டு!
உண்மையில் யோக வாசிஷ்டம் தான் அறிவியல் ரீதியிலான நூல். எதையும் ஆராய்ந்து பார் என்று அது கூறுகிறது. விசாரம் என்ற சம்ஸ்கிருத பதம் இதற்காக உபயோகப்படுத்தப் படுகிறது.
ஸந்தோஷம், ஸத் ஸங்கம், ஸத் விசாரம், ஸமஸ்தம் என்ற நான்கு வழிகளே மனிதனின் இக வுலக மற்றும் மறு உலக வெற்றிக்கான வழிகள். (விசாரத்துடன் ஒரு ஸத் சேர்க்கப்பட்டுள்ளதன் காரணம் நான்கு ‘ஸ’காரங்களை சுலபமாக நினைவில் இருத்திக் கொள்ளலாம் என்ற காரணத்திற்காகவே!)
இவற்றில் எந்த ஒன்றைப் பயின்றாலும் மற்ற மூன்றையும் எய்தி வெற்றியைப் பெறலாம் என்கிறது யோக வாசிஷ்டம்.
ஸத் விசாரம் என்பது நல்லதைப் பற்றிய ஆராய்ச்சி. இதை ஆங்கிலத்தில் Rational investigation என்று கூறலாம்,
உலக வாழ்க்கையில் உள்ள ஏற்றத் தாழ்வுகள். சோதனைகள் ஆகியவற்றிலிருந்து மீள்வதற்கான ஒரே மருந்து விசாரம் தான் என்று வசிஷ்டர் அறிவுறுத்துகிறார்.
ஆசைகள் மற்றும் விருப்பங்களினாலேயே வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள், ஏற்படுகின்றன.
ஆகவே பகுத்தறிவு ஆய்வு மற்றும் அமைதியான சிந்தனை ஆகியவற்றின் மூலமாகவே துன்பங்களை வெல்ல முடியும்.
நமது திறமைகள் ஒரு பக்கம். சமுதாய சூழ்நிலை ஒரு பக்கம் நம்முடைய உடல் தகுதி இன்னொரு பக்கம் இப்படி மூன்றினுக்கும் இடையே அகப்பட்டுள்ள நாம் இவற்றிற்கு உட்பட்டுத் தான் நமது ஆசைகளை நிறைவேற்றும் சூழ்நிலை ஏற்படுகிறது. நமது ஆசைகள் இவற்றிற்கு இசைய அமைந்தால் அப்போது நமது முயற்சிகள் பலனை அளிக்கின்றன.
இல்லையேல் வலியும் ஏமாற்றமுமே மிஞ்சும்.
இவற்றிற்கெல்லாம் மேலே மோகம் என்னும் மாயை இருக்கிறது.
இந்த மாயைக்கு நாம் வசப்பட்டு நமது திறமைகளை அதிகமாக மதிப்பீடு செய்து கொள்கிறோம். நமது ஆசைகள் நமது திறமைகளை தகுதிக்கு அதிகமாக எண்ண வைத்து பிரத்யட்ச நிலை பற்றித் தெரியாமல் நம்மை குருடாக ஆக்கி விடுகிறது.

Free e book
ஆகவே நமக்குத் தேவையானது விசாரமும் விவேகமும் தான்.
இதற்கு வசிஷ்டர் வெளிச்சத்தை உதாரணமாகத் தருகிறார்.
இருட்டில் இருக்கும் ஒருவன் பயப்படுகிறான்.அவனால் நகரக் கூட முடியவில்லை. ஒரு விளக்கு ஏற்றப்பட்டு வெளிச்சம் வந்து விட்டால். எல்லாமே தெளிவாக ஆகி விடுகிறது.
அது போல துன்பம் வரும் போது கோபமோ அல்லது பயத்தையோ அடையாமல் விசாரம் செய்ய ஆரம்பித்தால் தெளிவு பிறக்கும். விசாரம் என்ற வெளிச்சம் துன்பம் என்ற இருளை நீக்கும்.
இதுவே உலகியல் வாழ்க்கையில் வெற்றி பெற வழி!
******
You must be logged in to post a comment.