7. எல்லோர் முன்னிலையிலும் பேசத் தகுதியற்றவன்!

The Jade Buddha for Universal Peace

This is Part-7 in the Series on Buddhism written by Santanam Nagarajan for nilacharal.

ச.நாகராஜன்

“மனிதர்களிலோ பொருள்களிலோ அவை அசலாக இருக்கும் போது குப்பை என்று எதுவும் இல்லை” என்பது புத்த மதத்தின் அடிப்படைக் கொள்கை.

புத்தர் ஒரு முறை,” என்ன அற்புதம்!என்ன ஆச்சரியம்!! சுயபுரிதல் உள்ள எல்லா ஜீவராசிகளும் ஒரு வித குறையுமின்றி எவ்வளவு பரிபூரணமாக உள்ளன!! மாயையால் ஏற்பட்ட தளைகளினால் உண்மை காணப்படமுடியாமல் இருக்கிறது” என்று கூறினார். .

இந்த அடிப்படை உண்மையைத் தான் ரோஷி சோகோவுக்குக் கற்பித்திருக்கிறார். ஆனால் ‘மர மண்டையாக’ அப்போது இருந்த சோகோவுக்குத் தான் அது புரியவில்லை.

நாள் செல்லச் செல்ல நம்பிக்கை கொள்வது உள்ளார்ந்த மனதுடன் ஒருவரை முணுமுணுப்பின்றியும் மறுப்புச் சொல்லாமலும் ஏற்றுக் கொள்வது என்பதை சோகோ புரிந்து கொண்டார். ஆகவே குரு எதைச் சொன்னாலும் சரி, சரி, சரி என்று சொல்ல சோகோ கற்றுக் கொண்டார். ஒரே சமயத்தில் அவர் மூன்று வேலைகளைக் கொடுத்தாலும் சரி, இதுவரை செய்தே இராத புதிய வேலையை அவர் தந்தாலும் சரி,சோகோவின் பதில் சரி, செய்து விடுகிறேன் என்பதாக ஆனது. புதிய வேலை என்றால் அதை எப்படிச் செய்வது என்பதை தன் புத்தியால் ஆராய்ந்து தன் சாமர்த்தியம் முழுவதையும் உபயோகித்து அதைக் கற்றுச் செய்யலானார் சோகோ.

அவரிடம் சேர்ந்த முதல் நாளன்று மடாலயத்தின் தாழ்வாரத்தை துடைக்கச் சொன்னார் ரோஷி. உடனடியாகக் களத்தில் இறங்கிய சோகோ முழங்காலைத் தரையில் பதித்து துணியால் தரையைத் துடைக்கத் துவங்கினார்.

“முட்டாள்” என்று கத்தினார் ரோஷி. “இப்படி எத்தனை நாளில் இதைத் துடைப்பதாக உத்தேசம். இதை இப்படியா செய்வது.கொண்டா, நான் செய்து காட்டுகிறேன்” என்று கூறிய எழுபது வயதான ரோஷி சோகோவிடமிருந்து துணியை வாங்கி தரையில் கைகளைப் பதித்து மறுபுறம் துணியை சீராகப் பறக்கவிட்டு நாலாபுறமும் அதை வீசித் துடைக்கலானார். சோகோவின் தலை கவிழ்ந்தது.

சோகோ இது வரை என்ன செய்திருந்தார்? பள்ளி நாட்களில் தத்துவத்தையும் இதர பாடங்களையும் நண்பர்களுடன் சேர்ந்து இரவு முழுவதும் படிக்க வேண்டியது. ஒழிந்த நேரமெல்லாம் அரட்டை,அரட்டை அரட்டைதான்!கவைக்கு உதவாத வெற்றுப் படிப்பு!
தரையைச் சுத்தம் செய்வது என்ற சாதாரண வேலையைக் கூடச் சரியாகத் தன்னால் செய்ய முடியவில்லையே என்று வெட்கப்பட்டார் சோகோ.

Jade-Buddha-Temple-5

பின்னாட்களில் பெரிய ஜென் மாஸ்டராக ஆன போது சோகோ தன்னிடம் ‘ஜஜென்’ எனப்படும் தியானத்தைக் கற்பதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் வரும் போது அவர்களுக்குத் தரும் முதல் வேலை ‘வெந்நீர் போடுங்கள்’ என்பது தான்.’வெந்நீர் போட முதலில் என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்பார் சோகோ.
மாணவர்கள் அடுப்பைப் பற்ற வைக்க வேண்டும் என்பார்கள்.
“இல்லை,இல்லை” என்பார் சோகோ!

“முதலில் அண்டாவில் நீரை நிரப்ப வேண்டும்” என்பார்கள் அவர்கள்.
“முதலில் அண்டாவைச் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு அளவு பார்த்து நீரை விட வேண்டும்.அப்புறம் அண்டாவை மூடி போட்டு மூடி அடுப்பின் மீது வைக்க வேண்டும். பின்னரே அடுப்பை மூட்ட வேண்டும்” என்று விளக்குவார் சோகோ.

