சப்த ரிஷி மண்டல அதிசயங்கள்!

Picture shows Ursa Major (great bear). Hindus call it Sapta Rishi Mandalam. On the day of wedding, Hindus are shown Arunthathi– a double star–near Vashista Star. Vashista is one of the seven rishis/seers.

 

Tamil Article on Ursa Major also known as The Great Bear Constellation and  Saparishi Mandlam by Santanam Nagarajan: 

ஆங்கிரஸ், க்ரது,மரீசி,வசிஷ்டர்,புலஹர்,புலஸ்த்யர்,,அத்ரி ஆகியோரே சப்தரிஷிகள்.சூரியனுக்கே சக்தியை அருளும் இவர்களை சூரியன் அனுதினமும் தொழுது வானவீதியில் வலம் வருகிறான்.இவர்களை வழிபட்டால் நமக்கும் வலிவும் பொலிவும் ஆரோக்கியமும் ஆயுளும் வளரும் என்பதோடு செய்த பாவங்கள் எல்லாம் உடனே அகலும் என்பது தான் புராணம் கூறும் ரகசியம்! சப்தரிஷிகளை நம் நாட்டில் ரிஷி பஞ்சமி அன்று வழிபடுகிறோம். இவர்களைப் பற்றிய அதிசய செய்திகள் ஏராளம்.. படிக்கலாமா?

சப்த ரிஷி மண்டல அதிசயங்கள்!

ச.நாகராஜன்

 

அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல்

சப்த ரிஷிகளையும் அருந்ததியையும் தெரியாதவர் யாருமே இருக்க முடியாது.வைதீக முறைப்படி நடக்கும் திருமணங்களில் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்கு மிக முக்கியமானது. பழைய காலத்தில் நான்கு நாட்கள் நடந்த திருமண வைபவம் அவசர கதியில் ஒன்றரை நாட்களாகச் சுருங்கிய விபரீதத்தின் காரணமாக இந்த அருந்ததி பார்க்கும் வைபவம் பகல் நேரத்திலேயே அருந்ததியை நிஜமாகப் பார்க்காமலேயே கல்யாண மண்டபத்திற்குள்ளேயே முடிந்து விடுகிறது. பழைய காலத்தில் இந்த பரிதாபம் இல்லை. திருமணம் நடந்த அன்று இரவு நிஜமாகவே துருவ நட்சத்திரத்தையும் அருந்ததியையும் பார்க்கும் பழக்கம் தவறாமல் அனுஷ்டிக்கப்பட்டது.

த்ருவனையும் அருந்ததியையும் பார்க்கும் போது கூறும் மந்திரத்தின் அர்த்தமாவது:- “ஓ! துருவ! நீர் அழிவில்லா பதவி பெற்றவர்.ஸத்யத்திற்கு காரணமானவர்.ஸ்திரமாக இருப்பதற்கு நீரே காரணம்.த்ருவம் என்ற பெயரைப் பெற்றீர்.சுற்றுகின்ற நட்சத்திரங்களுக்கு நீர் கட்டுத்தறி போல இருக்கிறீர்.அத்தகைய நீர் சத்ருக்களின் உபாதை இல்லாமல் இவளை ஸ்திரமாக இருக்கச் செய்யும்”

சப்த ரிஷிகள் பத்னிகளுக்கு க்ருத்திகா என்று பெயர்.அவர்களுள் சிறந்தவளான அருந்ததியை ஷட் க்ருத்திகைகள் “இவளே எங்களுள் மிக உத்தமி” என ஏற்றுக் கொண்டனர்.அத்தகைய பெருமை வாய்ந்த அருந்ததியின் தரிசனத்தால் இவள் எட்டாவது கிருத்திகை போல கற்பினாலும் பாக்கியத்தினாலும் விருத்தி அடையட்டும்.”

ஆங்கிரஸ், க்ரது,மரீசி,வசிஷ்டர்,புலஹர்,புலஸ்த்யர்,,அத்ரி ஆகியோரே சப்தரிஷிகள் என ப்ருஹத் சம்ஹிதா பட்டியலிடுகிறது.(ஒவ்வொரு மன்வந்தரத்திற்கும் சப்தரிஷிகள் வேறுபடுவர்).சப்த ரிஷிகளுள் ஒருவரான வசிஷ்டரின் அருகில் அவருக்குக் கீழே காணப்படும் அருந்ததியை வழிபடுவதுதொன்று தொட்டு  மரபாக இருந்து வருகிறது.

