மந்திரங்களை யாரும் கற்கலாமா?

sri_sacchidananda_shivabhinava_nrisimha_bharati_mahaswamigal

மந்திரங்களை புத்தகத்திலிருந்து படிக்கலாமா?

–லண்டன் சுவாமிநாதன் தொகுப்பு

நம்முடைய பலருடைய மனதில் எழும் கேள்விகள்: மந்திரங்களை யாரும் கற்கலாமா? மந்திரங்களை புத்தகத்திலிருந்து படிக்கலாமா?—இந்தக் கேள்விகளுக்கு இப்போதைய சிருங்கேரி ஜகத்குருவுக்கு இரண்டு தலைமுறை முன்னால் இருந்த 33ஆவது சங்கராசார்யார் ஜகத்குரு ஸ்ரீ சச்சிதானதா சிவ அபிநவ நரசிம்ம பாரதி சுவாமிகள் ஒரு சுவையான கதை மூலம் பதில் தந்துள்ளார்.
(இதை நான் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்துள்ளதால் தமிழ் சொற்கள் என்னுடையவை. பிழை இருந்தால் பொருத்தருள்க-லண்டன் சுவாமிநாதன்)

ஒரு பக்தர் இந்தக் கேள்வியைக் கேட்டார்.

பக்தர்: சுவாமிகளே! ஏன் சில மந்திரங்களை ஒரு சில வகுப்பினர் மட்டுமே கற்கலாம் என்று சொல்லுகிறீர்கள்? ஏன் ஒரு சில தகுதி அல்லது நிலையிலுள்ளவர்கள் மட்டுமே படிக்கலாம் என்று விதிமுறைகள் விதித்துள்ளனர்?

சுவாமிகள் பதில்: யாருக்காக ஒரு மந்திரம் உருவாக்கப்பட்டுள்ளதோ அவர் சொல்லும்போதுதான் அது மந்திரம். மற்றவர் சொன்னால் அது வெறும் சப்தங்களின் தொகுப்புதான்.
பக்தர்: அது எப்படி? மந்திரங்களும் சப்தங்களின் தொகுப்புதானே?

சுவாமிகள் பதில்: சப்தங்களின் தொகுப்பு எல்லாம் மந்திரம் ஆகிவிடாது. தகுதிபெற்றவர் ஒருவர் உச்சரிக்கும்போதுதான் அவை மந்திரம் ஆகும்.

பக்தர்: எனக்குப் புரியவில்லையே?

சுவாமிகள் பதில்: உங்கள் கேள்விக்கு ஒரு சம்பவம் மூலம் பதில் சொல்லுகிறேன். நாயக்க வம்சத்தைச் சேர்ந்த ஒரு குறுநில மன்னரிடம் ஒரு பிராமண மந்திரி வேலை பார்த்தார். அவர் மிகவும் புத்திசாலி. அவரது மேதாவிலாசத்துக்கு அவர் தினமும் சொல்லும் காயத்ரீ மந்திரமே காரணம் என்பதை மன்னர் அறிந்தார்.

தனக்கும் காயத்ரீ மந்திரத்தை உபதேசம் செய்யவேண்டும் என்று மந்திரியை மன்னர் நச்சரிக்கத் துவங்கினார். ஆனால் மந்திரி மறுத்துவிட்டார். அந்த மன்னரிடம் வேறு ஒரு பிராமணர் சமையல்காரராக வேலை பார்த்துவந்தார். அவரை மன்னர் அழைத்தபோது அவருக்கும் காயத்ரீ மந்திரம் தெரியும் என்பதை மன்னர் அறிந்தார். மிரட்டியோ லஞ்சம் கொடுத்தோ காயத்ரீ மந்திரத்தை அவரிடம் கற்றுத்தேர்ந்தார்.

