இந்துக்களின் தியாகம்: இரண்டு கதைகள்

Story_of_VritraDadichi
Picture shows Dadichi (top) and Indra killing Vritra

(Already published in English)

ஒரு குடும்பத்துக்காக ஒரு தனி மனிதனைத் தியாகம் செய்யலாம்
ஒரு கிராமத்துக்காக ஒரு குடும்பத்தையே தியாகம் செய்யலாம்
ஒரு நாட்டுக்காக ஒரு கிராமத்தையே தியாகம் செய்யலாம்
ஒரு ஆத்ம நலனுக்காக உலகத்தையே தியாகம் செய்யலாம்
–பஞ்ச தந்திரக் கதைகள் 1-8

தியாகம் என்பது உயரிய பண்புகளில் ஒன்று. புராண, இதிஹாசங்களில் போற்றப்படும் பண்பு. ததீசீ முனிவர் கதையும், ஏரண்ட முனிவர் கதையும் தியாகத்தின் சின்னங்களாக விளங்குகின்றன.
ஆத்மா என்பது என்றுமுளது. அதற்கு அழிவோ பிறப்போ ஒன்றும் இல்லை. ஆத்மா குடி புகுந்த உடலை வேண்டுமானால் அழிக்கமுடியும். அது கிழிந்த போன பழைய சட்டையைத் தூக்கிப் போடுவது போல. இந்தப் பேருண்மையை இந்து ஞானிகள் அறிந்திருப்பதால் உடல் அழிவதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை. பெரிய ஞானிகளுக்குப் புற்று நோய் முதலியன வந்தபோதும் அவர்கள் கவலை கொள்ளாதது ஏன் என்று ஏற்கனவே ஒரு கட்டுரையில் எழுதிவிட்டேன். ஆக உயிர்த் தியாகம் என்பது அவர்களுக்குக் கடினமான செயல் அல்ல.

புறாவுக்காக உடலையே தியாகம் செய்ய முன்வந்த சிபிச் சக்ரவர்த்தி கதையை முன்னரே எழுதிவிட்டேன். மஹாபாரதப் போருக்கு முன்பும், தமிழ் மன்னர்களின் போர்களுக்கு முன்பும் கழுத்தை அறுத்துக்கொண்டு உயிர்ப்பலி கொடுத்த விஷயங்களையும் எழுதிவிட்டேன். தந்தைக்காக வாழ்நாள் முழுதும் பிரம்மசர்ய விரதம் பூண்ட பீஷ்ம பிதாமஹரின் மகத்தான தியாகம், லெட்சுமணன், பரதன், காந்தாரி முதலியோர் செய்த தியாகங்களையும் நீங்கள் அறிவீர்கள்.

தியாகக் கதைகளில் மிகவும் பழையது ததீசி கதைதான். இது உலகின் மிகப் பெரிய நூலான ரிக்வேதத்திலேயே உள்ளது. மஹாபாரதத்தில் சிறிது வேறுபாட்டுடன் இக்கதை அமைந்துள்ளது. ரகசிய ஞானத்தை அஸ்வினி தேவர்களுக்கு உபதேசித்ததற்காக இந்திரன் கோபப்படுவான் என்று கருதி ததீசி முனிவன் தலைக்குப் பதிலாக குதிரை முகத்தை வைத்ததாகவும், இந்திரன் கோபம் அடங்கியவுடன் ததீசி முனிவரின் உண்மைத் தலையை மீண்டும் வைத்ததாகவும் ஒரு கதை உண்டு.

விருத்திரன் முதலிய அசுரர்களைக் கொல்லுவதற்கு ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் தேவைப்பட்டது எனவும் இதற்கு ததீசி முனிவரே முன்வந்து தன் முதுகெலும்பைக் கொடுத்ததாகவும் உள்ள கதை மிகவும் பிரபலமானது. வள்ளுவன் கூட இக் கதையை மறைமுகமாக ஒரு குறளில் சொல்லுகிறான்:

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு (குறள் 72)

அன்புள்ளம் கொண்டோர் தம்முடைய எலும்பையும் பிறருக்கு கொடுப்பர் என்று வள்ளுவன் கூறுவது ததீசி முனிவரை மனதில் வைத்துதான். ததீசி முனிவரின் எலும்புகளால் இந்திரன் 99 முறை விருத்திரனை வீழ்த்தியதாக ரிக் வேதப் பாடல் கூறுகிறது. ததீசீ முனிவரின் எலும்புகளால்தான் இந்திரன் வஜ்ராயுதத்தைச் செய்தான் என்பது கதை. இதில் ஒரு நீதி இருக்கிறது: எந்த ஒரு பெரிய சாதனையைச் செய்யவும் தியாகம் என்பது அவசியம் என்பதே நீதி. வேதத்தில் உள்ள கதைகளில் மறை பொருள் இருப்பதால்தான் சங்கத் தமிழர் அவைகளுக்கு நான் மறை என்று பெயரிட்டனர்.

ஏரண்ட முனிவர் கதை

ஏரண்ட முனிவர் கதை அபிதான சிந்தாமணி எனப்படும் தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் இருக்கிறது.
ஜெயசோழன் மகன் கனக சோழன். அவன் மனைவி செண்பகாங்கி. இவன் காலத்தில் காவிரி நதி திருவலஞ்சுழியிலிருந்த விநாயகரை வலம் செய்து பாதாளத்தில் மறைந்தது. இதனால் ஜனங்கள் விசனமுற்று அரசனிடம் முறையிட்டனர். அப்போது ஒரு அசரிரீரி கேட்டது. அரசனே! நீயோ உன் மனைவியோ அல்லது ஒரு ரிஷியோ அந்த பிலத்துள் புகுந்தால் காவிரி திரும்புவள் என்று வானத்தில் எழுந்த குரல் கூறியது.

அரசனும் மனைவியும் பிலத்துள் புகுந்து உயிர்த்தியாகம் செய்ய முயன்றபோது மந்திரிகள் தடுத்து நிறுத்தி, திருக்கோடீஸ்வர்த்தில் தவம் செய்து கொண்டிருந்த ஏரண்ட முனிவரிடம் அழைத்துச் சென்றனர். அவர் அரச தம்பதிகளை வரவேற்று “தீர்க்க சுமங்கலி பவ:” என்று ஆசிர்வதித்தார். மந்திரிகள் நடந்த விசயங்களைக் கூறவே, ஏரண்ட முனிவர் முற்கால ததீசி முனிவரின் தியாகத்தை எடுத்துக் கூறி, தானும் அது போலப் புகழ் எய்தப்போவதாகக் கூறி, பிலத்துள் (பாதாள குகை) புகுந்தார். காவிரி நதியும் முன்போலவே ஓடத் துவங்கியது.

ஏரண்ட முனிவர் வேண்டுகோளின்படி இரண்டு லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்த கனக சோழன் 70 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்துவிட்டு மகன் சுந்தர சோழனுக்குப் பட்டாபிஷேகம் செய்தபின் சிவபதம் அடைந்தார்.

புத்தர், ஆதிசங்கரர், ஏசு, காந்தி போன்ற மதத்தலைவர்களும் நட்டுத் தலைவர்களும் செய்த தியாகங்களை உலகம் அறியும். பைபிளில் ஜான் எழுதிய சுவிசேஷத்தில் ஏசுவின் தியாகத்தைப் புகழ்கிறார்.(ஜான் 15-13)

ஜான் கீட்ஸ் என்ற ஆங்கிலக் கவிஞன் அழகான கவிதை மூலம் தியாகத்தின் சிறப்பை எடுத்துரைக்கிறார்:

“மதத்திற்காக உயிர் நீத்த தியாகிகளைக் கண்டு வியந்தேன்
நினைத்தாலே திகிலும் உதறலும் உண்டானது.
இனி அது நிகழாது; ஏன் எனில் எனது மதத்துக்காக நானும்
உயிர் துறந்து தியாகி ஆகப் போகிறேன்!
எனது மதம் எது தெரியுமா?
எனது மதம் அன்புதான்.
உங்களுக்காகவும் அன்புக்காகவும் உயிர்துறப்பேன்
என் வழி அன்பு மார்கம்; நீங்களே அதன் கோட்பாடு” (ஜான் கீட்ஸ்)

Contact swami_48@yahoo.com
**********

Previous Post
Leave a comment

Leave a comment