 

அருந்ததியின் கதை

 

அருந்ததி என்ற சொல்லுக்கு ‘சிவந்த மாலைப் பொழுது’ என்று பொருள்.நிஜமாகவே வானில் ‘சாயம் சந்த்யா’வின் ஒளியையே அருந்ததி நட்சத்திர ஒளியில் காணலாம்.

அருந்ததியைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்றை காலிகா புராணம் இவ்வாறு கூறுகிறது :- “சந்த்யா பிரம்மாவின் புதல்வி. சப்தரிஷிகளின் சகோதரி.அவளது எல்லையற்ற அழகால் பிரம்மாவும் சப்தரிஷிகளுமே மயங்கிய காரணத்தால் அவள் தன் உடலை உகுத்து விட்டாள்.பிறகு அருந்ததியாக உருவெடுத்து வசிஷ்டரை மணம் புரிந்து கொண்டாள்.”

ஆக அழகிலும் கற்பிலும் கணவனைப் பேணுவதிலும் பெண்மையின்  லட்சியமாகவும் இலக்கணமாகவும் திகழும் அருந்ததியை பெண்கள் வழிபடுவதில் வியப்பில்லை.

 

சப்த ரிஷி மண்டலம்

சாதாரணமாக வானவியல் தெரியாதவர்கள் கூட இந்தக் காலத்திலும் சப்தரிஷி மண்டலத்தைத் தெரிந்து அதை வானில் ஒருவருக்கு ஒருவர் சுட்டிக் காட்டி மகிழ்கின்றனர்.இது மேலை நாட்டில் ‘க்ரேட் பேர்’ அல்லது ‘ஊர்ஸா மேஜர்’ என வழங்கப்படுகிறது.மக நட்சத்திரத்திற்கும் சுவாதிக்குமுள்ள தூரத்திற்கு நேர் வடக்காக ஏழு ஒளி பொருந்திய நட்சத்திரங்கள்  ஏர்க்கால் போன்று ஒரு முனை கிழக்காக இருக்குமாறு காணப்படுகிறது. இதையே பண்டைய காலம் தொட்டு சப்தரிஷி மண்டலம் என அழைக்கிறோம்.மேற்கில் உள்ள இரண்டு நட்சத்திரங்களைச் சேர்த்து சுமார் 7 பங்கு தூரம் வடக்கே நீட்டினால் துருவ நட்சத்திரத்தில் முடியும். ஆகவே திசையைக் காட்டும் நட்சத்திரங்களான இந்த இரண்டை மட்டும் மாலுமிகள் திசைகாட்டி என அழைத்தனர். இந்த சப்த ரிஷி மண்டலம் சூரிய வீதியில் இல்லாததால் 27 நட்சத்திரங்கள் பட்டியலில் சேரவில்லை. பிரம்ம சித்தாந்தம் என்னும் நூலில் சகலர் என்னும் ரிஷி சப்த ரிஷிகள் மற்றும் அருந்ததி எங்கே உள்ளனர் என்பதை விரிவாக விளக்குகிறார். ரிக் வேதம் (9-114-3) “தேவா: ஆதித்யா: யே சப்த” என்று இந்த ஏழு பேரும் ஏழு தெய்வங்கள் என முழங்குகிறது.மஹாபாரதமோ இவர்களை சித்ர சிகண்டி ( மயில் வடிவம்)என்று 12-336ம் அத்தியாயத்தில் விளக்குகிறது!

 

ப்ருஹத் ரதம்

ப்ருஹத் ரதம் என்ற பெரும் பாதையை இந்திரனின் ரதம் செல்வதற்காக சப்தரிஷி மண்டலம்  அமைப்பதும் அந்த ப்ருஹத் ரதத்தின் வழியே தேரில் இந்திரனும் நகுஷனும் ஒன்றாக தேரில் அமர்ந்து செல்வதையும் ரிக் வேத கீதங்கள் அழகுற இசைக்கின்றன.