ஒருநாள் அரசவையில் எல்லோருக்கும் முன்பாக மன்னர் தனக்கும் காயத்ரீ மந்திரம் தெரியும் என்று சொல்லவே மந்திரி வியப்புடன் அதைச் சொல்லும்படி மன்னரிடம் வேண்டினார். மன்னர் கம்பீரமாக மந்திர உச்சாடனம் செய்தார். மந்திரியோவெனில் அது காயத்ரீ மந்திரம் இல்லை என்று சொல்லிவிட்டார். மன்னர் உடனே சமையல்காரனை அழைத்து காயத்ரீயைச் சொல்லச் சொன்னார். இதுதான் காயத்ரீ என்று மந்திரி சொன்னார். அதைத் தானே நானும் சொன்னேன் என்று மன்னர் சொல்ல , அது காயத்ரீ மந்திரம் இல்லை என்று மந்திரி மீண்டும் கூறினார்.

மன்னருக்கு ஒரே ஆத்திரம். ஒரு வேளை மந்திரிக்கு மனக் கோளாறுபோல என்று எண்ணினார். மன்னரின் மனதில் என்ன எண்ணம் ஓடுகிறது என்பது மந்திரிக்குப் புரிந்தது. திடீரென்று மந்திரி சேவகனைப் பார்த்து, “ஏ! சேவகா மன்னர் கன்னத்தில் பளார் என்று இரண்டு அரை கொடு” என்றார். எல்லோரும் திகைத்து நின்றனர். மீண்டும் மந்திரி அதே குரலில் அதே உத்திரவைச் சொன்னார். சேவகன் ஒன்றும் செய்யவில்லை.

மந்திரிக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதென்று எண்ணியிருந்த மன்னர், கோபத்தில் “ஏ! சேவகா மந்திரி கன்னத்தில் பளார் என்று இரண்டு அரை கொடு” என்றார். சேவகன் ஒரு நொடி கூட தாமதிக்காமல், மந்திரியின் கன்னத்தில் இரண்டு அரை விட்டான்.

மன்னரே! இதுதான் வித்தியாசம்! நானும் ஒரே கட்டளையைத் தான் இட்டேன். நீரும் அதே கட்டளையைத் தான் இட்டீர். நீர் சொன்னவுடன் என் கன்னத்தில் இரண்டு அரை கிடைத்தது. நான் சொன்னபோது ஒன்றும் நடக்கவில்லை. சொல்லக் கூடாதவர் சொன்னதால் எனக்கு தண்டனை கிடைத்தது. இதுபோலத்தான் சில மந்திரங்களும் சொல்லக்கூடாதவர், சொல்லத் தகுதி இல்லாதவர் சொன்னால் எதிரிடை விளைவுகளை உண்டாக்கும்.

rigveda2
Picture of Rig Veda in printed form.

ஒரு மந்திரம் என்பது சப்தங்களின் தொகுப்புதான் என்றாலும் தகுதி உடைய ஒருவருக்கு, சாஸ்திர விதிகளின் படி, ஒரு குரு சொல்லும்போதுதான் அது மந்திர ரூபம் பெறுகிறது. இதனால்தான் புத்தகத்தில் இருந்து கற்கும் மந்திரங்கள் பலன் தருவதில்லை. இதை அறியாததால் மந்திரங்களைக் குறைத்து மதிப்பிடுகின்றனர்.

தகுதி உடைய ஒருவர்கூட சாஸ்திர விதிகளின்படி மந்திரங்களைச் சொன்னால்தான் பலன் கிடைக்கும்.அப்படி இருக்கையில் தகுதி இல்லாதோர் விதிமுறைகளைப் பின்பற்றாதவாறு மந்திரங்களைச் சொன்னால் நல்ல விளைவுகளைவிட எதிரிடை விளைவுகளைத்தான் எதிர்பார்க்கலாம். மந்திர விஷயங்களில் சாஸ்திரங்கள் சொல்லுவதைத்தான் நாம் பின்பற்றவேண்டும்.

(1969 ஆம் ஆண்டில் மதுரை ஜில்லா தென்கரையில் உள்ள ஸ்ரீ ஞானானந்த க்ரந்தப் ப்ரகாசன சமிதி வெளியிட்ட பொன்மொழிகள் என்ற ஆங்கிலப் என்ற புத்தகத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டது)

contact swami_48@yahoo.com

Leave a comment

1 Comment

  1. truly an eye opener

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: