‘இன்பம் எங்கே, இன்பம் எங்கே என்று தேடு’

 

Pictures are drawn by Maniam Selvam for another book.Thanks.

வணக்கம். என் பெயர் நக்கீரன். சென்ற 4 வாரங்களில் ‘சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை’,  ‘மன்னிக்க வேண்டுகிறேன்”,  “ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை”,  ‘’கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு” என்ற தலைப்புகளில் பேசினீர்கள். இன்று நாம் அலசும் விஷயம் ‘’இன்பம் எங்கே?’’ யார் வேண்டுமானாலும் விவாதத்தைத் துவக்கி வைக்கலாம்.

 

திருமூலர்:

நான் பாடியதை முதலில் படியுங்கள், இன்பம் என்ன என்று விளங்கும்:

“முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்

அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்” (திருமந்திரம்)

“யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின்

ஊன்பற்றி நின்ற உயர் திருமந்திரம்தான்

தான் பற்றப் பற்ற தலைப்படும்தானே”  (திருமந்திரம்)

(இறை வழிபாடே இன்பம் தரும்)

‘’ஆசை விடவிட ஆனந்தம் ஆகுமே’’

 

வள்ளுவர்:

என்னுடைய குறளில் 29 இடங்களில் இன்பம், இன்புறுவது என்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளேன்.

‘’அறத்தான் வருவதே இன்பம்’’ (குறள் 39) (தருமத்தைப் பின்பற்றினால் இன்பம் கிடைக்கும்)

‘’மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு’’ (குறள் 65) (குழந்தைகள் இன்பம் தருவர்)

‘’இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்’’ (98) (இன்சொல் இன்பம் தரும்)

‘’இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பம் கெடின்’’ (ஆசையை ஒழித்தால் இன்பம்)

‘’ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப்பெறின்’’ (1330) (கணவன் –மனைவி ஊடல் பின்னர் சமாதானத்தில் முடியும்போது கூடுதல் இன்பம் தரும்)

 

அப்பர்=திருநாவுக்கரசர்

நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்

ஏமாப்போம் பிணி அறியோம் இடர்வோம் அல்லோம்

இன்பமே எந்நாளும் துன்பமில்லை. . . . .

 

மாணிக்கவாசகர்

‘’ இன்ப ஊர்தி ‘’ (சிவ பெருமான்)

‘’பால் நினைந்தூட்டும் தாயினும்

சாலப் பரிந்து நீ பாவியேனுடைய

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி

உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து

புறம் புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே’’

 

’ஆராத இன்பம் அருளும் மலை போற்றி’’

 

நம்மாழ்வார்

கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோதுஇல தந்திடும்

என் வள்ளலேயோ (திவ்யப் பிரபந்தம் 3298)

தழை நல்ல இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைக்கவே (திவ்யப் பிரபந்தம் 3834)

 

தாயுமானவர்

‘’எல்லோரும் இன்புற்றிருப்பதேயன்றி

யாமொன்றும் அறியோம் பராபரமே’’

 

பாரதிதாசன்

அட நான் கூடத்தான் இன்பத் தமிழ் பற்றிப் பாடிய பாடலில்

தமிழுக்கும் அமுதென்று பேர்—அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

என்று ஒரே பாடலில் ‘’இன்பத் தமிழ்’’ என்ற சொல்லை எட்டு முறை பயன்படுத்தி தமிழ்தான் இன்பம் என்று நிரூபித்திவிட்டேன்.

பாரதி

என் சீடன் பாரதிதாசன் கூறியது முற்றிலும் உண்மையே. அத்தோடு சுதந்திரமும் ஆனந்தம் தரும். உலகே ஒரு இன்பக் கேணி என்று வேதம் சொல்லுவதையும் கணக்கிற் கொள்ள வேண்டும். இதோ கேளுங்கள்;

‘’செந்தமிழ் நாடெனும் போதினிலே—இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே’’

‘’ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று’’

‘’ஒன்று பரம் பொருள்- நாம் அதன் மக்கள்

உலகு இன்பக் கேணி என்றே- மிக

நன்று பல் வேதம் வரைந்த கை பாரத

நாயகி தன் திருக் கை’’

‘’தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா

உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதையா நந்தலாலா’’

‘’தனமும் இன்பமும் வேண்டும்

தரணியிலே பெருமை வேண்டும்’’

 

அருணகிரி

‘’என் பிறப்பு பங்கம் சிறைப்பங்கம் சிதைத்து உன்றன் பதத்து இன்பம் தருவாயே’’ (முருகன் திரு அடியே இன்பம்)

‘’சுரர்ச் சங்கம் துதித்து அந்தஞ்சு எழுத்து இன்பம் களித்து உன்பண் சுகத்த உய்ந்து இன்பு அலர்’’ (ஐந்தெழுத்தே இன்பம்)

தொல்காப்பியர்:

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும் (தொல்காப்பியம்)

சினிமா பாட்டு

மருதகாசி: ஐயா, என் பெயர் மருத காசி. நான் எழுதிய பாடலில் இன்பம் என்றால் என்ன என்று சினிமா பாட்டு வடிவிலேயே சொல்லிவிட்டேன்; நல்ல மனைவியும் மக்களும் தான் ஒருவனுக்கு இன்பம் தருவர்:

இன்பம் எங்கே இன்பம் எங்கே – (திரைப்படம்: மனமுள்ள மறுதாரம் பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்)

 

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு – அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு (2 முறை)
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை – இதை
எண்ணிடாமல் சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை (2 முறை)
இருக்கும் வரை இன்பங்களை
அனுபவிக்கும் தன்மை
இல்லையென்றால் வாழ்வினிலே
உனக்கு ஏது இனிமை

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

கனிரசமாம் மதுவருந்திக் களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம் (2 முறை)
இணையில்லா மனையாளின் வாய்மொழியே இன்பம் – அவள்
இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம் (2 முறை)

மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம் – உன்
மார் மீது உதைப்பதிலே கிடைப்பது தான் இன்பம்

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

 

நக்கீரன்

நன்றி. தேச சுதந்திரம், ஆன்ம சுதந்திரம், தமிழ் மொழி, நல்ல மனைவி, நல்ல பிள்ளைகள், முருகன் திருவடி, சிவபெருமான், ஐந்தெழுத்து, விஷ்ணு, இறை வழிபாடு, தருமம் என்பன எல்லாம் இன்பம் பயக்கும் என்று அருமையான கருத்துக்களை முன் வைத்தீர்கள். ஆயினும் 29 குறட் பாக்களில் இன்பம் என்ற சொல்லைப் பயன்படுத்திய வள்ளுவனுக்கு எல்லோரும் ஒரு ‘’அப்ளாஸ்’’ கொடுக்கும் படி வேண்டுகிறேன். நமது அடுத்த வார தலைப்பு ‘’வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்’’ (பலே பாண்டியா திரைப் படம்) நன்றி, வணக்கம்.

 contact swami_48@yahoo.com

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: