
Paintings abroad: Sita garlands Rama.
9.ராமாயண வழிகாட்டி
அத்தியாயம் – 9 by ச.நாகராஜன்
உயிரைக் காப்பாற்றிக் கொள்! ஆனந்தம் உன்னை வந்து அடையும்!!
தினமும் புரிய வேண்டிய சந்தியாவந்தனத்தில் மதிய வேளையில் சொல்லும் மந்திரத்தில் சூரியனைப் பார்த்துச் சொல்லும் மந்திரங்கள் இவை:
புரஸ்தாத் சுக்ரம் உச்சரத் – கிழக்கில் பரிசுத்தமாய் உதித்து
தேவஹிதம் சக்ஷு: – தேவர்களுக்கு நன்மை செய்வதும் கண் போன்றதுமான
தத் – அந்த சூர்ய மண்டலத்தை
சரத: சதம் – நூறாண்டு
பச்யேம – கண்டு வணங்குவோம்
ஜீவேம சரத: சதம் – அங்ஙனமே நூறாண்டு வாழ்வோம்
நந்தாம சரத: சதம் – நூறாண்டு உற்றார் உறவினருடன் கூடிக் குலவுவோம்
மோதாம சரத: சதம் – நூறாண்டு மகிழ்வோம்
பவாம சரத: சதம் – நூறாண்டு கீர்த்தியுடன் விளங்குவோம்
ச்ருணவாம சரத: சதம் – நூறாண்டு இனியனவற்றைக் கேட்போம்
ப்ரப்ரவாம சரத: சதம் – நூறாண்டு இனியனவற்றையே பேசுவோம்
அஜீதாஸ்யாம சரத: சதம் – நூறாண்டு தீமைகளால் ஜயிக்கப்படாதவர்களாக வாழ்வோம்
ஆக வேதம் நூறாண்டு ஒரு மனிதன் வாழ வேண்டியதை வலியுறுத்துகிறது. இதையே ஈசாவாஸ்ய உபநிடதத்தில் இரண்டாம் ஸ்லோகத்திலும் காண்கிறோம்.
ஒருவன் எப்பாடுபட்டேனும் எவ்வளவு கஷ்டத்தைஅனுபவித்தாலும் கூட உயிர் வாழ யத்தனிக்க வேண்டும் என்பதே மஹரிஷிகள் நமக்கு வலியுறுத்திக் கூறும் அன்புரை; அறவுரை!
இந்த வழியில் ஆதிகாவியத்தை இயற்றிய வால்மீகி முனிவர் தன் முக்கிய கதாபாத்திரங்கள் வாயிலாக இந்தப் பேருண்மையை வலியுறுத்துகிறார். ஒரு பெரிய மஹாகவி இப்படிப் பட்ட பேருண்மையை ஒரு தரத்திற்கு இரு தரம் வலியுறுத்துகிறார். அதுவும் கூட இருவேறு கதாபாத்திரங்கள் வாயிலாக வலியுறுத்துகிறார். அப்படியெனில் அந்த உண்மை எப்படிப்பட்ட பேருண்மை என்பதை நாம் சுலபமாகப் புரிந்து கொள்ளலாம்.
சுந்தர காண்டத்தில் சீதை கூறுவதைப் பார்ப்போம்:
கல்யாணீ பத காதேயம் லௌகிகீ ப்ரதிபாதி மா I
ஏதி ஜீவந்த மாநந்தோ நரம் வர்ஷ ஸதாதபி II
ஜீவந்தம் –உயிர் வாழும்
நரம் – ஒரு மனிதனை
வர்ஷ ஸதாத் அபி – பல வருடங்கள் கழித்தாயினும்
ஆனந்தம் – ஆனந்தமானது
ஏதி – வந்தடைகிறது
இயம் –என்ற இந்த
லௌகிகீ – உலகத்தாரால் வழங்கப்படும்
காயா – முதுமொழி
கல்யாணீ –உண்மையாகவே
மே – என் விஷயத்தில்
ப்ரதிபாதி – தோற்றுகின்றது
வத –சந்தோஷம்
சுந்தரகாண்டம் 34ஆம் ஸர்க்கம் 6ஆம் ஸ்லோகம்
அனுமன் அசோகவனத்தில் சீதையைக் “கண்களால் கண்டு” ஸ்ரீ ராமர் க்ஷேமமாய் இருப்பதைத் தெரிவித்து “உமக்கும் க்ஷேம சமாசாரத்தை அறிவிக்க நியமித்தனர்” (கௌஸலம் அப்ரவீத்) என்று கூறியவுடன் சீதை அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை அப்போது அவர் கூறிய வார்த்தைகளே இவை. உலகியல் முதுமொழி என்று அவர் கூறுவதிலிருந்தே இந்த அழகிய கருத்து பன்னெடுங்காலம் வழக்கில் இருந்து வந்திருக்கின்றது என்பதை அறிய முடிகிறது.

இதே ஸ்லோகத்தை நந்திகிராமத்தில் இருந்த பரதனும் கூறுகிறார். யுத்தகாண்டம் 129ஆவது ஸர்க்கத்தில் இரண்டாவது ஸ்லோகமாக பரதன் கூறுவது அமைகிறது.
அனுமன், ராமர் ராவணனை வென்று சீதையுடனும் லக்ஷ்மணனுடனும் வருகிறார் என்று பரதனிடம் தெரிவிக்கும் போது “ப்ரீதிகரம் கீர்த்தனம் அஹம் நாம ஸ்ருணோமி?” (உவப்பளிக்கும் செய்தியை நான் தானா கேட்கிறேன்?) என்று மகிழ்ச்சியுடன் கூவிய அவர் இந்த ஸ்லோகத்தைக் கூறுகிறார். உலகோர் கூறி வரும் முதுமொழி உண்மை என்பதை இரண்டாம் முறையாக இதே காவியத்தில் கூறி நம்மை அதிசயிக்க வைக்கிறார்.
எந்த நிலையிலும் மனம் கலங்காது உயிரை எப்பாடுபட்டேனும் காக்க வேண்டும் என்பது உயிர்மொழியாக இங்கு இலங்குகிறது.
இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது ஹிட்லரின் கோரக் கொடுமைகளிடமிருந்து தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொண்டவர்களின் கதையை இங்கு நாம் நினைவு கூறலாம். ஏராளமான நேச நாட்டுப் படையினர் மற்றும் யூதர்கள் சிறைக் கைதிகளாக இருந்து உயிரைக் காப்பாற்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டதையும் ஏராளமான உண்மைச் சம்பவங்கள் தெரிவிக்கின்றன. சிறைகளிலிருந்து தப்பித்தவர்களின் கதையோ இன்னொரு பெரிய ஆனந்த காண்டமாக அமைகிறது.
ஆகவே உடல்நலம், மனநலத்தோடு அருமையான உயிரைப் பாதுகாத்தல் எந்த வகையிலும் இன்றியமையாதது.
சீதா தேவி, பரதன் ஆகியோர் வாயிலாக மஹரிஷி வால்மீகி நமக்குத் தரும் முக்கிய ராமாயணச் செய்தி இது!
***********************