 

சூரியனுக்கே சக்தி அருளும் ரிஷிகள்     

 

 

உண்மையில் சூரியனுக்கு பலமும் ஒளியும் தருபவர்கள் இவர்களே என வேதம் கூறுகிறது. ரிஷி யாஸ்கர் சூரியனின் ஏழு கிரணங்களே சப்த ரிஷிகள் என்ற ரகசியத்தை (நிருக்தா I-1.5யில் உள்ள) ‘சப்த ரிஷயஹ சப்த ஆதித்ய ரஷ்மயஹ இதி வதந்தி நைருகாதாஹா’ என்ற வாக்கியத்தின் மூலம் உணர்த்துகிறார்! இவர்களிடமிருந்து தன் சக்தியைப் பெறுவதால் தான் சூரியன் சற்று கீழே தாழ்ந்து இவர்களை அன்றாடம்  தொழுது தன் பவனியைத் தொடர்கிறான் என்பதை குமார சம்பவத்தில் (7-7) மகாகவி காளிதாஸர் “அவர்கள் தொடர்ந்து தரும் ஆதரவால் அந்த ரிஷிகள் வானில் உதிக்கும் போது  சூரியன் தனது அஸ்தமன சமயத்தில் தன் கொடியைக் கீழே தாழ்த்தி பயபக்தியுடன் அவர்களைப் பார்க்கிறான்” என்கிறார். சூரியனே தொழுது சக்தி பெறும் போது நாம் தொழுது சக்தி பெறலாம் என்பதே நாம் உணர வேண்டிய ரகசியம்!இது மட்டுமின்றி இன்னொரு ரகசியத்தை அதர்வண வேதம் உரைக்கிறது. இவர்களே பஞ்சபூதங்களை உருவாக்கினர்!(சப்தரிஷய: பூதக்ருதா: தேI அதர்வண வேதம் VI -108-4)

ஏழு ரிஷிகளையும் நாம் பிதரஹ (தந்தைமார்) எனக் குறிப்பிட்டு வணங்குகிறோம். இவர்களுக்கு மேலே பிரம்ம லோகத்தில் உள்ள பிரம்மா இவர்களுக்குத் தந்தை ஆதலால் நாம் பிரம்மாவை பிதாமஹ என்று கூறி வணங்குகிறோம்.

 

பாவம் போக்கும் பஞ்சமி தினம்

விநாயகசதுர்த்தியைத் தொடர்ந்து அடுத்த நாளாக வரும் பஞ்சமி தினம் ரிஷி பஞ்சமி என தொன்று தொட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் அனைவரும் சப்த ரிஷிகளையும் வணங்கித் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டு புதிய வலிவும் பொலிவும் ஆரோக்கியமும் தீர்க்க ஆயுளும் பெற்றுத் தம் வாழ்க்கையைத் தொடர்வது வழக்கம். குறிப்பாகப் பெண்கள் நேபாளத்திலிருந்து காவேரி தீரம் வரை  ஒரு மரத்தட்டில் ஏழு ரிஷிகளையும் எழுந்தருளச் செய்து அறிந்தோ அறியாமலோ தாங்கள் மாதவிலக்குக் காலத்தில் செய்த பாவச் செயல்கள் உள்ளிட்ட அனைத்துப் பாவங்களையும் ஒரு கணத்தில் போக்கிக் கொள்கின்றனர்.

சப்தரிஷிகளின் 1600 முறை பயணமே ஒரு மஹாயுக காலம்

ஆரிய பட்டரும் வராஹமிஹிரரும் (பிருஹத் சம்ஹிதா 13ம் அத்தியாயத்தில் வராஹமிஹிரர் கூறுகிறார்) இந்த சப்தரிஷிகள் 1600 முறை புறப்பட்ட இடத்திலிருந்து மீண்டும் அங்கேயே வந்து சேர்ந்தால் ஒரு மஹாயுகம் ஆகும் என்று கணக்கிட்டுச் சொல்லி உள்ளனர். அதாவது இப்படிப்பட்ட 1600 முறை சுழற்சி முடிய 43,20,000 வருடங்கள் ஆகின்றன! ரிக் வேதம்,மஹாபாரதம், ராமாயணம்.18 புராணங்கள், மற்றும் பின்னால் வந்த இலக்கியங்கள் அனைத்திலும் சப்தரிஷிகளின் ரகசியங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

மாயவரத்தின் அருகில் கொல்லுமாங்குடியிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிறுபுலியூர் உள்ளிட்ட ஏராளமான ஸ்தலங்கள் தென்னாட்டிலும் வசிஷ்டர் தவம் செய்து வசித்த வசிஷ்ட குகை போன்ற பல புண்ணிய இடங்கள் வட நாட்டிலும் சப்தரிஷிகளின் ஏராளமான வரலாறுகளை உள்ளடக்கிய பெரும் ஸ்தலங்களாக அமைந்துள்ளன,

*********************

Leave a comment

Leave a comment