சற்று நேரம் கழித்து அவர்கள் எப்படி வேலை பார்க்கிறார்கள் என்று சோகோ பார்க்கப் போனால் இரண்டு விறகும் பாதி எரிந்த பேப்பர்களும் அடுப்பில் இருக்கும்.
“இப்படி எரியவே கூடாது. சற்றுக் கிளற வேண்டும்”, என்று சொல்லித் தருவார் சோகோ.

“சின்னக் கரண்டி வேண்டுமே, கிளற” என்பார்கள் அவர்கள்.
‘அதை ஏன் கேட்கவில்லை’, என்பார் சோகோ.
கரண்டி வந்து கிளறினாலும் அடுப்பு சரியாக எரியாது.
அவர்களிடம் சோகோ,” தீ எப்படி எரிக்க உதவுகிறது” என்று கேட்பார்.
“அது ஒரு கெமிக்கல் ப்ராஸஸ்! ஒரு பொருளும் ஆக்ஸிஜனும் இணைய வேண்டும் அதற்கு என்பார்கள் அவர்கள்.
“ இவ்வளவு சாம்பல் உள்ளே இருக்கும் போது அந்த ப்ராஸஸ் நடை பெறுவது எப்படி?” என்று வினாவை எழுப்புவார் சோகோ.

அவசரம் அவசரமாக சாம்பலை அள்ளி வெளியில் கொட்டுவார்கள் மாணவர்கள்.. அத்தோடு சிம்னியில் உள்ள சாம்பலையும் எடுத்து காற்று உள்ளே புக வசதி செய்வார்கள் அவர்கள். பிறகு அடுப்பு நன்கு எரியும் அவர்களைப் பார்த்துச் சோகோ சிரிக்க முடியுமா என்ன? அவரும் ஆரம்பத்தில் அவர்களைப் போலத் தானே இருந்தார்!!

ஆரம்ப காலத்தில் மாஸ்டரை நம்பி அவருக்குக் கீழ்ப்படிவது போலக் காட்டிக் கொண்டாலும் சோகோ மனதிற்குள்ளாக அவரைக் கடுமையாக விமரிசிப்பது வழக்கம்.அவருக்கு டீ தரும் பணியாளிடம் அவர் கூறும் கடுமையான விமரிசனங்களைக் கேட்டாலேயே சோகோவிற்குப் பற்றிக் கொண்டு வரும்.

டைஷுயின் ஆலயமோ மிகச் சிறியது. அங்கு கஞ்சி தான் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து டீ ரோஷியின் அறைக்கு வரும்.அவர் டீயை அருந்திய பின்னர் மற்றவர்களுக்கும் டீ வழங்கப்படும். அப்போது ரோஷி அன்றைய தினத்திற்கான தனது திட்டத்தை விளக்குவார்.

சோகோ முதன்முதலாக டைஷுயின் ஆலயத்திற்கு வந்த போது அங்கு மிஸ் ஒகோமோடோ என்ற பெண்மணி அங்கு வசித்து வந்தார். அவர் ஒச்சனோமிஜு பெண்கள் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். பெண்கள் கல்வியில் அவர் மிகுந்த அக்கறை காட்டியவர். அவர் நாற்பது வயதைத் தாண்டியவுடன் அவருக்கு புத்த மதத்தில் தீவிர ஈடுபாடு வந்தது. தனது ஆசிரியப் பணியை விட்டு விட்டு ரோஷியிடம் வந்து சேர்ந்தார். ரோஷி, சோகோ, மிஸ் ஒகோமோடோ ஆகிய மூவரும் மடாலயத்தில் வசித்து வந்தனர். எப்போதும் ரோஷி மிஸ் ஒகோமோடோவிடம் மட்டுமே பேசுவார். சோகோவை அவர் கண்டு கொள்வதே இல்லை. இதைப் பார்த்து பரிதாபப்பட்ட மிஸ் ஒகோமோடோ ஒரு நாள் பேச்சு வாக்கில்,”இதை பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டு சோகோவை உரையாடலில் இழுக்க முயன்றார்.

Buddhastatue

ஆனால் உடனே குறுக்கிட்ட ரோஷி, “வேண்டாம். வேண்டாம். அவனுக்கு இன்னும் எல்லோர் முன்பாகவும் பேசுவதற்குத் தகுதி வரவில்லை” என்றார்.

ரோஷியின் கருத்துப்படி ஒருவன் தன்னை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அவன் எல்லோர் முன்னிலையிலும் பேசுவதற்குத் தகுதியானவன்.

ஜென் அகராதிப்படி “உன்னை நீ அறிவது” என்பது கென்ஷோ எனப்படும்.

அதாவது தனது இயற்கை நிலையை ஒருவன் உணர்ந்து அறிந்து அதைச் சரி பார்ப்பதே கென்ஷோ!
சோகோ கென்ஷோ நிலையை எய்தவில்லை. ஆகவே அவர் பேசுவதற்குத் தகுதி அற்றவர். என்ன செய்வது?

சின்ன உண்மை
இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்ற போதிதர்மரே ஜென் பிரிவை ஸ்தாபித்தவர் என கூறப்படுகிறது. அவர் ஒரு சுவரை நோக்கி ஒன்பது வருடங்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.பிறகு நடந்தது பெரும் வரலாறு ஆனது!

-தொடரும்

Leave a comment

Leave a comment